Friday, August 30, 2013

ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா

சிறுகதை என்றால்.....??

************************* இப்படித்தான் அமைய வேண்டும் என்று திட்டவட்டமாக வரையறுக்க முடியாது.. வரையறைகள் இவைதாம் என்று நாம் இங்கே எழுதிக் கொண்டிருக்கும்போதே இவற்றையும் மீறி ஏதாவது ஒரு சிறுகதை எங்கேயோ ஒரு மூலையில் பிறந்து விடலாம்.

“அது ஒரு புதிய இலக்கிய வடிவத்தின் பெயர்” -பிராண்டர் மாத்யூ

“சுருக்கமும் செறிவும் சிறுகதைப் பண்புகள்” -ஜேம்ஸ் கூப்பர் லாரன்ஸ்

“கதை முடியும் வரை வாசகனின் கவனம் கலைந்துவிடக்கூடாது” -எட்கர் ஆலன்போ

“குதிரைப் பந்தயம்போல, தொடக்கமும் முடிவும் சுவை மிக்கதாக இருக்க வேண்டும்” - எல்லரி செட்ஜ்விக்

“எளிய கருப்பொருளைக் கருவாகக் கொள்ளுதலே சிறப்புடைத்து” -செகாவ்.

தமிழ் சிறுகதையின் சித்தர் புதுமைப் பித்தன்.. “சிறுகதையின் வடிவம் கதை எழுதுபவரின் மனோதர்மத்தைப் பொறுத்தது.

நமது பேராசிரியர் சிவத்தம்பி... “சிறுகதை ஒரு குறிப்பிட்ட மனோ நிலையை அல்லது உணர்வு நிலையைக் காட்டுதல் அவசியம்” சுஜாதா சொல்லுகிறார், (இன்னும் கொஞ்சம் சுவையாக இருக்கிறது...)

“கதையும் தேவையில்லை!கதை மாந்தரும் தேவையில்லை!நன்கு ஒழுங்கு படுத்தப்பட்ட ஒரு கட்டுரைதானும் நல்லதொரு சிறுகதையாகலாம்!” எது எப்படியோ “சிறுகதை என்பது வாழ்க்கையின் சாளரம்” தொடக்கம், மையச் சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்.

இவை எல்லாவற்றையும் விட..கதை சொல்ல எடுத்துக்கொண்ட கருப்பொருள்?எப்படி கதை சொல்லுகிறார் ?(உண்மையில் கதைதான் சொல்லுகின்றாரா?? இல்லை கதை விடுகின்றாரா??)இவரின் நோக்கம் நிறைவேறி இருக்கின்றதா ?கதாசிரியரின் கலையாற்றல்... கற்பனைத்திறன்... சொல்லாட்சி... அவர் சொல்ல விரும்பும் செய்தி என்ன??

இவ்வளவும் இலக்கண வரம்புகளை விடவும் மிகமிக முக்கியமானவை.

இவற்றை உரைகற்களாக வைத்துகொண்டு தேவமுகுந்தனைக் கொஞ்சம் உரசிப்பார்ப்போம்!!

“கண்ணீரீனூடே தெரியும் வீதி...”

***************************************** கல்லினில் மட்டுமல்ல சொல்லினாலும் சிற்பங்கள் செதுக்கமுடியும்!ஆச்சரியம் வேண்டாம்....!!இதோ செதுக்கிக் காட்டுகின்றார்இந்தச் சிறுகதைச்சிற்பி!

“பேச்சுத்துணைக்கு ஆட்களில்லாமல் தனிமையில் அறையின் சுவர்களைப் பார்த்தபடி இருப்பது மகா கொடுமை...”

.................... பல்கலைக்கழகம் பூட்டப்பட ரஞ்சனும் சிவாவும் திருகோணமலை போய்க் கப்பலேறி யாழ்ப்பாணம் போயினர். ஜெபனும் புவியும் இரத்மலானை போய் விமானம் ஏறி யாழ்ப்பானம் போயினர். ஜீவாவும் நடேசும் பஸ் ஏறி மட்டகளப்பு போயினர். கோணேசும் வசந்தனும் ரயிலேறி திருகோணமலை போயினர். ரமணனும் குகாவும் ரயிலேறி வவுனியா போயினர். ஈஸ்வரனும் ரங்கனும் நுவரெலியா போயினர். எல்லோரும் தங்கள் வீடுகளுக்குப் போயினர்... நான் எங்கு போவது....

ஒபரேசன் ஜெயசிக்குறு தொடங்கிய பிறகு போய்வரக்கூடிய நிலையிலா கிளிநொச்சி உள்ளது?”

இது ஒரு போர்க்காலப் பரணி! தமிழனின் தன்மானத்தை உரசிப்பார்க்கும் ஒரு வரலாற்றுப் பதிவு!

போர் எமக்கு மட்டுமல்ல... அவனுக்கும் இழப்புக்களைத் தந்திருக்கின்றன.. என்பதனை மிகஅழகான சொற்கள் கொண்டு மிகவும் நுட்பமாகச் செதுக்கியுள்ளார்!

“வழிகாட்டிகள்!”

“இவர்களுக்கு யாழ்ப்பாணத்தைத் தாண்டிவிட்டால் தமிழ் மறந்துவிடுகிறதா??

......... “ஒல்லிகளை முட்டுக்காய்களைப் பின்னால் மறைத்து வைத்துவிட்டு நல்ல ஒரிரண்டு தேங்காய்களைக் காட்சிக்கு வைத்துக் காட்டி எல்லாத் தேங்காய்களையும் விற்றுத்தள்ளும் ஒரு தேங்காய் வியாபாரி போன்று வாமதேவன் இந்திரன் மனதில் தோன்றினார். வருமானம் குறைந்த பெற்றோரின் பிள்ளைகளுக்கு உதவிப் பணம் வழங்குவதற்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று பெற்றோரின், பாடசாலைகளின், கல்வி அதிகாரிகளின் கெளரவத்தைப் பறைசாற்றப் பயன் படுகின்றதாய்...”

தமிழனின் கல்வி முறைகள் தவறுதலாகப் பயன்படுத்தப் படுதலையும், அது மிகவும் தவறான முறையில் வழிகாட்டப் படுதலையும் தனக்கேயுரித்தான பாணியில் பதிவு செய்கின்றார்.

தமிழனின் கல்விமுறைகள் வேண்டுமென்றே சீரழிக்கப்படுகின்றன என்பதையும் கூறாமல் கூறிச் செல்லுகின்றார்.

“இடைவெளி”

“தான் அலுவலகத்திற்குச் சமூகமளிக்காத நாட்களில் கொழும்பில் குண்டு வெடிப்புகள் இடம்பெறுவதற்கான நிகழ்தகவு மிகவும் உயர்வாக இருப்பதன் காரணம் என்ன என்ற வினா, அவன் மனதில் எழுந்துகொண்டிருக்கிறது. காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாய் இவ்வருடத்தில் இவன் லீவு எடுத்திருந்த ஐந்து நாட்களில் மூன்று நாட்களில் நகரத்தில் குண்டுகள் வெடித்திருந்தன. முதல் நாளில் பகிடியாகக் கதைத்தவர்கள் இப்போது இவன் மேல் கோபப்படத் தொடங்கியுள்ளார்கள்”

தலைநகரத்தில் தமிழனின் தலை அடிக்கடி உருட்டப் படுவதை மிகவும் இலாவகமாக கூறிச் செல்லுகின்றார்.

“சிவா”

“என்னிலை பிழையில்லையெண்டு கண்டு பிடிக்க இவங்களுக்கு ஆறு வருசம் எடுத்திருக்கு மச்சான்” ................ காக்கிச்சட்டைகள் ஒவ்வொரு மாணவரினதும் அடையாள அட்டையை வாங்கிப் பார்க்கிறார்கள். பெரேராக்கள், பெர்னாண்டோக்கள், சில்வாக்களை விட்டுவிட்டு, அமுதன், ராகவன், குகன், கிரி, உமா, தேவகி ஆட்களை வரிசையில் விடுகிறார்கள்.

............... “வரிசையில் எனக்கு முன்னால் குகன், சீலன், ரமேஸ், இளங்கோ, வான்மதி, ரதி ஆட்கள் பைல்கள் புத்தகப் பைகளுடன் தலை கவிழ்ந்து நிற்கிறார்கள். எழுபது எழுபத்தைந்து பேர் இருக்குமோ?”

இந்த மண்ணில் தமிழனாய்ப் பிறந்ததே ஒரு சாபக்கேடு! அதிலும் இன்னும் தமிழனாய் வாழ்வதே பெரும்பாடு!! இது தமிழன் வாழ்வதற்குரிய நாடேயல்ல...

என்ற எண்ணத்தை... இவர் தெரிந்தோ தெரியாமலோ வாசகனின் மனதில் விட்டுச் செல்லுகிறார்.

“இரட்டைக் கோபுரம்”

“…. மயில் இறகு அச்சடிக்கப்பட்டிருந்த சேலை அணிந்து லிப்ஸ்டிக் பூசியிருந்த இளம்பெண் அந்நேரத்திலும் சிரித்தபடி, ‘ப்ளைட் கன்சல்’ என்று சொல்லி கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட் ஒன்றை நீ

ட்டினாள். கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தர்க்கப்பட்டு மோதல்கள் நடைபெறுவதாய்.....”

.......... “பற தெமிளு”... சுனில் சொன்னான். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை....”

உள்ளூரில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இனவாதம் எவ்வளவுக்கு தூபமிடப்பட்டிருக்கின்றது என்பதனைத் தனது அனுபவமாகக் கூறுகின்றார்.

“சின்ன” மாமா

“அந்தச் சோடிக் காப்புகள் அம்மா கிடுகு பின்னியும், தேங்காய் மட்டைகளைக் கடலில் ஊறவைத்து, பின்னர் அதை எடுத்துத் தும்பாக அடித்து, கயிறாகத்திரித்து விற்றுவந்த பணத்தில் மீட்கப்பட்டதாக இவன் அறிந்திருந்தான். மாமாவின் பல்கலைக்கழகச் செலவுகளுக்காக அச்சோடிக்காப்புகள் அடிக்கடி காசிப்பிள்ளையாரின் வீட்டில் அடகு போய்ப் பின்பு மீட்கப்பட்டு வரத்தொடங்கின”

............ “சிறுதும்பும் கயிறாகும்” வெளியாவதற்காக அம்மாவின் அச்சோடிக்காப்புகள் காசிப்பிள்ளயரிடம் அடகு வைக்கப்படவில்லை. குமாரசாமியரிடம் விற்கப்பட்டன....”

ஒரு எழுத்தாளனின் போலிகளை சுரம்பிரித்துக் காட்டுகின்றார்.

“ஒரு சுதந்திர நாள்”

“ஹொஹெத யன்னே?” இவன் நடக்கையில் இராணுவ வீரனொருவன் கேட்டான்....

‘மம கடையட்ட யன்னே...” குரல் தடுமாறுவது போலிருந்தது.. உச்சரிப்பை வைத்து இவன் தமிழன் என்பதை கண்டு பிடித்துவிட்டானோ!

“ஐசி தெண்ட..”

அரை மணித்தியாலமாய் இவனது தேசிய அடையாள அட்டை, பொலிஸ் பதிவுத் துண்டு, பல்கலைக்கழகப் பதிவுப்புத்தகம் என்பவற்றைப் புரட்டிப் புரட்டிப் பார்த்து விசாரித்த இராணுவ வீரன் என்ன நினைத்தானோ இவனைப் போக அனுமதித்தான். தப்பியது போதும் போலிருந்தது. தமிழன் என்பதற்காய் நடுவீதியில் வெய்யிலில் வைத்து விசாரிக்கிறானே!

தேசியக் கொடியொன்றை முன்னால் பறக்க விட்டபடி கல்கிசைப் பக்கமாய்ச் சென்ற பஸ் ஒன்றினுள் இளைஞர் யுவதிகள் சிங்களப் பொப்பிசைப் பாடலொன்றை பாடியபடி நடனமாடிக் கொண்டிருந்தனர். சுதந்திர தின விடுமுறையை அனுபவிக்க எங்கோ சுற்றுலா செல்கிறார்கள் போல..

......... “சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் இணைந்து போராடிப் பெற்ற சுதந்திரம் நாட்டு மக்கள் அனைவருக்குமுரியது.. என ஜனாதிபதி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டதாய்....”

மானமுள்ள ஒவ்வொரு தமிழனையும் இந்தச் சிறுகதை சீண்டிப் பார்க்கிறது!

“இவன்”

“தம்பி உமக்கு இன்னும் வேலை கிடைக்கேலையோ... கொழும்பிலை வேலை எடுக்கிறதெண்டால்... ‘நல்ல இங்க்லீஷ் நோலேஜ்’ வேண்டும். எதுக்கும் உம்மடை பயோ டேட்டாவைத் தாரும். தம்பியிடம் கொடுக்கிறேன்.. அவனுக்கு நல்ல செல்வாக்கிருக்கு...”

.......... இவன் பல்கலைக்கழகத்தில் இங்க்லீஷ் மீடியத்தில் படித்தான் என்பதையோ, இவனது சில ஆய்வுக் கட்டுரைகள் எக்கொணமிக்கா, எக்கொணமிக்ஸ் றிவியு போன்ற சஞ்சிகைகளில் வெளியானதையோ இவர்களுக்குச் சொன்னால் நம்பவா போகிறார்கள்?

போலிச் சமுதாயத்தை தோலுரித்துக் காட்டுகின்றார்.

“மரநாய்கள்”

இது ஒரு உருவகக் கதை. இந்திய இராணுவம் இருந்த காலத்தில் நடந்திருக்கிறது. கோழி பிடிப்பது மரநாய்கள் மட்டுமல்ல இந்திய இராணுவமும் தான் என்பதையும் அதனை மிக விரைவில் விரட்டவேண்டும் என்பதையும் கதை கூறிச் செல்கிறது. முடிவாக... மிகவும் அற்புதமான கதைகளைத் தன்னகத்தே கொண்டு மிளிர்கின்றது இத்தொகுப்பு. இவர் கற்பனைகளில் இக்கதைகளைச் சொல்லவில்லை. அவ்வளவும் மிக மிக அற்புதமான அனுபவங்களையே அள்ளித் தெளித்திருக்கின்றார். நான் சுரண்டி எடுத்துவந்தவைகள் கொஞ்சம்!! ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான அனுபவங்களைக் சுமந்து நிற்கும் சொற்களின் சுரங்கம் என்றால் அது மிகையன்று! இது ஒவ்வொரு தமிழனின் அனுபவங்கள் என்றாலும் அது நகையன்று! இவர் கண்ட அனுபவங்கள் பல எம்மையும் தாண்டிச் சென்றிருக்கின்றன. இல்லை... நாமும் தாண்டித்தான் வந்திருப்போம்! ஒவ்வொரு கதையையும் படிக்கும்போது அந்தக் கதா நாகயகனின் உணர்வுகளை நாமும் பெறுகின்றோம். இதுவே இவரின் எழுத்தாற்றலுக்குக் கிடைக்கும் முதல் வெற்றியாகும். கதை சொல்லும் திறன் இவருக்கு நன்கு அமைந்திருக்கின்றது. இதற்கு இவரது பட்டயக்கல்வியும் பட்ட அறிவும் நன்கு கை கொடுத்திருக்கின்றது. இத்தகைய இளம் எழுத்தாளர்களை தமிழ்கூறும் நல்லுலகம் வளர்த்தெடுக்கவேண்டும்! மீண்டும் சொல்லுகிறேன்.. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான அனுபவங்களைக் சுமந்து நிற்கும் சொற்களின் சுரங்கம் என்றால் அது மிகையன்று! இது ஒவ்வொரு தமிழனின் அனுபவங்கள் என்றாலும் அது நகையன்று!

இந்த இளம் கலைச்சிற்பிக்கு வாழ்த்துக் கூறுவதில் என்தமிழ் பெருமை பெறுகின்றது!!

Sunday, May 19, 2013

ந.இரவீந்திரன்

கருதியல்களின் இணைப்பு: தேவ முகுந்தன் சிறுகதைகளை முன்னிறுத்தி ஒரு தேடல் தேவ முகுந்தனின் "கண்ணீரினூடே தெரியும் வீதி..."

சிறுகதைத்தொகுதியைப் படித்துக்கொண்டிருந்தபோது முகநூலில் ஒரு விவாதம் போய்க்கொண்டிருந்தது. ஒரு மையச் சரடு சார்ந்து பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன. கன்னட இலக்கியச் சூழல் மார்க்சிய-காந்திய இணைப்புடனான யு.ஆர்.அனந்தமூர்த்தியைத் தந்ததுபோல டானியல் அமைய இயலாமல் போனது அன்றைய விமர்சன-கருத்தியல் வடிவப்படுத்தலை மேற்கொண்ட கைலாசபதி இழைத்த தவறா என்பது மையச்சரடாக அமைந்த பேசுபொருள். கருத்தியல் தளத்தில் திறனாய்வுப் பங்களிப்பினூடாக செயற்பட்ட கைலாசை இலக்கியப் பங்களிப்பு என்கிற வகையில் நெருக்கம்கொண்டிருந்த அளவைக் காட்டிலும் சாதியத் தகர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த கொம்யூனிஸ்ட் கட்சித் தளத்தோடான நெருக்கம் டானியலுக்கு அதிகமாயிருந்தது. அதன் காரணமாக அரசியல்வாடை அவர் படைப்புகளில் முனைப்பாகி இருந்தது; அதை மட்டுப்படுத்தி, இலக்கியத் தளம் என்ற புரிதலை உணர்த்தத் தவறி அழகியலற்ற ஆக்கத்தை வழங்கியதை அங்கீகரித்த தவறை கைலாஸ் செய்தார் என்பதே குற்றச்சாட்டு.

அரசியல் இலக்கியம் என்கிற வகைப்பாட்டை ஆரோக்கியமானதாக வளர்த்தெடுக்க கைலாசபதி, ஏ.ஜே.கனகரத்னா, சிவத்தம்பி, ஏச்.எம்.பி.மொஹிதீன் எனப்பலர் அன்று விமர்சன-கருத்தியல் தளத்தில் இயங்கினர்(அனைவரது செயற்பாட்டுக்குமான குறியீடாக 'கைலாஸ்' அங்கே கொள்ளப்பட்டிருந்தார்). அதன் பேறாக டானியல் உட்பட பலரும் ஆக்க இலக்கியத்தில் செயலாற்றி வலுவான படைப்புகளை வழங்கினர்(அவர்கள் அனைவரதும் குறியீடாக 'டானியல்' கொள்ளப்பட்டிருந்தார்). அவற்றை நிராகரிக்க இயலாது என்பதை ஏற்று, வாழ்க்கை சார்ந்த இன்னும் பரந்த பார்வையுடனான கருத்தியல்களுடன் அந்தப்படைப்புகள் வெளிப்பட்டிருக்கவேண்டும் என்ற ஆதங்கமே அந்த விவாதத்தில் முனைப்பாகியிருந்தது.

இலக்கிய, அரசியல் தளங்களில் விவாதப் பொருள்களாயிருந்த பேசுபொருட்களையும் மீறி டானியல் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் படைப்பாக்கியிருந்தார். அது படைப்பாளிக்குரிய ஆளுமை. இலக்கியத் தளத்தில் செயற்பட்ட விமர்சகர்கள் அதன் அழகியல் பரிமாணம் குறித்து பேச இயலும் என்கிற வகையில் "தமிழ் இலக்கியத்துக்கு புதிய மைல்கல் டானியலின் 'பஞ்சமர்' நாவல்" எனக் கூறி வரவேற்பைக்காட்டும் கைங்கரியத்தையே செய்யவியலும் என்கிறவகையில் கைலாஸ் அப்பணியைச் சிறப்பாகச் செய்திருந்தார். அவ்வாறே அரசியல் தளத்தில் செயற்பட்டவர்கள் சாதிவாதப் பார்வை மேலோங்கியிருந்ததை வெளிப்படுத்தவேண்டியிருந்தது; அதன்பேறாக "கானல்" போன்ற இறுதி நாவலில் மார்க்சியப் பார்வையை அதிகம் வரித்து ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வைப் படைக்க அவருக்கு இயலுமாயிற்று.

எமது சூழலில் காந்தியத்தை நிராகரித்து மார்க்சிய வழியில் சாதித்தகர்ப்புப் போராட்டம் "தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தால்" முன்னெடுக்கப்பட்ட உச்சநிலையில் செயற்பட்ட அனுபவங்களை உள்வாங்கியபடி அத்தளங்களில் இயங்கிய மக்களின் வாழ்வைப் படைப்பாக்க முனைகையில், காந்தியம் நிராகரிப்புக்குரிய கருத்தியலாக டானியலுக்கு இருந்தமை புரிந்துகொள்ளத்தக்கதே. இதே போன்றே மராட்டியச் சூழலில் தலித் இலக்கியம் எழுபதுகளில் முனைப்படைந்தபோது (அதற்கான வேர் முன்னதாக வெளிப்பட்ட நாளிலிருந்து) மார்க்சியம் அங்கே சாதித் தகர்ப்புப் பணியை மேற்கொள்ளாமையால் மார்க்சிய நிராகரிப்பு அங்கே தலித் இலக்கிய கர்த்தாக்களிடம் இருந்தது. ஒடுக்கப்பட்ட(தலித்) மக்களின் தலைவராக இயங்கிய அம்பேத்கரை ஏற்காமல், 'இந்துக்களாக' உள்ள அந்த 'ஹரிஜன' மக்களுக்கும் தானே ஏகப்பிரதிநிதி எனக் காந்தி செயற்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை இயக்கத்துக்குப் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தினார் என்கிறவகையில் காந்தியின் கருத்தியலையும் தலித் இலக்கிய கர்த்தாக்கள் நிராகரித்து வந்தனர். இன்று தலித் இலக்கிய வளர்ச்சிப்போக்கின் பல்வேறு இயக்கப்போக்குகள் மக்களின் விடுதலைக்கு போதிய பங்களிப்பை நல்கத் தவறிய நிலையில், அது அம்பேத்கர் சிந்தனையுடன் மார்க்சியம், காந்தியத்தையும் உள்வாங்குவது அவசியம் என்பது பேசப்படுகிறது(இவ்வகையில் சரண்குமார் லிம்பாலேயின் "தலித் இலக்கியம் விடுதலையின் திசைகள்" எனும் நூல் கவனிப்புக்குரியது).

எமது மார்க்சிய இலக்கிய வளர்ச்சியும் இன்றைய கட்ட கருத்தியல்களாயுள்ள பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தியம் என்பவற்றை உள்வாங்கியவாறு தனது பார்வை வீச்சை விசாலப்படுத்தி வருகிறது. அதைவிடவும் எமக்கான சாதியச் சமூக அமைப்பின் பிரத்தியேகத் தன்மைக்கு அமைவாக மார்க்சிய உலக நோக்கை எவ்வகையில் வளர்த்தெடுத்துப் பிரயோகிப்பது என்பது குறித்த விவாதம் மார்க்சியக் கருத்தியலை மேலும் ஆழப்படுத்தியிருக்கும் கட்டத்தையும் அடைந்துள்ளோம். முற்போக்கு இலக்கிய இயக்கம் ஐம்பதுகளில் தொடங்கி மூன்று தசாப்தங்கள் வீறுடன் செயற்பட்ட அனுபவ அறுவடையாக, பின்னரான மார்க்சியக் கருத்தியல் விவாத வளர்ச்சி இன்றைய விருத்தியைப்பெற்றுள்ளது. இத்தகைய புதிய கருத்தியல் தளத்தில் இருந்தவாறாக தேவ முகுந்தனின் சிறுகதைகளை அலசுவோம்.

-1- முன்னதாக தேவமுகுந்தன் மார்க்சிய இலக்கியத் தளத்தைக் குறித்த எந்த அபிப்பிராயத்தையும் வெளிப்படுத்தி தனது ஆக்க இலக்கியப் பணியை மேற்கொள்ளவில்லை என்பதைக் குறிப்பிடுவது அவசியம். மேலே வலியுறுத்திய விடயம் இன்றைய இணைப்புக் கருத்தியல் என்பது மார்க்சிய அழகியல் விருத்தி தொடர்பாக முன்வைக்கப்பட்டது மட்டுமே. மார்க்சிய இலக்கியம் என்பது முற்போக்கு இயக்கத்தின் வெளிப்பாடாக படைப்பாக்கப்பட்ட எண்பதுகள் வரையானவற்றில் அழகியலே இல்லை என்றவர்கள் இன்று தமது நிராகரிப்பை வாபஸ்வாங்குவது கவனிப்புக்குரியது. அதற்காக, அழகியலை முன்னிறுத்தியவர்களதும் முற்போக்காளர்களதும் தளம் ஓரே இடத்தை நெருங்கிவிட்டது என்று கூறவரவில்லை. தவறான புரிந்துணர்வுகளைக் கூடியவரை களைந்துகொண்டு ஐக்கியப்பட்டு செயலாற்ற ஒரு வெளி ஏற்பட்டுவருவதை அவதானிக்க இயலும். இதனைக் காட்டும் படைப்பாக "கண்ணீரினூடே தெரியும் வீதி..." தொகுதியைக் கொள்ள இயலும்.

"சிறுகதைகளின் மூலம் நான் புதிதாக எதனையும் கூற முற்படவில்லை. என்னைப் பாதித்த அனுபவங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தச் சிறுகதைகளை எழுதினேன்" என என்னுரையில் கூறும் ஆசிரியரை இலகுவில் புரிந்துகொண்டுவிடுகிறோம். புதுமைப்பித்தன் இதே போன்று தனது படைப்புகள் அப்படியொன்றும் சமூக விமோசனத்துக்கானது அல்ல என்று கூறியதன் அடிப்படை குறித்து ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது. அழகியல் வாதத்துக்கான ஒரு முன்னோட்ட பிரகடனம் இது. சமூக மாற்றத்துக்கானது இலக்கியம் என்ற பிரக்ஞ்சையுடன் படைக்கிறோம் என்கிற முற்போக்கு இலக்கியகர்த்தாக்களின் வாழ்க்கை அனுபவ வெளிப்பாட்டில், சமூக மாற்றத்துக்கான அவசியம் சார்ந்த அம்சங்கள் வடிகட்டப்பட்டதாய் படைப்பாக்கம் அமைகிறபோது உண்மைத்தன்மை அற்றுப்போகிறது என்பது அழகியலாளர்களின் குற்றச்சாட்டாகிறது. இவ்வாறு கோட்பாட்டை முன்னிறுத்துவது அழகியலுக்கு கேடானது என்பது அவர்கள் கருத்து. கோட்பாட்டை நிராகரிக்கும் அவர்களது அனுபவவாதப் படைப்புகள் சமூக மாற்றத்துக்கு விரோதமாகி, பிற்போக்குவாதிகளுக்கு உதவுகிறது என்பது முற்போக்காளர்களின் குற்றச்சாட்டு.

அழகியல்வாதப் படைப்புகள் அனைத்துமே பிற்போக்குப் பண்புக்குரியன அல்ல என்பது போலவே, முற்போக்குப் படைப்பாளர்கள் அனைவருமே முற்போக்கான சமூக மாற்றத்துக்கு உரியவர்களாக இல்லை என்கிற உண்மையையும் மறுத்துவிட இயலாது. தேவமுகுந்தன் முற்போக்கு அணி மீது நம்பிக்கைகொள்ள முடியாத ஒரு படைப்பாளியைத் தனது ஊரிலே அடையாளம் காண்கிறார். " 'சின்ன' மாமா" என்கிற கதையில், கதைசொல்லியின் மாமாவாக அந்த முற்போக்குப் படைப்பாளி காட்டப்படுகிறார். அந்த மாமா தனது அண்ணாக்கள் அக்கா(கதைசொல்லியின் அம்மா) ஆகியோரைச் சுரண்டி வாழ்வில் உயர்ந்து பெரும் அதிகாரியாகி, வசதியான இடத்தில் திருமணம் செய்ததோடு பெற்றவர்களையும் சகோதரர்களையும் மறந்துவிட்டவர். பணியிடத்தில் ஊழல் செய்து வேலையை இழந்து, முழுநேர எழுத்தாளாராக எழுதிக்குவித்து சம்பாதித்தவர். அவரது வாழ்க்கை குறித்து என்ன விமர்சனம் இருந்தாலும் அவரது படைப்புகள் உன்னதமானவை என அவரது மறைவையொட்டி அஞ்சலிக்கூட்டத்தில் பேசப்படுவதைக் கதைசொல்லி கேட்கிறான். முடிவாக, சமைப்பவர்களின் நோய் உண்பவர்களைத் தாக்க இடமுள்ளது என்பதைக் காட்டி, படைப்பாளியைப் பார்க்காமல் படைப்பை அணுகவேண்டும் என்ற கோட்பாட்டின் தவறு உணர்த்தப்படும்.

