காலச்சுவடு பதிப்பக வெளியிட்ட எனது "கண்ணீரினூடே தெரியும் வீதி..." சிறுகதைத் தொகுதி பற்றிய மதிப்பீடுகள் விமர்சனங்கள் இப்பகுதியில் இடம்பெறும்- தேவமுகுந்தன்
Saturday, December 29, 2012
மேமன்கவி
Monday, December 24, 2012
நெடுந்தீவு மகேஷ்
Saturday, December 22, 2012
எஸ் . எல் . எம் . ஹனிபா
கே.எஸ்.சிவகுமாரன்
தேவமுகுந்தனின் ‘கண்ணீரூடே தெரியும் வீதி’:
புதுத்தளங்களை அறிமுகப்படுத்தும் சமூகப் பார்வை கொண்ட கதைகள்
‘நிர்மலன்’ என்ற புனைபெயரிலும் 1990கள் முதல் எழுதிவரும் புதிய பரம்பரையைச் சேர்ந்த எழுத்தாளரும் கணிதத்துறை விரிவுரையாளருமான “தேவமுகுந்த”னின் (தேவராசா முகுந்தனின்) சிறுகதைத் தொகுப்பான ‘கண்ணீரூடே தெரியும் வீதி” யை முதற் தடவையாகச் சில நாட்களுக்கு முன் படித்துப்பார்த்தேன்.
இத்தொகுப்பிலே 10 கதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் படித்த பின்னர் என் மனத்திரையில் ஓடிய எண்ணத்துளிகளை இங்கு பதிவு செய்ய முயல்கிறேன்.
இவருடைய கதைகளூடாகத் தெரியவரும் பண்புகள் எவை என்பவற்றைப் பொதுப்படையாகக் பார்ப்பற்கு இந்தப் பத்துகதைகள் ஒவ்வொன்று பற்றியும் சில குறிப்புகளைத் தரவேண்டியுள்ளது. முதலாவது கதையில் இவர் கூறவருவது என்ன வென்றால், பாதிக்கப்பட்டவர்கள் எவராயிருந்தாலும், அவரவர் உயிர்கள், சம்பந்தப் பட்டவர்களின் தனிப்பட்ட உறவுகள் காரணமாக, பெறுமதியானவை.
இதற்கு உதாரணமாக கதையின் ஆரம்பத்திலேயே கதைசொல்பவர், குடியிருக்கும் அறையின் சொந்தக்காரரின் தழுதழுத்த குரலில், இரண்டு இராணுவ இளைஞர்கள் யுத்தத்தில் மாண்டுபோனதை பாராபட்சமற்ற விதத்தில் நாமும்’ பச்சாதாபம் கொள்ளும் வகையில் தமது கருத்தோட்டத்தைக் கூறாமற் கூறுகிறார்.
மறு கோடியில் கதை சொல்பவரின் நண்பன் நகுலன் (போராளியாக இருக்கலாம்) (தனது தந்தையின் துயரத்துக்கும் உட்பட்டவன்) கோப்பாயில் இறந்துவிட்ட செய்தியும் கிடைக்கிறது.
“நாளைக்கு வீட்டுக்கார குமுது அங்கிலோடை வீட்டுக்குப் போகின்ற செத்த வீடுகளுக்குப்போக வேண்டும்” என்று கதை சொல்பவர் எழுதுகிறார். “கண்ணீரினூடே வீதி தெரிகின்றது” என்ற வாசகமும் இடம்பெறுகிறது. கதைசொல்லும் பாத்திரத்துக்குத் தர்ம சங்கடமான நிலைமை, ஆயினும் இரண்டு வகையில் இடம்பெற்ற மரணங்கள் வாசகர்களாகிய நமக்கும் கண்ணீரை வரவழைக்கிறது.
இக்கதை நான்கு வருடங்களுக்கு முன் எழுதப்பட்டாலும், கதை சொல்லும் பாங்கு நவீனத்துவ ரீதியில் எழுதப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இருந்த போதிலும், கதையுடன் நெருங்கிய சம்பந்தமில்லாமல் கதையின் பெரும்பகுதியில் சில சம்பவங்கள் சுவாரஸ்மான முறையில் எழுதப்பட்டிருந்ததும் கூட இடம் பெற்றிருப்பது ஒரு நல்ல “சிறுகதை”யில் இடம்பெறுவதை ஆசிரியர்கள் தவிர்க்கவேண்டும்
வழிகாட்டிகள்
நான்கு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதையும் கவனத்திற்குரியது. கதையின் ஆரம்ப வசனங்களைக் கருத்தூன்றி கதாசிரியர் எழுதுவது மெச்சத்தக்கது.
இக்கதையிலே அடுத்து கதாபாத்திரம் தனது தொழில் நடைமுறைகளின் இடர்ப்பாடுகளை விவரணையாக நீணடதொரு ஒற்றைப் பந்தியில் விபரிக்கிறார்.
அடுத்து எல்லாத்துறைகளில் மாப்போல, கல்வித் துறையிலும் தமிழினம் எதிர்நோக்கும் பல தடைகளும், உதாசீனங்களும் வாசகர் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன.
அரச அலுவலகங்களில் என்ன நடக்கிறது என்பதை அறியா வாசகர்கள் இத்தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். “மனதில் சிரிப்பு வந்தது” என்ற வாக்கியம் ரசிக்கத் தக்கதாய் இருக்கிறது.
யதார்த்தச் செய்திகளை நீட்டிச் சொல்வது கதையின் பின்னணியை அறிய ஒரு வகையில் உதவக் கூடுமாயினும், அவ் விவரணையூடே கதாசிரியர் இடையில் புகுந்து வியாக்கியானங்கள் செய்வது தவிர்க்கப்படவேண்டும்.
நல்லவேளையாக கதாசிரியர் இதனை அளவு மீறிச் செய்யவில்லை என்பது திருப்தியளிக்கிறது. “கல்வி என்பதை தவறுதலாய் தல்வி என அச்சிட்டிருந்தார்கள். இதில் கூட எழுத்துப்பிழை வெறுப்பாய் இருந்தது. பரவாயில்லை மொழிகளுக்குச் சமவாய்ப்பாவது உள்ளதே என்று மனதில் சிரித்துக் கொண்டடான்” என்ற பகுதியில் இருந்து கதாசிரியருக்கு இதமான நகைச் சுவை உணர்வு இருப்பதைநாம் புரிந்து கொள்கிறோம்.
மகாநாட்டிலே பின்னர் என்ன நடந்தன என்பதை கதாசிரியர் தரும்போது பல செய்திகளை அறிந்து கொள்கிறோம். செய்திகளை செய்திவடிவில் கொடுக்கலாம். ஆனால் கதையில் வரும் பொழுது அச்செய்திகள் கதையின் செயல்களுக்கு சம்பவங்களை நேரடியாகவும், திருப்பங்களுக்கு ஏதோ வகையில் உதவும் விதத்திலும் இருத்தல் வேண்டும்.
முகுந்தனின் என்னல்களில் மற்றொரு ஆக்க ரீதியான ஒப்புவமை பிரயோகம்.
“ஒல்லிகளை முட்டுக்காய்களைப் பின்னால் மறைத்து வைத்துவிட்டு, நல்ல தேங்காய்களைக் காட்சிக்கு வைத்துக்காட்டி எல்லாத் தேங்காய்களையும் விற்றுத் தள்ளும் ஒரு தேங்காய் வியாபாரிபோன்று, வாமதேவன் இந்திரனின் மனதில் தோன்றினார்” என்று எழுதியிருப்பது சுவைக்கத்தக்கது.
