'

தேவமுகுந்தனின் சிறுகதை தொகுப்பில் உள்ள பத்து சிறுகதைகளில் ஏழு சிறுகதைகளை அச்சுக்குப் போகும் முன்னரே அவர் மூலம் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.நான் ஆக்க இலக்கியத்தில் பெரிதாக ஈடுபட்டவன் அல்ல என்ற போதிலும் எனது தீவிர வாசிப்பில் நம்பிக்கை வைத்து எனது அபிப்பிராயத்தை அறிந்து கொள்வதில் அவர் பெரிதும் விரும்பி இருந்தார்.ஆக என்னளவில் நான் திருப்தி அடைந்ததாக கருதிய அவரின் சிறுகதைகளை இன்று மீள விமர்சிக்கும் நிலை ஒரு நெருக்கடியை தந்தாலும் அவ்வாறு தெரிவிக்கும் சில கருத்து நிலை முரண்பாடுகள் கால மாற்றத்தினால் ஏற்பட்ட ஒன்றென்பதை அவர் ஏற்றுக்கொள்வார் என்று நம்புகின்றேன்.
ஈழத்து சிறுகதை இலக்கியத்தில் போர் குறித்து தோன்றிய கதைகளை இக்கட்டுரையின் வசதிக்காக மூன்றுவிதமாக வகைப்படுத்தி பார்க்கிறேன்.
1. போராட்டத்திற்கு ஆதரவான கதைகள்
2. இனப்பிரச்சினையினதும் போரினதும் விளைவுகளை பேசும் கதைகள்
3. போர் சார்ந்த இருபிரிவினரையும் விமர்சிக்கும் கதைகள்
இதில் தேவ முகுந்தனின் சிறுகதைகளை இரண்டாவது வகையான இனப்பிரச்சினையினதும் போரினதும் விளைவுகளை பேசும் கதைகளாகவே நான் பார்க்கிறேன் கொழும்பு,யாழ்ப்பாணம், மலேசியா ஆகியவற்றினை களமாக கொண்ட இவரின் கதைகளை பிறிதொரு கோணத்தில் நோக்க வேண்டுமென்றால்
1. சிங்கள நடுத்தர வர்க்கத்தினரின் சந்தேகப் பார்வைக்கு மத்தியில் தமிழர்கள் எதிர்நோக்கிய அன்றாட வாழ்வியற் பிரச்சினைகள்
2. கல்வி உலகில் நிகழும் முறைகேடுகளையும் மோசடிகளையும் அம்பலப்படுத்தல்
3. இலக்கியவாதிகளின் போலித்தனத்தை எடுத்துக் காட்டுதல்
4. வேலையற்ற பட்டதாரிகளின் வாழ்வில் ஏற்படும் அவலத்தை சுட்டிக்காட்டுதல்
எனவும் நோக்கலாம்.
புதிய தலைமுறையை சேர்ந்தவர்களில் அநேக எழுத்தாளர்கள் சம்பவங்களின் ஊடாக கதைகளை நகர்த்திச் செல்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அவ்வாறு சம்பவங்களுக்கு முக்கியத்தை கொடுக்கும் போது பின்னணி சூழலை மெருகூட்டுவதிலோ அல்லது நிலவியலை செதுக்குவதிலோ அதிகம் கவனஞ் செலுத்துவதில்லை.ஆனால் தேவ முகுந்தனது கதைகளில் கொழும்புச் சூழல் அதன் புவியியல் என்பன சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன.ஜெயகாந்தன் ஒருமுறை மஞ்சக்குப்பத்தில் வாழ்ந்த ஆறு ஆண்டு காலத்தில் நான் சந்தித்த மனிதர்களை பற்றி அறுபது வருஷம் எழுதுவதற்கு என்னிடம் விடயம் இருக்குதென்று கூறியது போல தேவமுகுந்தனது இருபது வருட கொழும்பு வாழ்க்கை அவரின் சிறுகதைகளுக்கு கைகொடுத்துள்ளது.
தனது கதைகளை இறுதியில் அதிர்ச்சியினைக் கொடுக்கும் ஓ ஹென்றி பாணியில் எழுதாமல் தனது அன்றாட அனுபவத்தினை வடிவ நேர்த்தியுடனும் சிறந்த மொழியாற்றலுடனும் சித்திரித்து தனது இயலாமைகளால் ஏற்படும் ஆவேசத்தினை வாசகனுக்கு தொற்ற வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் எனலாம்.
