காலச்சுவடு பதிப்பக வெளியிட்ட எனது "கண்ணீரினூடே தெரியும் வீதி..." சிறுகதைத் தொகுதி பற்றிய மதிப்பீடுகள் விமர்சனங்கள் இப்பகுதியில் இடம்பெறும்- தேவமுகுந்தன்
Thursday, December 20, 2012
அ. யேசுராசா
மாணவர் - இளைஞர் ஆகியோரின் வளர்ச்சிக்காக , ‘தெரிதல்’ இதழை நான் வெளியிட்டபோது, 2004 ஆம் ஆண்டளவில் முகுந்தனுடன் தொடர்பு ஏற்பட்டது ; அதிலிருந்து அடிக்கடி தொலைபேசிமூலம் தொடர்பு கொள்வார். பின்னர், அவர் எழுதிய கதைகளை முதல் வாசகனாகப் படித்து, எனது கருத்துகளைப் பரிமாறினேன். இப்போது அவரது சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது ; இந்நிகழ்வில் பங்குபற்றுகிறேன்.
சுய அனுபவ வெளிப்பாட்டுக் கதைகளாக அவரின் கதைகள் உள்ளன ; இக்கதைகளில் முக்கிய பாத்திரங்களாகவரும் நான், இவன், ஜெகன், முரளி, கோபி ஆகியோரை முகுந்தனுடன் இணைத்து உணரலாம்! படைப்பு என்ற வகையில் இது முக்கியமான அம்சமாகும். புறநிலைச் சூழல். கலைஞனைப் பாதிக்கின்றது ; இப்பாதிப்பினால் எழும் உணர்வுகளை தனது சுயமான பார்வையில் பொருத்தமான வடிவங்களில் எழுத்தாளன் வெளிப்படுத்துகிறான். அனுபவம் - படைப்புந்தல் சாராமல் வரும் எழுத்துகள் வெறும் ' கருத்துக்கள்' கொண்டவையாக அமைந்து, உலர்ந்த படைப்புகளாகத் தோன்றும். இலக்கியத்தை வெறும் பிரசாரக் கருவியாக - சமூகமாற்றத்துக்கு மட்டுமேயான ஒன்றாகக் கருதுவோர் சுய அனுபவ வெளிப்பாட்டுக்கு முக்கியம் கொடுப்பதில்லை ; கருத்துக்களுக்கு மட்டுமே முதன்மை அளிக்கின்றனர் ; அதனால் அவ்வாறான படைப்புகள் 'தயாரிப்புகளாக' - கட்டுரைகளாக - வறண்டுபோகின்றன. “கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது நான் வியாசங்கள் எழுதுவேன் “ எனப் பாரதி ஓரிடத்தில் சரியாகத்தான் கூறியிருக்கிறான்! இச் சுய அனுபவ வெளிப்பாடு முகுந்தனின் கதைகளிற்கு வலிமையைச் சேர்க்கிறது.
இலங்கையில் சிங்கள - தமிழ் தேசிய இனங்களுக்கு இடையேயான முரண்பாடு பிரதான முரண்பாடாக இருக்கிறது. அறுபது ஆண்டுகளாகத் தொடரும் இன முரண்பாட்டுப் பிரச்சினை யுத்தம் என்ற நிலைக்கு உயர்ந்து ,மாபெரும் இனப்படுகொலையில் முடிவுக்கு வந்துள்ளது. நடைமுறை வாழ்வில் சிங்கள - தமிழ் மக்களுக்கிடையே ஓர் இடைவெளி தொடர்ந்தபடிதான் உள்ளது . தமிழ் மக்களின் பிரச்சினைகள் நீதியான முறையில் தீர்க்கப்படும்போதே இந்த 'இடைவெளி' மறையும். இந்த யதார்த்த ' இடைவெளி ' முகுந்தனின் கதைகளில் முக்கியமானதாயுள்ளது ; இது கதைகளுக்குக் கனதியைச் சேர்க்கிறது. சிவா, இடைவெளி, இரட்டைக்கோபுரம், ஒரு சுதந்திர நாள் ஆகிய கதைகளில் இதைக் காணலாம்!
யுத்தச் சூழலின் தாக்கத்தை கண்ணீரினூடே தெரியும் வீதி.... , மரநாய்கள் ஆகிய இரு கதைகள் மையமாக வெளிப்படுத்துகின்றன. முதற் கதை முக்கியமானதெனப் பலரும் கருத்துக் கொண்டுள்ளனர் ; போரினால் ஏற்படும் மரணங்கள் இரண்டு இனங்களுக்கும் துயரை ஏற்படுத்துவதை - மானுட அவலத்தை - அது நன்கு வெளிப்படுத்துகிறது. மரநாய்கள் இந்திய அமைதிப் படையைக் குறியீடாகக் கொண்டிருந்தபோதும், அக்குறியீடு இன்று வேறொன்றுக்குமாகவுமுள்ளது!