நகைச்சுவையும், அங்கதமும் கொண்ட எழுத்து நடையை தேவமுகுந்தன் கொண்டிருப்பது எனக்கு உமாவரதராஜனின் எழுத்து நடையை நினைவுப்படுத்துகிறது. இந்தக் கதைமூலம் கணணித் துறையில் பயன்படுத்தப்படும் பல தமிழ் கலைச் சொற்களை நான் அறிந்து கொண்டேன். சிறுகதை என்ற இலக்கிய வடிவம் சில எல்லைக்கட்டுக்களைக் கொண்டிருப்பதனாலோ என்னவோ இப்பொழுது “புனைகதை சார ஆக்க இலக்கியம்’ பிரபல்யம் பெற்று வருகிறது. அதாவது கதைபோன்ற கட்டுரைக்கோவை என இந்த எழுத்து முறையைக் கூறலாம்.
லெ. முருகபூபதி தேவமுகுந்தன், அஷ்ரப் சிகாப்தீன், இளைய அப்துல்லா, அல் - அஸ்மத் போன்றோர் அத்தகைய எழுத்து வடிவத்தைக் கையாள்கின்றனர் என நினைக்கிறேன்.
இலக்கிய விமர்சனக் கூட்டங்களைப் பாராட்டுக் கூட்டங்களாக மாற்றியமைக்கும் விமர்சகர்கள்போல ஆய்வைப் பாராட்டியே பேசுகின்ற” என்ற வாக்கியமும் என்னைக் கவர்ந்தது. கல்வித்துறையிலும் சமூக ஊழல்களை வெளிப்படுத்துகிறது இந்தப் படைப்பு இக்கதை ‘தகவம்’ பரிசு பெற்றதையும் இங்கு குறிப்பிடலாம்.
இடைவெளி
இது ஓர் அற்புதமான கதை. எழுதப்பட்ட முறையும் நன்று. அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அலுவலகங்களில் சிங்களம் மாத்திரம் தெரிந்த ஊழியர்களும் தமிழர்களை தம்மோடு ஒத்தவர்களாய் மதிப்பதில்லை என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார். சிங்ள மொழியில் சில உரையாடல்கள் தந்திருப்பதும் அதன் சாராம்சத்தைத் தமிழில் தந்து தனது விமர்சனக் குறிப்பை ஜெகன் என்ற பாத்திரம் வாயிலாக தேவ முகுந்தன் தருகிறார்
இரட்டைக் கோபுரம்
தேவமுகுந்தன் தமிழ் வாசகர்களுக்குப் புதுப்புது உலகங்களைக் காட்டுகிறார். கொழும்பு, கோலாலம்பூர்-யாழ்ப்பாணம் என்று பலவிதக் கோலங்களைக் காட்டுவதுடன் தமிழ்-சிங்கள பாத்திர சிருஷ்டிiயும் புதுமை தருவது.
இது சுவாரஸ்யமான கதை. கதைக்குப் புறம்பான செய்திகள் இல்லை. சொல்ல வந்த செய்தியை நோக்கி கதை நகர்கிறது. ஈற்றில் கதையில் வரும் 'பற தெமிளு' என்ற பதம் கதையின் அடிநாதமாக இருப்பதற்காகவே கதையின் மன்னை நிகழ்ச்சிகள் வரையப்பட்டுள்ளன.
ஆழ்மனதில் குடிபுகுந்து இருக்கும் இனத்தவேஷம் வெளிப்படவதை நயமாக ஆசிரியர் சொல்லாமல் சொல்கிறார். இம்மாதிரியான உத்திகளே கதையாக அமைகின்றன.
சின்ன மாமா
தேவமகுந்தன் அண்மைக் காலமாக அதிகம் வாசிக்கின்றார் என்பதனையும் உடன் நிகழ்கால எழுத்துக்கள் அவருக்குப் பரிச்சயமாய் உள்ளது என்பதும் அவர் அண்மைக் காலங்களில் எழதும் கதைகள் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்தக் கதையும் உண்மைச் சம்பவங்களின் எடுத்துரைப்பு போல அமைந்திருக்கின்றது. ஆற்றல் மிகுந்தவர்கள் கூட வேஷதாரிகளாகவும் போலிகளாகவும் இருக்கக் கூடும் என்பதைக் கதை மூலம ;நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.
இவன்
பொதுவாகவே பெரும்பாலான தமிழர்களும் மலையாளிகளும் சுயநலம் கொண்டவர்கள் என்பது பொதுவான ஒரு அபிப்பிராயம். இதற்கு பூகோள ரீதியான காரணங்களும் இருக்கக் கூடும். இந்தக் கதையிலே கதாசிரியர் இந்த விபரிப்பு மூலம் இந்த அவதானிப்பை நிலைநாட்டுகின்றார். மற்றவர்கள் காத்திருக்க தங்களுக்குள்ளேயே பத்திரிகைகளை மாற்றிமாற்றிப் படிக்கும் பழசுகளை நினைக்க இவனுக்கு சினமாயிருந்தது. பார்த்தால் பெரிய மனிதர் போலிருக்கும் இவர்களின் சிறுமைத்தனத்தை எண்ண வெறுப்பாயிருந்தது. இவர்களுடன் வாதிட்டுக் கதைக்க முடியாது.
இந்தக் கதைதில் வரும் பாத்திரம் சுயசரிதைப் பாங்கில் தனது நாளாந்த அனுபவங்களை சுவாரசியமாக எழுதுவது நமது அன்றாட வாழ்வு நிலைமைகளில் சிலவற்றை யதார்த்த பூர்வமான சித்தரிப்பாக அமைகின்றது. இன்னொரு அத்தாட்சி வெலை கிடைப்பதற்கு கல்வித் தகுதி மட்டும் போதாது செல்வாக்கும் பணமும் தேவையென்ற உண்மை இவனுக்கு நான்கைந்து நேர்மகத் தேர்வுகளுக்குப் போய்வந்த பின்ன்ர புரிந்தது.
ஏமாற்றங்களும் விரக்திகளுந்தான் ஒருவனை வன்முறையாளனாக மாற்றுகின்றனவோ?
'இப்போது பலர் தங்களுக்குத் தாங்களே விழாக்களை நடத்திஇ தங்களுக்குப் பூமாலை சாத்தச் செய்துஇ பொன்னாடை போர்த்தச் செய்து - அவற்றினைப் வர்ணப் புகைப்படங்களாக பத்திரிகைகளில் பிரசுரிக்கச் செய்து பார்த்து மகிழ்கிறார்கள்;. எல்லோரும் கவிதைஇ சிறுகதை என்று சொல்லி ஏதோ எழுதுகிறார்கள். கையில் காசிருந்தால் புத்தகங்களாய் அச்சடித்து வெளியிடுகிறார்கள். '
இதுவும் ஒரு யாதார்த்த உண்மை. இந்தக் கதையைப் படித்து முடித்ததும் படித்து தகுதிக்கேற்ற வேலைகிடைக்காத சராசரி யுவன் மீது பச்சாத்தாபம் தான் ஏற்படுகின்றது.
இவன் நல்லாய்ப் படித்த பெடியனாம் இப்ப இலேசாய்த் தட்டிப் போட்டுது போல..நெடுகலும் சங்கத்துக்குள்ளேயே திரிகிறான். இடைக்கிடை தன்பாட்டில சிரிக்கிறான்... '
அவர்கள் கதைத்தது இவனுக்கு மெதுவாகக் கேட்டது.
என்று கதை முடிகின்றது.
கூட்டத்தில் ஒருவன்
கொழும்பில் மேல்தட்டு மக்களின் வாழ்க்கைக் கொலங்களை நிதர்சனமாக எழுதும் தமிழ் அல்லது முஸ்லிம் எழுத்தாளர்கள் இல்லை என்றெ சொல்லலாம். இந்தக் குறைபாட்டை நீக்குவது பொன்று தெவமகுந்தன் எழுதுவது எனக்கு உவப்பாக உள்ளது.
இக்கதையில் அற்புதமாக அவர் சுட்டிக்காட்டும் பாசாங்குகள் நயமாய் அமைகின்றன. சி.சிவசேகரம், உமா வரதராஜன், அஷ்ரப் சிகாப்தின் போன்றொர் எழுதுவது போன்ற நையாண்டி நோக்கு தேவமுகுந்தனிடமும் இருப்பதை அவரது எழுத்துக்களில் காண்கிறோம்.
மரநாய்கள்
1993 இல் பிரசுரமான இந்தக்கதை சுட்டும் சம்பவங்கள் இந்திய அமைதி காக்கும் படையின் யாழ்ப்பாண அட்டகாசங்கள் தொடர்பானது. இது குறிப்பால் உணர்த்தும் ஒருவகை. ரஞசகுமாரின் 'கபரக்கொய்யா' போன்றது.
கதையின் முடிவுப்பகுதி:
'அண்ணாஇ கோழியைப் பிடித்துக் கொண்டு போட்டாங்கள்...'
வாழைகளுக்கு பாத்தி கட்டிக் கொண்டிருந்த தமயன் மண்வெட்டியை கீழே போட்டுவிட்டு நிதானமாகச் சொன்னான்:
'மரநாய்களைத் துரத்த வேண்டும்'
ஒன்றும் புரியாதவனாக கோபி அழுகையை அடக்கிக் கொண்டு கண்ணீரினூடு தமயனின் முகத்தை அண்ணார்ந்து பார்த்தான். அது தெளிவாக இருந்தது. இவனுக்குப் புரிய இன்னும் சிறிது காலம் போதும்.
மொத்தத்தில் என்னைப் பொறுத்த மட்டில் இந்தத் தொகுதி ஒரு புதிய வரவேற்கத் தக்க ஆக்க இலக்கியம். தேவமகுந்தன் ஒர குறிப்பிடத் தக்க ஒரு சிறுகதையாசிரியர் என்பதாகும்.
நன்றி : தினகரன் ( 23.12.2012 , 7.1.2013)
.
Friday, December 21, 2012
எம் . கே . முருகானந்தன்
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
சி. விமலன்
உமா வரதராஜன்
எம். ஏ. நுஃமான்
தேவமுகுந்தனின் சிறுகதைகள்
தேவமுகுந்தனின் சிறுகதைகளை இப்பொழுதுதான் முழுமையாகப் படித்தேன். இவர் 1990களின் தொடக்கத்தில் எழுதத் தொடங்கியிருக்கிறார். கடந்த சுமார் இருபது ஆண்டுகளில் பத்துக் கதைகள்தான் எழுதியிருக்கிறார். இவரது முதல் கதை 'மரநாய்கள்' 1993ல் அச்சில் வெளிவந்திருக்கிறது. ஏனைய ஒன்பது கதைகளும் 2008 முதல் 2011 வரை நான்கு ஆண்டுகளில் எழுதப்பட்டவை. இடைப்பட்ட சுமார் பதினைந்து ஆண்டுகளில் இவர் கதைகள் எவையும் எழுதவில்லை. குறுகிய காலத்தில் குறைவாக எழுதினாலும், புதிய தலைமுறையைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளுள் குறிப்பிடத் தகுந்த ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இவர் என்பதை இத்தொகுதி உறுதிப்படுத்துகின்றது.
தேவராசா முகுந்தன் என்ற சொந்தப் பெயர்கொண்ட தேவமுகுந்தன் தன் பெரும்பாலான கதைகளை நிர்மலன் என்ற புனைபெயரிலேயே எழுதியிருக்கிறார். இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எனினும், கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக கொழும்பிலேயே வாழ்ந்துவருகிறார். இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தில் கல்விகற்று, தேசிய கல்வி நிறுவகத்தில் செயற் திட்ட அதிகாரியாகப் பணியாற்றி, அங்கு பணியாற்றிய காலத்திலேயே அரசாங்க புலமைப் பரிசில் பெற்று மலேசியாவில் பட்ட மேற் படிப்பை முடித்து, தற்போது திறந்த பல்கலைக் கழகத்தில் கல்வித் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். இவரது பெரும்பாலான கதைகள் கொழும்பையே களமாகக் கொண்டிருப்பதை இப்பின்னணியில் புரிந்துகொள்ள முடிகிறது. மரநாய்கள் மட்டும் யாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டது. இரட்டைக் கோபுரங்கள் மலேசியப் பின்னணியில் இலங்கையரின் அனுபவத்தைப் பேசுகிறது. ஏனைய கதைகளின் பிரதான களம் கொழும்புதான்.1980க்குப் பிந்திய இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பிரதான கருப்பொருள் இனமுரண்பாடும் யுத்த அவலமும்தான்.
இனமுரண்பாட்டால் பிளவுண்ட இலங்கையின் யுத்த சூழல் தனிமனிதர்களின் வாழ்வை, அவர்களின் உணர்வுகளை, நடத்தையை எவ்வாறெல்லம் பாதித்திருக்கின்றது என்பதைத்தான் கடந்த முப்பது ஆண்டுகாலப் பகுதியில் எழுந்த மிகப் பெரும்பாலான படைப்புகள் பேசுகின்றன. அதிலும் குறிப்பாக, யுத்தத்தின் குழந்தைகளான முகுந்தன் போன்ற புதிய தலைமுறையினரின் எழுத்தில் இதுவே முனைப்பாக வெளிப்படுகின்றது.
இவர்கள் இன உறவின் சுகத்தை அன்றி, இனப் பிளவின் குரூரத்தையே அனுபவித்தவர்கள். இவர்களின் படைப்புகள் அந்த அனுபவத்தின் வெளிப்பாடுகளாக அமைவது தவிர்க்க முடியாதது.
முகுந்தனின் முதலாவது கதையான 'மரநாய்கள்' யுத்தத்தினால் சிதைந்து, ராணுவம் முகாமிட்டிருந்த யாழ்ப்பாணக் கிராமம் ஒன்றின் அன்றாட வாழ்க்கையை சிறுவன் கோபியின் அனுபவத்தின் ஊடாகப் பேசுகின்றது. அந்தக் கிராமத்தில் யுத்தத்தால் இடம்பெயர்ந்திருந்த மக்களில் சிலர் வீடு திரும்பி அழிபாடுகளைத் திருத்தி வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்கத் தொடங்குகிறார்கள். ராணுவம் பள்ளிக் கூடத்தில் முகாமிட்டுள்ளது. ராணுவம் கோழிகளைப் பிடித்துச் செல்வதால் அண்மையிலிருந்த கோழிப் பண்ணை மூடப்பட நேர்கிறது. குறைந்த விலைக்குக் கோழிகளை விற்கிறார்கள். கோபியின் அம்மா ஒரு கோழி வாங்கிவருகிறார். அவன் அதை ஆசையோடு வளர்க்கிறான். இரவில் கோழியைப் பிடிக்க வரும் மரநாயை அண்ணன் துரத்தியடிக்கிறான். ஆனால் ராணுவம் ஊரெல்லாம் கோழிகளைப் பிடிக்கத் தொடங்குகிறது. ஒருநாள் வீடுவீடாகப் போய் கோழிபிடித்துவரும் ராணுவத்தினர் கோபியின் கண்முன்னாலேயே அவனது கோழியை அடித்துக் கொன்று உரப்பையில் போட்டுத் தூக்கிச் செல்கிறார்கள். கோபி அழுதுகொண்டு தோட்டத்தில் நின்ற அண்ணனிடம் சொல்கிறான். கதை இவ்வாறு முடிகிறது:'வாழைகளுக்குப் பாத்தி கட்டிக்கொண்டிருந்த தமயன் மண்வெட்டியைக் கீழேபோட்டுவிட்டு நிதானமாகச் சொன்னான். 'மரநாய்களைத் துரத்தவேண்டும்' ஒன்றும் புரியாதவனாக கோபி அழுகையை அடக்கிக் கொண்டு கண்ணீரினூடு தமயனின் முகத்தை அண்ணார்ந்து பார்த்தான். அது தெளிவாக இருந்தது. இவனுக்குப் புரிய இன்னும் சிறிது காலம் போதும்.'இக்கதையில் 'மரநாய்கள்' ராணுவத்துக்குக் குறியீடாகப் பயன்படுத்தப்படுகின்றது. ராணுவத்தின் முற்றுகைக்கு உட்பட்ட கிராமத்தில் உரிமையும் சுதந்திரமும் அற்ற மக்களின் வாழ்வையும் அவர்கள் மனதில் கொதிப்பு ஏறிவருவதையும் இக்கதை யதார்த்தமாகச் சித்திரிக்கின்றது. யாழ்ப்பாண யுத்த சூழலை மையமாகக் கொண்டு தேவமுகுந்தன் எழுதிய கதை இது ஒன்றுதான்.
