
தேவ முகுந்தன் என்ற பெயருடன் பரிச்சயம் ஏற்பட்டு சுமார் இரண்டு வருஷங்கள் ஆகின்றன. நான் படித்த அவருடைய முதல் கதை 'சின்ன மாமா'. ஒரு சின்ன இடைவெளியின் பின்னர் நான் வாசித்த அவருடைய அடுத்த கதை 'கூட்டத்தில் ஒருவன்'.தேவ முகுந்தன் என்ற பெயருடன் பரிச்சயம் ஏற்பட்டு சுமார் இரண்டு வருஷங்கள் ஆகின்றன. நான் படித்த அவருடைய முதல் கதை 'சின்ன மாமா'. ஒரு சின்ன இடைவெளியின் பின்னர் நான் வாசித்த அவருடைய அடுத்த கதை 'கூட்டத்தில் ஒருவன்'.
அவருடைய முழுக் கதைகளையும் ஒரு தொகுப்பு வடிவத்தில் படிக்கும் வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கின்றது.
அவருடைய படைப்புலகத்தோடு என்னை நெருங்க வைக்கின்ற பல அம்சங்களை முதலில் இங்கே சொல்ல வேண்டும். முக்கியமாக அவருடைய படைப்புலகம் ஒரு திக்குத் தெரியாத காடல்ல.. நம் எல்லோருக்கும் பரிச்சயமான வழித் தடங்களே அங்கு உள்ளன. தோசையை சதுரமாகச் சுட்டு வடிவத்தை மீறிய வடிவம் இது என்றெல்லாம் அவருடைய எழுத்துகள் வித்தை காட்டுவதில்லை. வினா விடைகள், கடிதங்கள், பத்திரிக்கை செய்திகள், துணுக்குகள்.. இவற்றை எல்லாம் தன்னில் அடுக்கிக் கொண்டு இலக்கிய அடையாள அணி வகுப்பில் அது கலந்து கொள்வதுமில்லை . அல்லது கூலிப் படையின் ஆயுதம் போல் அவர் தன் எழுத்தைப் பயன் படுத்தியதுமில்லை . 'சென்ட் ஒப் எ வுமன்' என்றொரு ஆங்கிலப் படம். மார்டின் ப்ரெஸ்ட் டின் இயக்கத்தில் 'அல் பஸீனோ' நாயகனாக நடித்தது. விழிப் புலனற்ற அந்த நாயகன் ஒரு பெண்ணிடம் வீசும் நறுமணத்தைக் கொண்டு, அவள் பயன் படுத்தியிருப்பது எந்த வகை வாசனைத் திரவியத்தை எனத் துல்லியமாகக் கூறி விடுவான்.
அதே போன்றதுதான் தேவமுகுந்தன் கதைகள் பற்றிய என்னுடைய முகர் திறனும். நான் ஆரம்பத்தில் படித்த இரண்டு கதைகளின் வாசனையும் அவரை எனக்கு அடையாளம் காட்டப் போதுமானவை.
என்னுடைய நோக்கு நிலைக்கும், அவருடைய பார்வைக் கோணத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. என்னைப் போன்றே அவரும் ஒவ்வாத சூழலின் நெருக்குவாரத்துக்குள் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியாதவர். சூழ நடக்கும் அபத்த நாடகக் காட்சிகளைப் பார்த்து மனதுக்குள் ஒரு குமைச்சல்.. கைகள் கட்டப் பட்டிருக்கும் மத்தியதர வர்க்க சிறு பான்மையினருக்கே உரிய மனப் புகைச்சல் ,ஆற்றாமை, சலிப்பு, தவிப்பு, வெறுப்பு, இவற்றின் பார்வையாளராக இருக்க நேர்ந்து விட்ட அவலத்தின் மீதான கொதிப்பு..... இவைதான் தேவமுகுந்தனின் இந்தப் பத்துக் கதைகளும் என் முன்னால் விரித்து விட்ட அவருடைய உலகம்.
