கருதியல்களின் இணைப்பு: தேவ முகுந்தன் சிறுகதைகளை முன்னிறுத்தி ஒரு தேடல்
தேவ முகுந்தனின் "கண்ணீரினூடே தெரியும் வீதி..."

சிறுகதைத்தொகுதியைப் படித்துக்கொண்டிருந்தபோது முகநூலில் ஒரு விவாதம் போய்க்கொண்டிருந்தது. ஒரு மையச் சரடு சார்ந்து பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன. கன்னட இலக்கியச் சூழல் மார்க்சிய-காந்திய இணைப்புடனான யு.ஆர்.அனந்தமூர்த்தியைத் தந்ததுபோல டானியல் அமைய இயலாமல் போனது அன்றைய விமர்சன-கருத்தியல் வடிவப்படுத்தலை மேற்கொண்ட கைலாசபதி இழைத்த தவறா என்பது மையச்சரடாக அமைந்த பேசுபொருள். கருத்தியல் தளத்தில் திறனாய்வுப் பங்களிப்பினூடாக செயற்பட்ட கைலாசை இலக்கியப் பங்களிப்பு என்கிற வகையில் நெருக்கம்கொண்டிருந்த அளவைக் காட்டிலும் சாதியத் தகர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த கொம்யூனிஸ்ட் கட்சித் தளத்தோடான நெருக்கம் டானியலுக்கு அதிகமாயிருந்தது. அதன் காரணமாக அரசியல்வாடை அவர் படைப்புகளில் முனைப்பாகி இருந்தது; அதை மட்டுப்படுத்தி, இலக்கியத் தளம் என்ற புரிதலை உணர்த்தத் தவறி அழகியலற்ற ஆக்கத்தை வழங்கியதை அங்கீகரித்த தவறை கைலாஸ் செய்தார் என்பதே குற்றச்சாட்டு.
அரசியல் இலக்கியம் என்கிற வகைப்பாட்டை ஆரோக்கியமானதாக வளர்த்தெடுக்க கைலாசபதி, ஏ.ஜே.கனகரத்னா, சிவத்தம்பி, ஏச்.எம்.பி.மொஹிதீன் எனப்பலர் அன்று விமர்சன-கருத்தியல் தளத்தில் இயங்கினர்(அனைவரது செயற்பாட்டுக்குமான குறியீடாக 'கைலாஸ்' அங்கே கொள்ளப்பட்டிருந்தார்). அதன் பேறாக டானியல் உட்பட பலரும் ஆக்க இலக்கியத்தில் செயலாற்றி வலுவான படைப்புகளை வழங்கினர்(அவர்கள் அனைவரதும் குறியீடாக 'டானியல்' கொள்ளப்பட்டிருந்தார்). அவற்றை நிராகரிக்க இயலாது என்பதை ஏற்று, வாழ்க்கை சார்ந்த இன்னும் பரந்த பார்வையுடனான கருத்தியல்களுடன் அந்தப்படைப்புகள் வெளிப்பட்டிருக்கவேண்டும் என்ற ஆதங்கமே அந்த விவாதத்தில் முனைப்பாகியிருந்தது.
இலக்கிய, அரசியல் தளங்களில் விவாதப் பொருள்களாயிருந்த பேசுபொருட்களையும் மீறி டானியல் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் படைப்பாக்கியிருந்தார். அது படைப்பாளிக்குரிய ஆளுமை. இலக்கியத் தளத்தில் செயற்பட்ட விமர்சகர்கள் அதன் அழகியல் பரிமாணம் குறித்து பேச இயலும் என்கிற வகையில் "தமிழ் இலக்கியத்துக்கு புதிய மைல்கல் டானியலின் 'பஞ்சமர்' நாவல்" எனக் கூறி வரவேற்பைக்காட்டும் கைங்கரியத்தையே செய்யவியலும் என்கிறவகையில் கைலாஸ் அப்பணியைச் சிறப்பாகச் செய்திருந்தார். அவ்வாறே அரசியல் தளத்தில் செயற்பட்டவர்கள் சாதிவாதப் பார்வை மேலோங்கியிருந்ததை வெளிப்படுத்தவேண்டியிருந்தது; அதன்பேறாக "கானல்" போன்ற இறுதி நாவலில் மார்க்சியப் பார்வையை அதிகம் வரித்து ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வைப் படைக்க அவருக்கு இயலுமாயிற்று.