இதுகுறித்து முற்போக்கு இலக்கியகர்த்தாக்களிடமும் விவாதம் இருந்தது. தனது வாழ்வுக்கு எவ்வளவுக்கு விசுவாசமாக உள்ளாரோ அந்த அளவுக்கே அவரது படைப்பும் காத்திரமானதாக மட்டுமன்றி உண்மைத்தன்மையானதாகவும் இருக்கவியலும். டானியலின் படைப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை வெளிப்படுத்திய அற்புதமானவை எனக் கூறும்போதே, அவர் வலியுறுத்துகிறவாறாக மார்க்சிய நோக்கில் அவை அமைய இயலாத பலவீனத்தைக் கொண்டிருப்பதை முற்போக்கு விமர்சகர்கள் காட்டியுள்ளார்கள். அது ஒரு மார்க்சியராக வாழ இயலாத அவரது வாழ்முறை ஏற்படுத்திய பாதகம். அவ்வாறே 'சின்னமாமா' எந்த அளவுக்கு முற்போக்கு குணாம்சங்களைக் கொண்டிருந்தாரோ (அவரது தவறுகள் பலவீனங்களோடு இதுவும் கூடவே இருந்த அம்சம் என்பதை மறுக்க இயலாது) அந்த அளவுக்கு அவரது படைப்புகளில் காத்திரத்தன்மையும் முற்போக்கு அழகியலும் இருந்தது. ஈழத் தமிழ்ப் படைப்புலகில் அவர் நிராகரிக்க முடியாத ஆளுமை.

அந்தச் சின்னமாமா சாதியத்தகர்ப்புப் போராட்டத்தை பற்றுறுதியுடன் ஆதரித்து, அதன் முன்னெடுப்புக்கு ஏற்றதாகப் படைப்பாக்கங்களை நல்கியதன் வாயிலாகவே இலக்கிய உலகின் கவனத்தை ஈர்த்தவர். அவரது தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இந்தப் பங்களிப்பைக் கவனிக்கவேண்டும் என்பதில்லை; விமர்சன அணுகுமுறையில் தவறுகளை வெளிப்படுத்தும் அதேவேளை அவரது காத்திரமான இருப்பு எந்தவகைக்குரியது என்பதையும் அடையாளம் காண வேண்டும். சாதித் தகர்ப்பு என்கிற பண்ணையடிமைத் தகர்ப்பை மேற்கொண்ட தேசியப்பணி முழு இலங்கையின் தேசபக்த ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்தியது என்கிறவகையில் இலங்கைத் தேசியத்தை முன்னிறுத்தியது. தமிழ்த் தேசியம் பேசியவர்கள் இந்திய(தமிழக) நெருக்கத்தை வெளிப்படுத்தும்போது, இலங்கைத் தேசியத்தை இரண்டாம் பட்சமாக(பின்னாலே பிரிவினையை முன்னிறுத்தி முற்றாக நிராகரிப்பவர்களாக) இருந்தார்கள். மட்டுமல்லாமல், சாதியத்தகர்ப்பு எனும் பண்ணையடிமைத்தன ஒழிப்பு என்கிற தேசியக் கடமைக்கு விரோதமாக இருந்தார்கள். முற்போக்காளரின் சாதித் தகர்ப்பு சார்ந்த இலக்கியப்பணியை ஏற்க இயலாத தமிழ்த்தேசிய ஆதரவு படைப்பாளர்கள் தவிர்க்க இயலாவகையில் அழகியல் வாதத்தை முன்னிறுத்தினர். பின்னாலே பேரினவாத அரச பயங்கரவாதம் கொலைவெறித்தாண்டவம் ஆடியபோது, அதனை இலக்கியப்படுத்தியவர்கள் முற்போக்கு அணியின் அனுபவத்தை உள்வாங்கி படைப்பாக்கியிருக்க வேண்டும். மாறாக முந்திய அழகியல்வாத தமிழ்த் தேசியப் படைப்பாளிகளை முன்மாதிரியாகக் கொண்டமையால் கோட்பாட்டுப் புரிதல்கொள்ளாமலே படைப்பு முயற்சியில் இறங்கினர். தமிழ்த் தேசியம் பேரினவாத அரசோடு கொண்டிருக்கும் முரண்பாட்டைத் தீர்ப்பதை முதல்நிலையாகக் கொண்டிருப்பின் முற்போக்கான சிங்கள மக்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அரசியல் சக்திகளோடு ஐக்கியப்படுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவ்வாறில்லாதது மட்டுமன்றி, மற்றொரு தேசிய இனமான முஸ்லிம் மக்களையும் எதிர்நிலைக்கு தள்ளியதோடு இந்திய மேலாதிக்கத்துக்கு இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு உதவும் அரசியலே முன்னெடுக்கப்பட்டது (அடிப்படையில் முப்பது வருட யுத்தம் இந்தியா இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்துக்குரியது. அது நிறைவாகியபோதிலும், இன்னும் தேவைப்படலாம் என்பதால் இனப்பிரச்சனை தீர்க்கப்படாமலே யுத்தம் முடிவு பெற்றுள்ளது. யுத்த வெற்றிக்கு வேறு வழியின்றி, இந்தியக் கோரிக்கைகள் அனைத்துக்கும் பணிந்து அடிமைச்சாசனத்தில் ஒப்பமிட்ட பேரினவாத சக்தி அதனை மீறும்போது ஒப்பந்தத்தை முன்னிறுத்தி மட்டுமன்றி, தமிழருக்காகவும் தலையிட இந்தியாவுக்கான வெளி உள்ளது. கடந்துபோன கசப்பான அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளாமல் தமிழ்த் தேசியம் இன்னும் அதே தவறான பாதையிலேயே பயணிக்கிறது என்பது தொடரும் துன்பியல்).

இதன் பாதகத்தை உணரும் இடத்தில் தேவமுகுந்தன் உள்ளார் என்பது கவனிப்புக்குரியது. "கண்களினூடே தெரியும் வீதி..." எனும் தலைப்புக்கதை அதனை உணர்த்துவதாக உள்ளது. யுத்த அகோரத்தில் சைரண் ஒலியோடு இராணுவ உடல்களை ஏந்திச் செல்லும் அம்புலன்சுகளின் ஓட்டங்கள் கண்டு கலங்கிக்கொண்டிருந்தவனுக்கு, கொழும்பில் தன்னைப் பாதிக்குமோ என்பதற்கு அப்பால், களத்தில் தனது தம்பி மடிந்த செய்தி வருகிறது. அதேவேளை பக்கத்து வீட்டில் இறந்த சிங்கள இராணுவத்தின் உடல் வருவதை அறிகிறபோது கண்ணீரூடே தெரியும் வீதியை வெறித்தபடி அந்த சிங்கள வீரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் செல்லும் முடிவை எடுக்கிறான். இந்த உணர்வு வளர்த்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். "ஒரு சுதந்திர நாள்" கந்தசாமியைவிட சிங்கள நண்பர்கள் உதவும் சந்தர்ப்பம் இந்தத் தலைப்புக்குரிய கதையில் காட்டப்பட்ட போதிலும், கந்தசாமி தமிழ் இளைஞனிலிருந்து ஒதுங்கியிருப்பதற்கான காரணம் 'தமிழன்' என்ற பாதுகாப்பற்ற உணர்வு சார்ந்தது. "வழிகாட்டிகள்..." கதையில் கல்விப் பிரயோக உயர் நிறுவனத்தில் தமிழ் உயர் பதவிவகிப்போர் முன்வைக்கும் கோரிக்கைகள் மோசமான சுயநலம் சார்ந்திருப்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுக்கு அப்பால் ஏனைய கதைகளில் தமது சுயநலத்தை முன்னிறுத்தும் தமிழ்த் தேசியத் தலைவர்களுக்கு உதவும் கண்ணோட்டமே வெளிப்படுகிறது. மேலேசென்று தேசிய இனப்பிரச்சினைத்தீர்வுக்கு வழிதேட ஆற்றுப்படுத்தும் நாட்டத்தை ஏற்படுத்தக்கூடிய கதைகளாக அமையத் தவறுகின்றன. சிங்களத் தரப்பு செய்கிற ஒவ்வொன்றிலும் இனவாதத்தைக் காணும்போது எம்மத்தியில் இனவாதம் மக்கள்விடுதலைக்கு மாறான வகையில் அமைந்திருப்பது கண்டுகொள்ளாமலே விடப்படுகிறது. பின்னுரையில் நூஃமான் குறிப்பிடுவதுபோல, "எனினும், விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் விடுதலை இயக்கங்கள் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளையும், கொலைகளையும், பயங்கரவாதத்தையும் அதன் விளைவுகளையும் பற்றிப் பேசாத இலக்கியம் ஒருபக்கச் சார்பானது என்பதையும் நாம் அழுத்திக் கூற வேண்டும்".

இவ்வாறு கூறுகின்ற நூஃமான் தலைப்புக்கதையான "கண்ணீரினூடே தெரியும் வீதி..." பற்றிக்கூறும் கருத்து அழுத்த அவசியமுடையது. "கடந்த முப்பது ஆண்டுகளில் இனமோதல், யுத்த அனுபவங்களைக் கருவாகக்கொண்டு எழுதப்பட்ட சில சிறந்த சிறுகதைகளுள் இதுவும் ஒன்று என்பது என் கணிப்பு. சிங்களவர், தமிழர் என்ற பேதம் இன்றி யுத்த அவலம் எல்லோர்மீதும் கவிந்திருப்பதை எவ்வித பாசாங்கும் இன்றி இக்கதை யதார்த்தமாகச் சொல்கிறது. இத்தொகுப்பிலுள்ள தேவ முகுந்தனின் மிகச் சிறந்த கதை என்றும் நான் இதைத்தான் சொல்லுவேன். இன முரண்பாட்டுக் காலகட்டத்தில் ஒரு எழுத்தாளனிடம் நாம் எதிர்பார்க்கக்கூடிய அறம் இக்கதையில் பிரகாசமாகத் தெரிகிறது. 'சிவா', 'இடைவெளி', இரட்டைக் கோபுரம்' போன்ற கதைகளில் வெளிப்படையாகத் தெரியும் சிங்களவர்களைப்பற்றிய ஒரு எதிர்மறைப் பார்வை இக்கதையில் இல்லை என்பது எனக்கு மிகுந்த ஆறுதல் தருகின்றது" என்பார் நுஃமான்.

-2-

ஒரு படைப்பாளி வெறும் அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கு அப்பால் சொல்வதற்கு ஒன்றுமில்லை என வாழாதிருந்துவிட முடியாது. வெறும் இனவாதத்துக்குத் தீனிபோடும் அனுபவங்கள் ஏராளமாக உள்ளன. அதைக் கடந்து விடுதலைக்கு எது உதவும், எப்படி உதவ ஏற்றதாக வெளிப்படுத்த வேண்டும் என அனுபவங்களை வகைப்படுத்த-வடிவப்படுத்த ஏற்ற கருத்தியல் தெளிவு படைப்பாளிக்கு அவசியம்.

சிங்களப் பேரினவாதம் ஏனைய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்க முனைந்து சிங்கள மக்களது சுயாதிபத்தியத்தையும் இந்திய மேலாதிக்கத்திடம் தாரை வார்த்துள்ளது. இது சிங்கள உழைக்கும் மக்களுக்கு கேடாயினும் பேரினவாதக் கொள்ளைக் கும்பல் இந்திய மேலாதிக்க சுரண்டலாளர்களுடன் இணைந்து சிங்கள மக்களையும் சூறையாடத் தடை ஏதுமில்லை. எம்மை ஆக்கிரமித்ததாலே இந்தியாவில் இந்திய உழைக்கும் மக்களுக்கு விமோசனம் ஏதும் கிட்டிவிடவும் இல்லை. ஆதிக்கசாதி - சுரண்டும் வர்க்கங்கள் எனும் கொடுமைக்குள் உழன்றவாறேதான் இந்திய உழைக்கும் மக்களின் வாழ்க்கையும். அந்தவகையில் சமூகவர்க்கமாக ஒடுக்கலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும் அனைத்து தேசிய இனங்களும் சாதிகளும் பாட்டாளி வர்க்கச் சிந்தனையில் அணிதிரண்டு மேலாதிக்க - சுரண்டும் தேசிய-சாதி-வர்க்க சக்திகளுக்கு எதிராக அணிதிரண்டாக வேண்டும். இது புரிதலுக்கு மட்டுமன்றிப் பிரயோகிப்பதற்கும் கடினமான பணி என்ற போதிலும், விடுதலையைச் சாத்தியமாக்க ஏற்ற ஓரே வழி இது மட்டுமே. இது சார்ந்த கருத்தியல் தெளிவோடு படைப்பாளி தனது வெளிப்பாடுகளை வழங்க முன்வரவேண்டும்.

இத்தகைய கருத்தியல் தெளிவை முழுமையாகக் கொண்ட ஆளுமைக்கு எம்மிடம் உதாரணமுண்டு. பாரதி வறுமையை ஒழிப்பது, பெண்விடுதலை, சாதித் தகர்ப்பு, தமிழினத் தேசிய விழிப்புணர்வு, இந்தியத் தேசிய விடுதலை, உலகளாவிய மனுக்குல விடுதலை என விசாலித்த கருத்தியல் வீச்சைக் கொண்டிருந்தவர். அதனாலேயே கத்தும் கடலையும், மலையையும், காக்கைக் குருவியையும் தன் கூட்டமாகவும் சாதியாகவும் பாரதியால் காண முடிந்தது. அவரது அந்தப் பார்வைவீச்சு எங்களுக்கு அமையவில்லையே என பார்திதாசன் அங்கலாய்த்ததாக அறிகிறோம் (அரங்கப் பேச்சொன்றில் நூஃமான் கூறியது. தனது நண்பரான ஈழக் கவி ஒருவர் பாரதிதாசனுக்கு நெருக்கமானவர்; தனிக் கலந்துரையாடலில் இப்படி பாரதிதாசன் கூறி வியந்தார் என அந்த நண்பர் சொன்னார் என்பதாக).