இவரது பெரும்பாலான கதைகள் யாழ்ப்பாணத்துக்கு வெளியே, யுத்தம் காரணமாக இன உறவு பிளவுண்ட தலைநகர் கொழும்பில், சிங்கள நடுத்தர வர்க்கத்தினரின் சந்தேகப் பார்வைக்கு மத்தியில் தமிழர்கள் எதிர்நோக்கிய அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றியே பேசுகின்றன. இனமுரண்பாடும் மோதலும் உச்சத்தில் இருந்த யுத்த காலத்தில் கொழும்பிலும் பிற பிரதேசங்களிலும் பொதுமக்களை, குறிப்பாகச் சிங்களவர்களைப் பெருமளவில் பாதித்த புலிகளின் தொடர்ச்சியான குண்டு மற்றும் தற்கொலைத் தாக்குதல்கள் காரணமாக பொலிஸ், ராணுவக் கெடுபிடிகளும் கைதுகளும் அதிகரித்தன. எந்தக் கணத்தில், எங்கு, எது நடக்குமோ என்ற பீதி எல்லோர் மனதிலும் கவிந்திருந்தது. உத்தரவாதம் அற்ற வாழ்க்கைச் சூழல் எல்லோரையும் உலுக்கிக்கொண்டிருந்தது. புலிகள் யார், பொதுமக்கள் யார் என்று வேறுபிரித்தறிய முடியாத நிலையில் தமிழர்கள் அனைவரும் சந்தேகத்துக்கு உள்ளாகினர். அரசின் நடவடிக்கைகளும் ஊடகப் பிரச்சாரமும் இதைத் தீவிரப்படுத்தின. புலிகளின் அரசியலுக்கு இது அவசியமாக இருந்தாலும், குறிப்பாக, தமிழர்களைப் பொறுத்தவரை இது மரண விளையாட்டாகவே அமைந்தது. தனிப்பட்ட கோபதாபங்களின் அடிப்படையில் தெரிவிக்கப்படும் ஒரு பொய்த்தகவல் கூட ஒருவரின் கைதுக்கும், சித்திரவதைக்கும், சிறைவாழ்வுக்கும் அல்லது மரணத்துக்கும் கூடக் காரணமாகும் ஆபத்து எப்போதும் இருந்தது. தனிமனித உரிமைகள் செல்லாக் காசாகிய நிலைமையே யதார்த்தமாயிற்று.
சிங்கள் தேசிய வாதம் தமிழ் வெறுப்பை ஊட்டி வளர்ப்பதற்கும், தமிழ்த் தேசியவாதம் சிங்கள வெறுப்பை ஊட்டி வளர்ப்பதற்கும் இது நல்ல பசளையாயிற்று.இந்த யதார்த்தத்தை ஈழத்துத் தமிழ் இலக்கியம் எவ்வாறு கையாண்டது என்பது ஒரு முக்கியமான கேள்வி. மிகப் பெரும்பாலான எழுத்தாளர்கள் தமிழ்த் தேசியவாத நேக்கு நிலையிலிருந்தே இதைப் பார்த்திருக்கிறார்கள் என்பதே எனது அவதானிப்பு. தேவமுகுந்தன் இதற்கு விலக்கல்ல என்பதையே இத்தொகுப்பில் உள்ள பல கதைகள் உணர்த்துகின்றன. அவருடைய கதைகள் மிக வலுவாக இந்த அனுபவத்தைப் பேசுகின்றன. பெரும்பாலான கதைகள் அவருடைய சொந்த அனுபவத்தைப் பேசுகின்றனவோ என்று எண்ணத் தூண்டும் வகையில் உண்மைக்கு நெருக்கமாகத் தோன்றுகின்றன.
'சிவா' இத்தொகுப்பிலுள்ள மிக உருக்கமான கதைகளுள் ஒன்று. அவன் ஒரு பல்கலைக்கழக மாணவன். மிகுந்த திறமைசாலி. சிங்கள மாணவர்களுடனேயே மிக நெருங்கிப் பழகுகிறான். ஒரு சிங்கள மாணவியைக் காதலிக்கிறான். ஆனால் ஒருநாள் இரவு பல்கலைக்கழகத்திலிருந்து வீடு செல்லும் வழியில் சந்தேகத்தின் பேரில் சோதனைச் சாவடியில் அவன் கைதுசெய்யப்படுவதோடு எல்லாமே மாறுகிறது. வாயிற் காவன் உட்பட நெருங்கிப் பழகிய சிங்கள மாணவர்கள் எல்லோரும் தமிழ் மாணவர்கள்மீது சந்தேகப்படுகிறார்கள். பல்கலைக் கழகத்துக்குள் பொலிஸ் புகுந்து தமிழ் மாணவர்களை எல்லாம் விசாரணைக்காக அழைத்துச் செல்கிறது. சிவா ஆறுவருடங்கள் சிறையில் இருந்து குற்றம் நிரூபிக்கப்படாமல் சித்திரவதைக்கு உள்ளான வடுக்களுடன் வெளியே வருகிறான். நண்பர்களிடமிருந்து தனிமைப்படுகிறான். பின்னர் (மீண்டும் கைதுசெய்யப்பட்டு) காணாமல்போய்விடுகிறான்.சிவாவுடன் பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் படித்த நண்பன் முரளிதான் கதைசொல்லி. ஆறுவருடங்கள் சிறையிலிருந்து மீண்ட சிவாவை ஒரு கலியாண வீட்டில் சந்திப்பதுடன் கதை தொடங்குகிறது. பின்னர் முரளி பழைய சம்பவங்களை நினைவுகூர்கிறான். இறுதியில் சிவா மீண்டும் காணாமற்போனது பற்றி ஒரு நண்பன் சொன்ன தகவலுடன் கதையை முடிக்கிறான் முரளி. எனினும் கதை நமக்குள் அத்துடன் முடிவதில்லை. இன மோதலில் பலிக்கடாக்களாகிப்போன ஏராளமான அப்பாவி சிவாக்களின் கதைகள் நம்முள் தொடர்கின்றன.
'இடைவெளி', 'ஒரு சுதந்திர நாள்' ஆகிய இரு கதைகளையும் 'சிவா'வுடன் இணைத்துப் பார்க்கலாம். இடைவெளி கதையில்வரும் ஜெகன் கொழும்பில் ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறான். சக சிங்கள ஊழியர்களுடன் நட்புடன் பழகுகிறான். எனினும,; அலுவலகத்தில் தமிழ்ப் பத்திரிகை வாங்கிப் போடுவது தொடர்பாகவும், சுனாமி நிவாரணத்தக்குச் சேர்க்கும் பணத்தை தமிழ்ப் பிரதேசத்துக்கும் கொடுக்கவேண்டும் என்பது தொடர்பாகவும் சக ஊழியர்களுடன் உரிமைப் போராட்டம் நடத்தி 'பயங்கரவாதி' என்ற பட்டமும் பெறுகிறான். அவன் அலுவலகத்துக்கு லீவு போட்ட ஐந்து நாட்களில் மூன்று நாட்கள் கொழும்பில் குண்டுவெடிப்புகள் நிகழ்கின்றன. அவனது லீவையும் குண்டுவெடிப்பையும் தொடர்புபடுத்தி அலுவலகத்தில் பலர் அவனைச் சந்தேகிக்கிறார்கள். கடைசியாகக் குண்டு வெடித்த அன்று அவன் தன் குழந்தையை நவலோக ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோயிருந்தான். அவன் வெளியே வந்த போது வீதியில் வாகனங்கள் எதுவும் இல்லை. ஆட்டோவுக்காக அவன் அங்கும் இங்கும் ஓடித்திருந்ததை அவனுடன் வேலைசெய்யும் யாரோ கண்டிருக்கிறார்கள். மறுநாள் பொலிஸ்காரர்கள் அலுவலகத்துக்கு வந்து விசாரணைக்காக ஜெகனை அழைத்துச் செல்வதோடு கதை முடிகிறது.