எமது சூழலில் காந்தியத்தை நிராகரித்து மார்க்சிய வழியில் சாதித்தகர்ப்புப் போராட்டம் "தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தால்" முன்னெடுக்கப்பட்ட உச்சநிலையில் செயற்பட்ட அனுபவங்களை உள்வாங்கியபடி அத்தளங்களில் இயங்கிய மக்களின் வாழ்வைப் படைப்பாக்க முனைகையில், காந்தியம் நிராகரிப்புக்குரிய கருத்தியலாக டானியலுக்கு இருந்தமை புரிந்துகொள்ளத்தக்கதே. இதே போன்றே மராட்டியச் சூழலில் தலித் இலக்கியம் எழுபதுகளில் முனைப்படைந்தபோது (அதற்கான வேர் முன்னதாக வெளிப்பட்ட நாளிலிருந்து) மார்க்சியம் அங்கே சாதித் தகர்ப்புப் பணியை மேற்கொள்ளாமையால் மார்க்சிய நிராகரிப்பு அங்கே தலித் இலக்கிய கர்த்தாக்களிடம் இருந்தது. ஒடுக்கப்பட்ட(தலித்) மக்களின் தலைவராக இயங்கிய அம்பேத்கரை ஏற்காமல், 'இந்துக்களாக' உள்ள அந்த 'ஹரிஜன' மக்களுக்கும் தானே ஏகப்பிரதிநிதி எனக் காந்தி செயற்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை இயக்கத்துக்குப் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தினார் என்கிறவகையில் காந்தியின் கருத்தியலையும் தலித் இலக்கிய கர்த்தாக்கள் நிராகரித்து வந்தனர். இன்று தலித் இலக்கிய வளர்ச்சிப்போக்கின் பல்வேறு இயக்கப்போக்குகள் மக்களின் விடுதலைக்கு போதிய பங்களிப்பை நல்கத் தவறிய நிலையில், அது அம்பேத்கர் சிந்தனையுடன் மார்க்சியம், காந்தியத்தையும் உள்வாங்குவது அவசியம் என்பது பேசப்படுகிறது(இவ்வகையில் சரண்குமார் லிம்பாலேயின் "தலித் இலக்கியம் விடுதலையின் திசைகள்" எனும் நூல் கவனிப்புக்குரியது).
எமது மார்க்சிய இலக்கிய வளர்ச்சியும் இன்றைய கட்ட கருத்தியல்களாயுள்ள பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தியம் என்பவற்றை உள்வாங்கியவாறு தனது பார்வை வீச்சை விசாலப்படுத்தி வருகிறது. அதைவிடவும் எமக்கான சாதியச் சமூக அமைப்பின் பிரத்தியேகத் தன்மைக்கு அமைவாக மார்க்சிய உலக நோக்கை எவ்வகையில் வளர்த்தெடுத்துப் பிரயோகிப்பது என்பது குறித்த விவாதம் மார்க்சியக் கருத்தியலை மேலும் ஆழப்படுத்தியிருக்கும் கட்டத்தையும் அடைந்துள்ளோம். முற்போக்கு இலக்கிய இயக்கம் ஐம்பதுகளில் தொடங்கி மூன்று தசாப்தங்கள் வீறுடன் செயற்பட்ட அனுபவ அறுவடையாக, பின்னரான மார்க்சியக் கருத்தியல் விவாத வளர்ச்சி இன்றைய விருத்தியைப்பெற்றுள்ளது. இத்தகைய புதிய கருத்தியல் தளத்தில் இருந்தவாறாக தேவ முகுந்தனின் சிறுகதைகளை அலசுவோம்.
