Friday, December 15, 2023

வி. அபிவர்ணா

"கண்ணீரினூடே தெரியும் வீதி"சிறுகதை பற்றிய எனது ஆய்வுரை ...........................................................................

காலச்சுவடு என்ற அச்சகம் பற்பல இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகளை வெளிக்கொண்டு வருவது நாம் கேள்விப்பட்ட விடயமாகும்.அந்த வகையில் திரு தேவமுகுந்தன் அவர்களின் பிரசவமாக "கண்ணீரினூடே தெரியும் வீதி "என்ற தொகுப்பானது தன்னகத்தே பத்து கிளைகளை உள்ளடக்கி 102பக்கங்களில் காலச்சுவடு அச்சகத்தின் வாயிலாக வெளிவந்தது. தேவராசா முகுந்தன் என்ற சொந்தப்பெயர் கொண்ட தேவமுகுந்தன் தன்னுடைய பெரும்பாலான கதையம்சங்களை நிர்மலன் என்ற புனைபெயரிலே வரைந்திருக்கின்றார்.இவர் யாழ் மண்ணை பிறப்பிடமாகக் கொண்டவர்.எனினும் கடந்த இருபது வருடங்களாக கொழும்பில் வாழ்ந்து வருகின்றார்.நம் தாய் நாடான இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தில் செயற்திட்ட அதிகாரியாக பணிபுரிந்து, தற்போது இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார். கதாசிரியர் அவர்கள் "கண்ணீரினூடே தெரியும் வீதி"இந்த சிறுகதைப்படைப்பினை 1997இல் தன்னுடைய இருபதாவது வயதில் மரணித்த அன்புச்சகோதரன் நிர்மலன் அவர்களுக்கு சமர்ப்பித்துள்ளார் என்பது நாமறிந்த உண்மை.

கதாசிரியர் அவர்கள் தன்னைப் பாதித்த விடயங்களை நிர்மலன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளாக தனதுரையில் எடுத்தியம்பியுள்ளார்.போர்க்கால நெருக்கடிக்குள் சிக்கி அவலப்படும் பல இடங்களிலும் தங்கியிருந்த பலரும் பொலிஸ் அத்தாட்சிப் பத்திரம், அடையாள அட்டை போன்றவற்றை சதாவும் தம்முடன் வைத்திருக்க வேண்டிய கட்டாய நிலை அன்று காணப்பட்டது.

அவ்வாறாக மக்களுக்கு ஏற்பட்ட சில அசௌகரியங்கள் இத்தொகுப்பின் ஊடாக மிகச்சிறப்பாக வடித்துள்ளார்.அது பற்றி பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள் பின்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 1980களுக்குப் பின்னரான இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பிரதான கருப்பொருள் இனமுரண்பாடும், யுத்த வடுக்களுமென்றால் மிகையல்ல.இன முரண்பாட்டால் பிளவுண்ட இலங்கையின் யுத்த சூழல் தனி மனிதர்களின் வாழ்வு, அவர்களின் உணர்வுகளை நடத்தையை எவ்வாறெல்லாம் பாதித்திருக்கும் என்பது தான் கடந்த முப்பதாண்டு காலப்பகுதியில் எழுந்த பெரும்பாலான படைப்புகள் பேசிநிற்கின்றன.

"கண்ணீரினூடே தெரியும் வீதி "என்ற சிறுகதையானது இலங்கையின் போர்க்காலத்தில் எங்கும் மரணங்கள் இரத்தப்போர்வைகள்,உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதவையாகும் என்பதை இப்படைப்பு வெளிப்படுத்தி நிற்கின்றது. தன்னுடைய சகோதரனின் மரணம் நிகழ்ந்திருக்கும் போது எதிர்வீட்டு சிங்கள இராணுவ சகோதரர்கள் இறந்த விடயத்தையும் மையப்படுத்தி இச்சிறுகதையை நகர்த்திச் செல்கின்றார்."வழிகாட்டிகள்"என்ற கதையினை அதிகாரிகளின் அசமந்தப்போக்கை படம்பிடித்து வெளிப்படுத்தியுள்ளார்.நிர்வாகம் நடைமுறைப்படுத்தும் போக்கையும் கூட்டங்களில் கலந்து கொண்டு தமக்குத்தான் எல்லாம் என்பதுபோல போக்காக நடப்பவர்களின் சாயம் வெளுக்கப்படுகின்றது.ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் புறூப் பார்த்து முடிக்காத இந்திரனும் இன்னும் வேலையிருப்பதாய் கூறுகின்றார்.இந்திரன்,அதற்கு அந்த அதிகாரி கூறும் பதில் இது,"அது அவசரமில்லை ஆறுதலாய்ச்செல்லுங்கோ".என்ர கடைசி மகன் ஆறாம் வகுப்பிலை இருக்கின்றான்.நீர் புறூப் பார்த்த பேப்பர்களை தந்தீர் என்றால் நான் அதைப் புத்தகமாய் கட்டிப்போட்டு அவனுக்கு படிப்பிச்சுப்போடுவன்"என்று அழகாக பதிவு செய்திருக்கின்றார்.

மேலும் இப்படைப்பை நோக்குமிடத்து "இடைவெளி "என்ற கதை இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நிலவிய சமாதான காலம் முடிவடைந்து குண்டுவெடிப்புகள் மீண்டும் ஆரம்பித்திருந்த காலப்பகுதியில் ,தலை நகரில்பெரும்பான்மை இனத்தவர்கள் பெரும்பான்மையாக. இருக்கின்ற. அலுவலகம் ஒன்றில் பணியாற்றுகின்றார் என்பது இச்சிறுகதைப்படைப்பின் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.

யுத்தநிலையானது எப்போதும் அடுத்தவர் மீதான தன்னம்பிக்கையை உருவாக்கின்றது.அதுவே இன விடுதலைப்போராகும் போது தவிர்க்கவே முடியாமல் இனங்களுக்கிடையிலான. ஒற்றுமையையும் ஒருமைப்பாடையும் சிதைவடைத்து விடுகின்றது. இப்படைப்பில் வருகின்ற ஜெகன் எனும் கதாபாத்திரங்களுக்கு தான் அலுவலகத்திற்கு சமூகமளிக்காத நாட்களில் கொழும்பில் குண்டு வெடிப்புகள் இடம்பெறுவதற்கான நிகழ்தகவு மிக உயர்வாக இருப்பதற்கான காரணம் என்னவென்பது புரியவேயில்லை.எழுமானமாய் நடக்கும் இந்நிகழ்வுகள் பற்றி ஆரம்பத்தில் பகிடியாக கதைக்க சிங்களவர்கள் மெல்ல மெல்ல கோபப்படவும் சந்தேகம் கொள்ளவும் தொடங்குகின்றார்கள்.லண்டனில் ஒரே அறையில் இரண்டு வருடம் தங்கியிருந்து நெருக்கமான நட்பு கொண்டிருந்த. விக்கிரம என்பவன் ஜெகன் லீவில் நிற்கும் நாட்களில் தனது பிள்ளை பள்ளிக்கூடம் செல்லாது நிறுத்தவேண்டும்.அப்பாத்திரம் பின்வருமாறு கூறுகின்றது.குறுந்தாடி வளர்த்து,பொதுவுடைமை பேசித்திரிந்த,புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான காலத்தில் A9பாதையூடாக செல்கையில்போரினால் அழிவடைந்த தமிழர்கிராமங்களைப் பார்த்து கண்கலங்கிய பிரேமசிறி என்பவன் ஜெகன் ஏன் அலுவலகத்திற்கு வரவில்லை என்பதை பொலிஸ்காரனின் தொனியுடன் கேள்வி தொடுக்கின்றான்.

ஏழு வருடகாலமாக தொடர்ந்துஅலுவலகத்தில் ஒன்றாக சிற்றுண்டி நிலையத்திற்குப் போய் "தேனீரும்அப்பமும் உண்டஜெகனுடன்நெருங்கிப் பழகியதன் காரணமாக அல்லது பெரிய மீசை வைத்திருந்ததாலோ அலுவலகத்திலிருந்த வேலைகளையும் பொருட்படுத்தாதது "தெமிளா"என்றுசெல்லமாக அழைக்கப்பட்ட ஜெயந்த என்பவர்கூட, இவன் வழமைப்போல சிற்றுண்டிச்சாலைக்குப்போக. அழைக்கின்ற போது "மறுதலிக்கின்றான்.

இந்த மூன்று கதாபாத்திரங்களும் ஜெகனுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என்பது ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்தப்படுகின்றது.ஆனால் கொழும்பு மாநகரில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற நாட்கள் சிலவற்றில் ஜெகனும் அலுவலகத்திற்கு வராமல் இருந்தான் என்ற காரணத்தால் அவர்கள் தமிழனான ஜெகனை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றார்கள்.

அந்த. இரண்டு குண்டு வெடிப்புகளுக்கு முன்பும் கூட நிலைமை சுமுகமாக அலுவலகத்தில் இருந்து தமிழருக்கான சம உரிமை நிலவியதாக அறியமுடிகின்றது.ஆனால் சமவுரிமை நிலவியது என்று கூற இயலாது.நலன்புரிச் சங்க பொதுக்கூட்டத்தில் கண்ணீரில் பத்திரிகை வாங்கும் போது ஒரு தமிழ் பத்திரிகையேனும் வாங்கும்படி வேண்டுகின்றார்.அதிலும் மூன்று சிங்கள பத்திரிகைகளை வாங்குகின்றனர் என்பது இக்கதையின் ஊடாகத் தெரிய வருகின்றது.அங்கு பணி புரிபவர்களில் 30சதவீதத்திற்கு அதிகமானவர்கள் தமிழர்களாக காணப்பட்டார்கள்.பத்திரிகைகளுக்காக பணம் அனைத்து ஊழியர்களிடம் இருந்து அறவிடப்பட்டது.ஆகவே தமிழ்ப் பத்திரிகைகளையும் வாங்கவேண்டும் என்பது தானே முறையென்பது ஜெகன் தரப்பு நியாயமாகக் காணப்பட்டது.ஆயினும் "தமிழர்ளுக்கு சிங்களமும் ஆங்கிலமும் தெரியும்"எனவே தமிழ்ப்பத்திரிகை வாங்குவது வீண் செலவாகும்.அதன் பின்னர் ஜெகன் ஏனைய தமிழர்களுடன் சேர்ந்து தமிழ்ப்பத்திரிகை வாங்காவிட்டால் தாம் பத்திரிகை வாங்க பணம் தரமாட்டோம் என்று போராடி பிரேமசிறி, ஜெயந்த என்ற அவன் நண்பர்களும் ஆதரவு தர தமிழ்ப்பத்திரிகை வாங்க சம்மதித்து அரசின் ஊதுகுழலாய் இருக்கும் பத்திரிகையொன்று வாங்கப்படுவதாக அறியமுடிகின்றது.சம்மதம் தெரிவிக்கின்ற காலகட்டத்தில் கூட்டத்தின் பின்னாலிருந்து ஜெகன் பயங்கர வாதியென்ற குரல் எழுப்பப்படுகின்றது.பேரிடரான சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது இரண்டு நாள் சம்பளத்தை வழங்குவது என்று கூட்ட நிகழ்வில் தீர்மானிக்கப்படுகின்றது.இதன்போது நிதியும் திரட்டப்படுகின்றது.

அவ்வாறு திரட்டப்படுகின்ற நிதி அனைத்தையும் சிங்கப் பிரதேசங்களில் யுத்தத்தினால் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு மட்டும் அவ்வுதவி வழங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது.இவ்விடயத்தையறிந்து அம்பாறை ,மட்டக்களப்பு,காத்தான்குடி போன்ற தமிழர் வாழும் பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அக்கொடுப்பனவு வழங்கப்பட்டது.தமிழ்பேசும் உள்ளங்களுக்கும் அவ் உதவி வழங்கியே ஆகவேண்டுமென ஜெகன் வலியுறுத்தினார்.இருப்பினும் அத்தரப்பிடம் சம்மதம் வழங்கப்படவில்லை.அப்படி இக்கோட்பாட்டினை நிறைவேறாவிடின் சுனாமிபேரிடர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியை தமது மாதாந்த சம்பளத்தில் இருந்து கழிக்க வேண்டாம் என்று தமிழர்களின் கையொப்பங்களைப் பெற்று காரியாலத்திற்கு அனுப்பி வைக்கின்றார்கள்.இதையறிந்து அவர்களில் ஒருவர் "நீ முழு இனவாதி "என்று திட்டுகின்றார்.தமிழர்கள் ஒரு பயங்கரவாதியாகவோ அல்லது இனவாதியாகவோ வருவதற்கு தனது உரிமைக்காக குரல்கொடுப்பதே முக்கியமாகக் கருதப்பட்டது. இப்படைப்பின் மூலம் சிவா என்ற கதையம்சம் சந்தேகத்தின் பெயரில் கைதி ஆகி ஆறு ஆண்டுகளின் பின்னர் விடுதலையாகி வருகின்ற ஒருவருடைய கதை முன்னர் கூறியது போன்று யாரையும் நம்பாதே!சக நபர்களை சந்தேகப்படுகின்ற ஒரு வழக்கம் நிலவிய போர்ச்சூழலில் இக்கதை அமையப்பெற்றுள்ளது.<சிவா என்ற மாணவன் பல்கலைக்கழகத்தில் அதிகம் சிங்கள நட்புக்களின் வட்டாரத்தையுடையவனாகக் காணப்பட்டான்.சிங்களப்பெண்ணொருத்தியை காதல் வயப்படுகின்றான்.ஒருநாள் தனது பாடசாலைக்கால நண்பன் ஒருவனை வழியில் கண்டு சைக்கிளில் ஏற்றிச்செல்லுகின்ற நண்பனின் பையில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய புத்தகம் இருந்ததாகக் கூறி இருவருக்கும் கைது செய்கின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது.அதைத்தொடர்ந்து சிவா கல்வி கற்று வந்த பல்கலைக்கழகவளாகத்தினுள் பொலிஸார் நுழைகின்றார்கள்.ஒவ்வொரு மாணவரது அடையாள அட்டையையும் பார்த்து தமிழர்கள் அனைவருக்கும் விசாரணைக்கென்று கைது செய்யப்படுகின்றார்கள்.இக்கைது நடவடிக்கை நடைபெறுகையில் அதே இடத்தில்இருக்கும்"செம்மாணவர் அமைப்பு"தலைவர் கித்சிறி என்பவன் தொலைக்காட்சியில் ஜெயசூர்யாவும் களுவித்தாரணவும் வெளுத்துக்கட்டுவதைப் பார்த்து கைதானவர்கள்இறுதியில் விடுதலைப் பெறுகின்றார்கள்.