அன்புக்குரிய பேராசிரியர் நுஹ்மான் அவர்களின் முன்னுரை, இந்தத் தொகுதி பற்றி அண்மையில் நான் வாசிக்க நேர்ந்த சில விமர்சனக் குறிப்புகள் யாவும் தேவ முகுந்தனை வேறொரு திசைக்கு நகர்த்திச் செல்ல முயல்கின்றன. தேவ முகுந்தனைத் தமிழியப் பற்றாளராகவும், தமிழ்த் தேசிய ஆதரவு எழுத்தாளராகவும் ஒரு சிமிழுக்குள் அடைக்க முயலுகின்றன.
ஆனால் அரசியல் பதற்றம் மிகுந்த, இன உறவு பிளவுண்ட ஒரு சூழலில் உருவாகும் வெறுப்பையும், அதிருப்தியையும், கசப்புணர்வையுமே முகுந்தனின் எழுத்துகளில் நான் காண்கின்றேன். அவர் முன் திட்டங்களுடனோ, ஏதாவது ஒரு கொள்கை விளக்கத்துக்காகவோ எழுதியதாக நான் உணரவில்லை. அவருடைய பெரும் பாலான கதைகள் யாழ்ப்பாணத்துக்கு வெளியே, யுத்தத்தின் பிரதிபலிப்புகள் எதிரொலிக்கும் தலை நகர் கொழும்பில் நிகழ்கின்றன. அங்கு ஒரு தமிழ் வாலிபன் எதிர் கொண்ட நாளாந்த நெருக்குவாரங்களில் நூறில் ஒரு பங்குதான் தேவமுகுந்தனின் கதைகளில் பதிவாகி இருக்கின்றன. அதனால் உண்டாகும் விமர்சனப் பதற்றங்கள் அனாவசியமானவை .
இலக்கியம் என்பது ஒரு கருத்தை, சித்தாந்தத்தை, தத்துவத்தைப் பிரச்சாரம் செய்து பரப்புவதற்காக எழுதப் படுவதல்ல. அதிகாலையில் வானொலியில் குரல் தரும் நற் சிந்தனையாளனுக்கும், இலக்கிய எழுத்தாளனுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. படைப்பாளி ஒருவனின் மனதில் உந்துதல் எதுவுமற்று உருவாக்கப்படும் சொற்கூட்டங்கள் படைப்பாகா.; ஓர் இலக்கியத்தின் பணி உணர்வை உருவாக்குவது. உண்மை ஒன்றை எழுத்துருவில் அது மறுபடியும் நிகழ்த்திக் காட்ட முயல்கின்றது. கடலை மட்டுமல்லாமல் அதன் அடி நீரோட்டத்தையும் காண்பிப்பது ஒரு படைப்பாளியின் முன் உள்ள சவால். ஓர் இலக்கியப் படைப்பு என்பது அதைப் படிக்கின்ற ஒருவருடைய மனதில் சலனங்களையோ, பிரதி பலிப்புகளையோ உண்டு பண்ணாமல் போனால் அதன் பிறப்புக்கும், பிரசுரத்துக்கும் எந்த அர்த்தமும் இருக்கப் போவதில்லை. நல்ல இலக்கியத்தின் இன்னொரு முக்கிய லட்சணம் அது கொண்டிருக்கும் மொழியும், நுட்பங்களும் ஆகும்.