இவரின் சிறுகதைகளில் எள்ளல் கதைக்கேற்ற வகையில் சிறுபகுpதியாக இருக்குமே தவிர முழுக்கதையையுமே அவ்வாறான நடையை கொண்டு எழுதியவரல்ல.இத்தொகுப்பில் உள்ள 'வழிகாட்டிகள்','இவன்','சின்ன மாமா' சிறுகதைகளில் அது சிறப்பாகவே கையாளப்பட்டுள்ள தெனலாம்.இருப்பினும் எள்ளலோடு ஒரு விடயத்தை குறிப்பிட்டு விட்டு சில சிறுகதைகளில் 'எனக்குச் சிரிப்பு வந்தது' என்று குறிப்பிடுவதை தவிர்த்திருக்கலாம்.
என்னளவில் இத்தொகுதியில் உள்ள சிறுகதைகளில் 'கண்ணீரினூடே தெரியும் வீதி', 'மரநாய்கள்', 'சின்னமாமா' ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்த கதைகளாகச் சொல்வேன்.
இனத்துவ முரண்பாட்டினால் சிங்கள, தமிழ் இனங்களுக்கிடையில் தோன்றிய வெறுப்புணர்வு பெரும்பாலான படைப்பாளிகளை தத்தம் தேசியவாத நோக்கில் இருந்து படைக்க முற்பட்டதனால் அவற்றின் சமநிலைத் தன்மை கேள்விக்குரிய தாக்கப்பட்டிருந்தது.தமிழ் படைப்பாளிகளால் பெரிதும் போற்றப்படுகின்ற சிங்கள எழுத்தாளரான தெனகம சிரிவர்த்தனவுடைய 'மித்துரோ' நாவலில் 'திருகோணமலையில் தமிழர்களால் சிங்களவர்கள் பாதிக்கப்படுவதைப் பிரதானமாகக் காட்டி நாட்டில் வேறு பகுதியில் சிங்களவர்களால் தமிழர்கள் பாதிக்கப்படுவதை போகிற போக்கில் ஒரு செய்தியாக மட்டுமே சொல்லிப் போவதை' சுட்டிக்காட்டலாம்.
தேவ முகுந்தனின் சிறுகதைகளில் எனக்கு கடைசியாகப் படிக்கக் கிடைத்த கதை தான் 'கண்ணீரினூடே தெரியும் வீதி'. இதனைப் படிப்பதற்கு முன்னதாக ஷியாம் செல்வதுரையின் 'விந்தைப் பையன்' நாவலில் 1983 இனக்கலவரத்தின் போது அர்ஜி என்ற கதாபாத்திரத்தின் வீடும், அவனது பாட்டியும் உயிரோடு எரிக்கப்பட்ட போது அயல்வீட்டு சிங்களவரான பெரா மாமியும் அவரது கணவரும் அர்ஜி குடும்பத்தை காப்பாற்றுகின்றனர்.
அதேபோன்று அ.ரவி எழுதிய 'மகிந்தாவின் சாவு' சிறுகதையில் டென்சில் கொப்பேகடுவ கண்ணிவெடியில் சிக்கிய போதும் ஜனாதிபதி பிறேமதாஸ குண்டுவெடிப்பில் இறந்த போதும் வீட்டுக்கார சிங்களவரான மகிந்தா காடையர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுகின்றார். அப்போதெல்லாம் இது போன்ற சிங்கள மனிதர்கள் தேவமுகுந்தனின் கண்களில் படவில்லையா என்றதொரு கேள்வி என்னுள் எழுந்தது.
ஏனென்றால் இத்தொகுதியில் உள்ள 'இடைவெளி', 'சிவா', 'இரட்டைக்கோபுரம்' போன்ற சிறுகதைகளில் வருகின்ற சிங்களவர்களை ஒற்றைப்படையானதாகவே இவர் சித்திரித்திருந்தார்.