சிவா ஆறு ஆண்டுகளின் பின்பு நிரபராதி என்று அனைவராலும் பேசப்பட்டு விடுவிக்கப்படுகின்றான்.ஆனாலும் அவனைக் காணும் பழைய நண்பர்கள் அவனுடன் கதைப்பதை தவிர்த்துக்கொள்கின்றார்கள்.தான் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியா செல்வதற்கு முயல்வதாகக் கூறி சிவா அவ்விடத்திலிருந்து விடை பெறுகின்றான்.அதன் பின்பு சிவாவை தொடர்பு கொள்ள முயலும் கதை சொல்லிக்கு தொடர்பு கிடைக்கவில்லை.சில நாட்களின் பின்பு காணாமல் போனோர் உறவினர் சங்கம் நடாத்திய ஊர்வலத்தில் சிவாவின் அடையாளத்தையும்,புகைப்படத்தையும் ஏந்திக் கொண்டு வெள்ளைச் சேலையணிந்த வயதாகிய மங்கையொன்று செல்வதைத் தொலைக்காட்சியில் பார்த்ததாக இன்னொரு நண்பன் ஊடாக தெரிவிக்கின்றான்.இச்சிறுகதையில் சந்தேகத்தின் பெயரில் நிகழ்ந்த கைதுகளும், பரவலாக இடம்பெற்ற காணாமற்போதல்களும் கூறப்பட்டுள்ளன.அத்துடன் சந்தேகத்தின் பேரில் என்று கைது செய்யப்பட்ட சிவாவின் சகபாடி வளாகத்தில் இருந்தவர்கள் சிங்களவர்கள்.அவருடைய காதலி கூட சிங்களபெண்தான்.இருந்தும் அவர்கள் யாருமே விசாரணைக்கு உட்படுத்தவில்லை.ஆனால் அவனது கைதினை தொடர்ந்து வளாகத்தினுள் நுழையும் பொலிஸார்கள் முகத்தையும் அடையாள அட்டையையும் பார்த்து தமிழர்கள் அனைவரையும் தனிவரிசையில் நிறுத்தி வைக்கப்படுகின்றார்கள். இனப்படுகொலை ஒன்றுக்கான நிலைகளில் மிக ஆரம்பமாக இருந்த நிலையில் ஒன்றாக ஒருவரின் இனம்,மதம், தேசியம் போன்ற அடையாளங்களை அறியும் பொருட்டு அடையாள அட்டைகளை பார்வையிடல் அவர்களை தமர்×பிறர் என்று இந்நிலையை குறிப்பிடுகின்றார்.இன்று வரை ஈழத்தில் தொடரும் இந்நிலையை இக்கதை உணர்த்துகின்றது.சிங்களவர்,தமிழர், முஸ்லீம் இணைந்து போராடிப் பெற்ற சுதந்திரம் நாட்டுமக்கள் அனைவருக்கும் உரியது என்று ஜனாதிபதி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்த ஒரு சுதந்திர நாளில் கொழும்பில் வாழ்ந்த தமிழ் இளைஞனின் நாள் எப்படி இருந்தது என்பதே ஒரு சுதந்திர கதையாகும்.

அவன் உணவு வாங்க கடைக்குச் செல்லும் போது தமிழன் என்ற காரணத்தால் அரைமணி நேரம் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதாக அவன் உணர்கின்றான்.இரண்டு வருடங்களாக அவன் உணவுண்ட லக்சுமி பவன் கடையில் பணியாற்றிய மலையக இளைஞர்கள் பொலிஸ் மூலம் தடுத்து வைக்கப்படுகின்றார்கள் ஒரே நாட்டில் வாழும் தமிழர்கள் மட்டும் பதிவு செய்யும் பொலிஸ் நடைமுறையை நினைத்து வெறுப்புறுகின்றான்.இனிச்சாப்பாட்டுக்காய் அலைந்து கைதாகபடுவதை விட காலையில் சாப்பிட்டு மிச்சம் வைத்த பழைய பாணைச் சாப்பிடுவது நல்லதென்ற முடிவுக்கு இறுதியில் வருகின்றான்.தான் வாழும் நாட்டின் சுதந்திர நாளில் கூட தான் பிறந்த இனத்தின் காரணமாக கடுமையான ஒழுக்கமும், ஒடுக்குமுறையும் நிலவுகின்ற அவனால் காட்ட முடிந்த அதிக பட்ச எதிர்வினை அதுவாக அமைகின்றது. இத்தொகுப்பில் இருக்கின்ற கதைகளில் என் தனிப்பட்ட அக்கறையில் மிக முக்கியமான விடயத்தைப் பேசுகின்ற சிறுகதை"வழிகாட்டிகள்"என்பது.

இலங்கையில் இலவசக் கல்விமுறைமை உலக அளவில் கூட சிறப்பான ஒன்றாகும்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இலங்கையில் எல்லோருக்கும் ஒரே பாடத்திட்டமும் பாடப்புத்தகமும் தான் இருந்தன. அண்மைக்காலமாக கல்வியானது தனியார்துறைகளிடம் மெல்ல மெல்ல கைமாறி வருகின்றது.ஆனால் கல்வி முறைக்கு ஒழுங்கான திட்டம் இருந்தும் தமது மெத்தனத்தால் அதை செயலிழக்கவும் சரியாகச் செய்யவும் முடியாமல் செய்தவகள் பலர்.இக்கருத்தை இக்கதையினூடாக அறிந்து கொள்ள முடிகின்றது.குறிப்பாக கல்வி அதிகாரிகள் உள்ளனர். சுருங்கக் கூறின் சாகித்திய விருதைப்பெற்ற இந்நூல் வாசிப்போரின் மத்தியில் சிறந்த அனுபவத்தை பெற்றுத் தரும் என்பதில் ஐயப்பாடில்லை.

இதுவும் ஓர் எழுத்தாளரின் பேனை கூறும் ஆய்வெறக்கூறி இந்நூல் வாசகர் மனதை தொட்டுச்செல்ல வேண்டும் என்பது என் விருப்பம்.

வி.அபிவர்ணா-முல்லைத்தீவு

Friday, January 22, 2021

முஸ்டீன்

சில புத்தகங்களைத் தேடிச் சென்று பெற்று வாசிப்பேன், இந்தப் புத்தகத்தையும் அப்படித்தான், எல்லாப் புத்தகக் கடைகளிலும் தேடி கிடைவில்லையென்றான போது அதை எழுதியவரையே தொடர்பு கொண்டு கேட்டேன். அதற்காக நாவல வரைப் பயணம் செய்து திறந்த பல்கலைக்கழகத்தில் நண்பர் முகுந்தனைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடி புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட போது காசு கொடுத்து வாங்குவதைவிட ஓர் ஆத்மார்த்தமான பிணைப்பை அந்தப் புத்தகத்துடன் ஏதோவொன்று நமக்குள் ஏற்படுத்தி விடுகின்றது. இருபது வயது வரை இருந்த வாசிப்பின் எக்ஸ்பிரஸ் வேகம் கடந்த பத்தாண்டுகளாகக் குறைந்திருப்பதை நான் தெளிவாகவே உணர்கின்றேன். காலையில் இருந்து இரவு தூங்கி விடுவதற்குள் எப்படியும் 400 பக்கங்களுக்கு மேல் வாசித்துவிடுவேன். பாடசாலையில் படிக்கும் காலத்தில் ஒரு பாடம் முடிந்து ஆசிரியர் வெளியே சென்று அடுத்த பாடத்திற்கான ஆசிரியர் வருவதற்கிடையில் கிடைக்கும் அந்த இடைவெளியைக் கூட நான் விட்டு வைப்பதில்லை, வேகமான வாசிப்பு 20 பக்கங்களையாவது தாண்டும்,

தேவமுகுந்தனின் பத்துக் கதைகளையும் படிக்க ஐந்து நாட்கள் எடுத்தது என்னைப் பொருத்தவரைக்கும் எனது வாசிப்பின் பெருந் தோல்வி என்றுதான் கருதுகின்றேன். கதைகளைப் படித்து முடித்துவிட்டே பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் எழுதிய குறிப்பினைப் படித்தேன், நான் சொல்ல நினைத்த விடயங்கள் பலவும் அங்கே பதிவாகி இருந்தன. மேலதிகமாக இரண்டே இரண்டு விடயங்களைத்தான் தேவமுகுந்தனின் கதைகளில் இருந்து புரிந்து கொண்டேன்.

யுத்தமும் இன முரண்பாடும் தொடர்பில் குறிப்பாகத் தமிழர் - சிங்களவர் முரண்பாடு குறித்துப் பலகதைகளைப் படித்திருக்கிறேன், அவற்றிலிருந்து இந்தக் கதைகள் பெரும்பாலும் வேறுபடுவதற்குக் காரணம் சிங்களவர்களின் மனோநிலையில் எவ்விதமான உணர்வுக் கோலங்கள் படிந்திருக்கிறன என்பதைத்தான் வெளிப்படுத்துகின்றது, அதாவது சிங்களவர்களுடனான நெருக்கத்தில் இருந்தே பெருவாரியான கதைகள் பிறக்கின்றன. அந்த நெருக்கம் இராணுவத்திற்கெதிரான தாக்குதலை அல்லது நாட்டிலுள்ள அரச நலன்களுக்கெதிரான தாக்குதலால் எவ்விதமான பரிமாணத்தை அடைகின்றது என்பது மிக முக்கியமானது. எவ்வளவுதான் ஆழமான நட்பு நிலவினாலும் தமிழர்கள் தமக்கு எதிரிகள் என்பது போலவும், தமது நாட்டுக்கெதிராக தமிழர்கள் தாக்குதல் நடாத்துகின்றார்கள் என்பது போன்ற தோரனையில் வெளிப்படும் வாசகங்கள் இரு வேறு தேசங்களைக் கட்டியங்கூறி நிற்பதுவும் கவனிக்கத் தக்கது. சிங்களவர்களுக்க மிக நெருக்கமாக இருந்து அங்கிருந்த இடைவெளியில் நின்று பேசுகின்ற கதைகளே என்னை ஈர்ப்புச் செய்தன. அன்பும் நட்பும் கூடிய பிணைப்பு ஏதோவோர் இடைவெளியால்தான் கட்டிப் போடப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளும்படி கதைகள் நகர்கின்றன. இயல்பான பிரிவினை என்ற அம்சம் இப்படியே தொக்கி நிற்கின்றது. சேர்ந்து வாழுதல் எனும் எதிர்பார்ப்பு வெறுமனே எதிர்பார்ப்பு மட்டும்தான் அதில் சாத்தியப்பாடு கிடையாது என்பதையும் யுத்தம் முடிந்த பின்னர் அது மேலும் கூர்மையடைந்திருப்பதையும் அவதானிக்கும்படியாக உள்ளதை இப்போது நாம் வெளிப்படையாகவே காணலாம். யுத்த காலத்துக் கதைகளினூடாக தேவமுகுந்தன் வெளிபடுத்தியிருப்பது இந்த உணர்வுகளைத்தான், அநேக இடங்களின் இந்த எதிர்பார்ப்பின் படிமங்களைத்தான் என்னால் தரிசிக்க முடிந்தது.

போர் என்பதன் பின் தூரத்திலுள்ள சில பக்கங்களை; அதற்கு அண்மையில் இருந்து பேசுகின்றது. சிங்களவர்களுக்குள் வாழும் தமிழ் மக்கள், பிரச்சினை வருகின்ற போது மாறும் மனங்களை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்பதில்தான் நிறைய அம்சங்கள் சுற்றி வருகின்றன. இரட்டைக் கோபுரம், இடைவெளி மற்றும் சிவா போன்றன அதைத் தெளிவாகப் பேசுகின்றன. இது குறித்த மாற்றுப் பார்வை என்னிடமுள்ளது. அதைப் பின்னால் ஓரளவுக்கு வெளிப்படுத்தியிருக்கின்றேன். கதைகளைப் பற்றி அளவானதும் அழகானதும் குறிப்பாய் பேராசிரியர் நுஃமானின் மதிப்பீடு அமைந்திருப்பதால் அதல்லாத ஒரு கோணத்தில் தான் நான் பார்க்க வேண்டியிருக்கிறது, அது கொஞ்சம் சிக்கலானதும் கூட.

அடுத்தது தமிழர் தரப்பு எதிர்பார்ப்புகள். இதிலும் சிங்களவர் தரப்புப் போலவே தமிழர்தரப்பு நியாயங்கள் வெளிப்படுகின்றன. ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் போது ஏற்படுகின்ற இயல்பான ஆக்ரோஷம் தன் இனத்தின் மீது பற்றுக் கொண்ட எந்தவொரு படைப்பாளிக்கும் விதிவிலக்கானதன்று. தேவமுகுந்தனை அப்படி நியாயமான இனப்பற்றுள்ள ஒரு படைப்பாளியாகவே என்னால் பார்க்க முடிகின்றது. யுத்தகாலத்துப் படைப்புக்களில் நானும் காணும் ஒரு முரண்நிலை ஆதிக்கம் செய்யும் இனத்தின் மீதான போராட்டதை ஆதரிக்கும் பலர் சில பொழுதுகளில் போராளிகளை மறுதலிப்பர், இந்த விடயத்தைத் தெளிவாகவே பேசி விடலாம் என்று நினைக்கின்றேன்.

விடுதலைப்புலிகள் தமிழர்களுக்கான பிரதான விடுதலைப் போராட்டப் பங்காளிகள் என்ற நிலைப்பாட்டை வலிந்து வலுவாக நிலைநிறுத்திக் கொண்டபோது ஏனைய விடுதலை;ப போராட்ட இயக்கங்கள் அனைத்தும் அரசிடம் புகலிடம் பெற்றுத் தஞ்சமடைந்துவிடுவதை தெளிவாகவே நாம் வரலாற்றில் காணலாம். விடுதலைப் புலிகளின் பாரிய பிளவான கருணாவின் பிரிவின் போதும் யுத்தமுடிவின் பின்னர் கேபியின் தீர்மானமும் கூட அரசிடம் சரணடைவதைத்தான் தெளிவாகக் காட்டின அதைத்தாண்டிய நிலையிருக்கவில்லை. அது அப்படியிருக்க புலிகள் தமக்கான ஒரே காப்பாளர்கள் என்ற எண்ணத்தை ஊன்றிவிட்ட பலகாரணிகளுள் அவர்கள் மீதான அச்சத்தின் விளைவாகக் கட்டமைக்கப்பட்ட உணர்வு நிலை மிக முக்கியமானது. அதனால்தான் புலிகளுக்கு எதிராக எழுதிய எல்லோரையும் புலிகள் தேடித்தேடி அழித்தார்கள். அதற்காகவே தனிப்புலனாய்வுப் பிரிவும் செயற்பட்டது. அதனால் படைப்பாளிகள் மௌனிப்பது தவிர்க்கவொனாதாகியது. பேராசியர் நுஃமான் சுதாராஜ் அவர்களின் பெருந் தொகுப்பான உயிர்க் கசிவுக்கு எழுதிய குறிப்பில் இருந்த ஒரு பந்தியை இங்கும் குறிப்பிட்டுள்ளார் அது இந்த மௌனம் தொடர்பானது, தேவமுகுந்தனும் அந்த மௌனத்தை இங்கு கடைப்பிடிக்கிறார் என்பது,

என்னைப் பொருத்தவரை இந்த மௌனத்தைச் சூடிக் கொண்ட பலரின் எழுத்துக்களில் ஒரு யதார்த்தத்தினை மறந்துவிடும் போக்கினை அவதானித்திருக்கிறேன். அதாவது சிங்கள தமிழ் முரண்பாடு என்பது வலுப்பெற்று யுத்தமும் இரு தரப்பாக நடக்கும் போது, ஒரு சண்டையில் ஆயிரம் ஆமிக்காரர்கள் பலியானால் தமிழர்களுக்கு எழும் வெற்றிப் பெருமிதம் இயல்பானது. மரநாய்கள் கதையின் இறுதியில் 'மரநாய்களைத் துரத்த வேண்டும்' என்பது இதைத்தான் சொல்கின்றது. அப்படித் துரத்தும் போது சிங்களவர்களுக்குள் கலந்து வாழும் தமிழர்கள் ஏதோவோர் விதத்தில் பிரச்சினையை எதிர் நோக்குவது இயல்பானதுதானே அந்த இயல்பை ஏன் எல்லா கதைஞர்களும் மறுதலிக்கிறார்கள்? என்பதுதான் எனது கேள்வி !