ஈழத்தில் இன்று நிறையப் பேர்கள் கதைகள் எழுதுகின்றனர். பத்திரிகைகள், சஞ்சிகைகளின் தவிர்க்க முடியாத அம்சங்களாகக் கதைகள் இருக்கின்றன. ஆனால் அவை சிறுகதை வடிவத்தை பிரக்ஞை பூர்வமாக புரிந்து கொண்டவையா, தமிழ் சிறுகதை இலக்கியம் என்ற தொடரோட்டத்தையும், பெரும் பரப்பையும் சரிவரப் புரிந்து கொண்டு உரிய முறையில் தம்மைப் புதுப்பித்து வெளிப்பட்டவையா என்ற கேள்வியை நம்மை நாமே கேட்டுக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
படைப்பாளுமை அற்ற பலர் இன்று இருண்மையான வாக்கியங்கள் மூலமாகவும், அதிர்ச்சியான மொழிப் பிரயோகங்கள் வாயிலாகவும், தனிநபர்த் தாக்குதல்கள் வழியாகவும் இலக்கிய அந்தஸ்த்தைக் கோரி நிற்பதை; இப்போதெல்லாம் காண்கின்றோம். இவற்றை ஒரு புன்னகையுடன் கடப்பதைத் தவிர வேறு வழியில்லை. தேவ முகுந்தன் இந்தக் குறுக்குவழிகளில் நம்பிக்கை வைக்காத ஒரு படைப்பாளி. நேரடியாகக் கதை சொல்லும் எளிமையான பாணியில் நம்பிக்கை கொண்டவர். சொற்களில் பதினோராயிரம் வோல்ட்ஸ் மின்சாரத்தை வைத்தால்தான் வாசகன் அதிர்ச்சிக்குள்ளாவான் என்பது போன்ற அசட்டுத் தனமான எண்ணங்கள் அவரிடம் இல்லை. இந்த உலகத்தின் முக்கியமான படைப்பாளிகளைப் போலவே தேவ முகுந்தனும் சுய அனுபவச் சூட்டுடன், தன் சூழலை, தான் கண்டவற்றைப் பிரதி பலிக்க முயல்கின்றார்.
'மர நாய்கள்' கதை இந்திய அமைதி காக்கும் படையினர் இங்கு நிலை கொண்டிருந்த காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்லுகின்றது. நாம் பறிகொடுத்த சுதந்திரம் என்பது கோழியாகவும், இராணுவ அடக்கு முறை என்பது மர நாயாகவும் இங்கே உருவகப் படுத்தப் படுகின்றது. எந்த விதமான துருத்தலும் இன்றி வெளிப்படும் இந்த குறியீடுகள் தேவமுகுந்தனின் கலைத் திறனுக்கு சிறந்த அத்தாட்சி. மலேசியாவின் நிலக் காட்சிகளில் இரட்டைக் கோபுரங்களுக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு. இணைய முடியாத இரண்டு இனங்களின் மனப் பாங்குகளை விபரிக்கும், மலேசியாவைக் களமாகக் கொண்ட கதைக்கு தேவமுகுந்தன் மிகவும் பொருத்தமாக இட்டிருக்கும் தலைப்பு 'இரட்டைக் கோபுரங்கள்'.
நம்மில் பல எழுத்தாளர்களுக்கு சிறு கதையை எங்கே தொடங்கி, எங்கே முத்தாய்ப்பு வைப்பது என்பது தெரிவதில்லை. ஆனால் அந்தக் கலை தேவமுகுந்தனுக்குக் கை வந்திருக்கின்றது. 'இடைவெளி' கதையில் அலுவலகத்தின் பெரும் பான்மையினத்தைச் சேர்ந்த சகபாடிகள் செய்கைகளாலும், நடத்தைகளாலும் விஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறார்கள். கதையின் முத்தாய்ப்பாக தேவமுகுந்தன் வைக்கும் வாக்கியம் இது.
'அறையின் சுவரில் அமைக்கப் பட்டிருக்கும் பீடத்திலிருந்த புத்த பகவான் சாந்தம் தவழும் வதனத்துடன் தியானித்துக் கொண்டிருந்தார்.'
இதே போல் 'சிவா ' என்றொரு கதை.
தமிழ் மாணவர்களைப் பெரிதும் பொருட் படுத்தாமல் பல்கலைக் கழகத்தில் சிங்கள மானவர்களுடனேயே நெருக்கம் பேணிய சிவா என்ற தமிழ் மாணவன் ஒரு நாள் கைது செய்யப் படுகின்றான். ஆறு வருஷங்கள் சிறையில் இருந்து குற்றம் எதுவும் நிரூபிக்கப் படாமல் சித்திரவதை வடுக்களுடன் விடுதலையாகி வெளியே வருகின்றான். பெரும் பான்மையினத்தைச் சேர்ந்த அவனுடைய காதலி உட்பட அனைவரும் ஒதுங்கி மறைகின்றனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு நாள் அவன் காணாமல் போய் விடுகின்றான். இந்தக் கதையின் முத்தாய்ப்பும் தேவமுகுந்தனின் கலைத் தேர்ச்சிக்கு ஓர் உதாரணமாக அமைகின்றது.