ஆனாலும் அந்தக்குறையை 'கண்ணீரினூடே தெரியும் வீதி' சிறுகதையின் ஊடாக தேவ முகுந்தன் நிவர்த்தி செய்துள்ளார்.இது குறித்து பின்னுரையில் 'இனமுரண்பாட்டு காலகட்டத்தில் ஒரு எழுத்தாளனிடம் நாம் எதிர்பார்க்கக் கூடிய அறம் இக்கதையில் பிரகாசமாகத் தெரிகிறது என பேராசிரியர் எம்.ஏ.நு மான் அவர்கள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
அதேசமயம் 'கண்ணீரினூடே தெரியும் வீதி' சிறுகதையின் சில பகுதிகளைப் படித்ததும் எனக்கு தாட்சாயணியின் ஒரு மரணமும் சில மனிதர்களும் சிறுகதை நினைவுக்கு வந்தது.இரண்டு கதையிலும் போராளி ஒருவர் இறந்தபொழுதும் அந்தச் சடலத்தை வீடடிவ் வைத்து செத்தவீடு கொண்டாட முடியாத துயர நிலை சித்திரிக்கப்படுகிறது.
தாட்சாயணி அதனை இவ்வாறு சித்திரிக்கின்றார்.
'இஞ்சை இவ்வளவு பேர் சொந்தமெண்டு இருக்க அவள் ஆஸ்பத்திரியில அநாதைப் பிணமாக .......அம்மம்மா முகம் கோணியபடி மூலைக்குள் உட்கார்ந்து விட்டாள்'
எனச் சித்திரிக்கப்பட்டிருக்கும்.
தேவ முகுந்தனின் கதையில்
'நகுலனின் உடல் அநாதையாய் ஆஸ்பத்திரி சவச்சாலையில் இப்ப கிடக்கும் .....உடலில்லாமல் கிளிநொச்சியில் செத்தவீடு நடக்கும்'
எனச் சித்திரிக்கப்பட்டிருக்கும்.
தாட்சாயணியின் சிறுகதையில் தங்கையான போராளி இறந்த தகவல் பத்திரிகை மூலம் தெரிய வருகிறது. தேவ முகுந்தனின் கதையில் தம்பியான போராளி இறந்த தகவல் தொலைபேசி மூலம் தெரியவருவதும் குறிப்பிடத்தக்கது.
மரநாய்கள் சிறுகதையை பொறுத்த வரையில் ஈழத்துச் சிறுகதைகளில் ஒப்பீட்டளவில இந்திய இராணுவத்தினர் குறித்த பதிவுகள் வெளிவந்தது குறைவு எனலாம்.பதிவு என்ற வகையில் எஸ் .எம்.கோபாலரத்தினம் எழுதிய 'ஈழ மண்ணில் ஓர் இந்தியச்சிறை' நூலையும், நாவல் என்று பார்க்கையில் சயந்தனின் 'ஆறாவடு' அதனை ஓரளவு சிறப்பாக நிறைவேற்றி இருந்தது எனலாம்.சிறுகதைகளில் தணிகாசலம் எழுதிய 'சுதந்திரம்' சந்திரா தனபாலசிங்கம் எழுதிய 'இயன்றால் நகுக' சிறுகதைகளையும் சுட்டிக்காட்டலாம்.
'மரநாய்' சிறுகதையில்
'தோட்டத்தின் பின்புற மிருந்து இராணுவத்தினர் வந்து கொண்டிருந்தனர்.தலைப்பாகை அணிந்திருந்த ஒருவன் இவனது தோளில் கையை வைத்து தம்பி என்று விட்டுச் சென்றான்' என்ற சித்திரிப்பே அவர்கள் எந்த இராணுவத்தினர் என்பதை இலகுவாக உணர்த்தி விடுகிறது. அத்தோடு இந்திய இராணுவத்தினர் பற்றிய பதிவுகளை ஏனைய மாவட்டங்களை விட அவர்களால் அதிகம் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த எழுத்தாளர்களாலேயே சிறப்பாக எழுத முடியும்.