சிங்களவர்களுடன் நெருக்கத்தைக் கொண்டிருந்த பல தமிழர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டமையும், கைது செய்யப்பட்டு விசாரணைக் குட்படுததப்பட்டமையும் இந்த வகையினவே. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் ஒரு அப்பாவிச் சிங்களவன் சென்றாலும் அவன் சிங்களப் புலனாய்வுக் காரனாக இருப்பான் என்பதே புலிகளின் கணிப்பு அவன் உயிரோடு திரும்புதல் என்பது சாத்தியமற்றது. அதே இராணுவ ஸ்டடஜியைத்தான் சிங்கள தரப்புப் இராணுவ மூளையும் கைக்கொண்டது. எல்லா தமிழர்களும் புலிகளே என்பது மாதிரியான நிலைப்பாடு. தனி ஈழம் அமையப்பெற்றால் அது தமிழர்களுக்குக் கிடைத்த பெரும் பேறு என்று கருதும் உள்ளங்கள் அந்த அடைவுக்காக சிங்கள அரசை இலக்கு வைத்துத் தாக்குதல் ஒன்று நடக்கும் போது ஏற்படும் இன்னல்களை வேறோர் கோணத்தில் நோக்குவதையும் வெளிப்படுத்திய படைப்புக்களைப் படிக்கின்றபோதுதான் எனக்குள் அந்த முரண்பாட்டின் சூத்திரம் புரியாத் தன்மை எழுகின்றது.

மர நாய்களையும் சிவாவையும் படித்த போது எனக்குள் எழுந்ததை இப்படித்தான் வெளிப்படுத்த முடிந்தது. சிங்கள இலக்கியங்கள் எப்படி இந்நிலைகளை நோக்கியிருக்கின்றன என்பது பெரியளவில் தெரியாது, எனக்குத் தெரிய 1993ல் இருந்து கதுருவெல பஸ் ஸ்டாண்டில் ஒரு புத்திசுவாதீனமற்ற சிங்களப் பிச்சைக்காரன். எப்போதும் அவன் மகே துவ மகே துவ என்று சிரித்துக் கொண்டே சூரியன் உதிக்கும் பக்கம் நோக்கிக் கை நீட்டுவான் 1998ல் அவனை வெலிகந்தை பஸ்நிலையத்துக்குச் செல்லும் வழியில் இருந்த பெரிய அரச மரத்தின் கீழ் கண்டேன். 1999இல் ஓட்மாவடியில் இருந்தான். அப்போது அவனை இராணுவத்தினர் மிகக் கடுமையாக விசாரித்து விட்டனர் அடிகாயங்களுடன் ஓட்டமாவடிப் பகுதியில் அவன் சுற்றித்திரிந்தான், 93ல் இருந்து பல தடைவ நான் அவனுக்குச் சாப்பட்டுப் பார்சல் கொடுத்திருக்கிறேன். பின்னர் ஒரு நாள் 2002 ல் என்று நினைக்கிறேன் மட்டக்களப்பில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தான். இராணுவப் புலனாய்வுக் காரன் என்று எல்லோராலும் பேசப்பட்டான். மள்வானைக்கும் வாழைச்சேனைக்கும் 1992ல் இருந்து அலைந்த எனக்குத் தெரியும் அவன் பிச்சைக்காரன் என்பது. ஆனால் ராணுவ மூளை அவனைப் புலனாய்வுக்காரனாய்த்தான் பார்த்தது. கறை படிந்த பற்களுடன் மிகமிக மெலிந்த தோற்றத்துடன் கிழித்து எறியப்பட்ட ஊத்தைப் பையுடன் அவனது கோலங்களைந்த பிரதேத்தைப் பார்க்கும் இரண்டு சொட்டுக் கண்ணீர் எனக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை, யுத்தம் இப்படித்தான், ஆயுத மொழி இப்படித்தான் சண்டை என்ற அத்தியாயம் இப்படித்தான். இக்கதையை ஒரு தமிழ் எழுத்தாளன் எப்படிப்பார்ப்பான் என்பதுதான் எனது கேள்வி?

எனக்குத் தெரிந்ததால் அந்தப் பிச்சைக்காரன் பற்றிய பார்வை சரியாக அமைந்தது, அவனைப்பற்றி எதுவுமே தெரியாவிட்டால் நான் எப்படி அந்நிகழ்வை எடுத்துக் கொள்வேன்? இதைத்தான் பெருவாரியான யுத்தம் பற்றிய கதைகளைப் படிக்கும் போது எனக்குத் கேட்கத் தோன்றுகின்றது. தேவமுகுந்தனின் பார்வைகூட அப்படிப்பட்ட தனக்குத் தெரிந்த என்பதில்தான் தொக்கிநிற்பதாகத் தெரிகின்றது. ஆனாலும் தனது சமூகத்தின் மீதான பேரபிமானம் எல்லாக் கதைகளிலும் மிகைத்து நிற்பதை அவர் வலிந்து தடை செய்யவில்லை, உணர்வுகளுக்கு மட்டும் அங்காங்கே கடிவாளமிட்டிருக்கிறார். அதைச் சொன்னால் வீண்வம்பாகிடுமோ என்று மெதுவாக நகர்ந்து விலகிச் சென்றிருப்பதை ஊகிப்பது அவ்வளவு கஸ்டமாக இருக்கவில்லை.

சில வேளை எனது நிலைப்பாடுகளைத் தவறாக யாரும் வியாக்கியானம் செய்யக் கூடும், அது பற்றிக்கவலையில் இல்லை நான் சொல்ல வருவதற்குள் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டாலே போதும். ஒரு படைப்பாளி எல்லோரையும் போல இருக்க முடியாதே. அவனது பதிவுகள் காலத்தின் நியாயமான பிம்பங்களைப் பதிவு செய்யவேண்டும். இன்னும் ஐம்பது வருடத்திற்குப் பின்னுள்ள சந்ததி இப்போதைய நமது எழுத்தக்களை வைத்துத்தான் இன்றைய களநிலவரத்தைத் தெளிய நினைக்கும் அப்போது தவறான விவாதக்களத்திற்கு வித்திட்டுவிடக்கூடாதே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் மற்றபடி ஒன்றுமில்லை. கண்ணீரினுடே தெரியும் வீதி இந்த வகையில் ஒரு பக்கத்து நிலைப்பாட்டை மட்டும் பதிவு செய்திருக்கிறது, கூலுக்கும் மீசைக்கும் ஆசைப்படும் படியான வெளிப்பாடு தெரிவது படைப்பின் பலவீணமல்ல, படைப்பாளியின் செம்மைப்படுத்தலை வேண்டி நிற்பது.

மனிதம் என்கிற வட்டத்துள் நின்று நான் பேசப் போகின்றேன் என்றால் அந்த வட்டத்தை வலுவாக அமைத்துக்கொள்ள வேண்டும். ஒரு படைப்பாளியாக வாழ்ந்துவிட்டுப் போவதை விட நேர்மையான ஒரு படைப்பாளியாக வாழ்தல்தான் சிறந்தது என்பது எனது நிலைப்பாடு, அப்படியான நேர்மையான படைப்பாளிகளின் எழுத்துக்களைப் படிக்கும் பாக்கியம் இலங்கைச் சூழலில் குறைவாகவே கிடைக்கின்றது. தனது மனதுக்கு நெருக்கமான ஆறுதலான நிலைப்பாட்டை ஆதரிக்கும் போக்கிலிருந்து விடுபட்டு எந்தவொரு நிலைப்பாட்டையும் பொதுவான தளத்திலிருந்து அணுகும் படைப்பாளியாக தேவ முகுந்தனும் திகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுடன்...

Thursday, July 30, 2015

அருண்மொழிவர்மன்


தேவமுகுந்தனின் “கண்ணீரினூடே தெரியும் வீதி”: எங்களில் ஒருவனின் கதை

தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி என்கிற சிறுகதைத்தொகுதி அண்மைக்காலத்தில் ஈழத்தில் இருந்து அல்லது ஈழத்தமிழர்களால் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுதிகளில் முக்கியமானதொன்றாகும். இச்சிறுகதைத் தொகுதியில் 2008 ஏப்ரல் முதல் 2011 யூலைக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட 9 கதைகளும், தேவமுகுந்தன் க.பொ.த உயர்தரப்ப் பரீட்சை எழுதிவிட்டு இருந்த காலப்பகுதிகளில், 1992ல் எழுதிய மரநாய்கள் என்கிற கதையுமாக மொத்தம் 10 கதைகளைக் கொண்டதாக அமைகின்றது.

இந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளியான அதே காலப்பகுதியிலேயே சிறுகதைத் தொகுப்புகளும், நாவல்களும், குறுநாவல்களுமாக பல்வேறு பிரதிகள் வெளியாகி இருக்கின்றன. அவ்வாறு வெளியானவை பல்வேறு விதமாக அடையாளப்படுத்தப்பட்டும், அந்த அடையாளங்களுக்காகவே ஆதரிக்கப்பட்டும், நிராகரிக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருக்கின்றன. ஆயினும், இவற்றில் இருந்து வித்தியாசமாக தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதியானது தனித்துவமானதாகத் தெரிகின்றது. அவ்விதம் இந்த நூலை தனித்துவமாக்குவது யாது? இவரது கதைகளின் நாயகன் நம் எல்லாருக்கும் பரிச்சயமானவன். நமது சாயலோ அல்லது நமக்கு நெருக்கமானவர்களின் சாயலோ நிறைந்தவன். நம் சமகாலத்தவன். குறிப்பாக பெரும்பாலான கதைகள் தமிழர் தாயகத்தில் பிறந்த ஒருவர், தான் பிறந்த இடத்தைவிட்டு வேலைதேடியோ அல்லது உயர்கல்விக்காகவோ கொழும்புக்கோ அல்லது இதர பெரும்பான்மையினர் வாழும் இடங்களுக்கோ இடம்பெயரும்போது அங்கே தன்னைத் தக்கவைத்துக்கொள்வதில் எதிர்கொள்கின்ற இடர்பாடுகளையும் பாதுகாப்பின்மையையும் பேசுகின்றன. குறிப்பாக இவன் எந்த அரசியல் சார்பும் இல்லாதவன். தனது அரசியல் பிரக்ஞையை உரத்த குரலில் பேசாதவன். சமூகத்தின் ஒரு அங்கத்தவனாக அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அவன் எதிவினையாற்றுகின்றான், கோபங்கொள்ளுகின்றான், அறச்சீற்றம் கொள்ளுக்கின்றான். இவையாவும் அவன் நாளாந்த வாழ்வில் தன் லௌதீக தேவைகளைப் பூர்த்திசெய்வதில் எதிர்கொள்ளுகின்ற தடைகளின் நிமித்தம் எழுவனவே அன்றி அவனுக்குரிய அரசியலை முன்வைத்தவை அல்ல.

முதலாவது கதையான கண்ணீரினூடே தெரியும் வீதி போர்க்காலத்தில் கொழும்பில் கல்விகற்பதற்கத் தங்கியிருப்பவன் ஒருவன் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும், அவன் அகவுணார்வுகளையும் பதிவுசெய்கின்றது. யுத்தம் எப்போதும் எல்லாரையும் சந்தேகிக்கவைக்கின்றது. அது இக்கதையில் வரும் கதாபாத்திரத்தின் மிக சாதாரண நடவடிக்கைகளைக் கூட கட்டுப்படுத்துகின்றது.

“எனக்கு கிளிநொச்சியிலிருந்து அம்மாவின் கடிதங்கள் வந்ததாலேயே, நானும் என்னுடன் கூட அறையிலிருக்கும் நிக்ஸனும் இரண்டு அறைகளைக் காலி பண்ணவேண்டியதாயிற்று. அங்கிருந்த வரும் கடித உறைகள் கசங்கிய கொப்பிப் பேப்பர்களில் எழுதப்பட்ட கடிதங்களையும், சிலவேளைகளில் காளிகோவில் ஐயர் மந்திரித்துக் கொடுக்கும் திருநீற்றையும், நூலையும் அன்றி, வெடிகுண்டுகளைக் காவி வருவதாகவே இங்கிருப்பவர்கள் நம்புகிறார்கள்.”

கனடாவில் இருந்து அப்பா அனுப்பும் காசை அம்மாவுக்குக் கிளிநொச்சிக்கு அனுப்புவதுகூட கதைசொல்லிக்கு சிக்கல் நிறைந்ததாக இருக்கின்றது.

“வங்கிப் படிவத்தை நிரப்பி பணத்துடன் “கவுண்டரில்” கொடுக்கும்போது கிளிநொச்சிக் கிளை என்பதைப் வாசித்துவிட்டு “கவுண்டரில்” இருக்கும் கிளார்க்கின் அதட்டல்கள் என்னைச் சிறுமைப்படுத்தும் ………. காசையும் படிவத்தையும் கொடுத்த என்னிடம் நடக்கும் விசாரணைகள் மாதிரி வங்கியில் கள்ளக் காசோலை கொடுத்துப் பிடிபட்டவனிடங்கூட நடந்திராது என்று தோன்றும்”

இப்படியாகப் போர்ச்சூழல் அவன் நாளாந்த வாழ்வைப் பாதிக்கின்றது. அவனைத் திணறடிக்கின்றது. ஆனால் கதைசொல்லிக்கு எந்த அரசியல் நிலைப்பாடும் இல்லை. இந்தபோர்ச்சூழலைத் தாண்டி தன் லௌதீகவாழ்வை கொண்டுநடத்தவேண்டும் என்பதே அவன் எத்தனமாக இருக்கின்றது. அன்றைய தினம் அவன் இருக்கின்ற வீட்டிற்கு முன்னால் உள்ள வீதியில் இரண்டு வீடுகளில் வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டு, இராணுவ உடை தரித்த இரண்டு இளைஞர்களின் படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அறையின் சொந்தக்காரர் குமுது அங்கிள் சடலங்கள் செஞ்சிலுவைச்சங்கம் மூலம் மல்லாவியில் இருந்து கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று கூறுகிறார். மறுநாள் அதிகாலை கனடாவில் இருக்கும் அவன் தந்தை “ராத்திரி இவங்கட ரெலிபோன் நியூசில கேட்டன், கோப்பாயில் நகுலன் செத்திட்டானாம்” என்று சொல்லி இவன் தம்பியின் மரணத்தை தெரிவிக்கின்றார்.