இன்று இன்னும் அதிகமாக விசாலித்த பார்வையை வரிக்க உதவுவதாக மார்க்சியம் உள்ளது. ஆயினும், மார்க்சியத்தை இயங்கியல்-பொருள்முதல்வாதமாக புரிதல் கொள்ளாமல், வறட்டுச்சூத்திரமாக்கி வர்க்கப்பிளவுற்ற ஐரோப்பிய அனுபவங்களை அப்படியே பின்பற்றப்போய்த் தவறுகள் நேர்ந்துள்ளது. வர்க்கப்பிளவுறாது ஆதிக்கம் பெற்ற இனமரபுக்குழு சமூகவர்க்கமாய் ஏனையவற்றை வென்றடக்கி சுரண்டலை முன்னெடுத்த எமது சாதியச் சமூகம் இரட்டைத்தேசிய வாழ்முறையில் பெற்றுவந்த சமூக மாற்றங்கள் குறித்த விவாதம் எமக்கான மார்க்சியப் பிரயோகத்தை இனங்காட்டிவருகிறது. காந்தியின் பண்பாட்டியத்தை முன்னெடுக்கும் விடுதலை மார்க்கம், பெரியார் - அம்பேத்கர் ஆகியோரது எதிர்ப்பண்பாட்டியத்தின் ஒடுக்கப்பட்டோருக்கான எதிர்த்தேசிய விடுதலை என்பன முழுமையான விடுதலையைச் சாத்தியமாக்காது என்பதால் இரண்டிலுமான விடுதலைக் கூறுகளை உள்வாங்கிய புதியபண்பாட்டியத்தைப் பாட்டாளி வர்க்க சிந்தனை அடிப்படையில் மேற்கொள்ளும் அவசியம் உள்ளது. பாட்டாளி வர்க்க சிந்தனை முறை தமிழில் முழுமை பெறாத சூழலில்கூட பாரதியின் கருத்தியல் புதிய பண்பாட்டிய வடிவம் கொண்டிருந்தது என்பது கவனிப்புக்குரியது. சரியான மார்க்சிய நோக்கில்லாமல் பாரதியையும், எமது சமூகத்தையும் புரிந்துகொள்ள இயலாது.

ஆரம்பத்தில் குறித்த முகநூல் விவாதக் கருத்தொன்றோடு இந்தத் தேடலை தற்காலிகமாக நிறுத்தலாம். இந்தியாவில் சாதி எதிர்ப்பு உயர் சாதியினர் பண்பாட்டை ஒட்டுமொத்தமாக நிராகரித்தபோது, இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்சாதியினர் பண்பாட்டை தமக்கானதாக ஆக்கி இலக்கியம் சமைத்தனர் என்ற ஒரு பதிவு இடம்பெற்றிருந்தது. இந்தியாவில் வெறும் வர்க்கம் பற்றி மார்க்சியர்கள் அக்கறை கொண்டபோது சாதிய இழிவுகளுக்கு எதிரான போராட்டம் எதிர்த்தேசிய அணிகளால் முன்னெடுக்கப்பட்டன; மரபுப் பண்பாட்டை முற்றாக நிராகரித்து எதிர்ப்பண்பாட்டியத்தை அவர்கள் வரித்திருந்தனர். மாறாக, இலங்கையில் கொம்யூனிஸ்ட்டுகள் சாதித் தகர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தபோது இரண்டின் அவசியக்கூறுகளை இணைத்த புதியபண்பாட்டியத்தைக் கையேற்றிருந்தனர்; வெறும் உயர் சாதிப் பண்பட்டை அல்ல. இந்த புதிய பண்பாடு சார்ந்த கருத்தியல் இணைப்பு என்பது படைப்பு ஒன்றுக்கு மட்டுமன்றி, சமூகமாற்ற நோக்குக்கும் அமைவான விசாலித்த பார்வையை வழங்கும். தேவ முகுந்தன், யோ.கர்ணன், கருணை ரவி ஆகியோரது சிறுகதைகள் மிகுந்த நம்பிக்கையைத் தரும் அதேவேளை, இவர்கள் புதியபண்பாட்டியத்தை வரிக்கும்போது இன்னும் வலுவான படைப்புகளை எமக்குத் தருவர் எனும் நம்பிக்கையும் வலுக்கிறது. ஆம், நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்!

Tuesday, April 16, 2013

எஸ் . கே.விக்னேஸ்வரன்


கருத்துக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய காட்சிகள்

'கண்ணீரினூடே தெரியும் வீதி':அண்மையில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட தேவமுகுந்தனின் சிறுகதைத் தொகுப்பு இது. இந்தத் தொகுப்பிற்கு அறிமுகக் குறிப்பு அவசியமில்லாதளவிற்கு அது பலராலும் பல்வேறு இடங்களிலும் ஏற்கனவே போதியளவு அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டு இணைய இதழான 'திண்ணை'யில் வெங்கட் சாமிநாதன் முதல் வீரகேசரியில் எழுதிய தெளிவத்தை ஜோசப் வரை இந்த நூல் பற்றி எழதிய அனைவருமே இதனை சிலாகிக்கத் தவறவில்லை. பேராசிரியர் நுஃமான் அவர்கள் கூட இந்நூலுக்கெழுதிய தனது முன்னுரையில் விரிவாக அதன் சிறப்புக்களை விபரித்துள்ளார்.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவில் பேசிய டொக்ரர் முருகானந்தன், அ. யேசுராசா, உமா வரதராஜன், வசந்தி தயாபரன் என்று அனைவரதும் பாராட்டை இந்நூல் பெற்றிருந்தது.

இப்படி அண்மைக் காலத்தில் வெளிவந்த நூல்களில் அனைத்துத் தரப்பினரதும் பாராட்டைப் பெற்றுக் கொண்ட, ஒரே நூல் என்ற சிறப்பை இந்த நூல் தட்டிக் கொண்டுள்ளது. இலங்கையின் இலக்கியச் சூழலில் இத்தகைய ஒரு நிலைமை புதியது. விமர்சனங்கள் அல்லது திறனாய்வுகள் பெரும்பாலும் விமர்சகர்களது அடிப்படையான கருத்துக்கள், கோட்பாடுகள் என்பவற்றின் அடிப்படையிலேயே பார்க்கப்பட்டு விமர்சிக்கப்படும் போக்கே இங்கு பலமாக இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக படைப்புக்கள் பாராட்டப்படுவதும் அல்லது நிராகரித்து ஒதுக்கப்படுவதும் தாராளமாக இங்கே நடந்து வந்திருக்கின்றன. இந்தத் தொகுப்பும் முகுந்தனும் அத்தகைய ஒரு நிலைக்கு உள்ளடக்கப்படாதது நிச்சயமாக ஒரு முக்கிய விடயமாக எனக்குப்படுகின்றது. வெ.சா. இத்தகைய ஒரு எழுத்து முகுந்தனிடம் வருவதற்கான சூழல் பற்றிக் குறிப்பிடுவதை ஒரு காரணமாக கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. ஏனென்றால் இத்தகைய சூழலிலும் அத்தகைய விமர்சனங்களும் வரத்தான் செய்கின்றன. இதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்?

'கண்ணீரினூடே தெரியும் வீதி'நம் காலத்து சராசரி தமிழ் இளைஞன் ஒருவனின் நாளார்ந்த அனுபவங்கள் தொடர்பானது. இந்த இளைஞன் தன் எண்ணங்கள், விருப்பங்கள், தெரிவுகள் எவற்றையுமே தனது அறிவுக்கும் தெளிவிக்கும் உணர்வுக்கும் உட்படுத்தக்கூடிய தன் எல்லாவித சுய ஆற்றலையும் பறிகொடுத்துவிட்டு சூழலின் நிர்ப்பந்தத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ள தவித்துத் திரிந்த ஒரு சமூகத்தின் உறுப்பினன். அவனது நடவடிக்கைகள் எல்லாமே தப்பிப் பிழைத்து வாழ்வதற்காக எடுக்கின்ற கணநேரத்து முடிவுகளால் தீர்மானிக்கப்படுபவையாக அமைந்திருந்தன. அவனது அரசியல் பிரவேசமும் சரி, அவன் போராளியாவதும் சரி அல்லது தப்பி ஓடுவதும் சரி எல்லாமே இந்த அடிப்படையில்தான் இயக்கம் கொள்கின்றன.சாதி, சமயம், அரசியற்கோட்பாடுகள் என்று அனைத்தையும் மீறிய அனைவருக்கும் பொதுவான ஒரு நிலைமையை இந்தச் சூழலின் நிர்ப்பந்தம் ஏற்படுத்தியிருந்தது.இந்த இளைஞன் எம் எல்லோருக்கும் தெரிந்தவன்.எமக்குத் தெரிந்த எல்லா வீடுகளிலும் வளர்ந்தவன் அதனால் அவனது கதை எங்கள் எல்லோருக்கும் தெரிந்த எல்லோரதும் கதை முகுந்தனின் தொகுப்பு இப்படி எல்லோராலும் பாராட்டப்பட்டதற்கான காரணம்இதுதான் என்று நான் கருதுகிறேன்.

இந்த எல்லோருக்கும் தெரிந்த இளைஞன் தனது சொந்த அனுபவங்களையும் உணர்வுகளையும் சொல்லுகிறபோது அதை எவர்தான் மறுத்துரைக்க முடியும்?

போராளிகளும் பின்னர் அவர்களுள் துரோகிகள் என்று ஒதுக்கப்பட்டோரும்,கொன்றொரும் கூட இந்தச் சமூகத்தின் பிள்ளைகளாகவே இருந்தனர். எல்லோரும் தப்பிப்பிழைத்தல் என்ற ஓட்டத்தில் திசை தெரியாது சிதறுப்பட்டனர். ஆளோடு அள் மோதிக் கொள்வது தெரியாத வெறிபிடித்த ஓட்டம். தம்மைச் சுற்றி நடப்பதோ நடக்கப்போவதோ பற்றி எதுவும் தெரியாத தெரிந்து கொள்வதற்கான அவகாசத்ததை தேடிக்கொள்வதற்கான பொறுமையையும் தொலைத்த பதற்றத்துடனான ஓட்டம். முகுந்தனின் கதைகள் இவற்றில் சில காட்சிகளைப் படம் பிடித்துத் தந்திருக்கின்றன. அவர் அதற்கு மேல் செல்ல முயலவில்லை. அதை அவர் தனது பணியாகத் கருதியதாகத் தெரியவுமில்லை. இவை அவர் வாழ்ந்த சூழலின் இரண்டு தசாப்தக் காட்சிகள். முகுந்தன் அவற்றை தனது பாணியில் கலைவடிவமாகத் தந்திருக்கிறார். அவர் பார்த்த காட்சிகள் கண்ணீரினூடே தெரிந்த காட்சிகள். கண்களைத் துடைத்து விட்டோ, கண்ணீர் வராத மனநிலையில் நின்றோ அவர் பார்க்கவில்லை. அதனால் அவரது காட்சிகள் கருத்துக்களின் செல்வாக்கிற்கு உட்படவில்லை. கருத்தக்கள் தான் இந்தக் காட்சிகளின் செல்வாக்குட்பட வேண்டும்.

நூலைப்பற்றி இதற்கு மேல் பேச அவசியமில்லாத அளவிற்கு நிறையவே பேசப்பட்டுவிட்டது. அவருக்கு எனது பாராட்டுக்கள்.

எஸ் . கே.விக்னேஸ்வரன்

நன்றி : கலைமுகம் (இதழ் 55)

Saturday, March 2, 2013

ஓட்டமாவடி- அறபாத்

எனது குருநாதர் எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்கள் ஊடாக உங்களது' கண்ணீரினூடே தெரியும் வீதி ' கிடைத்தது.அவ்வப்போது உங்கள் கதைகளை வாசித்து சிலாகித்திருந்த எனக்கு ஒரு தொகுப்பாக கதைகளை படித்தபோது எழுந்த உணர்வுகளில் நல்லதொரு கதை சொல்லியை கண்டடைந்த மகிழ்வும்,நிறைவும் ஏற்பட்டது.

பிறந்த மண்ணின் வலியும் இனத்திற்கெதிராக ஏவி விடப்படும் அடக்கு முறையும் ஆர்ப்பட்டமின்றி உங்களின் எழுத்தில் வந்து சேர்ந்திருக்கின்றது.தலை நகரத்தின் நெருக்கடி மிக்க மன அவஸ்தையை உணர்வுபூர்வமாக அனுபவித்தவன் நான்.தமிழ்மக்களை புலிகளாக பார்த்த ஒரு சமூகத்தின் பார்வை படித்தவனாயினும்,சக நண்பனாயினும் நம்புவதற்கு ஐயங்கொண்டிருந்த அக்காலங்களை கலை நேர்த்தியுடன் சொல்லியிருக்கின்றீர்கள்.

இது மிக முக்கியமாக பதிவு என நினைக்கின்றேன்.

உங்கள் கதைகளில் ஊடுபாவும் தோல்வியின் ரணங்களும், ஆற்றாமையும், கையறு நிலையும் இது வரை தமிழ் மக்களை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனையிலும் வேதனை.இன்னும் சிங்கள மக்களில் கணிசமானோர் புலிகளின் குரலாகத்தான் உரிமைக்கோசங்களை பார்த்து வருகின்றார்கள்.

உங்கள் கதைகளுக்கு மிகப்பொருத்தமான அறிமுகத்தை பேராசிரியர் நுஃமான் வழங்கியிருக்கின்றார்.பல கதைகளை அவர் சிலாகதித்துப்பேசியிருக்கின்றார். அதில் முழுமையாக நானும் உடன்படுகின்றேன். எழுதுவதென்பது தவம் .நெருக்கடிமிக்க சூழலில் மன அவசங்களையும் தாண்டி கணதியான கதைகளை எழுதிவரும் உங்கள் பணி தொடர வேண்டும்.இத்தொகுப்பு நிச்சய்ம் உங்களின் கதைகள் பற்றி நின்று பேசும் ஆவணம்.என்பது மிகையல்ல.

அன்புடன்

ஓட்டமாவடி- அறபாத்

Monday, February 11, 2013

பொ . கருணாகரமூர்த்தி


கண்ணீரினூடே தெரியும் வீதியைப் படித்தானதும் எனக்குத்தோன்றியவற்றை பகிர்வு செய்கின்றேன். எல்லாமே நேர்கோட்டமைப்பிலமைந்த எளிமையான கதைகள். ஆனாலும் படைப்புக்கள் எதுவும் இங்கே சோடைபோகவில்லை. எம்.ஏ.நுஃமான் அவர்கள் சிறப்பாகவே தனது பார்வையை பின்னுரையில் பதிவு செய்துள்ளார். நான் தனித்தனியாக விரித்துரைக்கவேண்டியதில்லை.

சில படைப்புகளில் இடம்பெறும் கைதுகள், மரணங்கள், என்பன தலைப்புக்கதையுட்பட பத்திரிகைச்செய்தியை விஸ்தாரம் செய்வதுபோலுள்ளன. வழிகாட்டிகள் கதையில் மொழிபெயர்ப்புப் பிரச்சனைகள், மாநாடு, கருத்தரங்கு என்பனவற்றை கதைக்கு வேண்டியதைவிடவும் மிகையாக விபரித்துச் செல்வதால் ஒரு கட்டுரைத்தன்மையை அடைகின்றது. இன்னோரிடத்தில் ஒருவர் தனக்கு வேண்டிய ஒருவருக்கு வேலையை வாங்கிக்கொடுப்பார். ‘அவருக்கு (வேலை விஷயத்தில்) செல்வாக்கு அதிகமிருக்குமோ’ என்றொரு வார்த்தையும் அதைத்தொடர்கிறது.