சின்ன மாமா சிறுகதை எழுத்தாளர் ஒருவர் மீது ஏற்பட்ட கடுஞ்சீற்றத்தில் எழுதப்பட்டிருந்தாலும் தனிப்பட்ட வக்கிரத்தை பிரதி பலிக்காமல் அறம் சார்ந்த நிலைப்பாட்டுணர்வுடன் எழுதப்பட்டிருப்பது சிறப்புக்குரியது.சாதியம் பற்றி தேவ முகுந்தன் எழுதிய கதையாகவும் இதனை கருதிக் கொள்ளலாம்.இன்று யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர்களும் யாழ்ப்பாணத்தில் பிறந்து வேறு இடத்தை வசிப்பிடமாக கொண்ட எழுத்தாளர்களும் ஒரு சிறுகதை தொகுதியை வெளியிட்டால் கட்டாயம் அதில் ஒரு சிறுகதையாவது சாதியம் பற்றியதாக இருக்கும்.சாதியத்தை மட்டும் வெளிப்படுத்துகின்ற தொகுதியை வெளியிட்ட எழுத்தாளர்களும் இருக்கின்றனர்.யாழ்ப்பாணம் இன்னமும் முற்றுமுழுதாக சாதியின் கரங்களில் இருந்து விடுபடாத நிலையில் அத்தகைய கதைகளின் வருகையையும் குறை சொல்ல முடியவில்லை. அந்த வகையில் வாழ்க்கையின் முதல் இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தை யாழ்ப்பாணத்தில் கழித்த தேவ முகுந்தனது சிறுகதைகளில்
1. தன் மகன் வேறு சாதிக்குள் திருமணம் புரிவதை அவர் வெறுத்தார்.
2. அத்தைக்குத் தாங்கள் உயர்ந்த சாதியென்ற நினைப்பு இருப்பதாகவும் அவர் தான் சின்னமாமாவை ஊர்ப்பக்கம் விடுவதில்லை எனவும் அதனாற் தான் சின்னமாமா அக்காலங்களில் சாதி ஒழிப்புச் சம்பந்தமாக நிறையச் சிறுகதைகளையும் குறுநாவல்களையும் பத்திரிகைகளில் எழுதிக் குவித்தார் போலும்
என்ற இரண்டு குறிப்புக்களை தவிர சாதி பற்றி வேறு எந்தவிதமான சித்திரிப்பும் இல்லை.அந்தவகையில் கூட இச்சிறுகதைத்தொகுதி ஏனைய சிறுகதை தொகுதிகளில் இருந்து வேறுபடுகிறது எனலாம்.
இத்தொகுதியின் சிறப்புக்கள் குறித்த ஒரு பார்வையை இதுவரை பார்த்தோம்.இருப்பினும் 'வழிகாட்டிகள்' என்ற சிறுகதையில் விமர்சகர்கள் குறித்து தேவ முகுந்தன் குறிப்பிடுவதை பாருங்கள். 'இலக்கிய விமர்சன கூட்டங்களை பாராட்டுக் கூட்டங்களாக மாற்றியமைக்கும் விமர்சகர்கள் போல' என்று வரும் வரிகளுக்கு விதிவிலக்காகவேனும் ஓரிரு குறைபாடுகளை சொல்லலாம் என எண்ணுகின்றேன்.
இத்தொகுதியில் உள்ள கூட்டத்தில் ஒருவன் கதை 'ஞானம்' இதழில் வெளிவந்தபோது அந்தக்கதையின் தொடக்கம்
'மேல்வானம் சிவந்திருந்தது. கதிரவன் கடலினுள் துயில் கொள்ளச் சென்று கொண்டிருந்தான். கதிரவனும் களைத்து விட்டானோ? உழைத்து களைத்த மக்களை சுமந்த வண்ணம் பம்பலப்பிட்டி பக்கமிருந்து வந்த ரயில்கள் வெள்ளவத்தை ஸ்ரேசனில் சிறிது ஓய்வெடுத்து பின் தெகிவளை பக்கமாய் விரைந்தன.தொலைவில் நகர்ந்து கொண்டிருந்த கப்பல்களின் வெளிச்சங்கள் இலேசாய் தெரியவாரம்பித்தன'என ஆரம்பித்திருந்தது.
ஆனால் இச்சிறுகதை தொகுப்பில் அமைந்துள்ள மேற்படி 'கூட்டத்தில் ஒருவன்' சிறுகதையில் எவ்விதத்திலும் அவசிமற்ற இம்முதல்பந்தி இடம்பெறாமலே கதை தொடங்குகின்றது.இது தேவ முகுந்தன் தன்னை சுயமதிப்பீட்டுக்கு உட்படுத்தியதற்கு கிடைத்த வெற்றியே எனலாம்.
ஆனாலும் அதேபோன்று 'இரட்டைக் கோபுரம்' சிறுகதையின் ஆரம்பத்திலும்
'நெடுஞ்சாலையின் இருபுறத்தேயும் தெரிந்த செம்பனைத் தோட்டங்களில் பனிப்புகார் விலகியிருக்கவில்லை. தூரத்தே மலைமுகட்டுக்கு மேலால் கூரியன் மெதுவாக எட்டிப்பார்த்தான்'
என்று வருகின்ற வர்ணனைகளையும் நீக்கியிருந்தால் சிறுகதை இன்னும் கட்டிறுக்கமாக அமைந்திருக்கும்.