கொழும்பில் வாடகை அறையில் வாழ்ந்துகொண்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் யாழ்ப்பாண மாணவன் ஒருவனின் சுதந்திர தின அனுபவத்தைக் கூறுகின்றது 'ஒரு சுதந்திர நாள்'என்ற கதை. சுதந்திர தினத்தில் தமிழர்கள் சுதந்திரம் இல்லாமல் வாழும் முரண்தான் கதைப்பொருள். பாதுகாப்புக் கெடுபிடி காரணமாக பகலுணவுக்குச் செல்லும்போது அவன் பரிசோதனைக்கு ஆளாவது, அவன் வழக்கமாகச் சாப்பிடும் லக்ஷ;மி பவன் மூடிக்கிடப்பது, பொலிஸ் பதிவு புதிப்பிக்கப்படாததால் அங்கு வேலைசெய்த மலையக இளைஞர்களை பொலிஸ் அள்ளிச் சென்ற செய்தி, பெரிய தேசியக் கொடியைப் பிடித்தவாறு சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் பொப்பிசை பாடியவாறு பஸ்சில் சுற்றுலாச் செல்வது, இனியும் சாப்பாட்டுக்கு அலைந்து ஆபத்தில் மாட்டிக்கொள்ளாது அறையில் இருக்கும் பாணைச் சாப்பிடலாம் என்று அவன் அறைக்குத் திரும்புவது என்று கதை விரிந்து முடிகிறது. சிங்களவர்களுக்கே சுதந்திரம், தமிழர்களுக்குச் சுதந்திரம் இல்லை என்பதை கதை அழுத்திக் கூறுகின்றது.
'இரட்டைக் கோபுரம்' மலேசியப் பிண்ணணியில் அமைந்தாலும் தொனிப்பொருளைப் பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட மூன்று கதைகளுடனும் உறவுடையது எனலாம். சுனில், லால், முரளி மூவரும் அரசாங்க புலமைப் பரிசில் பெற்று மலேசியாவில் உயர் கல்வி கற்பவர்கள். ஒரே வாடகை வீட்டில் சமைத்துச் சாப்பிட்டு மிகுந்த நட்புடன் வாழ்பவர்கள். மலேசிய இலங்கையரான சுப்பிரமணியத்துடன் அவர்களுக்கு நெருங்கிய நட்பு ஏற்படுகின்றது. சிங்களவர், தமிழர் என்ற முரண்பாடுகள் எவையும் அவர்களை எவ்வகையிலும் பாதிக்கவில்லை. அப்படி ஒரு அன்னியோன்யம். திடீரென சுனிலின் குழந்தை பேராதனை மருத்துவ மனையில் இறந்ததாகத் தகவல் வருகிறது. சுனிலின் தம்பி முரளியிடம்தான் தகவல் சொல்கிறான். உடனே அண்ணனை ஊருக்கு அனுப்பிவைக்கும்படி கேட்கிறான். சுனிலிடம் தகவலைச் சொல்லி அவனைத் தேற்றி விமான நிலையத்துக்கு அழைத்துவருகிறார்கள். சுப்பிரமணியம்தான் தன்னுடைய செலவில் பயணச் சீட்டு வாங்கி தன்னுடைய காரில் கூட்டிவருகிறார். விமானம் இரண்டுமணிக்கு கொழும்புக்குப் போகும், அங்கிருந்து சுனிலின் மச்சான் அவனைக் கண்டிக்கு அழைத்துச் செல்வான். ஆனால் அது நடக்கவில்லை. அன்றைக்கு கொழும்புக்கான விமானங்கள் எல்லாம் ரத்துச்செய்யப்பட்டுவிட்டன. கட்டுநாயக்கா விமான நிலையத்தைப் புலிகள் தாக்குவதாகச் செய்தி தெரிவிக்கப்படுகின்றது. தன் பயணம் தடைப்பட்ட ஆத்திரத்தில் 'பறத் தெமிலு' எனச் சுனில் திட்டுகிறான். கதை இவ்வளவுதான். முரளியால் சுனிலைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் தனக்குள் இப்படிச் சொல்லிக்கொள்கிறான்: 'என் காதுகளை என்னால் நம்பமுடியவில்லை. சுனில் ஏன் 'பறத் தெமிலு' என்று ஏசுகிறான்? அவனின் பயணம் தடைப்பட்டதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். அவனின் துயர் எங்களிலும் பரவியுள்ளபோது ஏன் எங்களைத் திட்டுகிறான்,' முரளிக்கு இது புரியாவிட்டாலும் இன முரண்பாடு மனித நடத்தையை எவ்வாறெல்லாம் பாதிக்கின்றது என்பது இதன்மூலம் நமக்கு நன்கு புரிகின்றது.இதுவரை நாம் பார்த்த நான்கு கதைகளிலும் சிங்களவர் பற்றிய ஒரு எதிர்மறையான கருத்துநிலை வெளிப்படுவதைக் காணலாம்.