ஆசிரியன் எல்லாவற்றையும் சொல்லிவிடக்கூடாது. படைப்புள் சொற்செட்டும் அவசியம், பேசாப்பொருளாக சிலவற்றை விட்டுவிடவேண்டும். வாசகன் தானாகத்தொடர்வான். புதுமைப்பித்தன் கதையை அழகாக வேகமாக ஒரு கோட்டோவியம்போல நகர்த்திச்செல்வார். அதிகமாக விஸ்தாரஞ்செய்வதில்லை.

இங்கே பல இடங்களில் வாக்கியங்கள் தொள்ளலாக இறுக்கமின்றி அமைகின்றன. இன்னும் ‘மரநாய்’ கதையில் ‘செயின் புளொக்” என்றொரு வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பார். ‘செயின் புளொக்’ என்பது கூட்டுக்கப்பித்தொகுதி. அவர் இங்கே Chain driven Tanker ஐத்தான் கருதியிருக்கவேண்டும். அதாவது ஆசிரியன் சந்தேகமான வார்த்தைகளை உறுதிசெய்தபின்பே படைப்புக்குள் பெய்யவேண்டும்.

தனித்தனியாக கதைகளைப்படிப்பது ஒரு அனுபவம். தொகுப்பாகச் சேர்த்துப்படிக்கையில் எல்லாப்படைப்புக்குள்ளாலும் ஒரு அறிவு ஜீவி / ஒரு பல்கலைக்கழகமாணவன் படிப்பு, டியூஷன், சோதனை என்று திரும்பதிரும்ப துருத்திக்கொண்டு வருகிறார்/தெரிகிறார். இனி இவற்றில் கவனமாக இருந்தால் சரி.

மற்றும்படி எதுவுமே சோடைபோகாத கதைகள். ‘ஒரு சுதந்திரநாள்’ மிகநல்ல படைப்பு. எதிர்காலத்தில் உன்னதமான படைப்புக்கள் குதிரவல்ல நாற்றங்கால் பாத்தியாக இத்தொகுப்பைப்பார்க்கிறேன்.

Saturday, January 19, 2013

தெளிவத்தை ஜோசப்


தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி...,

ஈழத்தமிழ்ச் சிறுகதை உலகிற்கு ஒரு ஆரோக்கியமான புதிய வரவு தேவமுகுந்தன்.

இவருடைய பத்துக் கதைகளடங்கிய சிறுகதைத் தொகுதி கண்ணீரினூடே தெரியும் வீதி...இமுதல் சிறுகதைத் தொகுதி இது.

பிரபல்யமிக்க பதிப்பகமான காலச்சுவடு 2012 ஆகஸ்டில் வெளியிட்டிருக்கும் நூல். காலச்சுவடு பதிப்பக வெளயிPடாக வந்திருப்பதும் தேவமுகுந்தனுக்கு ஒரு சிறப்பே. 1992 ல் தான் கதை எழுத ஆரம்பித்தேன் என்றும் அந்த முதல் கதைக்குப் பிறகு ஒரு பதினைந்து ஆண்டுகள் கழிந்த பிறகே 2008 லிருந்து மீண்டம் சிறுகதைகள் எழுதத் தொடங்கிதாகவும் குறிக்கும் தேவமுகுந்தன், அ. யேசுராசா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். உற்சாகத்தையும் செம்மைப்படத்தலின் அவசியத்தையும் ஏற்படத்தியவர் யேசுராசா என்றும் குறிக்கின்றார்.

பேராசிரியர் நுஃமானின் இவருடைய கதைகள் பற்றியதொரு விரிவான அறிமுகம் பின்னுரையாக இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட தேவராசா முகுந்தன் பிந்திய எண்பதுகளிலிருந்தே கொழும்பை வதிவிடமாகக் கொண்டவர். தேசிய கல்வி நிறுவகத்தில் செயற்றிட்ட அதிகாரியாகப் பணியாற்றியபோதே அரசாங்கப் புலமைப்பரிசில் பெற்று மலேசியாவில் பட்டமேற்படிப்புமுடித்துத் திரும்பி தற்போது இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தில் கல்வித் துறை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.

இந்தத் தொகுதியில் பத்துக் கதைகள் இருக்கின்றன. அவைகளில் மூன்று கலைமுகத்திலும் இரண்டு கனடாவின் காலத்திலும் ஞானம், ஜீவநதி, தினக்குரல், யுகமாயினி, ஈழநாதம் ஆகியவைகளில் ஒவ்வொன்றுமாக வெளிவந்தவை.

1993ல் ஈழநாதத்தில் வெளிவந்த 'மரநாய்கள்' கதையே இவருடைய முதற்கதை. நூலின் கடைசிக் கதை. யாழ்ப்பாணத்தைப் பின்புலமாகக் கொண்ட ஒரேகதை இது. பட்டமேற்படிப்புக்காக மலேசியாவில் தங்கியிருந்தவர் தேவமுகுந்தன். மலேசியப் பின்புலத்தில் எழுந்துள்ள கதை இரட்டைக் கோபுரம்.

' எத்தனை மணிக்கு கொழும்பில் பிளைட் லாண்ட் பண்ணும்லா'

'கண்டிக்குப் யார் கூட்டிப்போவாங்கள்லா'

என்று 'லா' போட்டு; முடிக்கும் உரையாடல் மலேசியா. சிங்கப்பூரின் முத்திரை தேவமுகுந்தனும் முத்திரை பதிக்கின்றார்.

மற்ற எட்டுக் கதைகளும் கொழும்பு வாழ்வை மையமாகக் கொண்டவைகள். 1997 ல் தனது இருபதாவது வயதில் மரணித்த அன்புச் சகொதரன் நிர்மலனின் நினைவுகளிற்கு இந்த நூலை அர்ப்பணமும் செய்கின்றார் தேவமுகுந்தன்.

நிர்மலன் என்ற புனைபெயரில் இவருடைய சில சிறுகதைகள் வந்திருக்கின்றன. என் கையில் இவருடைய கண்ணீரினூடே தெரியும் வீதியும் கண்ணீரும் ஆழமான அர்த்தம் கொள்கின்றன. குறைவாக எழுதினாலும் நிறைவான கவனம் பெறும் தெவமகுந்தனின் இந்தச் சிறுகதைத் தொகுதி ஆழமான வாசிப்பைக் கோரி நிற்கும் ஒரு அருமையான தொகுதி. இலக்கிய அக்கறை கொண்டவர்கள் வாசிக்கவும் வைத்திருக்கவும் வேண்டிய நூல் 'கண்ணீரினூடே தெரிம் வீதி...'

-தெளிவத்தை ஜோசப்

நன்றி: வீரகேசரி 19.01.2013

Tuesday, January 8, 2013

வெங்கட் சாமிநாதன்


தேவமுகுந்தன் – ஒரு புதிய வரவு ஒரு புதிய குரல்-

தேவமுகுந்தன் யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்தில் 1972 –ல் பிறந்தவர் வயது 40. இப்போது கொழும்புவில் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் ஒரு விரிவுரையாளராகப் பணியாற்றுகிறவர். கொழும்புவிலும் மலேசியாவிலும் மேற்படிப்பைப் பெற்றவர். சற்றுக்காலம் கல்வி அதிகாரியாகவும் கொழும்புவில் பணியாற்றியவர்.

ஆக தன் சிறுவயதுப் பிராயம் தவிர, பின்னர், அவரது வாழ்க்கை பெரும்பாலும் சிங்களவர்களிடையே ஒரு தமிழராகத் தான் கடந்து வந்துள்ளது. இப்போதும். இலங்கை பிரிட்டீஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற 1948 லிருந்து தமிழரை அன்னியராக பாவிப்பது வெளிப்படையாக, அரசுக் கொள்கையாக வரித்துக்கொண்டது கடந்த முப்பது வருடங்களாக தொடர்ந்த உள்நாட்டுப் போராக வெடித்து மூன்று வருடங்களுக்கு முன்

அது அரசின் சிங்கள வெற்றியாக, தமிழரின் இன அடையாளமும் ஈழ அடையாளங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வரும் கட்டத்தில் கொழும்புவில் சிங்களவரிடையே வாழும் தமிழரின், மொழி, இன உணர்வுகள் எத்தகைய வாழ்வு பெறும், எழுத்தில் வடிவம் பெறும்? அது இதுகாறும் நமக்குத் தெரியவராத ஒரு புதிய குரலாகத் தான் இருக்கும்.

கொழும்புவிலிருந்து அங்கு வாழ நேரிடும் தமிழ்க் குரலை நாம் கேட்டதில்லை. பெரும்பாலும் நமக்குப் பழக்கமானது கனன்று கொதிநிலையிலேயே இருந்த ஈழத்தில் வாழும் தமிழரின் கலகக் குரலைத் தான் கேட்டிருக்கிறோம். கலகக் குரல் ஒற்றைக் குரலாக எங்கும் எதிர் ஒலிக்க நிர்ப்பந்திக்கப் பட்டதையே நாம் ஈழக் குரலாகக் கேட்டும் பழக்கப் பட்டிருக்கிறோம். நிர்ப்பந்திக்கப்பட்டு மௌனமானதை நாம் கேட்டதில்லை. அப்படியும் சில நசுக்கப்பட்ட குரல்களும் நம் காதுகளுக்கெட்டியதுண்டு.

புங்குடு தீவு என்னும் யாழ்ப்பாணத் தீவுக்கூட்டத்தில் ஒரு தீவில் வாழ்ந்த மு தளையசிங்கத்தின் சிந்தனையில் ஈழம் ஒரு உருவகப் படிமமாக, தனிவீடு என்ற தலைப்பில் 1962-ல் எழுதப்பட்டு 1980களில் வெளியானது. ஈழம் தந்த எழுத்தாளர் சிந்தனையாளரிலேயே வித்தியாசமான மனிதர். அவர் இறந்தபிறகு தான் அது வெளியானது. தனித்த சுதந்திரக் குரலை விரும்பாத மார்க்ஸிஸம் பேசிய ஈழப் பெருந்தகைகளாலேயே அக்குரல் ஒடுக்கப் பட்டது. சிவரமணி என்று ஒரு கவிக்குரல், தனது 23- வயதில் ஓய்ந்தது. கொலையா தற்கொலையா தெரியாது. இன்னுமொரு குரல் விடுதலைப் போராளிகள் கூட்ட மொன்றிலிருந்து வெளிவந்தது. புதியதொரு உலகம் என்ற ஒரு கற்பனைப் போர்வையில் மறைத்த வரலாறு ஒன்றை எழுதியவரும் ‘கோவிந்தன்’ என்ற புனைபெயரில் மறைந்திருந்த போராளி. இருந்தும் என்ன? புத்தகமே அவர் கொல்லப்பட்ட செய்தியை முன்னுரையில் தாங்கித் தான் வெளிவந்தது. ஒரு கால கட்டத்தில், வட கொரியாவிலிருந்து வந்த கம்யூனிஸ சதிக்கு இலங்கை இரையாகும் கட்டத்தில் மார்க்ஸிஸ பெருந்தகை ஒருவர் “நான் ஒன்றும் கம்யூனிஸ்ட் இல்லைங்க. நான் மார்க்ஸிஸம் பற்றி சும்மா பாடம் சொல்லிக் கொடுப்பவன் தான். மற்றபடி அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து தப்பித்துக்கொண்டார் என்று சொல்லப் பட்டது.

எப்போதும் ஒன்றையேவா சொல்லிக்கொண்டிருப்பார்கள்? சமயத்துக்கேற்ப குரல் மாறுவது தானே ஒரு போராளியின் யுத்த தந்திரம்? தப்பித்து உயிர் வாழ்ந்தால் தானே ஐயா பாட்டாளிகள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இயலும்? சும்மா வீராப்பு பேசி உயிர் போனால் பாட்டாளிகள் போராட்டத்தைக் கைவிட்டு துரோகம் இழைத்ததாகாதா? இது போன்ற குரல் மாறாட்டங்களும் ஈழ வாழ்க்கையில் நிகழ்ந்த காட்சிகள். அதிகம் பேசப்படாதவை. அதற்கான நியாயங்கள் கைவசம் என்றுமே தயாராக இருப்பவைதான்.

அப்படி உயிர்/சிறை தப்பித்துத் தான் ஈழத் தமிழ் இலக்கியத்தையே பாட்டாளிகளின் வர்க்கக் குரலாக வழிநடத்த முடிந்திருக்கிறது. இது ஒரு கால கட்டம். ஆனாலும் இந்த சீருடை அணிந்து அணிவகுப்பில் சேர மறுத்த ஒருசிலரும் உண்டு. அவர்கள் எஸ் பொன்னுத்துரை, மு தளையசிங்கம் போன்ற ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வளவாக வெளித்தெரியாது போனவர்கள். உதாரணமாக ரஞ்சகுமார் என்னும் பெயரை எத்தனை பேருக்குத் தெரியும். குந்தவை என்ற பெண் எழுத்தாளரை எத்தனை பேர் அறிவார்கள்? பெருந்தகை அருள்பாளித்து வளர்த்த மடத்தின் குட்டித் தம்பிரான்களை, அவர்கள் குரல் தணிந்துவிட்டாலும் தமிழ் கூறு நல்லுகம் இங்கும் இலங்கையிலும் புலம்பெயர்ந்தோரிடத்திலும் அறியும்.

“அவர் தானே எங்களைப் பற்றி எழுதினார். வேறே யார் எழுதினாங்க?” என்பது கைவசம் உள்ள நியாயங்களில் ஒன்று.

இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடைந்து வருவதற்குக் காரணங்கள் பல. ஈழத்திலிருந்து லக்ஷக் கணக்கில் தமிழர்கள் வெளியேறத் தொடங்கியதும் தம்மிடம் தஞ்சம் அடைந்தவருக்கே ஆசி அருளிய முற்போக்கு மடத் தலைவர் மறைந்ததும் மடம் காலியாகத் தொடங்கியதும்.

இது விடுதலைப் போராட்டமும், முற்போக்குச் சீருடையும் மறைந்து விட்ட காலம். தமிழரின் வாழும் மண்ணின் தமிழ் அடையாளங்களையே அழிக்க அரசு முற்படும்போது வாழ்க்கையின் சித்திரமே வேறாகித் தான் போகிறது.