இவ்விடத்தில் ஒருமுறை நீலபத்மநாதன்; 'சிறுகதைகளில் வார்த்தை தெரிவு என்பது சீட்டுக்கட்டுக்களால் கட்டப்படும் கோபுரத்தில் ஒருசீட்டை எடுத்தால் எவ்வாறு ஒட்டுமொத்தமும் வீழ்ந்து விடுகிறதோ அதுபோல ஒரு வார்த்தையை நீக்கினாலும் முழுச்சிறுகதையின் கட்டமைப்பும் குலைந்து விட வேண்டும்' என்று கூறியது நினைவிற்கு வருகின்றது.
புதுமைப்பித்தன் எழுதிய நீண்டகதையான 'துன்பக்கேணி' சிறுகதை செம்பதிப்பாக வெளிவந்த போது 26 பக்கங்களில் அமைந்திருந்ததை நாம் தெரிந்திருந்தாலும் தேவ முகுந்தனின் 'இவன்' என்ற சிறுகதை வேலையற்ற பட்டதாரி ஒருவனின் மன அவசத்தை சிறப்புற வெளிப்படுத்தி இருந்தது. இருப்பினும் இதில் வரும் அளவுக்கதிகமான சம்பவங்கள் கதையை நீர்த்துப் போகச் செய்வதாகவே எனக்குப் படுகின்றது.இக்கதையில் வரும் ஓரிரு சம்பவங்களை நீக்கினாலும் கதையின் மையக்கருத்திற்கு எந்தவித பாதிப்பும் வராது என்றே நம்புகின்றேன்.
'கண்ணீரினூடே தெரியும் வீதி' சிறுகதையில்
1. '1995 ஐப்பசி வரையும் எனது குடும்பத்தின் முகவரி யாழ்ப்பாணமாய் தான் இருந்தது.1996 வரை சாவகச்சேரி ஆயிற்று.பின் அது உருத்திரபுரம், மல்லாவி என்று கிளிநொச்சிக்குள் நகர்கின்றது' என்ற சித்திரிப்பிலும்
2. 'அனுப்புபவரின் முகவரியில் அம்மாவின் பெயர் எழுதப்பட்டு 455, மல்லாவி, கிளிநொச்சி என்றிருந்ததால் ஸ்ரேசன் றோட் வீட்டை விட்டு எழும்ப வேண்டியதாயிற்று' என்ற சித்திரிப்பிலும்
முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் வருகின்ற மல்லாவியை கவனக்குறைவால் கிளிநொச்சி மாவட்டத்துக்குள் இரண்டு தடவைகள் தவறாக உள்ளடக்கி விட்டார்.
பேராசிரியர் எம்.ஏ.நு மான் எழுதிய பின்னுரையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நான்கு வசனங்களே புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பாக அமைந்துள்ள போதிலும் 'குறுகிய காலத்தில் குறைவாக எழுதினாலும் புதிய தலைமுறையை சேர்ந்த இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளுள் குறிப்பிடத் தகுந்த ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இவர் என்பதை இத்தொகுதி உறுதிப்படுத்துகின்றது' என்ற முதல் வசனமும் 'புதிய தலைமுறையை சேர்ந்த எழுத்தாளர்களுள் தேவமுகுந்தனும் முக்கிய இடம் பெறுகிறார் என்பதில் ஐயமில்லை' என்ற கடைசி வசனமும் கூறியது கூறலாகவே காணப்படுவதனால் கடைசி வசனத்தை நீக்கி இருக்கலாமோ எனவும் எண்ணத் தோன்றுகின்றது.
எனவே இனிவரும் படைப்புகளில் தேவ முகுந்தன் புதிய களங்களையும் மரபு நிலைப்பட்ட எடுத்துரைப்பு முறையில் இருந்து சற்று விலகி புதிய உத்தி முறைகளை கையாண்டு படைப்புகளை படைக்கும் பொழுது அது தேவ முகுந்தனின் கதைகளை பிறிதொரு தளத்திற்கு இட்டுச் செல்லும் என நம்பலாம்.
No comments:
Post a Comment