இவ்வாறு அவர் கதையை முடிக்கின்றார்.
'...காணாமல் போனோர் உறவினர் சங்கம் நடத்திய ஊர்வலத்தில் வெள்ளைச் சேலை உடுத்திய வயோதிபப் பெண் ஒருத்தி சிவாவின் புகைப் படத்தைக் காவிய படி நடந்து சென்றதை டி.வி. செய்தி அறிக்கையில் தான் பார்த்ததாக அழுத படி ரஞ்சன் சொன்னான்.
சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவன் என்ற ஒரே காரணத்துக்காக தமிழ் வாலிபன் ஒருவன் கொழும்பு சூழலில் எதிர் கொள்ளும் சங்கடங்களை இடைவெளி, ஒரு சுதந்திரநாள் ஆகிய கதைகள் மிக இயல்பாக விபரிக்கின்றன. 'கண்ணீரினூடே தெரியும் வீதி' மோதலில் சம்பந்தப் பட்ட இரு தரப்பினரின் துயரத்தையும் பேசுகின்றது. நுஹ்மான் அவர்கள் முன்னுரையில் குறிப்பிடுவது போல இந்தத் தொகுப்பின் மிகவும் சிறந்த கதையாக இதையே கூற வேண்டும்.
ஏட்டுச் சுரைக் காயை எவ்விதம் கறிக்குப் பயன் படுத்தலாம் என்பது போல் நடத்தப் படும் அரச திணைக்களங்களின் பயிற்சி முகாம்களை 'வழி காட்டிகள் ' கதை கிண்டலடிக்கின்றது.
'கூட்டத்தில் ஒருவன்' கதையைப் படிக்கும் போது சுந்தர ராமசாமி அவர்களின் கவிதை ஒன்றின் வரிகள் ஞாபகம் வருகின்றன.
'..காலமே! எதற்கு என்னை இங்கெல்லாம்
அழைத்துச் செல்கிறாய்?
என் உணர்வுகளில் நான் குழம்பிச் சரிகிறேனே !'
இந்தக் கதை ரட்சகர்கள் போல் தங்களைத் தாங்களே உருப் பெருப்பித்துக் கொண்டு போலி முகம் காட்டும் உயர் வர்க்கத் தமிழர் சிலரின் நடத்தைகளை விமர்சிக்கின்றது.
படித்து விட்டு வேலையற்று மனச் சலிப்புடனும், சோர்வுடனும் திரியும் ஒருவனின் பறப்பதற்கு முந்திய கூட்டுப் புழு காலத்தை 'இவன் ' என்ற கதை விபரிக்கின்றது.
சின்ன மாமா, இந்தத் தொகுப்பில் உள்ள சிறப்பான கதை. சாதியில் தன்னை விட உயர்ந்த ஒருத்தியை காதலித்து திருமணம் செய்த பின் தன் குடும்பத்தை முற்றிலும் கை விட்ட ஒரு பிரபல எழுத்தாளரின் அஞ்சலி நிகழ்வை ஒட்டியதாக அமையும் இந்தக் கதை ஒரே கல்லில் இரண்டு மாங் காய்களை வீழ்த்துகின்றது. ஒன்று எழுத்தாளனின் போலி முகம்.மற்றது அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றுவோரின் பொய் நாக்கு.
இறுதியாக நமது அன்புக்குரிய பேராசிரியர் நுஹ்மான் அவர்கள் இந்த நூலின் முன்னுரையில் 'எழுத்தாளன் ஒருவனிடம் இருக்க வேண்டிய அறம் 'பற்றி சில வார்த்தைகள் எழுதியுள்ளார்.
அவர் கூறுகின்றார்:
'..கடந்த முப்பது ஆண்டு கால இன முரண்பாடு, மோதல், யுத்தம் பற்றிய பிரச்சனைகளை ஈழத் தமிழ் இலக்கியம் எவ்வாறு கையாண்டுள்ளது என்ற கேள்வியை நான் இங்கு மீண்டும் எழுப்ப விரும்புகின்றேன். பெரும் பாலும் இவை பாதிக்கப் பட்டவர்களின் குரலாக, சார்பு நிலைப் பட்டவையாகவே காணப் படுகின்றன. சிங்கள மேலாதிக்கம், இராணுவ ஒடுக்குமுறை,, அரச பயங்கரவாதம் பற்றிய விபரிப்புகளாகவே அவை பெரிதும் வெளிப் பட்டுள்ளன. அது ஒரு வகையில் நியாயமாகவும் தோன்றலாம் .எனினும் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் விடுதலை இயக்கங்கள் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளையும், கொலைகளையும், பயங்கரவாதத்தையும் அதன் விளைவுகளையும் பற்றிப் பேசாத இலக்கியம் 'ஒரு பக்கச் சார்பானது 'என்பதையும் நாம் அழுத்திக் கூற வேண்டும்.
இந்தியப் பிரிவினையின் போது இந்துக்களும், முஸ்லீம்களும் பல லட்சக் கணக்கில் கொள்ளப் பட்டதையும், புலம் பெயர்ந்ததையும் பின்னணியாகக் கொண்டு சாதாத் ஹசன் மண்டோ, கே.ஏ .அப்பாஸ் போன்றவர்கள் அதற்கு வெளியே இருந்து அவற்றின் அபத்தத்தைப் பற்றி எழுதியதை நினைத்துப் பார்க்கின்றேன். எழுத்தாளனின் அற உணர்வுக்கு நாம் அவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். தமிழில் அத்தகைய எழுத்துகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.
இது நுஹ்மான் அவர்களின் கூற்று.
இந்தக் கூற்றுடன் நான் இங்கே முரண்பட வேண்டி உள்ளது.முதலில் நாம் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டியது
தேவமுகுந்தன் எந்தவொரு விடுதலை இயக்கத்தின் பேச்சாளரோ எழுத்தாளரோ அல்ல. அவர் சூழலால் பாதிக்கப் பட்ட ஒரு சாமானியர். அவருக்கு முன்னால் இரண்டு தேர்வுகள் இருக்கின்றன.
ஒடுக்கு முறையை சகித்துக் கொண்டு, கூனிக் குறுகி, வளைந்து கொடுத்து, எருமைத் தோலுடன் பாண்டியன் பரிசுக்காக அரண்மனை வாசலில் காத்திருப்பதா?
அல்லது
உரத்த குரலில் இல்லா விட்டாலும் பரவாயில்லை ஒரு சிறு முனகல் தொனியிலாவது நம் எதிர்ப்புணர்வைப் பதிவு செய்வதா?
தேவமுகுந்தன் இரண்டாவது காரியத்தை செய்திருக்கிறார் என்றே நான் நம்புகின்றேன்.
எழுத்தாளனின் அறம் என்பது எரிமலை மேல் இருந்து கண்களை மூடிக் கொண்டு தவமியற்றுவது அல்ல. ஓர் எழுத்தாளனின் பணி அப்பத்தைப் பிய்த்து பாவிகளுக்கும், அப்பாவிகளுக்கும் சம பங்கிடுவதுமல்ல.
தராசுத் தட்டின் முள் சரி நடுவில் இருக்கிறதா எனப் பார்ப்பதும், இரண்டு தட்டுகளின் எடைகளை சம அளவில் பேணுவதும் சில்லறைக் கடைக் காரர் ஒருவரின் வேலை. ஆண்டாண்டு காலமாக அநீதி இழைக்கப் பட்ட, ஒடுக்கப் பட்ட ஓர் இனத்தைச் சேர்ந்த ஒருவனின் ஈனஸ்வரமான குரலை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்

No comments:
Post a Comment