அந்தச் சித்திரம் தான் தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி என்னும் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பின் எழுத்துக்களில், நமக்குத் தெரிகிறது. இது கொழும்புவில் வாழும் தமிழனின் வாழ்க்கைச் சித்திரம். யாழ்ப்பாணத்தில், அம்பாரையில், மட்டக்களப்பில், மலையகத்தில் தமிழ் வாழ்க்கை வேறாகத்தான் இருக்கும். இவையெல்லாவற்றிற்கும் மேலாக கிளிநொச்சியில் வவுனியாவில் வாழும் தமிழரின் வாழ்க்கை முற்றிலும் அன்னியப்பட்ட ஒன்றாகத்தான் இருக்கும். அங்கிருந்து எழுதுபவரகள் யாரும் இருப்பார்களா என்பதும் தெரியாது.

இவ்வளவையும் எதற்காகச் சொல்ல வேண்டியிருக்கிறதென்றால், இந்த கதைகளின் குரல் நாம் இதுகாறும் கேட்காத ஒரு குரல். ஒரு புதிய குரல்.

முதன் முறையாக, வழிகாட்டும் முற்போக்குப் பெருந்தகை இல்லாது, இந்தத் தலைமுறையில் வித்தியாசமான சரித்திர கால கட்டத்தில் எழுத வந்துள்ள தேவமுகுந்தன் முதலில் எழுதத் தொடங்கியது, மாணவனாக 1992-ல் மரநாய்கள். ”என்னைப் பாதித்த உணர்வுகளையும் அனுபவங்களையும் தான் எழுதுகிறேன்.” என்று சொல்லும் குரல் புதிய குரல். கட்டாயம் அது இத்தொகுப்பில் உள்ள கதைகளில் சாட்சியம் பெறுகிறது. மரநாய்கள் ஒரு சிறுவனாக, யாழ்ப்பாண கிராமம் ஒன்றில் ராணுவம் முகாமிட்டிருக்கும் சூழலில் ராணுவ கண்காணிப்பில் பயந்து வாய் மூடி வாழும் கட்டம். சுற்றி எங்கும் வீடுகள் இடிந்தும் தரைமட்டமாகியும், கிடக்க கிராமம் திரும்பிய மக்கள் வாழ்க்கையைத் திரும்பத் தொடங்குகின்றனர். ராணுவம் எதையும் அபகரித்துச் செல்லும். கோழிப் பண்ணைகள் குறைந்த விலைக்கு கோழிகளை விற்றுவிட்டு கடை மூடுகின்றனர். அம்மா குறைந்த விலைக்கு ஒரு கோழி வாங்கி வருகிறாள். அதை மரநாய்களிடமிருந்த காப்பாற்றப் படும் பாட்டிற்கு இடையே ராணுவம் பறித்துச் செல்கிறது. வாய் மூடிப் பார்த்திருக்கத் தான் முடிகிறது. ஆனால் சிறுவன் தன் அண்ணனிடம் இதைச் சொல்ல, அண்ணன் சொல்கிறான் “மர நாய்களைத் துரத்த வேண்டும்” என்று.

இது 1992-ன் முதல் கதை. அப்போதைய இடமும் வேறு. சூழலும் வேறு. பத்து வருடங்களுக்குப் பின் தான் அடுத்த கதை கொழும்புவிலிருந்து எழுதப் படுகிறது. இது வேறு சூழல். அடக்கு முறைதான் பின்னும். ஆனால் சூழல் வேறு. அடக்கும் சக்திகள் வேறு.

அப்பா கனடாவில் இருக்கிறார். மகன் இப்போது இருப்பது கொழும்புவில். கனடாவிலிருந்து கொழும்புவிற்கு பணம் அனுப்புவதில் அதிக தொந்திரவு இருப்பதில்லை. ஆனால் கொழும்புவிலிருந்து கிளிநொச்சியில் இருக்கும் அம்மாவுக்கு பணம் அனுப்புவது தான் ஆயிரம் சந்தேகங்களுக்கு வழி வகுக்கும். கிளிநொச்சி என்ற பெயரைப் படித்ததுமே, விசாரணை தொடங்கும். இது யார், எங்கிருந்து இவ்வளவு பணம், இன்று வரை எவ்வளவு பணம் அனுப்பியிருக்கிறாய், உன் அடையாள அட்டை, போலீஸ் பதிவு, வேலை செய்யும் பல்கலைக் கழகப் பதிவு, எங்கே? என்று இவ்வளவும் ஒவ்வொரு தடவையும் விசாரணை நடக்கும். சூழ்ந்திருப்போர் முன்னிலையில் அவமானப்பட வேண்டும். கிளிநொச்சியிலிருந்து வரும் கடிதம், அங்கு போகும் கடிதம் எல்லாம் தணிக்கை செய்யப் படும். கொழும்புவில் வேலையில்லாது தனித்திருக்கும் தமிழனுக்கு இருக்க இடம் கிடைக்காது. தமிழர்களே வீடு கொடுக்க மாட்டார்கள். பொய் சொல்லவும் முடியாது. அலுவலக நேரம் பூராவும் வெளியே சுற்ற வேண்டும், அந்தப் பொய்யை நிஜம் என நிரூபிக்க.

இன்னொரு கதையில் (இடைவெளி) குழந்தைக்கு உடல் நலமில்லை என்று விடுமுறையில் இருந்தால், அப்போது கொழும்புவில் எங்கோ ஒரு இடத்தில் குண்டு வெடி சம்பவம் நடந்தால், விடுமுறை எடுத்தவன் பேரில் சந்தேகம் எழுகிறது. நேற்றுவரை சினேகத்துடன் பழகியவர்களால் இன்று பயங்கர வாதி என்று ஒதுக்கப் படுகிறான். தன்னை ஒதுக்கி, மற்றவர்கள் கூடிக் கூடி இரகசிய குரலில் தன்னை சைகை காட்டி பேசுகிறார்கள். போலீசுக்கும் தகவல் போகிறது. இரண்டு போலீஸ் காரர்கள் வந்து இவனை இழுத்துச் செல்கிறார்கள். அலுவலக சகாக்கள் அனைவரும் எதையும் காணாதது போல் முகத்தை திருப்பிக்கொள்கிறார்கள். இது 2010 கொழும்பு அலுவலகச் சூழல்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் படுவது என்பது ஒரு கொடுமை. அது தமிழன் என்ற காரணத்தாலேயே எப்போதும் வேறு எக்காரணமின்றியும் நிகழும். பின் வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடுகிறது. சிறை சென்று சித்திர வதைப்பட்டு மீண்ட பிறகும் சிங்கள நண்பர்களால் மட்டுமல்ல, தமிழர்களே கூட தாங்கள் பயமின்றி வாழும் நிர்ப்பந்தத்தில் நிராகரிக்கத் தொடங்கு கிறார்கள்.

”சிவா” என்னும் கதையில் சிவா சிறையிலிருந்து விடுதலை பெறுவது அதிக காலம் நீடிப்பதில்லை. எங்கும் சந்தேகக் கண்கள். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒதுக்கும் கண்கள். காட்டிக்கொடுக்கும் கண்கள். பின்னும் சிறை. கொழும்புவில் ஒர் அறையில் வாடகைக்கு இருந்து கொண்டு பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவனின் சுதந்திர தினம் கழிவது பயத்திலும் பட்டினியிலும் தான். உணவருந்தச் செல்லும் வழியில் சோதனை, சிங்களம் பேசும் தொனியிலிருந்தே தமிழன் என்று கண்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறான். சாப்பிடச் செல்லும் உணவகம் மூடப்பட்டிருக்கிறது. வேலைசெய்யும் மலையகத் தமிழர்கள் தம் பதிவைப் புதுப்பித்துக்கொள்ளாததால் கைது செய்யப்பட்டு கடை மூடப்படுகிறது. இனி வேறு எங்கும் சென்றலைந்தால் மறுபடியும் சோதனை விசாரணை என்று எதிர்கொள்ள வேண்டிவரும் என்று அறைக்குத் திரும்புகிறான். சிங்களவர் மத்தியில் தமிழனாக வாழ்வதே சந்தேகத்திற்கு ஆட்பட்டு அன்னியனாகவே பயந்தே வாழவேண்டியிருக்கிறது (சுதந்திர தினம்) இது ஒரு நாள் அவதி இல்லை. கொஞ்ச நேர கொஞ்ச நாள் சந்தேகம் அல்ல. வாழ்நாள் முழுதும் கறைபடிந்து அவதி தரும் சந்தேகம்.

தனி வீடு என்று தனி ஈழம் பற்றிய கனவில் மு தளைய சிங்கம் நாவல் எழுதிய 1960-களிலும் அருள் சுப்பிரமணியம் அவர்களுக்கு வயது வந்துவிட்டது எழுதிய காலத்திலும், ஒற்றுமையுடன், சினேகபாவத்துடனும் வாழ்ந்த சிங்கள-தமிழ்க் குடும்பங்களைப் பார்க்க முடிந்திருக்கிறது. சிங்கள் மேலாதிக்க மனப்பான்மைக்கு எதிர்த்துக் குரல் கொடுத்த சிங்கள எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் கூட காண முடிந்திருக்கிறது. சோ. பத்மநாதன் மொழிபெயர்த்துத் தந்துள்ள (தென்னிலங்கை கவிதைகள்} என்னும் கவிதைத் தொகுப்பில். ஆனால் ஈழத் தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களே, பல குழுக்களாகப் பிரிந்து பகைமை பாராட்டும் விடுதலைப் போராளிகளிடமிருந்தே உயிருக்கு பயந்து வாழ்ந்த கால கட்டத்தை பேசும் எழுத்துக்கள் இப்போது வரத் தொடங்கியுள்ளன கனடா வாழும் செழியனின் வானத்தைப் பிளந்த கதை அவற்றில் ஒன்று.

தம்பி விடுதலைப் போராளிகளோடு சேர்ந்துவிட்டான். சேர்ந்தானா சேர்க்கப் பட்டானா தெரியாது. அண்ணன் கொழும்புவில் ஒரு வாடகை அறையில். பல்கலைக் கழக மாணவன். தம்பி இயக்கத்தில் சேர்ந்ததால் வேளை கெட்ட வேளையில் கதவு தட்டப்பட்டால் போலீஸோ விசாரணையோ என்ற பயம். கதவு தட்டப்படுகிறது காலை ஐந்து மணிக்கு. பயந்து பயந்து கதவைத் திறந்தால் வந்திருப்பது அறை நண்பன். உள்ளே வந்து, ’வெள்ளவத்தைக்கு உடனே போகணும் கிளம்பு,’ என்று வற்புறுத்தி அழைத்துச் சென்று, “அப்பாவுக்கு டெலிபோன் பண்ணு உடனே” என்கிறான். டெலிபோனில் அப்பா அழுது கொண்டே சொல்லும் செய்தி தம்பி நகுலன் செத்துட்டான். பெரியாஸ்பத்திரியில் உடல் கிடக்கும்” என்கிறார். உடல் ஆஸ்பத்திரியில் இங்கு கிடக்க, கிளிநொச்சியில் செத்த வீடு சடங்குகள் நடக்கும். (கண்ணீரினூடே வீதி)

இது கொழும்புவில். மலேசியா போனாலும் எத்தகைய சினேகங்களினூடேயும் தமிழனை வெறுக்கும் சிங்கள வெறி உடன் செல்லும். பல சிங்கள தமிழ் நண்பர்களிடையே நட்பில் திளைத்திருக்கும் சுனில் என்னும் சிங்களன். அவனது குடும்பம் கண்டியில். சுனிலின் குழந்தை பிறந்த சில நாளில் இறந்துவிட்ட செய்தியை முரளி சொல்கிறான். அவர்களுடன் நெருங்கிப் பழகும் சுப்பிரமணியம் என்னும் மூத்தவயதினர் தம் காரில் அவர்களை விமான நிலயத்துக்கு கொண்டு சேர்த்து தாமே கொழும்புவுக்கு விமான டிக்கட்டும் வாங்கிக்கொடுக்கிறார். விமான நிலையத்தில் செய்தி சொல்லப்படுகிறது. கொழும்பு விமான நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளதால் கொழும்புக்குச் செல்லும் அனைத்து விமான பயணங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இதைக் கேட்டதும் சுனிலிடமிருந்து உடன் வெளிப்பட்ட வார்த்தைகள், “பறத் தெமிளு”. என்ன சொல்றான்? என்று சுப்பிரமணியம் (மலேசியத் தமிழர்), முரளி தனக்கு சிங்களம் குறைவாகத் தான் தெரியும் என்று. சொல்லி மறைத்து விடுகிறான்.

இத்தொகுப்பில் அதிகம் கதைகள் இல்லை. இரண்டு மூன்று கதைகள் அங்குள்ள பல்கலைக் கழக கல்வியாளர் போடும் அதிகாரப் போட்டியும் சலுகைகளுக்கான ஆசையும், உத்யோக வேட்டையும், தனக்கே தானே ஏற்பாடு செய்து கொள்ளும் பாராட்டு விழாக்களும் இலங்கைத் தமிழரை மாத்திரமே அடையாளம் காட்டுவனவல்ல. இங்கும், நம்மிடையேயும் அதிக அளவில் அவர்கள் உண்டு. இன்றைய இலங்கைத் தமிழர் வாழ்வின் அவலத்திடை யேயும் அவர்கள் இருப்பார்கள் தான். மனித சமூகம் எல்லா வகையினரையும் கொண்டது தானே. அவற்றில் பரிகாசத்தைச் சொல்வதை விட கோபத்தையே அதிகம் காண்கிறோம்.

இருப்பினும், கண்ணீரினூடே தெரியும் வீதி தொகுப்பில் தேவமுகுந்தன் தன் அனுபவங்களையே உணர்வுகளையே எழுதியுள்ளது வித்தியாசமான ஒரு எழுத்தை அங்கிருந்து வந்துள்ளதைச் சொல்கிறது. பிரசாரத்தை எழுதி வந்த காலம் போய் பட்ட அனுபவங்களை உள்ளான அவதிகளைச் சொல்லும் எழுத்து வரத் தொடங்கியுள்ளது.

இதற்கு பின்னுரை எழுதியுள்ள பேராசிரியர் எம் ஏ நுஹ்மான் அவர்கள், இது தமிழர் தரப்பை மட்டும் தான் சொல்கிறது. அது உண்மையே யானாலும் சிங்களவர் தரப்பையும் சொல்வதுதான் முழுமையாகும். தமிழ் வெறி சிங்கள வெறியையும் சிங்கள வெறி தமிழ் வெறியையும் பிறப்பித்துள்ளது என்று சொல்கிறார். இப்படியும் ஒரு பார்வை இருக்கத் தான் செய்கிறது.