பாதிக்கப்பட்டவர்களின் நோக்குநிலையில் இருந்து நாம் இவற்றைப் புரிந்துகொள்ளவேண்டும்.'கண்ணீரினூடே தெரியும் வீதி' இனமோதல், யுத்தம் தொடர்பாக நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒரு கதை என்று நினைக்கிறேன். மோதலில் சம்பந்தப்பட்ட இரு சாராரின் துயர அனுபவமும் ஒரேசமயத்தில் இக்கதையில் பேசப்படுகின்றது. ஜயசிகுறு படைநடப்பு காலப் பின்னணியில் கதை சொல்லப்படுகிறது. கதைசொல்லி ஒரு பல்கலைக்கழக மாணவன். கொழும்பில் கல்கிசையில் வாடகை அறையில் குடியிருக்கிறான். அவனது குடும்பம் யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து கிளிநொச்சியில் குடியிருக்கிறது. அப்பா கனடாவில். தம்பி நகுலன் இயக்கத்தில் சேர்ந்துவிட்டான். ஒருநாள் பள்ளிக்குப் போனவன் திரும்பிவரவில்லை. அவனுடைய சைக்கிள்தான் திரும்பிவருகிறது. அவன் தானாக இயக்கத்தில் சேர்ந்தானா அல்லது பாலத்காரமாகச் சேர்க்கப்பட்டானா என்பதைக் கதைசொல்லி சொல்லவில்லை. தம்பி இயக்கத்தில் சேர்ந்தனால்தான் கதைசொல்லியின் குடும்பம் யாழ்ப்பாணம் திரும்பிச் செல்ல முடியவில்லை என்று நாம் யூகிக்கலாம். கிளிநொச்சியிலிருந்து அம்மா அவனுக்குக் கடிதம் எழுதியதினால் அவன் இரண்டுமுறை அறை மாறவேண்டி இருந்தது. கனடாவிலிருந்து அப்பா அனுப்பும் காசை வங்கிமூலம் கிளிநொச்சிக்கு அனுப்புவதற்கு அவன் வங்கி முகாமையாளரின் அவசியமற்ற விசாரணைக்கெல்லாம் உட்படவேண்டியிருக்கிறது.கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பல்கலைக்கழகம் மூன்று மாதமாக மூடிக்கிடக்கிறது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களைச் சேர்ந்த அவனது பல்கலைக்கழக நண்பர்கள் எல்லாரும் ஊர் போய்விட்டார்கள். அவனால் கிளிநொச்சிக்குப் போகமுடியாது. அதனால் கொழும்பில் தங்கியிருக்கிறான். ஒரு தூக்கமற்ற இரவில் கதைசொல்லி இக்கதையைச் சொல்கிறான். கதை இவ்வாறு தொடங்குகிறது:
'நான்கைந்து மாதங்களாய் இதேமாதிரித்தான் இரவில் ஒழுங்காகத் தூங்க முடிவதில்லை. காலிவீதியைக் கிழித்து விரையும் அம்புலன்ஸ் வண்டிகளின் அவல ஒலிகள் என்னைத் திடுக்கிட்டு விழிக்கச் செய்கின்றன. பெரிய ஆஸ்பத்திரிக்கும் விமான நிலையத்திற்குமிடையே அவலக் குரலெழுப்பியபடி அம்புலன்ஸ் வண்டிகள் ஓடி விரைகின்றன. கல்கிசைச் சந்தியிலிருக்கும் மலர்ச்சாலைக்கு சடலங்களை ஏற்றியபடி வரும் இராணுவ டிரக் வண்டிகள் அவற்றை அங்கு இறக்கிவிட்டுச் செல்கின்றன. அவ்வண்டிகளின் முன் இருக்கைகளில் இராணுவ வீரர்கள் துயர்படிந்த முகத்தினராய் அமர்ந்திருப்பர். நகரெங்கும் வெண்கொடிகள் காற்றில் படபடக்கின்றன. நான் தங்குகிற அறையிருக்கும் கல்கிசை மார்க்கட்டுக்கு முன்னாலுள்ள வீதியிற்கூட இரு வீடுகளில் வெள்ளைக் கொடிகளைப் பறக்கவிட்டுள்ளார்கள். அவ்வீட்டு முகப்புகளில் இராணுவச் சீருடை தரித்த இளைஞர்களின் பெரிய வர்ணப் புகைப்படங்களை வைத்துள்ளார்கள். அவற்றைப் பார்க்க அவர்களுக்கு என்னிலும் பார்க்க இரண்டு மூன்று வயது குறைவாய் இருக்கும் போலிருந்தது. இன்றுமாலை அவ்வீடுகளுக்குப் போய்க் கதைத்துவிட்டும் குடித்துவிட்டும் வந்த எனது அறையின் சொந்தக்காரர் குமுது அங்கிள், சடலங்கள் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் மல்லாவியிலிருந்து வவுனியா வந்துவிட்டனவென்றும் இன்று இரவு வீடுகளுக்கு வந்து நாளையிண்டைக்கு இறுதிக் கிரியைகள் நடைபெறுமென்றும் சொல்லியிருந்தார். சொல்லும்போது அவர் குரல் தழுதழுத்தது. அவருக்குத் தெரியப் பிறந்து வளர்ந்து இறந்த பிள்ளைகள்.. அவர் தூக்கி வளர்த்த பிள்ளைகள் அவர்கள்...'தூக்கமற்ற அந்த அதிகாலையில் அவனுடைய அறைக்கதவு தட்டப்படுகிறது. போலிஸ் விசாரணைக்கு வந்துள்ளதோ என்ற தயக்கத்துடன் கதவைத் திறக்கிறான். வந்தவன் அறை நண்பன் நிக்சன். அவசரமாக அவனை வெள்ளவத்தைக்கு அழைத்துச் செல்கிறான். அவனது அப்பா அவனை அவசரமாக ரெலிபோன் எடுக்கச் சொன்னதாகச் சொல்கிறான். 'கோப்பாயில நகுலன் செத்திட்டானாம்' என்று அப்பா சொல்லி அழுகிறார். 'பொடி பெரியாஸ்பத்திரியில் இருக்காம்' என்று சொல்கிறார். கதை பின்வருமாறு முடிகிறது:'எனக்குத் தலை சுற்றுமாப்போல இருக்கு. நிக்ஸன் என்னைப் பிடித்தபடி கொமினிகேசனின் கண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு வெளியே வருகிறான். நகுலனின் உடல் அநாதையாய் ஆஸ்பத்திரிச் சவச்சாலையில் இப்ப கிடக்கும். உடலில்லாமல் கிளிநொச்சியில் செத்தவீடு நடக்கும்.நாளைக்கு வீட்டுக்காரர் குமுது அங்கிளோடை வீட்டுக்குப் பக்கத்திலை நடக்கப்பபோகின்ற செத்தவீடுகளுக்குப் போகவேண்டும்.கண்ணீரினூடு வீதி தெரிகிறதுவெண்புறாக்களாய் சீருடையணிந்த பாடசாலைப் பிள்ளைகளை ஏற்றிய வாகனங்கள் காலிவீதியில் ஊர்கின்றன. அந்த வாகனங்களை விலத்தியபடி அவலக் குரலெழுப்பி அம்புலன்ஸ் வண்டிகள் தெற்கிலிருந்து வடக்குநோக்கி விரைகின்றன. வானம் வேறு அழுது தொலைக்கின்றது.'கடந்த முப்பது ஆண்டுகளில் இனமோதல், யுத்த அனுபவங்களைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்ட சில சிறந்த சிறுகதைகளுள் இதுவும் ஒன்று என்பது என் கணிப்பு. சிங்களவர், தமிழர் என்ற பேதம் இன்றி யுத்த அவலம் எல்லோர் மீதும் கவிந்திருப்பதை எவ்விதப் பாசாங்கும் இன்றி இக்கதை யதார்த்தமாகச் சொல்லுகின்றது. இத்தொகுப்பிலுள்ள தேவமுகுந்தனின் மிகச் சிறந்த கதை என்றும் நான் இதைத்தான் சொல்லுவேன். இனமுரண்பாட்டுக் காலகட்டத்தில் ஒரு எழுத்தாளனிடம் நாம் எதிர்பார்க்கக்கூடிய அறம் இக்கதையில் பிரகாசமாகத் தெரிகிறது.
'சிவா', 'இடைவெளி', 'இரட்டைக் கோபுரம்' போன்ற கதைகளில் வெளிப்படையாகத் தெரியும் சிங்களவர்களைப் பற்றிய ஒரு எதிர்மறைப் பார்வை இக்கதையில் இல்லை என்பது எனக்கு மிகுந்த ஆறுதல் தருகின்றது.'வழிகாட்டிகள்', 'கூட்டத்தில் ஒருவன்' ஆகிய இரு கதைகளும் இனமுரண்பாட்டைப் பின்னணியாகக் கொண்டவை எனினும் பிரச்சினையை வேறு ஒரு தளத்தில் அணுகுகின்றன. இன மோதல் சூழலில் சமூகப் பிரக்ஞையற்ற உயர் வர்க்கத் தமிழர் சிலரின் நடத்தையை கிண்டலோடு விமர்சிக்கும் கதைகளாக இவற்றைக் கருதலாம். பிரச்சார வாடை சற்றுத் தூக்கலாக உள்ள மிகைப்படுத்தலாக இக்கதைகள் அமைகின்றன.
முகுந்தனின் கதைகள் எல்லாம் ஒரு வகையில் சுய அனுபவ வெளிப்பாடுகளாகக் கருதக்கூடியவையே எனினும் 'இவன்' என்ற கதை சுய அனுபவச் சாயலைச் சற்றுக் கூடுதலாகப் பெற்றிருப்பதாகத் தோன்றுகின்றது. பல்கலைக்கழகத்தில் படித்து முதல் வகுப்பில் சித்தியடைந்தும் பல ஆண்டுகளாக வேலையற்றிருக்கும் ஒரு பட்டதாரியின் அனுபவத்தைக் கதை விபரிக்கிறது. வேலையற்ற ஒரு தமிழ் இளைஞன் கொழும்பில் வாழ்வதிலுள்ள பிரச்சினைகளையும் அது சித்திரிக்கின்றது. பணமும் செல்வாக்கும் உடைய, தன்னைவிடப் படிப்பிலும் திறமையிலும் குறைந்த தனது தமிழ் நண்பர்கள் நல்ல தொழிலில் இருப்பதையும் தான் வேலையற்று அலைவதையும் கதைசொல்லி விரிவாக விபரிக்கிறான். ஒருவகையில் சற்று மிகைப்படுத்தலாகத் தோன்றினாலும் கதைசொல்லும் முறையில் இத்தொகுப்பில் உள்ள நல்ல கதைகளுள் இதையும் ஒன்றாகக் கருதலாம்.'
சின்ன மாமா' இத்தொகுப்பிலுள்ள ஒரு வித்தியாசமான கதை. போர்ச் சூழலோடு நேரடியான தொடர்பற்றது. சாதியில் தன்னைவிட உயர்ந்த ஒருத்தியைக் காதலித்துத் திருமணம் செய்தபின் தன் குடும்பத்தை முற்றிலும் புறக்கணித்த ஒரு பிரபல எழுத்தாளரைப் பற்றியது கதை. ஒரு எழுத்தாளனின் போலி வாழ்க்கையை அம்பலப்படுத்துவது என்பதற்குமேல் சொல்லும் முறையில் கதை சிறப்பாக அமைந்துள்ளது.
பொதுவாகவே தனது எல்லாக் கதைகளிலும் தான் ஒரு நல்ல கதைசொல்லி என்பதை தேவமுகுந்தன் நிரூபித்திருக்கிறார். கொழும்புச் சூழலை, அதன் சமூக-புவியில் வரைபடத்தை சிறப்பாக வரைந்திருக்கிறார். பத்துக் கதைகளில் அரைவாசிக் கதைகளாவது நல்லகதைகள் என்ற தகுதியைப் பெறுகின்றன. அந்தவையில் புதிய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களுள் தேவமுகுந்தனும் முக்கிய இடம்பெறுகிறார் என்பதில் ஐயம் இல்லை.கடந்த முப்பது ஆண்டுகால இனமுரண்பாடு, மோதல், யுத்தம் பற்றிய பிரச்சினைகளை ஈழத்துத் தமிழ் இலக்கியம் எவ்வாறு கையாண்டுள்ளது என்ற கேள்வியை நான் இங்கு மீண்டும் எழுப்ப விரும்புகிறேன்.
பெரும்பாலும் இவை பாதிக்கப்பட்டவர்களின் குரலாக, சார்புநிலைப்பட்டவையாகவே காணப்புடுகின்றன. சிங்கள மேலாதிக்கம், ராணுவ ஒடுக்குமுறை, அரசபயங்கரவாதம் பற்றிய விபரிப்பகளாகவே அவை பெரிதும் வெளிப்பட்டுள்ளன. அது ஒருவகையில் தவிர்க்கமுடியாதது என்று வாதிடலாம். அது ஒருவகையில் நியாயமாகவும் தோன்றலாம். எனினும், விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் விடுதலை இயக்கங்கள் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளையும், கொலைகளையும், பயங்கரவாதத்தையும் அதன் விளைவுகளையும் பற்றிப் பேசாத இலக்கியம் ஒருபக்கச் சார்பானது என்பதையும் நாம் அழுத்திக் கூறவேண்டும்.இந்திய பிரிவினையின்போது இந்துக்களும் முஸ்லிம்களும் பல இலட்சக் கணக்கில் கொல்லப்பட்டதையும் புலம்பெயர்ந்ததையும் பின்னணியாகக் கொண்டு சாதத் ஹசன் மண்டோ, கே. ஏ. அப்பாஸ் போன்றவர்கள் அதற்கு வெளியே இருந்து அவற்றின் அபத்தத்தைப் பற்றி எழுதியவற்றை நான் நினைத்துப்பார்க்கிறேன். எழுத்தாளனின் அற உணர்வுக்கு நாம் அவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். தமிழில் அத்தகைய எழுத்து மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. தேவமுகுந்தனின் 'கண்ணீரினூடே தெரியும் வீதி' கதையை அவ்வகையிலேயே நான் முக்கியமானதாகக் கருதுகிறேன். இது தொடர்பாக சுதாராஜின் உயிர்க்கசிவு சிறுகதைத் தொகுதிக்கு நான் எழுதிய முன்னுரையில் குறிப்பிட்ட ஒரு கருத்தோடு இக்குறிப்பை முடிக்க விரும்புகிறேன:; 'சோபாசக்தி, சக்கரவர்த்தி ஆகிய புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் போல் யுத்த சூழலில் விடுதலை இயக்கங்களின் வன்முறை, மனித உரிமை மீறல் போன்ற கருப்பொருட்களை மையமாகக் கொண்ட கதைகளை எழுதியவர்களை ஈழத்தில் மிக அரிதாகவே காணமுடியும். அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்கவில்லை. கோவிந்தன் என்ற புனைபெயரில் இயக்கங்களின் வன்முறையை அம்பலப்படுத்தி புதியதோர் உலகம் நாவலை எழுதிய நோபேட் விடுதலைப் புலிகளால் பின்னர் கொல்லப்பட்டார். செல்வி அவ்வாறு கொல்லப்பட்ட ஒரு பெண் கவிஞர். இப்பின்னணியில் சுதாராஜ் போன்றவர்களின் மௌனத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். யுத்தத்துக்குப் பிந்திய சூழலில் இந்த மௌனத்துக்கு விடுதலை கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.'இந்த எதிர்பார்ப்புடன் தேவமுகுந்தனுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
-எம்.ஏ.நுஃமான்
Thursday, December 20, 2012
அ. யேசுராசா
மாணவர் - இளைஞர் ஆகியோரின் வளர்ச்சிக்காக , ‘தெரிதல்’ இதழை நான் வெளியிட்டபோது, 2004 ஆம் ஆண்டளவில் முகுந்தனுடன் தொடர்பு ஏற்பட்டது ; அதிலிருந்து அடிக்கடி தொலைபேசிமூலம் தொடர்பு கொள்வார். பின்னர், அவர் எழுதிய கதைகளை முதல் வாசகனாகப் படித்து, எனது கருத்துகளைப் பரிமாறினேன். இப்போது அவரது சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது ; இந்நிகழ்வில் பங்குபற்றுகிறேன்.
சுய அனுபவ வெளிப்பாட்டுக் கதைகளாக அவரின் கதைகள் உள்ளன ; இக்கதைகளில் முக்கிய பாத்திரங்களாகவரும் நான், இவன், ஜெகன், முரளி, கோபி ஆகியோரை முகுந்தனுடன் இணைத்து உணரலாம்! படைப்பு என்ற வகையில் இது முக்கியமான அம்சமாகும். புறநிலைச் சூழல். கலைஞனைப் பாதிக்கின்றது ; இப்பாதிப்பினால் எழும் உணர்வுகளை தனது சுயமான பார்வையில் பொருத்தமான வடிவங்களில் எழுத்தாளன் வெளிப்படுத்துகிறான். அனுபவம் - படைப்புந்தல் சாராமல் வரும் எழுத்துகள் வெறும் ' கருத்துக்கள்' கொண்டவையாக அமைந்து, உலர்ந்த படைப்புகளாகத் தோன்றும். இலக்கியத்தை வெறும் பிரசாரக் கருவியாக - சமூகமாற்றத்துக்கு மட்டுமேயான ஒன்றாகக் கருதுவோர் சுய அனுபவ வெளிப்பாட்டுக்கு முக்கியம் கொடுப்பதில்லை ; கருத்துக்களுக்கு மட்டுமே முதன்மை அளிக்கின்றனர் ; அதனால் அவ்வாறான படைப்புகள் 'தயாரிப்புகளாக' - கட்டுரைகளாக - வறண்டுபோகின்றன. “கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது நான் வியாசங்கள் எழுதுவேன் “ எனப் பாரதி ஓரிடத்தில் சரியாகத்தான் கூறியிருக்கிறான்! இச் சுய அனுபவ வெளிப்பாடு முகுந்தனின் கதைகளிற்கு வலிமையைச் சேர்க்கிறது.