-1-
முன்னதாக தேவமுகுந்தன் மார்க்சிய இலக்கியத் தளத்தைக் குறித்த எந்த அபிப்பிராயத்தையும் வெளிப்படுத்தி தனது ஆக்க இலக்கியப் பணியை மேற்கொள்ளவில்லை என்பதைக் குறிப்பிடுவது அவசியம். மேலே வலியுறுத்திய விடயம் இன்றைய இணைப்புக் கருத்தியல் என்பது மார்க்சிய அழகியல் விருத்தி தொடர்பாக முன்வைக்கப்பட்டது மட்டுமே. மார்க்சிய இலக்கியம் என்பது முற்போக்கு இயக்கத்தின் வெளிப்பாடாக படைப்பாக்கப்பட்ட எண்பதுகள் வரையானவற்றில் அழகியலே இல்லை என்றவர்கள் இன்று தமது நிராகரிப்பை வாபஸ்வாங்குவது கவனிப்புக்குரியது. அதற்காக, அழகியலை முன்னிறுத்தியவர்களதும் முற்போக்காளர்களதும் தளம் ஓரே இடத்தை நெருங்கிவிட்டது என்று கூறவரவில்லை. தவறான புரிந்துணர்வுகளைக் கூடியவரை களைந்துகொண்டு ஐக்கியப்பட்டு செயலாற்ற ஒரு வெளி ஏற்பட்டுவருவதை அவதானிக்க இயலும். இதனைக் காட்டும் படைப்பாக "கண்ணீரினூடே தெரியும் வீதி..." தொகுதியைக் கொள்ள இயலும்.
"சிறுகதைகளின் மூலம் நான் புதிதாக எதனையும் கூற முற்படவில்லை. என்னைப் பாதித்த அனுபவங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தச் சிறுகதைகளை எழுதினேன்" என என்னுரையில் கூறும் ஆசிரியரை இலகுவில் புரிந்துகொண்டுவிடுகிறோம். புதுமைப்பித்தன் இதே போன்று தனது படைப்புகள் அப்படியொன்றும் சமூக விமோசனத்துக்கானது அல்ல என்று கூறியதன் அடிப்படை குறித்து ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது. அழகியல் வாதத்துக்கான ஒரு முன்னோட்ட பிரகடனம் இது. சமூக மாற்றத்துக்கானது இலக்கியம் என்ற பிரக்ஞ்சையுடன் படைக்கிறோம் என்கிற முற்போக்கு இலக்கியகர்த்தாக்களின் வாழ்க்கை அனுபவ வெளிப்பாட்டில், சமூக மாற்றத்துக்கான அவசியம் சார்ந்த அம்சங்கள் வடிகட்டப்பட்டதாய் படைப்பாக்கம் அமைகிறபோது உண்மைத்தன்மை அற்றுப்போகிறது என்பது அழகியலாளர்களின் குற்றச்சாட்டாகிறது. இவ்வாறு கோட்பாட்டை முன்னிறுத்துவது அழகியலுக்கு கேடானது என்பது அவர்கள் கருத்து. கோட்பாட்டை நிராகரிக்கும் அவர்களது அனுபவவாதப் படைப்புகள் சமூக மாற்றத்துக்கு விரோதமாகி, பிற்போக்குவாதிகளுக்கு உதவுகிறது என்பது முற்போக்காளர்களின் குற்றச்சாட்டு.
