
கண்ணீரினூடே தெரியும் வீதியைப் படித்தானதும் எனக்குத்தோன்றியவற்றை பகிர்வு செய்கின்றேன்.
எல்லாமே நேர்கோட்டமைப்பிலமைந்த எளிமையான கதைகள். ஆனாலும் படைப்புக்கள் எதுவும் இங்கே சோடைபோகவில்லை. எம்.ஏ.நுஃமான் அவர்கள் சிறப்பாகவே தனது பார்வையை பின்னுரையில் பதிவு செய்துள்ளார். நான் தனித்தனியாக விரித்துரைக்கவேண்டியதில்லை.
சில படைப்புகளில் இடம்பெறும் கைதுகள், மரணங்கள், என்பன தலைப்புக்கதையுட்பட பத்திரிகைச்செய்தியை விஸ்தாரம் செய்வதுபோலுள்ளன. வழிகாட்டிகள் கதையில் மொழிபெயர்ப்புப் பிரச்சனைகள், மாநாடு, கருத்தரங்கு என்பனவற்றை கதைக்கு வேண்டியதைவிடவும் மிகையாக விபரித்துச் செல்வதால் ஒரு கட்டுரைத்தன்மையை அடைகின்றது. இன்னோரிடத்தில் ஒருவர் தனக்கு வேண்டிய ஒருவருக்கு வேலையை வாங்கிக்கொடுப்பார். ‘அவருக்கு (வேலை விஷயத்தில்) செல்வாக்கு அதிகமிருக்குமோ’ என்றொரு வார்த்தையும் அதைத்தொடர்கிறது.
ஆசிரியன் எல்லாவற்றையும் சொல்லிவிடக்கூடாது. படைப்புள் சொற்செட்டும் அவசியம், பேசாப்பொருளாக சிலவற்றை விட்டுவிடவேண்டும். வாசகன் தானாகத்தொடர்வான். புதுமைப்பித்தன் கதையை அழகாக வேகமாக ஒரு கோட்டோவியம்போல நகர்த்திச்செல்வார். அதிகமாக விஸ்தாரஞ்செய்வதில்லை.
இங்கே பல இடங்களில் வாக்கியங்கள் தொள்ளலாக இறுக்கமின்றி அமைகின்றன. இன்னும் ‘மரநாய்’ கதையில் ‘செயின் புளொக்” என்றொரு வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பார். ‘செயின் புளொக்’ என்பது கூட்டுக்கப்பித்தொகுதி. அவர் இங்கே Chain driven Tanker ஐத்தான் கருதியிருக்கவேண்டும். அதாவது ஆசிரியன் சந்தேகமான வார்த்தைகளை உறுதிசெய்தபின்பே படைப்புக்குள் பெய்யவேண்டும்.
தனித்தனியாக கதைகளைப்படிப்பது ஒரு அனுபவம். தொகுப்பாகச் சேர்த்துப்படிக்கையில் எல்லாப்படைப்புக்குள்ளாலும் ஒரு அறிவு ஜீவி / ஒரு பல்கலைக்கழகமாணவன் படிப்பு, டியூஷன், சோதனை என்று திரும்பதிரும்ப துருத்திக்கொண்டு வருகிறார்/தெரிகிறார். இனி இவற்றில் கவனமாக இருந்தால் சரி.
மற்றும்படி எதுவுமே சோடைபோகாத கதைகள். ‘ஒரு சுதந்திரநாள்’ மிகநல்ல படைப்பு. எதிர்காலத்தில் உன்னதமான படைப்புக்கள் குதிரவல்ல நாற்றங்கால் பாத்தியாக இத்தொகுப்பைப்பார்க்கிறேன்.