இலங்கையில் சிங்கள - தமிழ் தேசிய இனங்களுக்கு இடையேயான முரண்பாடு பிரதான முரண்பாடாக இருக்கிறது. அறுபது ஆண்டுகளாகத் தொடரும் இன முரண்பாட்டுப் பிரச்சினை யுத்தம் என்ற நிலைக்கு உயர்ந்து ,மாபெரும் இனப்படுகொலையில் முடிவுக்கு வந்துள்ளது. நடைமுறை வாழ்வில் சிங்கள - தமிழ் மக்களுக்கிடையே ஓர் இடைவெளி தொடர்ந்தபடிதான் உள்ளது . தமிழ் மக்களின் பிரச்சினைகள் நீதியான முறையில் தீர்க்கப்படும்போதே இந்த 'இடைவெளி' மறையும். இந்த யதார்த்த ' இடைவெளி ' முகுந்தனின் கதைகளில் முக்கியமானதாயுள்ளது ; இது கதைகளுக்குக் கனதியைச் சேர்க்கிறது. சிவா, இடைவெளி, இரட்டைக்கோபுரம், ஒரு சுதந்திர நாள் ஆகிய கதைகளில் இதைக் காணலாம்!
யுத்தச் சூழலின் தாக்கத்தை கண்ணீரினூடே தெரியும் வீதி.... , மரநாய்கள் ஆகிய இரு கதைகள் மையமாக வெளிப்படுத்துகின்றன. முதற் கதை முக்கியமானதெனப் பலரும் கருத்துக் கொண்டுள்ளனர் ; போரினால் ஏற்படும் மரணங்கள் இரண்டு இனங்களுக்கும் துயரை ஏற்படுத்துவதை - மானுட அவலத்தை - அது நன்கு வெளிப்படுத்துகிறது. மரநாய்கள் இந்திய அமைதிப் படையைக் குறியீடாகக் கொண்டிருந்தபோதும், அக்குறியீடு இன்று வேறொன்றுக்குமாகவுமுள்ளது!
அமைப்புக்களின் சீர்கேடுகளை வழிகாட்டிகள், கூட்டத்தில் ஒருவன் ஆகிய கதைகள் சித்திரிக்கின்றன. உறுப்பினரின் அபத்தச் செயற்பாடுகள் கிண்டலுடனும் கோபத்துடனும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
சின்ன மாமா கதை ஒரு போலி எழுத்தாளனைப் பற்றிய நல்ல கதை. எழுத்தாளனைப்பற்றிக் கதை எழுதலாமா எனச் சிலர் கேட்கலாம். அவனும் சமுதாயத்தில் ஓர் அங்கம் என்றவகையில், கதைக்குரிய பாத்திரம்தான். ஆயினும் அவ்வாறு எழுதும்போது குறித்த நபரின் பெயரைச் சுட்டாது அவனது சீர்கேடுகள், முரண்பாடுகள் என்பவற்றை உண்மைத் தன்மையுடனும் கலைத்துவத்துடனும் வெளிப்படுத்தவேண்டும். தற்போது பின்னவீனத்துவம் என்ற பெயரில், சில உண்மைகளுடன் பொய்யான புனைவுகளையும் சேர்த்து, குறிப்பான யாரையாவது இழிவுபடுத்த - தார்மீக நிலைப்பாடு ஏதுமற்ற சிலர் முயல்கின்றனர் ; வக்கிர புத்திகொண்ட இந்த எழுத்துக்களை, அவர்களைப்போன்று வக்கிரபுத்தி கொண்டவர்களே இரசிக்கவும் செய்கின்றனர்! ஆனால், இக்குறைபாடு இல்லாமல் நல்லதொரு கதையாக ' சின்ன மாமா' கதை உள்ளது.
இவ்வாறான எல்லாக் கதைகளினதும் உள்ளடக்கங்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளன எனவும், பார்க்க வேண்டும். சாதாரண மொழியில் - தெளிவானவையாக அவை படைக்கப்பட்டுள்ளன ; தமிழக எழுத்தாளரான அசோகமித்திரனி டமும் சாதாரண மொழியில் சிறந்த கதைகள் படைக்கும் பண்புதான் காணப்படும். பல கதைகளில் விபரங்கள் அடுக்கப்படுகின்றன ; இது முகுந்தனின் தனி இயல்பு சார்ந்தது. சு. மகேந்திரன் என்ற ஈழத்து எழுத்தாளரிடமும் இப்பண்பு சிறப்பானதாக உள்ளது. விபரங்கள் கேலியுடன் தரப்படும்போது வாசிப்பவன் இரசிப்புடன் சிரிக்கவும், சில இடங்களில் கோபிக்கவும் நேர்கிறது.
" புதிய தலைமுறை எழுத்தாளர்களுள் முகுந்தனும் முக்கிய இடம் பெறுகிறார்" என்று தனது பின்னுரையில் நுஹ்மான் சொல்வதை ஏற்றாலும், பொதுவான எழுத்தாளர் என்ற வகையில் என்ன இடத்தை அவர் பெறுகிறார் என்று பார்ப்பதும் நல்லதெனப் படுகிறது. அவ்வாறு பார்க்கையில் அவரும் அவரது இந்த நூலும் முக்கியமான பாராட்டைப் பெறும் தகுதியைக் கொண்டுள்ளனர்.
சரி, புதிய தலைமுறை அல்லாத பழைய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பிந்தியகாலப் படைப்புகள் எல்லாம் தரமாகத்தான் உள்ளனவா என்ற கேள்வியும், இங்கு எழுகிறது. க. சட்டநாதனின் 'மனமடிப்புகளில்....' , 'அந்த மரணமும் அவர்களும் ' ஆகிய சிறுகதைகள் நல்ல கதைகள் அல்ல! முந்தியது வெறும் கருத்துக்களைக் கொண்டு கட்டுரை போன்றுள்ளது! ; மற்றது ஒரு போலி யதார்த்தக் கதையாக உள்ளது. மு. பொன்னம்பலத்தின் ' வரலாற்றுச் சூழல் ' என்ற கதை , ஒரு கட்டுரையே அல்லாது சிறுகதையாகக் கொள்ளத்தக்கதல்ல! இவ்வாறே அவரது பிந்திய தொகுதியான 'முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை' யிலுள்ள அரைவாசிக் கதைகள், நல்ல கதைகள் அல்ல! கே. ஆர். டேவிட் எழுதி அண்மையில் வந்த தொகுதியின் தலைப்புக் கதையான ' பாடுகள்' என்பதும், போலியான கதையாகவுள்ளது ; கிறிஸ்துமஸ் இரவில் நடப்பதான அக்கதை, பொருத்தமில்லாதமுறையில் - வலிந்து - சில விடயங்களை வெளிப்படுத்தச் ‘செய்யப்பட்ட ‘தொன்றாகவே காணப்படுகிறது!
இந்நிலையில், முகுந்தன் பொறுப்புடன் தொடர்ந்து எழுதி நல்ல கதைகளைத் தரவேண்டுமெனச் சொல்லி, எனக்குத் தரப்பட்ட வாய்ப்புக்கும், இதுவரை எனது பேச்சைக் கேட்டமைக்கும் நன்றி கூறி அமைகிறேன் ; வணக்கம் !
Subscribe to:
Posts (Atom)