கண்ணீரினூடே தெரியும் வீதி: (சிறுகதைத் தொகுப்பு) தேவ முகுந்தன்: வெளியீடு: காலச் சுவடு பதிப்பகம். 669, கே.பி.சாலை, நாகர்கோயில், 629001 விலை ரூ. 75

நன்றி : கணையாழி ஜனவரி 2013

Saturday, January 5, 2013

ஸபீர் ஹாபிஸ்


தேவமுகுந்தனின் கதைகள் - ஓர் அனுபவப் பகிர்வு

கதை சொல்லப்படும் விதம், கதையின் கருப்பொருள் ஆகிய இரண்டையுமே ஒரு சிறுகதையை மதிப்பீடு செய்வதற்கான முக்கிய அம்சங்களாக நான் கருதுகிறேன். கரு எதுவுமின்றியே கதையைச் சொல்லிவிட முடியும் என்றும், தனியொரு கருவை மாத்திரம் ஒரு சிறுகதை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அண்மைக்காலங்களில் முயற்சிக்கப்பட்டு வரும் நவீன பரீட்சார்த்தங்களுக்கு மத்தியிலும், சிறுகதையில் மையப்புள்ளியான கருவொன்றின் அவசியத்தை வலியுறுத்தும் போக்கு தொடர்ந்தும் இருந்து வரவே செய்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன், 'உமா வரதராஜன்' கதைகளை முழுமையாகப் படித்து முடித்த பிறகு, அண்மையில், முழுமையாக ஒரே மூச்சில் வாசித்து முடித்த சிறுகதைத் தொகுதி 'கண்ணீரினூடே தெரியும் வீதி'. தேவமுகுந்தனின் எழுத்துகள் ஊளைச்சதைகள் எதுவுமற்ற கம்பீரமும் ஆரோக்கியமும் நிறைந்த கட்டுக்கோப்பான ஒரு தேகமாய் என்னை வசீகரித்தன.

எவ்விதமான பகட்டும் ஆர்ப்பாட்டமுமின்றி, வெகு இயல்பாக கதையை நகர்த்திச் செல்லும் நேர்த்தி இத்தொகுதிக்கு வலுச் சேர்க்கும் முக்கிய பண்பொன்றாகும். கருப்பொருள் எவ்வளவுக்கெவ்வளவு எழுத்தாளனின் வாழ்வோடு நெருக்கமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அக்கதையின் அழகியல் உச்சம் பெறும் என்பதை மிக அழுத்தமாக தேவமுகுந்தன் இக்கதைகளில் நிரூபித்திருக்கிறார். அவரது அனுபவங்களே இக்கதைகளை இலக்கியத்தரத்துடன் மிகக் கவனமாகச் செதுக்கும் ஆற்றலை அவருக்கு வழங்கியிருக்கக் கூடும். வடித்தெடுக்கப்பட்ட வார்த்தைப் பிரயோகங்களும் யதார்த்த இயல்பு சற்றும் மாறாத எளிய நடையும் ஆணி அறைந்தாற் போல் இழுத்து நிறுத்தி முற்றுப்புள்ளியிடும் ஆளுமையும் இணைந்து தேவமுகுந்தனின் கதைகளை இலக்கிய உச்சிக்கு அழைத்துச் செல்ல முயல்கின்றன.

தொகுதியில் இடம்பிடித்துள்ள பத்துக் கதைகளையும் ஒரே நேர்கோட்டில் இணைக்கும் பாலமாக அமைந்திருப்பது எல்லாக் கதைகளிலும் இழையோடும் மென்மையானதொரு சோகமாகும். இச்சோகத்தின் கர்த்தாக்கள் மொழியாலும், இனத்தாலும், பிரதேசத்தாலும் வேறுபட்டிருந்தாலும், அவற்றின் பாதிப்புகளோ எவ்வித வேறுபாடும் பாராது எல்லோரையும் வஞ்சமின்றி அரவணைத்துச் செல்கின்றன.

குறிப்பாக, சிங்கள மேலாதிக்கத்தின் பெறுபேறாக தமிழ் மக்கள் மீது விதிக்கப்பட்டு விட்ட அடக்குமுறைக்குட்பட்ட வாழ்வின் துன்பியலை மிக யதார்த்தமாக விபரிக்கும் பெரும்பாலான கதைகள், படிப்பவர் நெஞ்சங்களிலும் அத்துன்பியலின் வலியைச் செருகி அனுதாபத்தை வரவழைத்து விடுவதை அக்கதைகளின் பாரிய வெற்றியாக நான் கருதுகிறேன்.

இக்கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் ஒவ்வொரு கதையின் ஆரம்பமும் முடிவுமாகும். குறிப்பாக கதைகளின் முடிவுகள் மிக அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. 'இடைவெளி', 'சிவா', 'சின்ன மாமா', 'ஒரு சுதந்திர நாள்', 'இவன்' ஆகிய கதைகளின் அற்புதமான, நகைச்சுவையான, கிண்டலான முடிவுகள் மிகவும் கவர்ச்சி மிக்கவை. வேறு எந்த முடிவும் இவற்றை விடச் சிறந்தாக அமைந்திருக்க முடியாது. அநாவசியமான வார்த்தையொன்றையேனும் செயற்கையாக இடாது மிக யதார்த்தபூர்வமாகவும் வலிமையாகவும் தேவமுகுந்தன் இச்சிறுகதைகளை வடிவமைத்துள்ளார்.

கதைகளின் இலக்கியத்தரத்தை விடுத்து, கருப்பொருளை நோக்குகையில் பின்னுரை வழங்கியுள்ள பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் கருத்துகளை நாம் வழிமொழிய வேண்டியுள்ளது. பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் போர்ச்சூழலை பக்கச்சார்புடனேயே பார்த்துப் பார்த்துப் பொரிந்து தள்ளியவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு தேவமுகுந்தனும் விதிவிலக்காகவில்லை.

பேராசிரியர் நுஃமான் அவர்களின் கருத்தை மறுத்துரைக்கும் உமா வரதராஜன் அவர்கள், தேவமுகுந்தன் எந்தவொரு விடுதலை இயக்கத்தின் பேச்சாளரோ எழுத்தாளரோ அல்ல, அவர் சூழலால் பாதிக்கப்பட்ட ஒரு சாமானியர் என்றும், உரத்த குரலில் இல்லா விட்டாலும் ஒரு சிறு முனகல் தொனியிலாவது தன் எதிர்ப்புணர்வைப் பதிவு செய்திருக்கிறார் என்றும் குறிப்பிடுகின்றார்.

ஆனால், கதைகளில் குறிப்பிடப்படும், தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகளும் நெருக்குதல்களும் உண்மையில் தமிழ் ஆயுதப் போராட்டத்தின் எதிர்வினைகளே என்பதையும், சிங்கள மேலாதிக்கத்தைப் போன்று விடுதலைப் போராட்டங்களின் மூலமும் தமிழ் மக்கள் அதிக இழப்புகளுக்கும் அவலங்களுக்கும் உள்ளாகினர் என்பதையும் தேவமுகுந்தன் தனது எந்தக் கதைகளிலும் குறிப்பிட விரும்பவில்லை என்பதையும் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

அதேவேளை, தான் ஒரு குறித்த சமுதாயத்தின் உறுப்பினனாயினும் பொதுவான மானுட நேயனும் கூட என்பதை, தனது 'கண்ணீரினூடே தெரியும் வீதி...' கதையினூடாக தேவமுகுந்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இத்தொகுதியில் இடம்பெறும் இரு கதைகளைப் படித்த போது, அவை உமா வரதராஜன் அவர்களின் இரு கதைகளுடன் ஒத்த இயல்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஒரு தனியார் வர்த்தக நிறுவனத்தின் பயிற்சி முகாமொன்றில் கலந்து கொள்ளும் முகாமையாளரொருவர் அங்கு இடம்பெறும் அபத்தங்களை விமர்சனத்துடன் விபரிக்கும் 'உயர', மற்றும் நூல் வெளியீட்டு விழாவொன்றில் அகப்பட்டு அங்கு இடம்பெறும் முதுகு சொறிதல்களைப் பார்த்து எரிச்சலுற்று உள்ளுக்குள் குமுறுகின்ற மற்றோர் எழுத்தாளனின் அனுபவத்தைப் பதிவு செய்யும் 'சின்னஞ்சிறகுகள்' ஆகிய உமா வரதராஜனின் இரு சிறுகதைகளின் இயல்பும் நடையும், தேவமுகுந்தனின் 'வழிகாட்டிகள்' மற்றும் 'கூட்டத்தில் ஒருவன்' ஆகிய இரு கதைகளிலும் பெரிய மாற்றங்களெவையுமின்றி தெரிகின்றன. அரச திணைக்களத்தின் பயிற்சி முகாமொன்றில் கலந்து கொள்ளும் உத்தியோகத்தர் ஒருவர் அங்கு இடம்பெறும் அபத்தங்களைக் கண்டு சினமுற்று உள்ளுக்குள் குமுறுவதைக் கூறும் 'வழிகாட்டிகள்' கதையும், பாடசாலையொன்றுக்கான நிதி சேர்ப்புக்காக அதன் பழைய மாணவர்கள் ட்ரான்ஸ் ஏசியா ஹோட்
டலில் டின்னர் டான்ஸ் ஒழுங்கு செய்து கூத்தடிப்பதைச் சொல்லும் 'கூட்டத்தில் ஒருவன்' கதையும் தேவமுகுந்தனுடையவை. இக்கதைகளில் களங்கள் வேறுபட்டிருந்தாலும் கதை சொல்லப்படும் பாணியும் நடையும் உமா வரதராஜனின் அவ்விரு கதைகளுடனும் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன. சிறந்த சிறுகதையொன்றைப் படிக்கையில் ஏற்படும் இயல்பான தாக்கம், சிலவேளைகளில் அதுபோன்றதொரு கதையை எழுதிப் பார்க்க சாமான்ய எழுத்தாளர்களைத் தூண்டுவது இயற்கையானதே. உமா வரதராஜனின் 'அரசனின் வருகை' கதையின் பாதிப்பினால், ஓட்டமாவடி அறபாத்தின் 'அரசி' கதை உருவானதும் இதுபோன்றதுதான். இதனை, பிந்திய எழுத்தாளர்களின் தோல்வி என்பதை விட, முந்திய எழுத்தாளனின் வெற்றி என்று கூறுவதே பொருத்தம் என்பது எனதெண்ணம்.

நல்ல எழுத்தாளர்கள் பலரின் சில கதைகள் இன்னும் கூட இறவாதிருப்பதில் அவர்கள் துணிந்து முயற்சித்த புதிய உத்திகளுக்குப் பெரும் பங்கிருக்கின்றது. தேவமுகுந்தனின் கதைகளுக்கு அழகிய, அப்பழுக்கற்ற எளிய நடையொன்று இலாவகமாக வாய்த்துள்ள போதிலும், புதிய உத்திகளைப் பிரயோகிப்பதற்கான எந்த முயற்சியையும் அவர் மேற்கொள்ளாதது ஒரு குறையாகவே தோன்றுகின்றது. சின்ன மாமா கதை இக்குறையை ஓரளவு நிவர்த்தி செய்வதாக ஆறுதல்பட்டுக் கொள்ளவும் முடியும்.

தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று 'இவன்'. டி.ராஜேந்தரின் அக்கால சென்டிமென்ட் சினிமாவொன்றைப் பார்த்த சுகமான சோக அனுபவத்தை இக்கதை வழங்குகின்றது. சுய அனுபவச் சாயல் மிகத் தூக்கலாகத் தெரிவதாக பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் குறிப்பிட்டுள்ள இந்த நல்ல கதையைப் படித்து முடித்த போது, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் நிறுவனர் பில் கேட்ஸ் குறிப்பிட்ட வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

'நான் எல்லாவற்றையும் கற்றேன். ஆனால் முதற்தர மாணவன் ஆகவில்லை. இன்று, சிறந்த பல்கலைக்கழகங்களின் முதற்தர மாணவர்கள் பலர் எனது வேலையாட்கள். எனவே, ஆக்கபூர்வமான மனிதனாக இருங்கள்'

ஸபீர் ஹாபிஸ்

Friday, January 4, 2013

வாகரை வாணன்


தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி...

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கி வரலாற்றைப் படிப்பவர்கள் மனதில் இலக்கிய மேதைகள் இருவர் உடனடியாக இடம்பிடித்துக் கொள்வார்கள். அவ்விரு மேதைகளில் ஒருவர் மகாகவி பாரதி (1882-1921) மற்றவர் சிறுகதை மன்னன் என்று சிறப்பித்தப் பேசப்படும் விருத்தாசலம் புதுமைப்பித்தன் (1906-1948).

இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றையுடைய தமிழ்க் கவிதையைப் புதியதொர் பாதையில் இட்டுச் சென்ற பெரும்புலவன் பாரதி. தமிழ்க்கவிதை இன்று அவன் வகுத்த வழியிலேயே நடந்து தடையின்றி செல்லுதல் அவனது கவிதா சக்திக்குக் கிடைத்த முழுமையான அங்கிகாரத்ததைக் காட்டும். ஆனால் புதுமைப்பித்தன் நிலையோ வேறு. ஏனெனில் அவன் காலத்தில் தமிழ்ச் சிறுகதையின் வரலாறு ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளையே எட்டியிருந்தது.சிறுகதையென்ற இலக்கியப் பயிரை வளர்த்தெடுத்தவர்களில் மகாகவி பாரதியாரும் வ.வே.சு. ஐயரும் முக்கியமானவர்கள். எனினும் சிறுகதைப் பயிருக்கு பலமான அத்திபாரத்தை இட்ட பெருமை புதுமைப்பித்தனுக்கே உண்டு. இதன் காரணமாகத்தான் புதுமைப்பித்தனை தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்று டாக்டர் மு.வ. போற்றுவார்.(தமிழ் இலக்கிய வரலாறு பக்கம் 299).

புதுமைப்பித்தன் தான் வாழ்ந்த காலத்துச் சமூகத்தை தனது எழுத்தக்களால் சத்திரசிகிச்சைக்குட்படுத்தியவன். அவனின் இந்தப் போர்க்கோலத்தை சுந்தர ராமசாமி புதுமைப்பித்தன் சமூக விமரிசனத்தையே தனத உயிராகக் கொண்டிரந்தார் என்பார். ( ஆ.இரா. வெங்கடாசபதியின் புதுமைப்பித்தன் கதைகள் பக்கம்- 33). புதுமைப்பித்தன் தனது சமூகத்தை சத்திரசிகிச்சைக்குட்படத்ப் பயன்படுத்திய எழுத்து நடை சுயமானது.( saga city) எனச்சொல்லலாம்.