“நகுலனின் உடல் அனாதையாய் ஆசுப்பத்திரிச் சவக்காலையில் இப்ப கிடக்கும், உடல் இல்லாமல் கிளிநொச்சியில் செத்தவீடு நடக்கும்.

நாளைக்கு வீட்டுக்கார குமுது அங்கிளோட வீட்டுகு பக்கத்திலை நடக்கப்போற செத்தவீடுகளுக்குப் போகவேண்டும்”

என்றவாறு கதையை நிறைவுசெய்கின்றார் தேவமுகுந்தன். இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் சிறந்த கதையாக இக்கதையையே கூறுவேன். போர்க்காலங்களில் இருந்த கொழும்புவாழ்க்கை அப்படியே பதிவு செய்யப்படுவதுடன், ஒரு தமிழராக ஒருவர் எவ்விதம் உணர்வார் என்பதை இக்கதையில் பதிவுசெய்கின்றார்.

இடைவெளி என்கிற கதை இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நிலவிய சமாதானகாலம் முறிவடைந்து, குண்டுவெடிப்புகள் மீள ஆரம்பித்திருந்த காலப்பகுதியில், தலைநகரில் பெரும்பான்மை இனத்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற அலுவலகம் ஒன்றில் பணியாற்றுகின்ற தமிழ் இளைஞன் ஒருவன் எதிர்கொள்ளுகின்ற சிக்கல்களை மையமாகவைத்து எழுதப்பட்டுள்ளது. யுத்தம் எப்போதும் அடுத்தவர் மீதான நம்பிக்கையின்மையை உருவாக்குகின்றது. அதுவே இனவிடுதலைப் போராகும்போது தவிர்க்கவே முயலாமல் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும், ஒருமைப்பாடும் சிதைவடைந்து விடுகின்றது.

இக்கதையில் வருகின்ற ஜெகனுக்கு தான் அலுவலகத்திற்கு சமுகமளிக்காத நாட்களில் கொழும்பில் குண்டு வெடிப்புகள் இடம்பெறுவதற்கான நிகழ்தகவு மிக உயர்வாக இருப்பதற்கான காரணம் என்னவென்பது புரியவேயில்லை. எழுமானமாய் நடக்கும் இந்நிகழ்வுகள் பற்றி ஆரம்பத்தில் பகிடியாக கதைத்த சிங்களாவர்கள் மெல்ல மெல்ல கோபப்படவும், சந்தேகம் கொள்ளவும் தொடங்குகின்றனர். லண்டனில் ஒரே அறையில் இரண்டுவருடம் தங்கியிருந்து நெருக்கமான நட்புக்கொண்டிருந்த விக்கிரம என்பவன், ஜெகன் லீவில் நிற்கும் நாட்களில் தனது பிள்ளைகளை பள்ளிக்கூடம் செல்லாது நிறுத்தவேண்டும் என்கிறான். குறுந்தாடி வளர்த்து, பொதுவுடமை பேசித்திரிந்த, புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான காலத்தில் ஏ9 பாதையூடாகச் செல்கையில் போரினால் அழிவுண்ட தமிழர் கிராமங்களைப் பார்த்து கண்கலங்கிய பிரேமசிறி என்பவன் ஜெகன் ஏன் அலுவலகத்திற்கு வரவில்லை என்பதை பொலிஸ்காரரின் தொனியுடன் கேள்வி கேட்கிறான். ஏழு வருடங்களாக தொடர்ந்து அலுவலகத்தில் ஒன்றாக கன்ரீனுக்குப் போய் தேனீரும் “அலப்ப”வும் உண்ட, ஜெகனுடன் நெருங்கிப் பழகியதாலோ அல்லது பெரிய மீசை வைத்திருந்ததாலோ அலுவலகத்தில் “தெமிளா” என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஜெயந்த என்பவன் கூட, இவன் வழமைபோல கன்ரீனுக்குப் போக அழைக்கின்றபோது “வேறு வேலையிருக்கின்றது” என்று சொல்லி மறுதலிக்கின்றான். இந்த மூன்று பாத்திரங்களும் ஜெகனுடன் நெருக்கமாக இருந்தவர்கள். ஆனால் கொழும்பில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்ற நாட்கள் சிலவற்றில் ஜெகனும் அலுவலகத்துக்கு வராமல் இருந்தான் என்பதன் காரணமாக அவர்கள் தமிழனான ஜெகனை சந்தேகிக்கத் தொடங்குகின்றனர்.

ஆனால் அந்தக் குண்டுவெடிப்புகளுக்கு முன்னரும் கூட நிலைமை சுமுகமாக அலுவலகத்தில் இருந்தது என்றோ, தமிழருக்கான சம உரிமை நிலவியது என்றோ சொல்லமுடியாது. நலன்புரிச்சங்க பொதுக்கூட்டத்தில் கன்ரீனில் பத்திரிகை வாங்கும்போது ஒரு தமிழ்ப் பத்திரிகையேனும் வாங்கும்படி கேட்டுக்கொள்ளுகின்றான். 3 சிங்களப்பத்திரிகை வாங்குகின்றனர், ஊழியர்களில் 30 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் தமிழர்களாக இருக்கின்றனர்; பத்திரிகைக்காக பணம் அனைத்து ஊழியர்களிடம் இருந்துமே அறவிடப்படுகின்றது; எனவே தமிழ்ப்பத்திரிகையும் வாங்கவேண்டும் என்பதுதானே முறை என்பது ஜெகன் தரப்பு நியாயம். ஆயினும் “தமிழர்களுக்கு சிங்களமும், ஆங்கிலமும் தெரியும், எனவே தமிழ்ப்பத்திரிகை வாங்குவது வீண் செலவு” என்று கூறி தட்டிக்கழிக்கப்படுகின்றது. அதன்பின்னர் ஜெகன் ஏனைய தமிழர்களுடன் சேர்ந்து, தமிழ்ப்பத்திரிகை வாங்காவிட்டால் தாம் பத்திரிகை வாங்க பணம் தரமாட்டோம் என்று போராடி, பிரேமசிறி, ஜெயந்த என்ற அவன் நண்பர்களும் ஆதரவு தர தமிழ்ப்பத்திரிகை வாங்க சம்மதித்து அரசின் ஊதுகுழலாய் இருக்கும் பத்திரிகையொன்று வாங்கப்படுகின்றது. அவ்வாறு சம்மதம் தெரிவிக்கப்படும்போது கூட்டத்தில் பின்னாலிருந்து “ஜெகன் பயங்கரவாதி” என்ற கூச்சல் எழுப்பப்படுகின்றது. அதுபோல சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது இரண்டு நாள் சம்பளத்தை வழங்குவது என்று தொழிற்சங்கக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு நிதி திரட்டப்படுகின்றது. அவ்வாறு திரட்டிய நிதி முழுவதையும் சிங்களப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் வழங்கத் திட்டமிட்டிருப்பதை அறிந்து, அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு போன்ற தமிழ்பேசுவோர் வாழும் பகுதிகளில் பாதிக்கப்படவர்களுக்கும் நிதி பகிரப்படவேண்டும் என ஜெகன் வலியுறுத்துகின்றான். ஆனால் அதற்கு சம்மதம் கிட்டவில்லை. அவ்வாறானால் சுனாமி பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியை தமது சம்பளத்தில் இருந்து கழிக்கவேண்டாம் என்று தமிழர்களின் கையொப்பங்களைப் பெற்று அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கின்றான். இதை அறிந்து ஒருவர் “நீ முழு இனவாதி” என்று திட்டுகின்றார். தமிழர் ஒருவர் பயங்கரவாதியாகவோ அல்லது இனவாதியாகவோ ஆவதற்கு தனது உரிமைக்காக குரலெழுப்புவதே போதுமானதாயிருக்கின்றது.

சிவா என்கிற கதை “சந்தேகத்தின் பேரில்” கைதாகி ஆறு ஆண்டுகளின் பின்னர் விடுதலையாகிவருகின்ற ஒருவனின் கதை. முன்னர் கூறியிருந்ததுபோல, எவரையும் நம்பாத, சக மனிதரை சந்தேகித்தே பார்க்கின்ற ஒரு வழக்கம் நிலவிய போர்க்காலச்சூழலே இக்கதையிலும் பதிவாகின்றது. சிவா பல்கலைக்கழகத்தில் அதிகம் சிங்கள நண்பர்களையே கொண்டிருக்கின்றான். சிங்களப் பெண்ணொருத்தியைக் காதலிக்கின்றான். ஒருநாள் தனது பாடசாலைக்கால நண்பன் ஒருவனை வழியின் கண்டு சைக்கிளில் ஏற்றிச்செல்லுகின்ற போது வழியில் சோதனைக்காக மறிக்கப்பட்டபோது இவன் ஏற்றிச்சென்ற நண்பனின் பையில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய புத்தகம் இருந்ததாகக் கூறி இருவரும் கைதுசெய்யப்படுகின்றனர். அதன் தொடர்ச்சியாக சிவா கல்விகற்ற பல்கலைக்கழக வளாகத்துள் பொலீசார் நுழைகின்றனர். ஒவ்வொரு மாணவரது அடையாள அட்டையையும் பார்த்து தமிழர்கள் அனைவரும் விசாரணைக்கென்று கைதுசெய்து கொண்டுசெல்லப்படுகின்றனர். இக் கைது நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கும் அதே இடத்தில் இருக்கும் “செம்மாணவர் அமைப்பின்” தலைவர் கித்சிறி என்பவன் தொலைக்காட்சியில் ஜெயசூர்யாவும் களுவிதாரணவும் வெளுத்துக்கட்டுவதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றான். கைது செய்யப்பட்ட ஏனையவர்கள் இறுதிப்பரீட்சைக்கு முதல்நாள் விடுதலை செய்யப்படுகின்றனர். சிவா ஆறு ஆண்டுகளின் பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப்படுகின்றான். ஆனாலும் அவனைக்காணும் பழைய நண்பர்கள் அவனுடன் கதைப்பதை தவிர்க்கின்றனர். தான் நாட்டைவிட்டு வெளியேறி அவுஸ்திரேலியா செல்லமுயல்வதாகக் கூறி சிவா விடைபெறுகின்றான். அதன்பின்னர் சிவாவை தொடர்புகொள்ள முயலும் கதைசொல்லிக்கு தொடர்பு கிடைக்கவில்லை. சில நாட்களின் பின்னர் “காணாமல் போனோர் உறவினர் சங்கம்” நடத்திய ஊர்வலத்தில் சிவாவின் புகைப்படத்தை ஏந்திக்கொண்டு வெள்ளைச்சேலை அணிந்த வயோதிபப் பெண்ணொருவர் செல்வதைத் தொலைக்காட்சியில் பார்த்ததாக இன்னொரு நண்பன் ஊடாக கதைசொல்லி அறிகின்றான். இக்கதையில் “சந்தேகத்தின் பேரில்” என்று நிகழ்ந்த கைதுகளும், பரவலாக இடம்பெற்ற காணமற்போதல்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. அத்துடன், சந்தேகத்தின் பேரில் என்று கைது செய்யப்பட்ட சிவாவின் நண்பர்களாக வளாகத்தில் இருந்தவர்கள் சிங்களவர்கள். அவனது காதலி கூட சிங்களப்பெண்தான். ஆனால் அவர்கள் யாருமே விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. ஆனால் அவனது கைதினைத் தொடர்ந்து வளாகத்தினுள் நுழையும் பொலிசார் அடையாள அட்டையைப் பார்த்து தமிழர்களை அனைவரும் தனி வரிசையில் நிறுத்தி கைது செய்து அழைத்துச்செல்கின்றனர். இனப்படுகொலை ஒன்றுக்கான நிலைகளில் மிக ஆரம்ப நிலைகளில் ஒன்றாக, ஒருவரின் இனம், மதம், தேசியம் போன்ற அடையாளங்களை அறியும்பொருட்டு அடையாள அட்டைகளைப் பார்வையிடல், அவர்களை தமர் X பிறர் என்று பிரித்தல் என்பவற்றைக் குறிப்பிடுவர். இன்றுவரை ஈழத்தில் தொடரும் இந்நிலையை இக்கதையும் பதிவாக்குகின்றது.

“சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் இணைந்து போராடிப் பெற்ற சுதந்திரம் நாட்டுமக்கள் அனைவருக்கும் உரியது” என்று ஜனாதிபதி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்த ஒரு சுதந்திர நாளில் கொழும்பில் வாழ்ந்த தமிழ் இளைஞனின் நாள் எப்படி இருந்தது என்பதே “ஒரு சுதந்திர நாள்” கதை. அவன் உணவு வாங்க கடைக்குச் செல்லும்போது தமிழன் என்ற காரணத்தால் அரை மணிநேரம் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதாக உணர்கின்றான். இரண்டு வருடங்களாக அவன் உணவுண்ட லக்ஷ்மி பவன் கடையில் பணியாற்றிய மலையக இளைஞர்கள் பொலிஸ் பதிவப் புதுப்பிக்கவில்லை என்பதால் பொலிசாரால் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர். ஒரே நாட்டில் வாழும் தமிழர்கள் மட்டும் பதிவு செய்யும் பொலிஸ் நடைமுறையை நினைத்து வெறுப்புறுகின்றான். இனிச் சாப்பாட்டுக்காய் அலைந்து கைதாவதைவிட காலையில் சாப்பிட்டு மிச்சம் வைத்த பழைய பாணைச் சாப்பிடுவது நல்லதென்ற முடிவுக்கு இறுதியில் வருகின்றான். தான் வாழும் நாட்டின் சுதந்திரநாளில் கூட தான் பிறந்த இனத்தின் காரணமாக கடுமையான ஒடுக்குமுறை நிலவுகின்றபோது அவனால் காட்டமுடிந்த அதிகபட்ச எதிர்வினை அதுவாக அமைகின்றது.

இத்தொகுப்பில் இருக்கின்ற கதைகளில் என் தனிப்பட்ட அக்கறையில் மிகமுக்கியமான விடயத்தைப் பேசுகின்ற சிறுகதை வழிகாட்டிகள் என்பது. இலங்கையின் இலவசக் கல்விமுறைமை உலக அளவில் கூட சிறப்பான ஒன்று. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இலங்கையில் எல்லாருக்கும் ஒரே பாடத்திட்டமும் பாடப்புத்தகங்களும் தான் இருந்தன. அண்மைக்காலமாகவே கல்வியானது தனியார்துறையினரிடம் மெல்ல மெல்ல கைமாறி வருகின்றது. ஆனால் கல்விமுறைமைக்கு ஒழுங்கான திட்டம் இருந்தும் தமது மெத்தனத்தால் அதை செயலிழக்கவும், சரியாகச் செயற்படவும் முடியாமற் செய்தவர்கள் பலர், குறிப்பாக கல்வி அதிகாரிகள் உள்ளனர். பெரும் பணவசதியும், செல்வாக்கும், ஏற்கனவே ஈட்டிய நற்பெயரும் கொண்ட சில பாடசாலைகள் அனுமதிப்பரீட்சை மூலமாகவே அல்லது புலமைப் பரிசில் போன்ற பொதுப் பரீட்சைகள் மூலமாகவோ மாணவர்களை புள்ளிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, தம்மை மாத்திரம் கல்வியின் மையங்களாக நிறுவிக்கொள்வது பற்றியும், அவற்றில் கல்வி தவிர்ந்த சமூகப் பிரக்ஞை எவ்வாறு மாணவர்களுக்கு ஊட்டப்படுகின்றது என்பது பற்றியும் எனக்குத் தனிப்பட விமர்சனம் உண்டு. இக்கதையில் வருகின்ற வாமதேவன் போன்றவர்களின் சுயநலன்களுக்கு அப்பால், பொஸ்கோ 92%, ஹிண்டுப் பிறைமரி 90% என்று பெருமைபொங்க புலமைப் பரிசில் பெறுபேறுகளை ஒப்புவிக்கும் வாமதேவனிடம் சில சிறுபாடசாலைகளின் பெறுபேறுகள் பற்றிக் கேட்க எண்ணி கேளாமல் தவிர்த்துவிடும் கதைசொல்லி இந்திரன், கதையின் இறுதியில் கேட்டே விடுகின்றான், “ஸேர், அரியாலை ஶ்ரீ பார்வதி வித்தியாலயம், கொழும்புத்துறை துரையப்பா, குருநகர் றோக்ஸ், நாவாந்துறை றோ.க., நாவலர் வித்தியாலயம் போன்ற பள்ளிக்கூடங்களின் ரிசல்ட்ஸ் எப்படி?” என்று எரிச்சலுடன் கேட்கின்றான். கதை முடிவது இவ்விதம் என்றாலும் இது நல்லதொரு தொடக்கமே.

இத்தொகுப்பில் வருகின்ற மிகச் சிறப்பான கதைகளாக மேலே சொன்ன கண்ணீரினூடே தெரியும் வீதி, ஒரு சுதந்திர நாள், இடைவெளி, சிவா, வழிகாட்டிகள் ஆகிய கதைகளையே எனது வாசிப்பின்மூலம் நான் உணர்கின்றேன். ஏனைய கதைகளும் அவை பேசும் விடயங்கள் சார்ந்து முக்கியம் வாய்ந்தனவாக இருப்பினும், அவை ஏனோ சில காரணங்களால் முழுமை அடையாதனவாகத் தோன்றுகின்றன.

இரட்டைக் கோபுரம் என்கிற கதை கதைசொல்லியும் அவரது நண்பர்களாக இரண்டு சிங்கள இனத்தவர்களும் மலேசியாவில் உயர்கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் இடபெற்ற விடயங்ளைப் பேசுகின்றது. இவர்கள் மலேசியாவில் இருந்த காலத்தில் இவர்களுக்கு அங்கிருந்த சுப்ரமணியம் என்ற தமிழர் பெருமளவில் உதவிவருகின்றார். மிக நெருக்கமான உறவுப் பிணைப்பொன்று நால்வருக்கும் இடையில் உருவாகின்றது. ஒருநாள் இவர்கள் மலேசியாவில் இருக்கும்போது பிறந்த, சுனில் என்ற சிங்கள நண்பரின் குழந்தை இறந்துவிட்டதாக செய்தி வருகின்றது. விடயம் அறிந்து பயணடிக்கெற்றை சுப்ரமணியமே தனது செலவில் செலுத்துகின்றார். விமான நிலையத்தை எல்லாரும் சென்றடைகின்றனர். அப்போது கட்டுநாயக சர்வதெச விமான நிலையத்தில் விமானங்கள் தகர்க்கப்பட்டு மோதல்கள் இடம்பெறுவதாகவும், அதன் காரணமாக இலங்கைக்கான எல்லா விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் அறிவித்தல் வருகின்றது. சிறு குழந்தையின் உடலை பல நாட்களுக்கு வைத்திருக்க முடியாதே. சுனில் என்ன செய்வான் என்ற வருத்தம் கதைசொல்லிக்கும் ஏற்படுகின்றது. இந்த நேரத்தில் சுனில், “பற தெமிள” என்று கூறுகிறான். “அவனின் பயணம் தடைப்பட்டதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும், அவனின் துயர் எங்களிலும் பரவியுள்ளபோது ஏன் எங்களைத் திட்டுகிறான்?” என்ற கதை சொல்லியின் விசனம் நியாயமானதே. சுனிலின் அடிமனதில் இருந்த தமிழர்கள் மீதான வெறுப்பே இவ்வார்த்தைகளில் வெளிப்பட்டது என்று வாதிடவும் முடியும். ஆயினும், தன் சிறுகுழந்தையின் பிணத்தைச் சென்று பார்வையிடமுடியாத தந்தை என்கிற சுனிலின் உணர்வுத் தளமே என்னளவில் இங்கே மேலோங்கி நிற்கின்றது. அந்த வார்த்தைகள் முழுமையான பிரக்ஞையுடன் வந்திருக்காது என்பதே என் துணிபு.

சின்னமாமா என்கிற கதை எழுத்தாளர் திருநாவுக்கரசு என்பவர்க்கு இருக்கின்ற வெளிஅடையாளத்திற்கும், திருநாவுக்கரசு என்பவரை நேரடியாக அறிந்த அவர் குடும்பத்தினர் மத்தியில் இருக்கின்ற அடையாளத்திற்கும் இடையில் இருக்கின்ற முரண்களைப் பற்றிப் பேசுகின்றது. எழுத்து வேறு எழுத்தாளன் வேறு என்பதைத் தம்மைக் காபந்து பண்ண பயன்படுத்திக்கொண்டு தொடர்ச்சியாக தம் போலித்தனங்களை அரங்கேற்றிக்கொண்டிருக்கும் பல எழுத்தாளர்களை அறிந்திருக்கின்றேன் என்றாலும், இக்கதை ஒரு குறிக்கப்பட்ட எழுத்தாளரை நோக்கி எழுதப்பட்டது என்று ஐயுறுவதால் – அப்படி இருப்பின் அவ்வித முயற்சிகளில் இவ் எழுத்தாளர் தொடர்ந்தும் ஈடுபடலாகது என்பதால் – இம்முயற்சியை வரவேற்க விரும்பவில்லை. அதே நேரம், தாழ்த்தப்பட்ட சமூகங்களில் இருந்து வந்தவர்கள் தாம் உயர்வாக்கம் அடையும்போது, தாம் ஏற்கனவே இருந்த தாழ்த்தப்பட்ட சமூகங்களுடனான தமது தொடர்புகளைத் துண்டித்துக்கொள்ளுகின்றனர் என்ற கருத்துநிலையும் இக்கதையினூடாக பதிவுசெய்யப்படுவது முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இவன், கூட்டத்தில் ஒருவன் ஆகிய இருகதைகளும் ஒரே தொடர்ச்சியைக் கொண்டவை. மத்தியதர வர்க்கத்தினருக்கு இருக்கக் கூடிய சமுதாய கோபத்தைக் காட்டுபவை. ஆயினும் இவை சிறுகதையாக இல்லாமல் பதிவுகளாகவும், விமர்சனத்தின் குரலாயுமே அமையப்பெற்றிருப்பதாகவே உணர்கின்றேன். ஆயினும் இவன் கதையில் கொழும்பு நகரில் இருக்கின்ற வேலைகிடைக்காத படித்த இளைஞன் ஒருவனின் நாளாந்த வாழ்க்கையைப் பதிவாக்குகின்றது.

மரநாய்கள் இத்தொகுப்பில் உள்ளதன்படி தேவமுகுந்தன் எழுதிய முதலாவது சிறுகதை. இக்கதை 1993ல் எழுதப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் உள்ள ஏனைய கதைகள் மரநாய்கள் பிரசுரமாகி குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்குப் பின் பிரசுரமானவை. அந்த 15 வருடங்களுக்குரிய பாய்ச்சலும் தேர்ச்சியும் தேவமுகுந்தனின் பின்னைய எழுத்துகளில் தெரிகின்றது. இவ்வாறு கூறுவது மரநாய்கள் என்கிற கதையை குறைத்து மதிப்பிடுவது என்று பொருளல்ல. அது இந்திய ராணுவம் ஈழத்தில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் அது எவ்வாறு மக்களின் நாளாந்த வாழ்வை பாதித்தது என்பதையும், அது செய்த கோழித்திருட்டுகள் என்பதையும் ஒரு சிறுவனின் பார்வையில் பதிவாக்கியுள்ளது. இந்தக் கதை இவ்வாறு முடிகின்றது.

“அண்ணா கோழியைப் பிடித்துக்கொண்டு போட்டாங்கள்…” வாழைகளுக்குப் பாத்தி கட்டிக்கொண்டிருந்த தமயன் மண்வெட்டியைக் கீழே போட்டுவிட்டு நிதானமாகச் சொன்னான்.

மர நாய்களைத் துரத்த வேண்டும்

ஒன்றும் புரியாதவனாக கோபி அழுகையை அடக்கிக்கொண்டு கண்ணீரினூடு தமயனின் முகத்தை அண்ணாந்து பார்த்தான். அது தெளிவாகத் இருந்தது. இவனுக்குப் புரிய இன்னும் சிறிது காலம் போதும்!”

இதில் மரநாய்களைத் துரத்த வேண்டும் என்பது இந்திய ராணுவத்தைத் துரத்தவேண்டும் என்ற அர்த்தத்தில் வருகின்றது என்பதை எல்லா வாசகருமே உணரக்கூடும். அக்காலப்பகுதியில் ஈழத்தில் வாசித்த பல சிறுகதைகளில் இருந்த ஒருவித பிரச்சாரத் தொனியே இதிலும் தென்படுகின்றது. அதைவிட முக்கியமாக நான் சொல்ல விழைவது, இக்கதையில் வரும் கோபி, கண்ணீரினூடு அண்ணாந்து பார்த்த தமையன் அல்லது அவன் போன்ற ஒருவன் தான் பிற்பாடு, “கண்ணீரினூடே தெரியும் வீதி” கதையில் செத்துப்போன போராளி நகுலன் ஆகி இருப்பான் என்கிற என் அனுமானத்தையே!

கண்ணீரினூடே தெரியும் வீதி தொகுப்பினை வாசித்த பின்னர் தேவமுகுந்தன் எழுதிய வேறு படைப்புக்களை வாசிக்கும் ஆவலில் தேடினேன். இத்தொகுப்பு 2012ல் வெளியாகியுள்ளது. அதன்பிறகான இரண்டாண்டு காலப்பகுதியில் ஒன்றோ, இரண்டோ சிறுகதைகள் மாத்திரமே எழுதியுள்ளார் என அறியமுடிகின்றது. தொடர்ந்து எழுதுவதற்கான மனநிலையும், நேரமும் தாராளமாகக் கிடைத்து தேவமுகுந்த தொடர்ந்தும் எழுதவேண்டும் என்பதே என் அவா.

கண்ணீரினூடே தெரியும் வீதி

ஆசிரியர் : தேவமுகுந்தன்

காலச்சுவடு வெளியீடு

Saturday, January 11, 2014

க. நவம்


தேவமுகுந்தனின் சிறுகதைகள் சிலவற்றை ஏற்கனவே படித்திருக்கிறேன். கலைமுகம்,காலம், ஜீவநதி, ஞானம், யுகமாயினி போன்ற சிற்றிதழ்களில் வெளிவந்த கதைகள், அவை. இப்போது அவர் தமது கதைகளைத் தொகுத்து, ‘கண்ணீரினூடே தெரியும் வீதி’ என்ற பெயரில், பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களது பின்னுரையுடன் வெளியிட்டிருக்கின்றார். இத்தொகுதியிலுள்ள கதைகளைப் படிக்கத் துவங்கியபோது ‘இனிப் போதும்’ எனுமாப்போல, நட்டநடுவே விட்டுவிடத் தோன்றவில்லை. இடைவெளி விட்டுப் படிக்கவும் மனம் இடந்தரவில்லை. ஒவ்வொரு கதையும் அடுத்த கதையைத் தொடர்ந்து படிக்கத் தூண்டியது. கதைகளை மீளப் படித்து விளங்கிக் கொள்ளவேண்டிய சிக்கல்கள், சிரமங்கள் இருக்கவில்லை. இன்னொன்றைப் படிக்கும்போது, முன்னர் படித்த கதைப் பொருளை நெட்டுருப்பண்ண வேண்டிய நிர்ப்பந்தமேதும் இருக்கவில்லை. பத்துக் கதைகளையும் ஒரே மூச்சில், ஒருசில மணிநேரங்களில் படித்து முடித்தேன்.

சிங்களர், தமிழர் என்ற பாகுபாடின்றி யுத்தம் எவ்வாறு சகலரையும் பாதித்தது என்பதை ‘கண்ணீரினூடே தெரியும்’ என்ற கதையும், உயர் பதவிகளிலிருக்கும் சுயநலத் தமிழர்களின் போலிமைகளுடன் கூடிய பொறுப்பற்ற தன்மைகளை ‘வழிகாட்டிகள்’ என்ற கதையும், அன்னியோன்னியமாகப் பழகிவந்த சக சிங்கள ஊழியர்களின் சந்தேகப் பார்வைக்கு ஆளாகிப்போன தமிழனின் அவஸ்தையை ‘இடைவெளி’ என்ற கதையும், இன ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்ந்த தமிழ் இளைஞன் ஒருவன், சந்தேகத்தின் பேரில் சிறையிலடைக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டு, மீண்டும் கைதாகிக் காணமற்போன துயரத்தை ‘சிவா’ என்ற கதையும், தேவைகளின் பொருட்டும், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் பொருட்டும் எவ்வளவுதான் ஒட்டி உறவாடினாலும், ஏதோவொரு தருணத்தில் சிங்கள-தமிழ் இனக் குரோதம் பீறிட்டுக் கிளம்பிவிடும் அவலத்தை ‘இரட்டைக் கோபுரம்’ என்ற கதையும், உயர்சாதிப் பெண்ணை மணம்முடித்தபின், தனது குடும்ப உறவைத் துண்டிக்கும் சின்னத்தனம் கொண்ட ஓர் எழுத்தாளனையும், எழுத்துலகச் சிறுமைகளையும் ‘சின்ன மாமா’ என்ற கதையும், சுதந்திரம் என்பது நடைமுறையில் சிங்களவருக்கு மட்டுமே சொந்தமென்பதை ‘ஒரு சுதந்திர நாள்’ என்ற கதையும், என்னதான் தகுதியோ திறமையோ இருந்தும், அணைவும் செல்வாக்கும் இன்றித் தகுந்த வேலை ஒன்றைப் பெறுதல் சாத்தியமில்லை என்ற யதார்த்தத்தை ‘இவன்’ என்ற கதையும், யுத்த அனர்த்தங்களின் பாதிப்புக்களை உணராதவராய், ஊதாரித்தனத்துடன் நடந்துகொள்ளும் மூத்த தமிழ்த் தலைமுறையினரின் மேட்டுக்குடி மனோபாவத்தை ‘கூட்டத்தில் ஒருவன்’ என்ற கதையும், இராணுவக் கெடுபிடிகளுக்குள் சிக்கித் தவிக்கும் சராசரி யாழ்ப்பாணத் தமிழ்க் குடும்பத்தினரின் மனவுணர்வுகளை ‘மரநாய்கள்’ என்ற கதையும் சொல்லிச் செல்கின்றன.

ஒரு நல்ல கதைஞன் என்பவன் தன்னையும் தான் வாழும் சமூகத்தையும் ஆழமாகக் கூர்ந்து அவதானிப்பவன். பிறர் காணாத் தவறும் காட்சிகளுள் புதைந்து கிடக்கும் உட்பொருட்களை உணர்ந்தறியும் ஆற்றல் கொண்டவன். சில காட்சிகளால் திடுக்கிட்டு அதிர்ச்சியடைபவன்; தருணங்களில் தடுக்கி வீழ்ந்து போய்விடுபவன். அவ்வாறான உணர்வனுபவங்களைக் கதைகளாகச் சொல்ல உந்தப்படுபவன். ‘கண்ணீரினூடே தெரியும் வீதி’ கதைத் திரட்டின் ஆசிரியர் தேவமுகுந்தனும் இவ்வகைப்பட்ட ஒரு கதைஞர்தான் என்பதை நிறுவுவதற்கு இவரது கதைகள் தகுந்த ஆதாரங்கள். தமது பருவத்தினருக்கே உரிய இளமை முறுக்கேறிய பார்வைக்கு முரணாக, இவர் தம்மையும் தமது சூழலையும் மிகுந்த கரிசனையுடன் கூர்ந்து கவனித்ததன் விளைச்சல்கள் இவரது கதைகள். ’சின்ன மாமா’ என்ற கதை தவிர்ந்த, ஏனைய எல்லாமே அதீத கற்பனைக் கலப்பற்ற, உண்மை வாழ்க்கைச் சம்பவங்களை அடியொற்றி எழுந்த படைப்புக்கள்.

இலங்கை எமது சொந்த நாடு; கொழும்பு அதன் தலைநகர். ஆனாலும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு நடுத்தர வர்க்க வாலிபனுக்கு, கொழும்பு வாழ்க்கை எத்தகைய அந்நியத் தன்மை மிக்கதாகவும், சமயங்களில் ஆபத்து மிகுந்ததாகவும் இருந்து வந்தது என்பதை அனுபவித்தவர்கள் நன்கறிவர். தேவமுகுந்தனின் இத்திரட்டிலுள்ள ’கண்ணீரினூடே தெரியும் வீதி,’ ‘இடைவெளி,’ ’சிவா’, ‘ஒரு சுதந்திர நாள், ’இவன்’ ஆகிய கதைகள் இந்த உவப்பில்லா உண்மையை உண்மையாகச் சொல்கின்றன. செத்துக்கொண்டிருந்த சிங்கள-தமிழ் இன சௌஜன்யம் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாக அவர் கற்பனை செய்யவில்லை. அல்லது இருக்கவேண்டும் என்று உபதேசம் செய்யவுமில்லை. அவ்வாறு இலட்சியங்களையும் நோக்கங்களையும் இலக்கு வைத்துக் கதை எழுதுதல் கலைத்துவத்திற்கு எதோ ஒரு வகையில் ஊறு விளைவித்துவிடவே செய்கின்றது. நவீனத்துவ சிந்தனையாளர் எஸ்ரா பவுண்ட் சொல்லியது போன்று, “செய்திகளை உள்ளது உள்ளவாறு துல்லியமாகச் சொல்வதே எழுத்தின் அறம்.” இதனை நன்குணர்ந்தவராய், பாசாங்கேதுமின்றித் தமது கதைகளினூடாக உண்மையை உண்மையாகக் காவிச் சென்றிருக்கின்றார், தேவமுகுந்தன். இத்திரட்டிற்கான இயங்கு திசையை தீர்மானிக்கும் மைய நரம்புத் தொகுதியும் அதுதான்!

கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலெழுந்த இலக்கியக் கோட்பாடுகள் ‘அறுபடாத தொடர் உரையாடலாக’ வாழ்க்கையை உற்று நோக்கின. வாழ்க்கையின் உண்மைகள் பல அடுக்குகளைக் கொண்டவை என நம்பின. இந்த உண்மைகளை எடுத்துரைப்பதற்குப் பல்குரல் தன்மை கொண்ட இலக்கிய வடிவங்கள் தேவை என வலியுறுத்தின. யதார்த்தவாதத்தை நிராகரித்த இந்த இலக்கியப்போக்குகள் சிறுகதையிலும் கவிதை போன்று, படிம உருவம் கொண்ட மிகைக் கற்பனையை வலியுறுத்தின. அண்மைக் காலம்வரை தமிழிலும் சிறுகதைப் படைப்பாளிகள் பலர் இந்த அணுகுமுறையைக் கையாண்டு வந்தனர். இந்த அணுகுமுறையில் இன்று ஏற்படத் துவங்கிய தேக்கநிலை காரணமாக, மீண்டும் இயல்புவாத / யதார்த்தவாத சிந்தனைகளை அடியொற்றிக் கதையெழுதும் முறைமையை தேவை கருதியும், மாற்றம் கருதியும் இந்நாளைய படைப்பாளிகள் பலர் பின்பற்றத் துவங்யிருக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வடிவமாகத் திகழ்ந்த இந்த யதார்த்தவாதப் படைப்புகள் உள்ளதை உள்ளவாறு கூறுபவை. இதில் கதைகூறும் ஆசிரியன், கதையின் மையக்கருத்தை உருவாக்கி, வாசகனுக்கு உற்சாகத்தை ஊட்டித் தொடர்ந்து வழங்கியவாறு இருப்பான்.

இத்தகைய சிறுகதைப் பண்புநிலையின் மீள்வருகைப் படைப்புகளாக விளங்குகின்ற வகையில் தேவமுகுந்தனின் சிறுகதைத் தொகுதி மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்வாறாக, சமகாலப் படைப்பிலக்கிய முன்னகர்வுக்கு உதாரணங்களாக விளங்கும் இவரது கதைகள், வலிந்து புகுத்தப்பட்ட வடிவ அலங்காரங்களோ அல்லது சிக்கலான படிமச் சித்திரிப்புக்களோ அற்ற, எளிமையான வடிவமைதி கொண்ட கதைகள். சிறுகதையின் வடிவம்சார் கட்டுடைப்பு முயற்சிகளில் பெரிதும் ஈடுபடாத இவரது சிறுகதைகளுள் ’சிவா’, ‘இவன்’ ஆகிய இரு கதைகள் தவிர்ந்த, ஏனைய எல்லாக் கதைகளின் தலைப்புக்கள்கூட, கதைகளின் உட்பொருளைப் பூடகமாக வெளிப்படுத்தும் இவரது மனப் படிமங்களினதும் ஆக்கவியற் பண்புகளினதும் அடையாளங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இலக்கியங்களுள் ஒப்பீட்டளவில் சிறுகதையே படைப்பாளிகளுக்கு மிகுந்த சவால் மிக்கதும், சமயங்களில் எரிச்சலூட்டுவதுமான ஒரு இலக்கிய வடிவமாகும். வெகு இலகுவாக எழுதப்பட்டிருப்பது ‘போலத் தோன்றுவது’ ஒரு நல்ல சிறுகதையின் தன்மை. ஆனால் அது எழுதப்பட்டிருப்பது போலவே எப்போதும் வாசகனால் படிக்கப்படுவதில்லை. எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லினூடாகவும் வரியினூடாகவும் வாக்கியத்தினூடாகவும் வாசகனின் தன்மைக்கேற்ப அச்சிறுகதை தொடர்ந்து விரிந்து, வளர்ந்து, செல்லும் பண்பினைக் கொண்டது. வாழ்வின் நிதர்சனங்களைப் பலதடவைகள் பல்வேறு வடிவங்களில் ஓங்கி எதிரொலிக்கும் உயிர்ப்புடன்கூடிய உயிர்ச் சாரத்தைக் கொண்டது. இத்தகைய ஒரு நல்ல சிறுகதையைத் தொடர்ந்து வாசித்துச் செல்லும் வாசகனும் தன்மட்டில் கற்பனை செய்கிறான்; தனக்குள் ஒரு படைப்பாளியாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டே போகின்றான். இவ்வாறாக ஒரு தேர்ந்த வாசகன் தன் கற்பனையை வளர்த்துக் கதையை மனதுக்குள் தொடர்ந்து எழுதிக்கொண்டு போகவதற்கான கதவுகளைத் திறந்து விடும் விதத்தில் தேவமுகுந்தனின் பல கதைகள் அமைந்துள்ளன.

”நாளைக்கு குமுது அங்கிளோடை வீட்டுக்குப் பக்கத்திலை நடக்கப் போகின்ற செத்த வீடுகளுக்குப் போக வேண்டும். கண்ணீரினூடே வீதி தெரிகிறது.

வெண்புறாக்களாய் சீருடை அணிந்த பாடசாலைப் பிள்ளைகளை ஏற்றிய வாகனங்கள் காலி வீதியில் ஊர்கின்றன. அந்த வாகனங்களை விலத்தியபடி அவலக் குரலெழுப்பி அம்புலன்ஸ் வண்டிகள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி விரைகின்றன.

வானம் வேறு அழுது தொலைக்கின்றது” என முதலாவது கதையின் முடிவிலும் –

“….. வாழைகளுக்குப் பாத்தி கட்டிக்கொண்டிருந்த தமயன் மண்வெட்டியைக் கீழே போட்டுவிட்டு நிதானமாகச் சொன்னான், ’மரநாய்களைத் துரத்த வேண்டும்’ ” எனக் கடைசிக் கதையின் முடிவிலும் –

கூறப்பட்டுள்ளது போன்று, இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் வாசகன் மனதில் ஏதோவொரு திகைப்புணர்வை ஏற்படுத்தி, தொடர்ந்து மென்மேலும் கற்பனையை வளர்த்துச் செல்லத் தூண்டியவாறு முற்றுப் பெருகின்றது.

’ஒரு நல்ல சிறுகதை என்பது மகத்தானதோர் புரிதல் உணர்வின் கணப்பொழுது’ என ஜோசஃப் ஓகோர்னர் எனும் பிரபல ஈரிஷ் எழுத்தாளர் கூறுகின்றார். இலங்கை வரலாற்றின் நெருக்கடிமிக்க போர்க்கால வாழ்வின் அச்சமும் அவநம்பிக்கையும் நிறைந்த அந்தக் கணப்பொழுதுகளை – குறிப்பாக கொழும்பு பிரதேசத்தில் வாழ்ந்த தமிழரின் வாழ்வியற் சிக்கல்களின் கணங்களை – இத்திரட்டிலுள்ள கதைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. கொழும்புவாழ் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வுசார் அசைவியக்கத்தின் கணப்பொழுதுகளைச் சித்திரிப்பதன்மூலம் அச்சமூகத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறை பற்றிய தெளிவுணர்வை அல்லது புரிதலுணர்வை இக்கதைகள் மனதுள் கிளர்த்துகின்றன. இதன்மூலம் குறிப்பிட்ட அக்காலகட்ட வரலாற்றுப் பின்னணியின் ஆவணப் பதிவாகும் தகுதியையும் இக்கதைகள் பெறுகின்றன.

மேலும் கோபம், சோகம், விரக்தி, நிராசை, எமாற்றம், இயலாமை, அதிர்ச்சி போன்ற மனவுணர்வுகளுக்கு மத்தியிலும் தேவமுகுந்தன் தனது எழுத்து நடையில் – உணவுக்கு அளவாக உப்பிடுவது போல – ஆங்காங்கே பயன்படுத்தியிருக்கும் எள்ளல் சுவை மிகுந்தது; சுவாரசியமானது. முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு ‘சீரியஸாக’ கதைசொல்லும் ஈழத்தவரது பொதுப் பாணியைத் தேவைக்கேற்ற வகையில் தேவமுகுந்தன் இத்திரட்டில் மீறியிருக்கின்றார்.

“இலக்கிய விமர்சனக் கூட்டங்களைப் பாராட்டுக் கூட்டங்களாக மாற்றியமைக்கும் விமர்சகர்கள் போல” என்றும் –

“பத்திரிகைகளில் வெளியாகும் விளம்பரங்களில் – ‘மணமகன் தேவை’ விளம்பரம் தவிர்ந்த பெரும்பாலான விளம்பரங்களில் முன் அனுபவங்களை எதிர்பார்க்கிறார்கள்” என்றும் –

”வீட்டு உரிமையாளர்கள் சிங்களவராயிருந்தாலென்ன தமிழராயிருந்தாலென்ன முஸ்லிங்களாயிருந்தாலென்ன – வேலையில்லாத தமிழ் இளைஞனுக்கு அறை கொடுப்பதில்லை என்பதில் ஒரே கருத்தைக் கொண்டிருந்தார்கள். இலங்கையில் மூவினத்தவர்களும் ஒரே கருத்தைக் கொண்டிருக்கும் விடயம் இதுவொன்றுதான்” என்றும் –

ஞானப்பிரகாசம் மிஸ்ஸிடம் படித்த ஒளித்தெறிப்பு விதிகளை வழுக்கைத் தலைகளில் பிரயோகித்துத் தன் எரிச்சலைத் தீர்த்துக் கொள்ளவென – “ஒப்பமான மேற்பரப்புக்கு மட்டுந்தான் இரண்டாவது விதி பொருந்துமென்றால் இவர்களின் வழுக்கைத் தலைகள் ஒப்பமானவையா?” என்றும் –

சிந்தனையைத் தூண்டும் விதமாக, விமர்சனச் சீற்றத்துடன் எள்ளலாடியுள்ளமைக்கான இவை போன்ற உதாரணங்கள் இத்திரட்டில் நிறையவுண்டு.

சிறந்த சிறுகதைகள் பலவற்றை உள்ளடக்கியிருக்கும் இத்திரட்டில், ‘கண்ணீரினூடே தெரியும் வீதி,’ ‘சிவா,’ ‘மரநாய்கள்,’ ‘இரட்டைக்கோபுரம்’ என்பன என்னை வெகுவாகக் கவர்ந்த கதைகள் என்பேன். இக்கதைகளைப் படித்து முடித்தபோது ஏற்பட்ட அதிர்வுகளுக்கும் உணர்வுகளுக்கும் இவற்றுள் விதைக்கப்பட்டுள்ள கருப் பொருட்கள், வந்துபோகும் இயல்பான பாத்திரங்கள், அவற்றை வழிநடத்திச் செல்லப் பயன்படுத்திய உத்திமுறை, மொழிநடை, பின்னணிச் சூழல், மென்மையான படிமங்கள் என்பன எல்லாமே காரணங்களெனலாம். இவையனைத்துக்கும் மேலாக, இந்நான்கு கதைகளில் காணப்படுவதைப் போன்று, இவரது எல்லாக் கதைகளிலும் எங்கோ ஓரிடத்தில் புதைந்து கிடக்கும் ஒரு மெல்லிய வலிதான் இக்கதைத் திரட்டுக்குக் கனதியைக் கொடுக்கின்றது.

மேற்குலகில் சிறுகதையின் நிகழ்காலம், எதிர்காலம் குறித்து எதிரும் புதிருமான கருத்துநிலை காணப்படுகின்றது. தமிழ் இலக்கியச் சூழலைப் பொறுத்தவரை, சிறுகதைக்கெனப் புதுமைப்பித்தனால் துவக்கி வைக்கப்பட்ட செழுமைச் செல்நெறி, இற்றைவரை காத்திரமாக முன்னோகி நகர்ந்தவண்ணம் உள்ளதென்றே நம்பப்படுகின்றது. அந்த நம்பிக்கையின் அடையாளமாக தேவமுகுந்தனின் ‘கண்ணிரினூடே தெரியும் வீதி’ விளங்குகின்றதென்பது ஆறுதல் தரும் செய்தியாகும்.

———————— ‘கலைமுகம்’ – இதழ் 56; ஒக்ரோபர்- டிசெம்பர் 2013

Friday, August 30, 2013

ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா

சிறுகதை என்றால்.....??

************************* இப்படித்தான் அமைய வேண்டும் என்று திட்டவட்டமாக வரையறுக்க முடியாது.. வரையறைகள் இவைதாம் என்று நாம் இங்கே எழுதிக் கொண்டிருக்கும்போதே இவற்றையும் மீறி ஏதாவது ஒரு சிறுகதை எங்கேயோ ஒரு மூலையில் பிறந்து விடலாம்.

“அது ஒரு புதிய இலக்கிய வடிவத்தின் பெயர்” -பிராண்டர் மாத்யூ

“சுருக்கமும் செறிவும் சிறுகதைப் பண்புகள்” -ஜேம்ஸ் கூப்பர் லாரன்ஸ்

“கதை முடியும் வரை வாசகனின் கவனம் கலைந்துவிடக்கூடாது” -எட்கர் ஆலன்போ

“குதிரைப் பந்தயம்போல, தொடக்கமும் முடிவும் சுவை மிக்கதாக இருக்க வேண்டும்” - எல்லரி செட்ஜ்விக்

“எளிய கருப்பொருளைக் கருவாகக் கொள்ளுதலே சிறப்புடைத்து” -செகாவ்.

தமிழ் சிறுகதையின் சித்தர் புதுமைப் பித்தன்.. “சிறுகதையின் வடிவம் கதை எழுதுபவரின் மனோதர்மத்தைப் பொறுத்தது.

நமது பேராசிரியர் சிவத்தம்பி... “சிறுகதை ஒரு குறிப்பிட்ட மனோ நிலையை அல்லது உணர்வு நிலையைக் காட்டுதல் அவசியம்” சுஜாதா சொல்லுகிறார், (இன்னும் கொஞ்சம் சுவையாக இருக்கிறது...)

“கதையும் தேவையில்லை!கதை மாந்தரும் தேவையில்லை!நன்கு ஒழுங்கு படுத்தப்பட்ட ஒரு கட்டுரைதானும் நல்லதொரு சிறுகதையாகலாம்!” எது எப்படியோ “சிறுகதை என்பது வாழ்க்கையின் சாளரம்” தொடக்கம், மையச் சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்.

இவை எல்லாவற்றையும் விட..கதை சொல்ல எடுத்துக்கொண்ட கருப்பொருள்?எப்படி கதை சொல்லுகிறார் ?(உண்மையில் கதைதான் சொல்லுகின்றாரா?? இல்லை கதை விடுகின்றாரா??)இவரின் நோக்கம் நிறைவேறி இருக்கின்றதா ?கதாசிரியரின் கலையாற்றல்... கற்பனைத்திறன்... சொல்லாட்சி... அவர் சொல்ல விரும்பும் செய்தி என்ன??

இவ்வளவும் இலக்கண வரம்புகளை விடவும் மிகமிக முக்கியமானவை.

இவற்றை உரைகற்களாக வைத்துகொண்டு தேவமுகுந்தனைக் கொஞ்சம் உரசிப்பார்ப்போம்!!

“கண்ணீரீனூடே தெரியும் வீதி...”

***************************************** கல்லினில் மட்டுமல்ல சொல்லினாலும் சிற்பங்கள் செதுக்கமுடியும்!ஆச்சரியம் வேண்டாம்....!!இதோ செதுக்கிக் காட்டுகின்றார்இந்தச் சிறுகதைச்சிற்பி!

“பேச்சுத்துணைக்கு ஆட்களில்லாமல் தனிமையில் அறையின் சுவர்களைப் பார்த்தபடி இருப்பது மகா கொடுமை...”

.................... பல்கலைக்கழகம் பூட்டப்பட ரஞ்சனும் சிவாவும் திருகோணமலை போய்க் கப்பலேறி யாழ்ப்பாணம் போயினர். ஜெபனும் புவியும் இரத்மலானை போய் விமானம் ஏறி யாழ்ப்பானம் போயினர். ஜீவாவும் நடேசும் பஸ் ஏறி மட்டகளப்பு போயினர். கோணேசும் வசந்தனும் ரயிலேறி திருகோணமலை போயினர். ரமணனும் குகாவும் ரயிலேறி வவுனியா போயினர். ஈஸ்வரனும் ரங்கனும் நுவரெலியா போயினர். எல்லோரும் தங்கள் வீடுகளுக்குப் போயினர்... நான் எங்கு போவது....

ஒபரேசன் ஜெயசிக்குறு தொடங்கிய பிறகு போய்வரக்கூடிய நிலையிலா கிளிநொச்சி உள்ளது?”

இது ஒரு போர்க்காலப் பரணி! தமிழனின் தன்மானத்தை உரசிப்பார்க்கும் ஒரு வரலாற்றுப் பதிவு!

போர் எமக்கு மட்டுமல்ல... அவனுக்கும் இழப்புக்களைத் தந்திருக்கின்றன.. என்பதனை மிகஅழகான சொற்கள் கொண்டு மிகவும் நுட்பமாகச் செதுக்கியுள்ளார்!

“வழிகாட்டிகள்!”

“இவர்களுக்கு யாழ்ப்பாணத்தைத் தாண்டிவிட்டால் தமிழ் மறந்துவிடுகிறதா??

......... “ஒல்லிகளை முட்டுக்காய்களைப் பின்னால் மறைத்து வைத்துவிட்டு நல்ல ஒரிரண்டு தேங்காய்களைக் காட்சிக்கு வைத்துக் காட்டி எல்லாத் தேங்காய்களையும் விற்றுத்தள்ளும் ஒரு தேங்காய் வியாபாரி போன்று வாமதேவன் இந்திரன் மனதில் தோன்றினார். வருமானம் குறைந்த பெற்றோரின் பிள்ளைகளுக்கு உதவிப் பணம் வழங்குவதற்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று பெற்றோரின், பாடசாலைகளின், கல்வி அதிகாரிகளின் கெளரவத்தைப் பறைசாற்றப் பயன் படுகின்றதாய்...”

தமிழனின் கல்வி முறைகள் தவறுதலாகப் பயன்படுத்தப் படுதலையும், அது மிகவும் தவறான முறையில் வழிகாட்டப் படுதலையும் தனக்கேயுரித்தான பாணியில் பதிவு செய்கின்றார்.

தமிழனின் கல்விமுறைகள் வேண்டுமென்றே சீரழிக்கப்படுகின்றன என்பதையும் கூறாமல் கூறிச் செல்லுகின்றார்.

“இடைவெளி”

“தான் அலுவலகத்திற்குச் சமூகமளிக்காத நாட்களில் கொழும்பில் குண்டு வெடிப்புகள் இடம்பெறுவதற்கான நிகழ்தகவு மிகவும் உயர்வாக இருப்பதன் காரணம் என்ன என்ற வினா, அவன் மனதில் எழுந்துகொண்டிருக்கிறது. காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாய் இவ்வருடத்தில் இவன் லீவு எடுத்திருந்த ஐந்து நாட்களில் மூன்று நாட்களில் நகரத்தில் குண்டுகள் வெடித்திருந்தன. முதல் நாளில் பகிடியாகக் கதைத்தவர்கள் இப்போது இவன் மேல் கோபப்படத் தொடங்கியுள்ளார்கள்”

தலைநகரத்தில் தமிழனின் தலை அடிக்கடி உருட்டப் படுவதை மிகவும் இலாவகமாக கூறிச் செல்லுகின்றார்.

“சிவா”

“என்னிலை பிழையில்லையெண்டு கண்டு பிடிக்க இவங்களுக்கு ஆறு வருசம் எடுத்திருக்கு மச்சான்” ................ காக்கிச்சட்டைகள் ஒவ்வொரு மாணவரினதும் அடையாள அட்டையை வாங்கிப் பார்க்கிறார்கள். பெரேராக்கள், பெர்னாண்டோக்கள், சில்வாக்களை விட்டுவிட்டு, அமுதன், ராகவன், குகன், கிரி, உமா, தேவகி ஆட்களை வரிசையில் விடுகிறார்கள்.

............... “வரிசையில் எனக்கு முன்னால் குகன், சீலன், ரமேஸ், இளங்கோ, வான்மதி, ரதி ஆட்கள் பைல்கள் புத்தகப் பைகளுடன் தலை கவிழ்ந்து நிற்கிறார்கள். எழுபது எழுபத்தைந்து பேர் இருக்குமோ?”

இந்த மண்ணில் தமிழனாய்ப் பிறந்ததே ஒரு சாபக்கேடு! அதிலும் இன்னும் தமிழனாய் வாழ்வதே பெரும்பாடு!! இது தமிழன் வாழ்வதற்குரிய நாடேயல்ல...

என்ற எண்ணத்தை... இவர் தெரிந்தோ தெரியாமலோ வாசகனின் மனதில் விட்டுச் செல்லுகிறார்.

“இரட்டைக் கோபுரம்”

“…. மயில் இறகு அச்சடிக்கப்பட்டிருந்த சேலை அணிந்து லிப்ஸ்டிக் பூசியிருந்த இளம்பெண் அந்நேரத்திலும் சிரித்தபடி, ‘ப்ளைட் கன்சல்’ என்று சொல்லி கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட் ஒன்றை நீ

ட்டினாள். கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தர்க்கப்பட்டு மோதல்கள் நடைபெறுவதாய்.....”

.......... “பற தெமிளு”... சுனில் சொன்னான். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை....”

உள்ளூரில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இனவாதம் எவ்வளவுக்கு தூபமிடப்பட்டிருக்கின்றது என்பதனைத் தனது அனுபவமாகக் கூறுகின்றார்.

“சின்ன” மாமா

“அந்தச் சோடிக் காப்புகள் அம்மா கிடுகு பின்னியும், தேங்காய் மட்டைகளைக் கடலில் ஊறவைத்து, பின்னர் அதை எடுத்துத் தும்பாக அடித்து, கயிறாகத்திரித்து விற்றுவந்த பணத்தில் மீட்கப்பட்டதாக இவன் அறிந்திருந்தான். மாமாவின் பல்கலைக்கழகச் செலவுகளுக்காக அச்சோடிக்காப்புகள் அடிக்கடி காசிப்பிள்ளையாரின் வீட்டில் அடகு போய்ப் பின்பு மீட்கப்பட்டு வரத்தொடங்கின”

............ “சிறுதும்பும் கயிறாகும்” வெளியாவதற்காக அம்மாவின் அச்சோடிக்காப்புகள் காசிப்பிள்ளயரிடம் அடகு வைக்கப்படவில்லை. குமாரசாமியரிடம் விற்கப்பட்டன....”

ஒரு எழுத்தாளனின் போலிகளை சுரம்பிரித்துக் காட்டுகின்றார்.

“ஒரு சுதந்திர நாள்”

“ஹொஹெத யன்னே?” இவன் நடக்கையில் இராணுவ வீரனொருவன் கேட்டான்....

‘மம கடையட்ட யன்னே...” குரல் தடுமாறுவது போலிருந்தது.. உச்சரிப்பை வைத்து இவன் தமிழன் என்பதை கண்டு பிடித்துவிட்டானோ!

“ஐசி தெண்ட..”

அரை மணித்தியாலமாய் இவனது தேசிய அடையாள அட்டை, பொலிஸ் பதிவுத் துண்டு, பல்கலைக்கழகப் பதிவுப்புத்தகம் என்பவற்றைப் புரட்டிப் புரட்டிப் பார்த்து விசாரித்த இராணுவ வீரன் என்ன நினைத்தானோ இவனைப் போக அனுமதித்தான். தப்பியது போதும் போலிருந்தது. தமிழன் என்பதற்காய் நடுவீதியில் வெய்யிலில் வைத்து விசாரிக்கிறானே!

தேசியக் கொடியொன்றை முன்னால் பறக்க விட்டபடி கல்கிசைப் பக்கமாய்ச் சென்ற பஸ் ஒன்றினுள் இளைஞர் யுவதிகள் சிங்களப் பொப்பிசைப் பாடலொன்றை பாடியபடி நடனமாடிக் கொண்டிருந்தனர். சுதந்திர தின விடுமுறையை அனுபவிக்க எங்கோ சுற்றுலா செல்கிறார்கள் போல..

......... “சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் இணைந்து போராடிப் பெற்ற சுதந்திரம் நாட்டு மக்கள் அனைவருக்குமுரியது.. என ஜனாதிபதி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டதாய்....”

மானமுள்ள ஒவ்வொரு தமிழனையும் இந்தச் சிறுகதை சீண்டிப் பார்க்கிறது!

“இவன்”

“தம்பி உமக்கு இன்னும் வேலை கிடைக்கேலையோ... கொழும்பிலை வேலை எடுக்கிறதெண்டால்... ‘நல்ல இங்க்லீஷ் நோலேஜ்’ வேண்டும். எதுக்கும் உம்மடை பயோ டேட்டாவைத் தாரும். தம்பியிடம் கொடுக்கிறேன்.. அவனுக்கு நல்ல செல்வாக்கிருக்கு...”

.......... இவன் பல்கலைக்கழகத்தில் இங்க்லீஷ் மீடியத்தில் படித்தான் என்பதையோ, இவனது சில ஆய்வுக் கட்டுரைகள் எக்கொணமிக்கா, எக்கொணமிக்ஸ் றிவியு போன்ற சஞ்சிகைகளில் வெளியானதையோ இவர்களுக்குச் சொன்னால் நம்பவா போகிறார்கள்?

போலிச் சமுதாயத்தை தோலுரித்துக் காட்டுகின்றார்.

“மரநாய்கள்”

இது ஒரு உருவகக் கதை. இந்திய இராணுவம் இருந்த காலத்தில் நடந்திருக்கிறது. கோழி பிடிப்பது மரநாய்கள் மட்டுமல்ல இந்திய இராணுவமும் தான் என்பதையும் அதனை மிக விரைவில் விரட்டவேண்டும் என்பதையும் கதை கூறிச் செல்கிறது. முடிவாக... மிகவும் அற்புதமான கதைகளைத் தன்னகத்தே கொண்டு மிளிர்கின்றது இத்தொகுப்பு. இவர் கற்பனைகளில் இக்கதைகளைச் சொல்லவில்லை. அவ்வளவும் மிக மிக அற்புதமான அனுபவங்களையே அள்ளித் தெளித்திருக்கின்றார். நான் சுரண்டி எடுத்துவந்தவைகள் கொஞ்சம்!! ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான அனுபவங்களைக் சுமந்து நிற்கும் சொற்களின் சுரங்கம் என்றால் அது மிகையன்று! இது ஒவ்வொரு தமிழனின் அனுபவங்கள் என்றாலும் அது நகையன்று! இவர் கண்ட அனுபவங்கள் பல எம்மையும் தாண்டிச் சென்றிருக்கின்றன. இல்லை... நாமும் தாண்டித்தான் வந்திருப்போம்! ஒவ்வொரு கதையையும் படிக்கும்போது அந்தக் கதா நாகயகனின் உணர்வுகளை நாமும் பெறுகின்றோம். இதுவே இவரின் எழுத்தாற்றலுக்குக் கிடைக்கும் முதல் வெற்றியாகும். கதை சொல்லும் திறன் இவருக்கு நன்கு அமைந்திருக்கின்றது. இதற்கு இவரது பட்டயக்கல்வியும் பட்ட அறிவும் நன்கு கை கொடுத்திருக்கின்றது. இத்தகைய இளம் எழுத்தாளர்களை தமிழ்கூறும் நல்லுலகம் வளர்த்தெடுக்கவேண்டும்! மீண்டும் சொல்லுகிறேன்.. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான அனுபவங்களைக் சுமந்து நிற்கும் சொற்களின் சுரங்கம் என்றால் அது மிகையன்று! இது ஒவ்வொரு தமிழனின் அனுபவங்கள் என்றாலும் அது நகையன்று!