அழகியல்வாதப் படைப்புகள் அனைத்துமே பிற்போக்குப் பண்புக்குரியன அல்ல என்பது போலவே, முற்போக்குப் படைப்பாளர்கள் அனைவருமே முற்போக்கான சமூக மாற்றத்துக்கு உரியவர்களாக இல்லை என்கிற உண்மையையும் மறுத்துவிட இயலாது. தேவமுகுந்தன் முற்போக்கு அணி மீது நம்பிக்கைகொள்ள முடியாத ஒரு படைப்பாளியைத் தனது ஊரிலே அடையாளம் காண்கிறார். " 'சின்ன' மாமா" என்கிற கதையில், கதைசொல்லியின் மாமாவாக அந்த முற்போக்குப் படைப்பாளி காட்டப்படுகிறார். அந்த மாமா தனது அண்ணாக்கள் அக்கா(கதைசொல்லியின் அம்மா) ஆகியோரைச் சுரண்டி வாழ்வில் உயர்ந்து பெரும் அதிகாரியாகி, வசதியான இடத்தில் திருமணம் செய்ததோடு பெற்றவர்களையும் சகோதரர்களையும் மறந்துவிட்டவர். பணியிடத்தில் ஊழல் செய்து வேலையை இழந்து, முழுநேர எழுத்தாளாராக எழுதிக்குவித்து சம்பாதித்தவர். அவரது வாழ்க்கை குறித்து என்ன விமர்சனம் இருந்தாலும் அவரது படைப்புகள் உன்னதமானவை என அவரது மறைவையொட்டி அஞ்சலிக்கூட்டத்தில் பேசப்படுவதைக் கதைசொல்லி கேட்கிறான். முடிவாக, சமைப்பவர்களின் நோய் உண்பவர்களைத் தாக்க இடமுள்ளது என்பதைக் காட்டி, படைப்பாளியைப் பார்க்காமல் படைப்பை அணுகவேண்டும் என்ற கோட்பாட்டின் தவறு உணர்த்தப்படும்.
இதுகுறித்து முற்போக்கு இலக்கியகர்த்தாக்களிடமும் விவாதம் இருந்தது. தனது வாழ்வுக்கு எவ்வளவுக்கு விசுவாசமாக உள்ளாரோ அந்த அளவுக்கே அவரது படைப்பும் காத்திரமானதாக மட்டுமன்றி உண்மைத்தன்மையானதாகவும் இருக்கவியலும். டானியலின் படைப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை வெளிப்படுத்திய அற்புதமானவை எனக் கூறும்போதே, அவர் வலியுறுத்துகிறவாறாக மார்க்சிய நோக்கில் அவை அமைய இயலாத பலவீனத்தைக் கொண்டிருப்பதை முற்போக்கு விமர்சகர்கள் காட்டியுள்ளார்கள். அது ஒரு மார்க்சியராக வாழ இயலாத அவரது வாழ்முறை ஏற்படுத்திய பாதகம். அவ்வாறே 'சின்னமாமா' எந்த அளவுக்கு முற்போக்கு குணாம்சங்களைக் கொண்டிருந்தாரோ (அவரது தவறுகள் பலவீனங்களோடு இதுவும் கூடவே இருந்த அம்சம் என்பதை மறுக்க இயலாது) அந்த அளவுக்கு அவரது படைப்புகளில் காத்திரத்தன்மையும் முற்போக்கு அழகியலும் இருந்தது. ஈழத் தமிழ்ப் படைப்புலகில் அவர் நிராகரிக்க முடியாத ஆளுமை.
அந்தச் சின்னமாமா சாதியத்தகர்ப்புப் போராட்டத்தை பற்றுறுதியுடன் ஆதரித்து, அதன் முன்னெடுப்புக்கு ஏற்றதாகப் படைப்பாக்கங்களை நல்கியதன் வாயிலாகவே இலக்கிய உலகின் கவனத்தை ஈர்த்தவர். அவரது தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இந்தப் பங்களிப்பைக் கவனிக்கவேண்டும் என்பதில்லை; விமர்சன அணுகுமுறையில் தவறுகளை வெளிப்படுத்தும் அதேவேளை அவரது காத்திரமான இருப்பு எந்தவகைக்குரியது என்பதையும் அடையாளம் காண வேண்டும். சாதித் தகர்ப்பு என்கிற பண்ணையடிமைத் தகர்ப்பை மேற்கொண்ட தேசியப்பணி முழு இலங்கையின் தேசபக்த ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்தியது என்கிறவகையில் இலங்கைத் தேசியத்தை முன்னிறுத்தியது. தமிழ்த் தேசியம் பேசியவர்கள் இந்திய(தமிழக) நெருக்கத்தை வெளிப்படுத்தும்போது, இலங்கைத் தேசியத்தை இரண்டாம் பட்சமாக(பின்னாலே பிரிவினையை முன்னிறுத்தி முற்றாக நிராகரிப்பவர்களாக) இருந்தார்கள். மட்டுமல்லாமல், சாதியத்தகர்ப்பு எனும் பண்ணையடிமைத்தன ஒழிப்பு என்கிற தேசியக் கடமைக்கு விரோதமாக இருந்தார்கள். முற்போக்காளரின் சாதித் தகர்ப்பு சார்ந்த இலக்கியப்பணியை ஏற்க இயலாத தமிழ்த்தேசிய ஆதரவு படைப்பாளர்கள் தவிர்க்க இயலாவகையில் அழகியல் வாதத்தை முன்னிறுத்தினர்.
பின்னாலே பேரினவாத அரச பயங்கரவாதம் கொலைவெறித்தாண்டவம் ஆடியபோது, அதனை இலக்கியப்படுத்தியவர்கள் முற்போக்கு அணியின் அனுபவத்தை உள்வாங்கி படைப்பாக்கியிருக்க வேண்டும். மாறாக முந்திய அழகியல்வாத தமிழ்த் தேசியப் படைப்பாளிகளை முன்மாதிரியாகக் கொண்டமையால் கோட்பாட்டுப் புரிதல்கொள்ளாமலே படைப்பு முயற்சியில் இறங்கினர். தமிழ்த் தேசியம் பேரினவாத அரசோடு கொண்டிருக்கும் முரண்பாட்டைத் தீர்ப்பதை முதல்நிலையாகக் கொண்டிருப்பின் முற்போக்கான சிங்கள மக்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அரசியல் சக்திகளோடு ஐக்கியப்படுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவ்வாறில்லாதது மட்டுமன்றி, மற்றொரு தேசிய இனமான முஸ்லிம் மக்களையும் எதிர்நிலைக்கு தள்ளியதோடு இந்திய மேலாதிக்கத்துக்கு இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு உதவும் அரசியலே முன்னெடுக்கப்பட்டது (அடிப்படையில் முப்பது வருட யுத்தம் இந்தியா இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்துக்குரியது. அது நிறைவாகியபோதிலும், இன்னும் தேவைப்படலாம் என்பதால் இனப்பிரச்சனை தீர்க்கப்படாமலே யுத்தம் முடிவு பெற்றுள்ளது. யுத்த வெற்றிக்கு வேறு வழியின்றி, இந்தியக் கோரிக்கைகள் அனைத்துக்கும் பணிந்து அடிமைச்சாசனத்தில் ஒப்பமிட்ட பேரினவாத சக்தி அதனை மீறும்போது ஒப்பந்தத்தை முன்னிறுத்தி மட்டுமன்றி, தமிழருக்காகவும் தலையிட இந்தியாவுக்கான வெளி உள்ளது. கடந்துபோன கசப்பான அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளாமல் தமிழ்த் தேசியம் இன்னும் அதே தவறான பாதையிலேயே பயணிக்கிறது என்பது தொடரும் துன்பியல்).