அமைப்புக்களின் சீர்கேடுகளை வழிகாட்டிகள், கூட்டத்தில் ஒருவன் ஆகிய கதைகள் சித்திரிக்கின்றன. உறுப்பினரின் அபத்தச் செயற்பாடுகள் கிண்டலுடனும் கோபத்துடனும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
சின்ன மாமா கதை ஒரு போலி எழுத்தாளனைப் பற்றிய நல்ல கதை. எழுத்தாளனைப்பற்றிக் கதை எழுதலாமா எனச் சிலர் கேட்கலாம். அவனும் சமுதாயத்தில் ஓர் அங்கம் என்றவகையில், கதைக்குரிய பாத்திரம்தான். ஆயினும் அவ்வாறு எழுதும்போது குறித்த நபரின் பெயரைச் சுட்டாது அவனது சீர்கேடுகள், முரண்பாடுகள் என்பவற்றை உண்மைத் தன்மையுடனும் கலைத்துவத்துடனும் வெளிப்படுத்தவேண்டும். தற்போது பின்னவீனத்துவம் என்ற பெயரில், சில உண்மைகளுடன் பொய்யான புனைவுகளையும் சேர்த்து, குறிப்பான யாரையாவது இழிவுபடுத்த - தார்மீக நிலைப்பாடு ஏதுமற்ற சிலர் முயல்கின்றனர் ; வக்கிர புத்திகொண்ட இந்த எழுத்துக்களை, அவர்களைப்போன்று வக்கிரபுத்தி கொண்டவர்களே இரசிக்கவும் செய்கின்றனர்! ஆனால், இக்குறைபாடு இல்லாமல் நல்லதொரு கதையாக ' சின்ன மாமா' கதை உள்ளது.
இவ்வாறான எல்லாக் கதைகளினதும் உள்ளடக்கங்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளன எனவும், பார்க்க வேண்டும். சாதாரண மொழியில் - தெளிவானவையாக அவை படைக்கப்பட்டுள்ளன ; தமிழக எழுத்தாளரான அசோகமித்திரனி டமும் சாதாரண மொழியில் சிறந்த கதைகள் படைக்கும் பண்புதான் காணப்படும். பல கதைகளில் விபரங்கள் அடுக்கப்படுகின்றன ; இது முகுந்தனின் தனி இயல்பு சார்ந்தது. சு. மகேந்திரன் என்ற ஈழத்து எழுத்தாளரிடமும் இப்பண்பு சிறப்பானதாக உள்ளது. விபரங்கள் கேலியுடன் தரப்படும்போது வாசிப்பவன் இரசிப்புடன் சிரிக்கவும், சில இடங்களில் கோபிக்கவும் நேர்கிறது.
" புதிய தலைமுறை எழுத்தாளர்களுள் முகுந்தனும் முக்கிய இடம் பெறுகிறார்" என்று தனது பின்னுரையில் நுஹ்மான் சொல்வதை ஏற்றாலும், பொதுவான எழுத்தாளர் என்ற வகையில் என்ன இடத்தை அவர் பெறுகிறார் என்று பார்ப்பதும் நல்லதெனப் படுகிறது. அவ்வாறு பார்க்கையில் அவரும் அவரது இந்த நூலும் முக்கியமான பாராட்டைப் பெறும் தகுதியைக் கொண்டுள்ளனர்.
சரி, புதிய தலைமுறை அல்லாத பழைய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பிந்தியகாலப் படைப்புகள் எல்லாம் தரமாகத்தான் உள்ளனவா என்ற கேள்வியும், இங்கு எழுகிறது. க. சட்டநாதனின் 'மனமடிப்புகளில்....' , 'அந்த மரணமும் அவர்களும் ' ஆகிய சிறுகதைகள் நல்ல கதைகள் அல்ல! முந்தியது வெறும் கருத்துக்களைக் கொண்டு கட்டுரை போன்றுள்ளது! ; மற்றது ஒரு போலி யதார்த்தக் கதையாக உள்ளது. மு. பொன்னம்பலத்தின் ' வரலாற்றுச் சூழல் ' என்ற கதை , ஒரு கட்டுரையே அல்லாது சிறுகதையாகக் கொள்ளத்தக்கதல்ல! இவ்வாறே அவரது பிந்திய தொகுதியான 'முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை' யிலுள்ள அரைவாசிக் கதைகள், நல்ல கதைகள் அல்ல! கே. ஆர். டேவிட் எழுதி அண்மையில் வந்த தொகுதியின் தலைப்புக் கதையான ' பாடுகள்' என்பதும், போலியான கதையாகவுள்ளது ; கிறிஸ்துமஸ் இரவில் நடப்பதான அக்கதை, பொருத்தமில்லாதமுறையில் - வலிந்து - சில விடயங்களை வெளிப்படுத்தச் ‘செய்யப்பட்ட ‘தொன்றாகவே காணப்படுகிறது!
இந்நிலையில், முகுந்தன் பொறுப்புடன் தொடர்ந்து எழுதி நல்ல கதைகளைத் தரவேண்டுமெனச் சொல்லி, எனக்குத் தரப்பட்ட வாய்ப்புக்கும், இதுவரை எனது பேச்சைக் கேட்டமைக்கும் நன்றி கூறி அமைகிறேன் ; வணக்கம் !
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment