'கண்ணீரினூடே தெரியும் வீதி':அண்மையில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட தேவமுகுந்தனின் சிறுகதைத் தொகுப்பு இது. இந்தத் தொகுப்பிற்கு அறிமுகக் குறிப்பு அவசியமில்லாதளவிற்கு அது பலராலும் பல்வேறு இடங்களிலும் ஏற்கனவே போதியளவு அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டு இணைய இதழான 'திண்ணை'யில் வெங்கட் சாமிநாதன் முதல் வீரகேசரியில் எழுதிய தெளிவத்தை ஜோசப் வரை இந்த நூல் பற்றி எழதிய அனைவருமே இதனை சிலாகிக்கத் தவறவில்லை. பேராசிரியர் நுஃமான் அவர்கள் கூட இந்நூலுக்கெழுதிய தனது முன்னுரையில் விரிவாக அதன் சிறப்புக்களை விபரித்துள்ளார்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவில் பேசிய டொக்ரர் முருகானந்தன், அ. யேசுராசா, உமா வரதராஜன், வசந்தி தயாபரன் என்று அனைவரதும் பாராட்டை இந்நூல் பெற்றிருந்தது.
இப்படி அண்மைக் காலத்தில் வெளிவந்த நூல்களில் அனைத்துத் தரப்பினரதும் பாராட்டைப் பெற்றுக் கொண்ட, ஒரே நூல் என்ற சிறப்பை இந்த நூல் தட்டிக் கொண்டுள்ளது. இலங்கையின் இலக்கியச் சூழலில் இத்தகைய ஒரு நிலைமை புதியது. விமர்சனங்கள் அல்லது திறனாய்வுகள் பெரும்பாலும் விமர்சகர்களது அடிப்படையான கருத்துக்கள், கோட்பாடுகள் என்பவற்றின் அடிப்படையிலேயே பார்க்கப்பட்டு விமர்சிக்கப்படும் போக்கே இங்கு பலமாக இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக படைப்புக்கள் பாராட்டப்படுவதும் அல்லது நிராகரித்து ஒதுக்கப்படுவதும் தாராளமாக இங்கே நடந்து வந்திருக்கின்றன. இந்தத் தொகுப்பும் முகுந்தனும் அத்தகைய ஒரு நிலைக்கு உள்ளடக்கப்படாதது நிச்சயமாக ஒரு முக்கிய விடயமாக எனக்குப்படுகின்றது. வெ.சா. இத்தகைய ஒரு எழுத்து முகுந்தனிடம் வருவதற்கான சூழல் பற்றிக் குறிப்பிடுவதை ஒரு காரணமாக கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. ஏனென்றால் இத்தகைய சூழலிலும் அத்தகைய விமர்சனங்களும் வரத்தான் செய்கின்றன. இதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்?
'கண்ணீரினூடே தெரியும் வீதி'நம் காலத்து சராசரி தமிழ் இளைஞன் ஒருவனின் நாளார்ந்த அனுபவங்கள் தொடர்பானது. இந்த இளைஞன் தன் எண்ணங்கள், விருப்பங்கள், தெரிவுகள் எவற்றையுமே தனது அறிவுக்கும் தெளிவிக்கும் உணர்வுக்கும் உட்படுத்தக்கூடிய தன் எல்லாவித சுய ஆற்றலையும் பறிகொடுத்துவிட்டு சூழலின் நிர்ப்பந்தத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ள தவித்துத் திரிந்த ஒரு சமூகத்தின் உறுப்பினன். அவனது நடவடிக்கைகள் எல்லாமே தப்பிப் பிழைத்து வாழ்வதற்காக எடுக்கின்ற கணநேரத்து முடிவுகளால் தீர்மானிக்கப்படுபவையாக அமைந்திருந்தன. அவனது அரசியல் பிரவேசமும் சரி, அவன் போராளியாவதும் சரி அல்லது தப்பி ஓடுவதும் சரி எல்லாமே இந்த அடிப்படையில்தான் இயக்கம் கொள்கின்றன.சாதி, சமயம், அரசியற்கோட்பாடுகள் என்று அனைத்தையும் மீறிய அனைவருக்கும் பொதுவான ஒரு நிலைமையை இந்தச் சூழலின் நிர்ப்பந்தம் ஏற்படுத்தியிருந்தது.இந்த இளைஞன் எம் எல்லோருக்கும் தெரிந்தவன்.எமக்குத் தெரிந்த எல்லா வீடுகளிலும் வளர்ந்தவன் அதனால் அவனது கதை எங்கள் எல்லோருக்கும் தெரிந்த எல்லோரதும் கதை முகுந்தனின் தொகுப்பு இப்படி எல்லோராலும் பாராட்டப்பட்டதற்கான காரணம்இதுதான் என்று நான் கருதுகிறேன்.
இந்த எல்லோருக்கும் தெரிந்த இளைஞன் தனது சொந்த அனுபவங்களையும் உணர்வுகளையும் சொல்லுகிறபோது அதை எவர்தான் மறுத்துரைக்க முடியும்?
போராளிகளும் பின்னர் அவர்களுள் துரோகிகள் என்று ஒதுக்கப்பட்டோரும்,கொன்றொரும் கூட இந்தச் சமூகத்தின் பிள்ளைகளாகவே இருந்தனர். எல்லோரும் தப்பிப்பிழைத்தல் என்ற ஓட்டத்தில் திசை தெரியாது சிதறுப்பட்டனர். ஆளோடு அள் மோதிக் கொள்வது தெரியாத வெறிபிடித்த ஓட்டம். தம்மைச் சுற்றி நடப்பதோ நடக்கப்போவதோ பற்றி எதுவும் தெரியாத தெரிந்து கொள்வதற்கான அவகாசத்ததை தேடிக்கொள்வதற்கான பொறுமையையும் தொலைத்த பதற்றத்துடனான ஓட்டம். முகுந்தனின் கதைகள் இவற்றில் சில காட்சிகளைப் படம் பிடித்துத் தந்திருக்கின்றன. அவர் அதற்கு மேல் செல்ல முயலவில்லை. அதை அவர் தனது பணியாகத் கருதியதாகத் தெரியவுமில்லை. இவை அவர் வாழ்ந்த சூழலின் இரண்டு தசாப்தக் காட்சிகள். முகுந்தன் அவற்றை தனது பாணியில் கலைவடிவமாகத் தந்திருக்கிறார்.
அவர் பார்த்த காட்சிகள் கண்ணீரினூடே தெரிந்த காட்சிகள். கண்களைத் துடைத்து விட்டோ, கண்ணீர் வராத மனநிலையில் நின்றோ அவர் பார்க்கவில்லை. அதனால் அவரது காட்சிகள் கருத்துக்களின் செல்வாக்கிற்கு உட்படவில்லை.
கருத்தக்கள் தான் இந்தக் காட்சிகளின் செல்வாக்குட்பட வேண்டும்.
நூலைப்பற்றி இதற்கு மேல் பேச அவசியமில்லாத அளவிற்கு நிறையவே பேசப்பட்டுவிட்டது. அவருக்கு எனது பாராட்டுக்கள்.
எஸ் . கே.விக்னேஸ்வரன்
நன்றி : கலைமுகம் (இதழ் 55)
காலச்சுவடு பதிப்பக வெளியிட்ட எனது "கண்ணீரினூடே தெரியும் வீதி..." சிறுகதைத் தொகுதி பற்றிய மதிப்பீடுகள் விமர்சனங்கள் இப்பகுதியில் இடம்பெறும்- தேவமுகுந்தன்
Tuesday, April 16, 2013

Subscribe to:
Posts (Atom)