இதன் பாதகத்தை உணரும் இடத்தில் தேவமுகுந்தன் உள்ளார் என்பது கவனிப்புக்குரியது. "கண்களினூடே தெரியும் வீதி..." எனும் தலைப்புக்கதை அதனை உணர்த்துவதாக உள்ளது. யுத்த அகோரத்தில் சைரண் ஒலியோடு இராணுவ உடல்களை ஏந்திச் செல்லும் அம்புலன்சுகளின் ஓட்டங்கள் கண்டு கலங்கிக்கொண்டிருந்தவனுக்கு, கொழும்பில் தன்னைப் பாதிக்குமோ என்பதற்கு அப்பால், களத்தில் தனது தம்பி மடிந்த செய்தி வருகிறது. அதேவேளை பக்கத்து வீட்டில் இறந்த சிங்கள இராணுவத்தின் உடல் வருவதை அறிகிறபோது கண்ணீரூடே தெரியும் வீதியை வெறித்தபடி அந்த சிங்கள வீரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் செல்லும் முடிவை எடுக்கிறான். இந்த உணர்வு வளர்த்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். "ஒரு சுதந்திர நாள்" கந்தசாமியைவிட சிங்கள நண்பர்கள் உதவும் சந்தர்ப்பம் இந்தத் தலைப்புக்குரிய கதையில் காட்டப்பட்ட போதிலும், கந்தசாமி தமிழ் இளைஞனிலிருந்து ஒதுங்கியிருப்பதற்கான காரணம் 'தமிழன்' என்ற பாதுகாப்பற்ற உணர்வு சார்ந்தது. "வழிகாட்டிகள்..." கதையில் கல்விப் பிரயோக உயர் நிறுவனத்தில் தமிழ் உயர் பதவிவகிப்போர் முன்வைக்கும் கோரிக்கைகள் மோசமான சுயநலம் சார்ந்திருப்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுக்கு அப்பால் ஏனைய கதைகளில் தமது சுயநலத்தை முன்னிறுத்தும் தமிழ்த் தேசியத் தலைவர்களுக்கு உதவும் கண்ணோட்டமே வெளிப்படுகிறது. மேலேசென்று தேசிய இனப்பிரச்சினைத்தீர்வுக்கு வழிதேட ஆற்றுப்படுத்தும் நாட்டத்தை ஏற்படுத்தக்கூடிய கதைகளாக அமையத் தவறுகின்றன. சிங்களத் தரப்பு செய்கிற ஒவ்வொன்றிலும் இனவாதத்தைக் காணும்போது எம்மத்தியில் இனவாதம் மக்கள்விடுதலைக்கு மாறான வகையில் அமைந்திருப்பது கண்டுகொள்ளாமலே விடப்படுகிறது. பின்னுரையில் நூஃமான் குறிப்பிடுவதுபோல, "எனினும், விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் விடுதலை இயக்கங்கள் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளையும், கொலைகளையும், பயங்கரவாதத்தையும் அதன் விளைவுகளையும் பற்றிப் பேசாத இலக்கியம் ஒருபக்கச் சார்பானது என்பதையும் நாம் அழுத்திக் கூற வேண்டும்".
இவ்வாறு கூறுகின்ற நூஃமான் தலைப்புக்கதையான "கண்ணீரினூடே தெரியும் வீதி..." பற்றிக்கூறும் கருத்து அழுத்த அவசியமுடையது. "கடந்த முப்பது ஆண்டுகளில் இனமோதல், யுத்த அனுபவங்களைக் கருவாகக்கொண்டு எழுதப்பட்ட சில சிறந்த சிறுகதைகளுள் இதுவும் ஒன்று என்பது என் கணிப்பு. சிங்களவர், தமிழர் என்ற பேதம் இன்றி யுத்த அவலம் எல்லோர்மீதும் கவிந்திருப்பதை எவ்வித பாசாங்கும் இன்றி இக்கதை யதார்த்தமாகச் சொல்கிறது. இத்தொகுப்பிலுள்ள தேவ முகுந்தனின் மிகச் சிறந்த கதை என்றும் நான் இதைத்தான் சொல்லுவேன். இன முரண்பாட்டுக் காலகட்டத்தில் ஒரு எழுத்தாளனிடம் நாம் எதிர்பார்க்கக்கூடிய அறம் இக்கதையில் பிரகாசமாகத் தெரிகிறது. 'சிவா', 'இடைவெளி', இரட்டைக் கோபுரம்' போன்ற கதைகளில் வெளிப்படையாகத் தெரியும் சிங்களவர்களைப்பற்றிய ஒரு எதிர்மறைப் பார்வை இக்கதையில் இல்லை என்பது எனக்கு மிகுந்த ஆறுதல் தருகின்றது" என்பார் நுஃமான்.
-2-
ஒரு படைப்பாளி வெறும் அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கு அப்பால் சொல்வதற்கு ஒன்றுமில்லை என வாழாதிருந்துவிட முடியாது. வெறும் இனவாதத்துக்குத் தீனிபோடும் அனுபவங்கள் ஏராளமாக உள்ளன. அதைக் கடந்து விடுதலைக்கு எது உதவும், எப்படி உதவ ஏற்றதாக வெளிப்படுத்த வேண்டும் என அனுபவங்களை வகைப்படுத்த-வடிவப்படுத்த ஏற்ற கருத்தியல் தெளிவு படைப்பாளிக்கு அவசியம்.
சிங்களப் பேரினவாதம் ஏனைய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்க முனைந்து சிங்கள மக்களது சுயாதிபத்தியத்தையும் இந்திய மேலாதிக்கத்திடம் தாரை வார்த்துள்ளது. இது சிங்கள உழைக்கும் மக்களுக்கு கேடாயினும் பேரினவாதக் கொள்ளைக் கும்பல் இந்திய மேலாதிக்க சுரண்டலாளர்களுடன் இணைந்து சிங்கள மக்களையும் சூறையாடத் தடை ஏதுமில்லை. எம்மை ஆக்கிரமித்ததாலே இந்தியாவில் இந்திய உழைக்கும் மக்களுக்கு விமோசனம் ஏதும் கிட்டிவிடவும் இல்லை. ஆதிக்கசாதி - சுரண்டும் வர்க்கங்கள் எனும் கொடுமைக்குள் உழன்றவாறேதான் இந்திய உழைக்கும் மக்களின் வாழ்க்கையும். அந்தவகையில் சமூகவர்க்கமாக ஒடுக்கலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும் அனைத்து தேசிய இனங்களும் சாதிகளும் பாட்டாளி வர்க்கச் சிந்தனையில் அணிதிரண்டு மேலாதிக்க - சுரண்டும் தேசிய-சாதி-வர்க்க சக்திகளுக்கு எதிராக அணிதிரண்டாக வேண்டும். இது புரிதலுக்கு மட்டுமன்றிப் பிரயோகிப்பதற்கும் கடினமான பணி என்ற போதிலும், விடுதலையைச் சாத்தியமாக்க ஏற்ற ஓரே வழி இது மட்டுமே. இது சார்ந்த கருத்தியல் தெளிவோடு படைப்பாளி தனது வெளிப்பாடுகளை வழங்க முன்வரவேண்டும்.
இத்தகைய கருத்தியல் தெளிவை முழுமையாகக் கொண்ட ஆளுமைக்கு எம்மிடம் உதாரணமுண்டு. பாரதி வறுமையை ஒழிப்பது, பெண்விடுதலை, சாதித் தகர்ப்பு, தமிழினத் தேசிய விழிப்புணர்வு, இந்தியத் தேசிய விடுதலை, உலகளாவிய மனுக்குல விடுதலை என விசாலித்த கருத்தியல் வீச்சைக் கொண்டிருந்தவர். அதனாலேயே கத்தும் கடலையும், மலையையும், காக்கைக் குருவியையும் தன் கூட்டமாகவும் சாதியாகவும் பாரதியால் காண முடிந்தது. அவரது அந்தப் பார்வைவீச்சு எங்களுக்கு அமையவில்லையே என பார்திதாசன் அங்கலாய்த்ததாக அறிகிறோம் (அரங்கப் பேச்சொன்றில் நூஃமான் கூறியது. தனது நண்பரான ஈழக் கவி ஒருவர் பாரதிதாசனுக்கு நெருக்கமானவர்; தனிக் கலந்துரையாடலில் இப்படி பாரதிதாசன் கூறி வியந்தார் என அந்த நண்பர் சொன்னார் என்பதாக).
இன்று இன்னும் அதிகமாக விசாலித்த பார்வையை வரிக்க உதவுவதாக மார்க்சியம் உள்ளது. ஆயினும், மார்க்சியத்தை இயங்கியல்-பொருள்முதல்வாதமாக புரிதல் கொள்ளாமல், வறட்டுச்சூத்திரமாக்கி வர்க்கப்பிளவுற்ற ஐரோப்பிய அனுபவங்களை அப்படியே பின்பற்றப்போய்த் தவறுகள் நேர்ந்துள்ளது. வர்க்கப்பிளவுறாது ஆதிக்கம் பெற்ற இனமரபுக்குழு சமூகவர்க்கமாய் ஏனையவற்றை வென்றடக்கி சுரண்டலை முன்னெடுத்த எமது சாதியச் சமூகம் இரட்டைத்தேசிய வாழ்முறையில் பெற்றுவந்த சமூக மாற்றங்கள் குறித்த விவாதம் எமக்கான மார்க்சியப் பிரயோகத்தை இனங்காட்டிவருகிறது. காந்தியின் பண்பாட்டியத்தை முன்னெடுக்கும் விடுதலை மார்க்கம், பெரியார் - அம்பேத்கர் ஆகியோரது எதிர்ப்பண்பாட்டியத்தின் ஒடுக்கப்பட்டோருக்கான எதிர்த்தேசிய விடுதலை என்பன முழுமையான விடுதலையைச் சாத்தியமாக்காது என்பதால் இரண்டிலுமான விடுதலைக் கூறுகளை உள்வாங்கிய புதியபண்பாட்டியத்தைப் பாட்டாளி வர்க்க சிந்தனை அடிப்படையில் மேற்கொள்ளும் அவசியம் உள்ளது. பாட்டாளி வர்க்க சிந்தனை முறை தமிழில் முழுமை பெறாத சூழலில்கூட பாரதியின் கருத்தியல் புதிய பண்பாட்டிய வடிவம் கொண்டிருந்தது என்பது கவனிப்புக்குரியது. சரியான மார்க்சிய நோக்கில்லாமல் பாரதியையும், எமது சமூகத்தையும் புரிந்துகொள்ள இயலாது.
ஆரம்பத்தில் குறித்த முகநூல் விவாதக் கருத்தொன்றோடு இந்தத் தேடலை தற்காலிகமாக நிறுத்தலாம். இந்தியாவில் சாதி எதிர்ப்பு உயர் சாதியினர் பண்பாட்டை ஒட்டுமொத்தமாக நிராகரித்தபோது, இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்சாதியினர் பண்பாட்டை தமக்கானதாக ஆக்கி இலக்கியம் சமைத்தனர் என்ற ஒரு பதிவு இடம்பெற்றிருந்தது. இந்தியாவில் வெறும் வர்க்கம் பற்றி மார்க்சியர்கள் அக்கறை கொண்டபோது சாதிய இழிவுகளுக்கு எதிரான போராட்டம் எதிர்த்தேசிய அணிகளால் முன்னெடுக்கப்பட்டன; மரபுப் பண்பாட்டை முற்றாக நிராகரித்து எதிர்ப்பண்பாட்டியத்தை அவர்கள் வரித்திருந்தனர். மாறாக, இலங்கையில் கொம்யூனிஸ்ட்டுகள் சாதித் தகர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தபோது இரண்டின் அவசியக்கூறுகளை இணைத்த புதியபண்பாட்டியத்தைக் கையேற்றிருந்தனர்; வெறும் உயர் சாதிப் பண்பட்டை அல்ல. இந்த புதிய பண்பாடு சார்ந்த கருத்தியல் இணைப்பு என்பது படைப்பு ஒன்றுக்கு மட்டுமன்றி, சமூகமாற்ற நோக்குக்கும் அமைவான விசாலித்த பார்வையை வழங்கும். தேவ முகுந்தன், யோ.கர்ணன், கருணை ரவி ஆகியோரது சிறுகதைகள் மிகுந்த நம்பிக்கையைத் தரும் அதேவேளை, இவர்கள் புதியபண்பாட்டியத்தை வரிக்கும்போது இன்னும் வலுவான படைப்புகளை எமக்குத் தருவர் எனும் நம்பிக்கையும் வலுக்கிறது. ஆம், நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்!