'கண்ணீரிரினூடே தெரியும் விதி...' என்ற தலைப்பில் தேவமகுந்தன் எழதி காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள சிறுகதை இலக்கியத்தில் இடம்பெற்றிருக்கும் வழகாட்டிகள், கூட்டத்தில் ஒருவன் ஆகிய கதைகளைப் படிப்பவர்கள் அவற்றில் புதுமைப்பித்தனின் வாசத்தை நுகரவே செய்வர். 'இவன்' என்ற கதையில் அந்தவாசம் இப்படி வீசுகின்றது. இப்போது பலர் தங்களுக்குத் தாங்களே விழாக்களை நடத்திஇ தங்களுக்குப் பூமாலை சாத்தச் செய்துஇ பொன்னாடை போர்த்தச் செய்து - அவற்றினைப் வர்ணப் புகைப்படங்களாக பத்திரிகைகளில் பிரசுரிக்கச் செய்து பார்த்து மகிழ்கிறார்கள்;. எல்லோரும் கவிதைஇ சிறுகதை என்று சொல்லி ஏதோ எழுதுகிறார்கள். கையில் காசிருந்தால் புத்தகங்களாய் அச்சடித்து வெளியிடுகிறார்கள்.

செய்யுள்களிலும் கவிதைகளிலும் பயன்படுத்ப்படும் அணிவகைகளை உரைநடையிலும் சிறுப்பாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு 'மரநாய்கள்' எனும் கதைத்தலைப்பே போதுமானது. இத.தலைப்பு இராணுவதடதையெ உருவகப்படத்தகின்றமையை கதையின் முடிவில் சொல்லப்படும் ' மரநாய்களை துரத்த வேண்டும்'என்னும் வசனம் உணர்த்தும். பெரும்பாலான எழுத்தாளர்களின் எழுத்திற்கும் அவர்களின் வாழ்க்கைக்குமிடையே பெரிய இடைவெளி இருப்பதண்டு. புரட்சி, புதுமை என்றெல்லாம் மேடைகளில் முழங்கிவிட்டு வீட்டில் இருந்து நல்லநாள் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். தேவமகுந்தனின் 'சின்ன மாமா'வும் அப்படிப்பட்டவர்தான் என்பதைக் கதை சொல்கின்றது.

'சின்ன மாமா' கதையின் கரு எப்படிப்பட்டதாயினும் அது புனையப்பட்ட விதம் ரசிக்கத்தக்கது. எழுத்தாளன் கடல் கொண்டான் பேசும் வீரவசனங்களை கதையின் இடையிடையே இணைத்துள்ளமை கதைக்கு பொலிவையும் அழகையும் தருகின்றது. 'இவன்' என்னும் கதை நன்கு படித்துவிட்டு வேலையின்றி அலையும் ஓர் இளைஞனைப் பற்றியது. படித்தால் மட்டும் போதுமா? கையிலும் பையிலும் நிறைய இருந்தால்தான் ஒருவேலைபை; பெற்றுக் கொள்ளமுடியும் என்னும் உண்மை கதையின் தொக்குபொருளாக உள்ளது. பாவம் அந்த படித்த இளைஞன் கடைசியில் அவனுக்கு பைத்தியம் என்ற பட்டமும் சூட்டப்படகின்றது.

ஆரவாரமிக்க கொழும்பு மாநகரச் சூழலில் வாழ்ந்து கொண்ட நமது இளம் எழுத்தாளர்கள் தாம் எழதிய கதைகளின் ஊடாக தமது பிறந்த மண்ணையும் கல்வி கற்ற கல்லூரியையும் பார்ப்பது அவற்றின் மீது அவருக்குள்ள பற்றையே புலப்படுத்தும். இதைத்தான் தானாடாவிட்டாலும் தன்தசை ஆடும் என்று சொல்வார்கள் போலும். தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி, இடைவெளி, சிவா, இரட்டைக் கோபுரம், ஒரு சுதந்திர நாள், மரநாய்கள் என்னும் கதைகள் போர்க்காலத்தில் தமிழர்கள் எத்தகைய பொறிக்குள் அகப்பட்டிருந்தார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும். எப்படித்தான் தமிழர் அந்நியரோடு நெரங்கிப் பழகினாலும் கடைசி நேரத்தில் காலைவாரி விடு வார்கள் என்பதற்கு இரட்டைக் கோபுரத்தில் வரும் 'பறதெமிழ' என்னும் இரண்டு சிங்களச் சொற்களெ போதும்.

போர்க்காலத்தில் மட்டுமல்ல இன்றும் 'நகுலன்'களின் பிரேதங்களை வைத்தியசாலைகளிலும், காணாமல் போன 'சிவா'க்களின் புகைப்படங்களைத் தாங்கியவாறு தாய்மார் கண்ணீரும் கம்பலையுமாக விதிகளில் அர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும் காணும்பொது தமிழரின் அவலம் ஒர பெரிய தொடர்கதை என்றே எண்ணத் தோன்றுகின்றது. இத்தகு உணர்வுகைளை தேவமுகுந்தனின் கதைகளில் காண்கையில் அவற்றில் பயன்பட்டுள்ள பிரதேசச் சொற்கள, பிறமொழிச் சொற்கள் பற்றி இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடதல் பொருத்தமாகும்.

இன்றைய நவீன இலக்கியங்களான புதுக்கவிதை, சிறுகதை, நாவல் என்பவற்றில் பிரதெசச் சொற்கள் (dialects) பிறமொழிச் சொற்கள் கலத்தல் தவிர்க்க முடியாத என்பது உண்மைதான். மகாகவி பாரதி கூட காணி நிலம் வேணும், பார்ப்பானை ஐயனென்ற காலமும் போச்சே என்று பாடியதை நாம் மறப்பதற்கில்லை. எனினும் அத்தகைய சொற்களின் தேவை, மக்கியத்துவம் கருதியே எழுத்தாளர் தாம்படைக்கும் இலக்கியங்களில் பயன்படத்தவது தக்கது. அப்பொதுதான் தமிழின் அழகும் அதன் தனித்தன்மையும் பாதகாக்கப்படும். நவீனம் என்பதற்காக தமிழ் தமிழ்நலிந்துபோக விடலாமா?

தெவமுகுந்தனின் கதைகள் அனைத்துமே அவன் தான் வாழும் சமூகத்தைக் கூர்ந்து பார்க்கும் ஒரு படைப்பாளி என்பதை நிரூபிக்கும். இதுவே புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் மதலான எழுத்தாளர்களின் இலட்சணமுமாகும் என்பதை எண்ணும்பொது நமது இளம் எழுத்தாளரின் எதிர்கால எழுத்துலகம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பதை உறுதி செய்ய முடிகின்றது. தேவமுகுந்தன் தமிழ் இலக்கிய உலகிற்குக் கிடைத்த ஒரு பெருந்திரு என்பது மிகையான கூற்று அல்ல.

வாகரை வாணன்

நன்றி: ஞாயிறு தினக்குரல் 28.10.2012

Thursday, January 3, 2013

சமரசன் ( மா.பா.சி)


கண்ணீரினூடே தெரியும் வீதி- தேவமுகுந்தனின் சிறுகதைத் தொகுப்பு

புனைவிலக்கய உலகின் கவனத்ததைப் பெற்றுள்ள இளம் எழுத்தாளர் தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி என்ற சிறுகதைத் தொகுப்பை தமிழக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் பத்துச் சிறுகதைகள் அடங்குகின்றன.

இவை தினக்குரல், கலைமுகம், யுகமாயினி, காலம், ஞானம், ஈழநாதம் ஆகிய ஏடுகளில் வெளிவந்தவையாகும். ஈழத்துப் போர்க்காலச் சூழல், சமகாலத்துத் தமிழ் வாழ்வின் சீர்கேடுகள், அரச பணியாளரின் பொதுசனத்தை ஏமாற்றும் பம்மாத்துக்கள் என்பன கதைகளில் தீட்சண்யமான பார்வையோடு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளன. சிலவற்றில் போரின் விதைப்புகளை சிங்களச் சூழலிலும் மலேசியப் பிரதேசத்திலும் வைத்துச் சொல்லியிருப்பது அவற்றுக்கு சிறப்புப் பெறுமானத்தை ஏற்படுத்துகின்றது.ஐ.சாந்தன் போன்ற சில ஈழத்துக் கலைஞர்கள் தேசிய இலக்கிய முன்னெடுப்பில் ஏற்கனவே இத்தகைய புனைகதைகளை ஆக்கியுமிருப்பதை வாசகர்கள் மறந்திருக் மாட்டார்கள். ஆனால் அவைகளுக்கு சற்று எதிர்வினையாக தமிழிய உணர்வு இத்தொகுப்பாசிரியர் தேவமகுந்தனின் சிறுகதைகளில் வேரோடியுள்ளதை ஆழந்த வாசிப்பு உணர்த்தும்.

மாணவருக்கு இலவசப் பாடநூல் வெளியீடு சம்பந்தமான அதிகாரிகள் மாநாடு பற்றிய சிறுகதை வழிகாட்டிகள் இலவசக் கல்விக்கு மறைகாலம் நெருங்கிவிட்டதாக செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன. இந்த இலவசப்பாடநூல் வழங்களுக்கு எப்போது கோவிந்தாவோ யாமறியோம். கல்வியதிகாரிகளின் இந்த மாநாடுகள் அவர்களின் வர்க்க நலன்களைப் பெசுவதற்காகன ஒன்றுகூடல்னெ;பதை சாதாரண வாசகனும் உணரக் கூடியதாக இக்கதை தத்ரூபமாகப் புனையப்பட்டுள்ளது.

இந்த மண்ணில் வாழ்ந்து நிலைமைகளை அறிந்தவர்களைக் காட்டிலும் புகலிடத்தில் வாழும் மூர்த்திகள் வழிபடத்தக்கவர்கள் தானென்பதை கூட்டத்தில் ஒருவன் கதை சிந்திக்க வைக்கின்றது.

கற்று மேலோங்க வைத்த கல்லூரியில் போஷாக்கின்மையால் மாணவர்கள் மயங்கி விழுவதாகவும் அவர்களுக்கு போஷாக்கான உணவளிக்க நிதிகோரி கல்லூரி அதிபர் பழைய மாணவர் சங்கத்திற்கு ஈமெயில் தகவல் கொடுக்கின்றார். இதை ஆலோசிப்பதற்கு கிறிஸ்மஸ் சூழலில் ஆங்கிலேயன் இன்னும் எம்மோடு இருக்கிறான் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் ஆடம்பர ஐந்து நட்சத்திரவிடுதியொன்றில் பழைய மாணவரின் ஒன்றுகூடல் ஏற்படுத்ப்படுகின்றது. விலையர்ந்த மதுபானங்கள் பரிமாறப்பட்டு பட்டினிச்சாவை எதிர்நோக்கும் மாணவருக்கு ரூபா 1300ஃஸ்ரீ க்கான காசோலையை அனுப்பத் தீர்மானிக்கப்படுகின்றது. எப்படியிருக்கும் சொந்த மண்ணில் வாழ்பவனின் கரிசனை? எனவேதான் சொன்னோம் புகலிட மூர்த்திகள் வழிபாட்டுக்குரியவர்களென.

வேலையற்ற பட்டதாரிnhருவன் வாழும் சூழலைக்கணிப்பிடும் விதத்தை 'இவன்' சித்தரிக்கின்றது. சின்னமாமா என்றசிறுகiதில் சின்ன என்ற சொல்லை மேல் குறியிட்டு மாமா சின்னத்தனங்களின் களஞ்சியம் என்பது வெளிப்படுத்தப்படுகின்றது. இறுதி ஊர்வலத்தில் நால்வரே காணப்பட்டதாக சிறுகiதில் பதிவுண்டு. தமிழருக்கு நால்வர் முக்கியமானவவர்கள்.அத்தூண்டுதலால் போலும் துயர் பகிர்தல் நிகம்வு நடத்தப்பட்டது. இது போன்ற சிறுகதைகள் இலக்கு வைக்கப்படும் எழுத்தாளர் வாழும்போதே வெளியாக வெண்டும். அது குற்றம் புரிந்த எழுத்தாளருக்கு எச்சரிக்கையாக இருக்கும். காலமான பின் வாசிக்கக் கிடைத்தால் வாழும் எழுத்தாளரை வாசகர்கள் மத்தியில் மதிப்பிறக்கம் செய்ய முயல்வார். படைப்பின் சமூகப்பயன்பாடே முக்கிமானது. இச்சிறுகதை மிகச் கச்சிதமாகப் பின்னப்பட்டுள்ளது.;

இததொகுப்பின் ஏனைய சிறுகதைகள் போர்க்காலச் சிறுகதைகள். இலங்கை சுதந்திரம் பெற்ற தினத்தில் சுதந்திரம் பெற்றதன் உழைப்பகை; கொடுத்த தமிழர்கள் சேர் பொன் இராமநாதனின் உருசச் சிலைக்கு மலர் வளையம் வைத்து அதற்கு மாலையணிந்து கௌரவிப்பார்கள். இது கடந்த 64 ஆண்டுகளாக மறக்காது ஆட்சி அதிகாரம் பெற்றவர்கள் செய்யம் பணி ஆனால் இத்தினத்தில் தமிழன் அடையாள அட்டை, பொலிஸ் பதிவுப் புத்தகம் இன்றி வீதியில் வீதியில் நடமாட முடியாது. இதை ஒரு சுதந்திரநாள் என்ற சிறுகதை அறியப்படுத்துகின்றது. இதை வாசித்த போது அமரர் மு.தளையசிங்கத்தின் பெப்ரவரி 4 என்ற சிறுகதை நினைவில் நிறைந்தது.

சிங்கள யுவதி ஒருத்தி தமிழ் இளைஞன் ஒருவனோடு நேச உறவைப் பேணி தமிழனென அறிந்நதும் கருவேப்பிலையாக அவனைத் தூக்கி எறிகிறாள். இதைப்பற்றி மு.த. சாதி, சமயம், பாஷை என்ற வித்தியாசங்கள் எதுவும் இல்லாத காதல் கோட்டைக்குள்ளேயே கையை வைக்கும் அளவுக்கு இலங்கையில் இனத்துவேஷம் வளர்ந்து விட்டது. ஆக தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி தொகுப்பின் சிறுகதைகள் இலக்கியத்தில் அவர் இலக்கியத்தில் அவர் சாதனை ஏற்படத்துவாரென்பதற்கு கட்டியம் கூறுகின்றது.

-சமரசன் ( மா.பா.சி)