இந்த இளம் கலைச்சிற்பிக்கு வாழ்த்துக் கூறுவதில் என்தமிழ் பெருமை பெறுகின்றது!!

Sunday, May 19, 2013

ந.இரவீந்திரன்

கருதியல்களின் இணைப்பு: தேவ முகுந்தன் சிறுகதைகளை முன்னிறுத்தி ஒரு தேடல் தேவ முகுந்தனின் "கண்ணீரினூடே தெரியும் வீதி..."

சிறுகதைத்தொகுதியைப் படித்துக்கொண்டிருந்தபோது முகநூலில் ஒரு விவாதம் போய்க்கொண்டிருந்தது. ஒரு மையச் சரடு சார்ந்து பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன. கன்னட இலக்கியச் சூழல் மார்க்சிய-காந்திய இணைப்புடனான யு.ஆர்.அனந்தமூர்த்தியைத் தந்ததுபோல டானியல் அமைய இயலாமல் போனது அன்றைய விமர்சன-கருத்தியல் வடிவப்படுத்தலை மேற்கொண்ட கைலாசபதி இழைத்த தவறா என்பது மையச்சரடாக அமைந்த பேசுபொருள். கருத்தியல் தளத்தில் திறனாய்வுப் பங்களிப்பினூடாக செயற்பட்ட கைலாசை இலக்கியப் பங்களிப்பு என்கிற வகையில் நெருக்கம்கொண்டிருந்த அளவைக் காட்டிலும் சாதியத் தகர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த கொம்யூனிஸ்ட் கட்சித் தளத்தோடான நெருக்கம் டானியலுக்கு அதிகமாயிருந்தது. அதன் காரணமாக அரசியல்வாடை அவர் படைப்புகளில் முனைப்பாகி இருந்தது; அதை மட்டுப்படுத்தி, இலக்கியத் தளம் என்ற புரிதலை உணர்த்தத் தவறி அழகியலற்ற ஆக்கத்தை வழங்கியதை அங்கீகரித்த தவறை கைலாஸ் செய்தார் என்பதே குற்றச்சாட்டு.

அரசியல் இலக்கியம் என்கிற வகைப்பாட்டை ஆரோக்கியமானதாக வளர்த்தெடுக்க கைலாசபதி, ஏ.ஜே.கனகரத்னா, சிவத்தம்பி, ஏச்.எம்.பி.மொஹிதீன் எனப்பலர் அன்று விமர்சன-கருத்தியல் தளத்தில் இயங்கினர்(அனைவரது செயற்பாட்டுக்குமான குறியீடாக 'கைலாஸ்' அங்கே கொள்ளப்பட்டிருந்தார்). அதன் பேறாக டானியல் உட்பட பலரும் ஆக்க இலக்கியத்தில் செயலாற்றி வலுவான படைப்புகளை வழங்கினர்(அவர்கள் அனைவரதும் குறியீடாக 'டானியல்' கொள்ளப்பட்டிருந்தார்). அவற்றை நிராகரிக்க இயலாது என்பதை ஏற்று, வாழ்க்கை சார்ந்த இன்னும் பரந்த பார்வையுடனான கருத்தியல்களுடன் அந்தப்படைப்புகள் வெளிப்பட்டிருக்கவேண்டும் என்ற ஆதங்கமே அந்த விவாதத்தில் முனைப்பாகியிருந்தது.

இலக்கிய, அரசியல் தளங்களில் விவாதப் பொருள்களாயிருந்த பேசுபொருட்களையும் மீறி டானியல் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் படைப்பாக்கியிருந்தார். அது படைப்பாளிக்குரிய ஆளுமை. இலக்கியத் தளத்தில் செயற்பட்ட விமர்சகர்கள் அதன் அழகியல் பரிமாணம் குறித்து பேச இயலும் என்கிற வகையில் "தமிழ் இலக்கியத்துக்கு புதிய மைல்கல் டானியலின் 'பஞ்சமர்' நாவல்" எனக் கூறி வரவேற்பைக்காட்டும் கைங்கரியத்தையே செய்யவியலும் என்கிறவகையில் கைலாஸ் அப்பணியைச் சிறப்பாகச் செய்திருந்தார். அவ்வாறே அரசியல் தளத்தில் செயற்பட்டவர்கள் சாதிவாதப் பார்வை மேலோங்கியிருந்ததை வெளிப்படுத்தவேண்டியிருந்தது; அதன்பேறாக "கானல்" போன்ற இறுதி நாவலில் மார்க்சியப் பார்வையை அதிகம் வரித்து ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வைப் படைக்க அவருக்கு இயலுமாயிற்று.

எமது சூழலில் காந்தியத்தை நிராகரித்து மார்க்சிய வழியில் சாதித்தகர்ப்புப் போராட்டம் "தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தால்" முன்னெடுக்கப்பட்ட உச்சநிலையில் செயற்பட்ட அனுபவங்களை உள்வாங்கியபடி அத்தளங்களில் இயங்கிய மக்களின் வாழ்வைப் படைப்பாக்க முனைகையில், காந்தியம் நிராகரிப்புக்குரிய கருத்தியலாக டானியலுக்கு இருந்தமை புரிந்துகொள்ளத்தக்கதே. இதே போன்றே மராட்டியச் சூழலில் தலித் இலக்கியம் எழுபதுகளில் முனைப்படைந்தபோது (அதற்கான வேர் முன்னதாக வெளிப்பட்ட நாளிலிருந்து) மார்க்சியம் அங்கே சாதித் தகர்ப்புப் பணியை மேற்கொள்ளாமையால் மார்க்சிய நிராகரிப்பு அங்கே தலித் இலக்கிய கர்த்தாக்களிடம் இருந்தது. ஒடுக்கப்பட்ட(தலித்) மக்களின் தலைவராக இயங்கிய அம்பேத்கரை ஏற்காமல், 'இந்துக்களாக' உள்ள அந்த 'ஹரிஜன' மக்களுக்கும் தானே ஏகப்பிரதிநிதி எனக் காந்தி செயற்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை இயக்கத்துக்குப் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தினார் என்கிறவகையில் காந்தியின் கருத்தியலையும் தலித் இலக்கிய கர்த்தாக்கள் நிராகரித்து வந்தனர். இன்று தலித் இலக்கிய வளர்ச்சிப்போக்கின் பல்வேறு இயக்கப்போக்குகள் மக்களின் விடுதலைக்கு போதிய பங்களிப்பை நல்கத் தவறிய நிலையில், அது அம்பேத்கர் சிந்தனையுடன் மார்க்சியம், காந்தியத்தையும் உள்வாங்குவது அவசியம் என்பது பேசப்படுகிறது(இவ்வகையில் சரண்குமார் லிம்பாலேயின் "தலித் இலக்கியம் விடுதலையின் திசைகள்" எனும் நூல் கவனிப்புக்குரியது).

எமது மார்க்சிய இலக்கிய வளர்ச்சியும் இன்றைய கட்ட கருத்தியல்களாயுள்ள பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தியம் என்பவற்றை உள்வாங்கியவாறு தனது பார்வை வீச்சை விசாலப்படுத்தி வருகிறது. அதைவிடவும் எமக்கான சாதியச் சமூக அமைப்பின் பிரத்தியேகத் தன்மைக்கு அமைவாக மார்க்சிய உலக நோக்கை எவ்வகையில் வளர்த்தெடுத்துப் பிரயோகிப்பது என்பது குறித்த விவாதம் மார்க்சியக் கருத்தியலை மேலும் ஆழப்படுத்தியிருக்கும் கட்டத்தையும் அடைந்துள்ளோம். முற்போக்கு இலக்கிய இயக்கம் ஐம்பதுகளில் தொடங்கி மூன்று தசாப்தங்கள் வீறுடன் செயற்பட்ட அனுபவ அறுவடையாக, பின்னரான மார்க்சியக் கருத்தியல் விவாத வளர்ச்சி இன்றைய விருத்தியைப்பெற்றுள்ளது. இத்தகைய புதிய கருத்தியல் தளத்தில் இருந்தவாறாக தேவ முகுந்தனின் சிறுகதைகளை அலசுவோம்.

-1- முன்னதாக தேவமுகுந்தன் மார்க்சிய இலக்கியத் தளத்தைக் குறித்த எந்த அபிப்பிராயத்தையும் வெளிப்படுத்தி தனது ஆக்க இலக்கியப் பணியை மேற்கொள்ளவில்லை என்பதைக் குறிப்பிடுவது அவசியம். மேலே வலியுறுத்திய விடயம் இன்றைய இணைப்புக் கருத்தியல் என்பது மார்க்சிய அழகியல் விருத்தி தொடர்பாக முன்வைக்கப்பட்டது மட்டுமே. மார்க்சிய இலக்கியம் என்பது முற்போக்கு இயக்கத்தின் வெளிப்பாடாக படைப்பாக்கப்பட்ட எண்பதுகள் வரையானவற்றில் அழகியலே இல்லை என்றவர்கள் இன்று தமது நிராகரிப்பை வாபஸ்வாங்குவது கவனிப்புக்குரியது. அதற்காக, அழகியலை முன்னிறுத்தியவர்களதும் முற்போக்காளர்களதும் தளம் ஓரே இடத்தை நெருங்கிவிட்டது என்று கூறவரவில்லை. தவறான புரிந்துணர்வுகளைக் கூடியவரை களைந்துகொண்டு ஐக்கியப்பட்டு செயலாற்ற ஒரு வெளி ஏற்பட்டுவருவதை அவதானிக்க இயலும். இதனைக் காட்டும் படைப்பாக "கண்ணீரினூடே தெரியும் வீதி..." தொகுதியைக் கொள்ள இயலும்.

"சிறுகதைகளின் மூலம் நான் புதிதாக எதனையும் கூற முற்படவில்லை. என்னைப் பாதித்த அனுபவங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தச் சிறுகதைகளை எழுதினேன்" என என்னுரையில் கூறும் ஆசிரியரை இலகுவில் புரிந்துகொண்டுவிடுகிறோம். புதுமைப்பித்தன் இதே போன்று தனது படைப்புகள் அப்படியொன்றும் சமூக விமோசனத்துக்கானது அல்ல என்று கூறியதன் அடிப்படை குறித்து ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது. அழகியல் வாதத்துக்கான ஒரு முன்னோட்ட பிரகடனம் இது. சமூக மாற்றத்துக்கானது இலக்கியம் என்ற பிரக்ஞ்சையுடன் படைக்கிறோம் என்கிற முற்போக்கு இலக்கியகர்த்தாக்களின் வாழ்க்கை அனுபவ வெளிப்பாட்டில், சமூக மாற்றத்துக்கான அவசியம் சார்ந்த அம்சங்கள் வடிகட்டப்பட்டதாய் படைப்பாக்கம் அமைகிறபோது உண்மைத்தன்மை அற்றுப்போகிறது என்பது அழகியலாளர்களின் குற்றச்சாட்டாகிறது. இவ்வாறு கோட்பாட்டை முன்னிறுத்துவது அழகியலுக்கு கேடானது என்பது அவர்கள் கருத்து. கோட்பாட்டை நிராகரிக்கும் அவர்களது அனுபவவாதப் படைப்புகள் சமூக மாற்றத்துக்கு விரோதமாகி, பிற்போக்குவாதிகளுக்கு உதவுகிறது என்பது முற்போக்காளர்களின் குற்றச்சாட்டு.

அழகியல்வாதப் படைப்புகள் அனைத்துமே பிற்போக்குப் பண்புக்குரியன அல்ல என்பது போலவே, முற்போக்குப் படைப்பாளர்கள் அனைவருமே முற்போக்கான சமூக மாற்றத்துக்கு உரியவர்களாக இல்லை என்கிற உண்மையையும் மறுத்துவிட இயலாது. தேவமுகுந்தன் முற்போக்கு அணி மீது நம்பிக்கைகொள்ள முடியாத ஒரு படைப்பாளியைத் தனது ஊரிலே அடையாளம் காண்கிறார். " 'சின்ன' மாமா" என்கிற கதையில், கதைசொல்லியின் மாமாவாக அந்த முற்போக்குப் படைப்பாளி காட்டப்படுகிறார். அந்த மாமா தனது அண்ணாக்கள் அக்கா(கதைசொல்லியின் அம்மா) ஆகியோரைச் சுரண்டி வாழ்வில் உயர்ந்து பெரும் அதிகாரியாகி, வசதியான இடத்தில் திருமணம் செய்ததோடு பெற்றவர்களையும் சகோதரர்களையும் மறந்துவிட்டவர். பணியிடத்தில் ஊழல் செய்து வேலையை இழந்து, முழுநேர எழுத்தாளாராக எழுதிக்குவித்து சம்பாதித்தவர். அவரது வாழ்க்கை குறித்து என்ன விமர்சனம் இருந்தாலும் அவரது படைப்புகள் உன்னதமானவை என அவரது மறைவையொட்டி அஞ்சலிக்கூட்டத்தில் பேசப்படுவதைக் கதைசொல்லி கேட்கிறான். முடிவாக, சமைப்பவர்களின் நோய் உண்பவர்களைத் தாக்க இடமுள்ளது என்பதைக் காட்டி, படைப்பாளியைப் பார்க்காமல் படைப்பை அணுகவேண்டும் என்ற கோட்பாட்டின் தவறு உணர்த்தப்படும்.

இதுகுறித்து முற்போக்கு இலக்கியகர்த்தாக்களிடமும் விவாதம் இருந்தது. தனது வாழ்வுக்கு எவ்வளவுக்கு விசுவாசமாக உள்ளாரோ அந்த அளவுக்கே அவரது படைப்பும் காத்திரமானதாக மட்டுமன்றி உண்மைத்தன்மையானதாகவும் இருக்கவியலும். டானியலின் படைப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை வெளிப்படுத்திய அற்புதமானவை எனக் கூறும்போதே, அவர் வலியுறுத்துகிறவாறாக மார்க்சிய நோக்கில் அவை அமைய இயலாத பலவீனத்தைக் கொண்டிருப்பதை முற்போக்கு விமர்சகர்கள் காட்டியுள்ளார்கள். அது ஒரு மார்க்சியராக வாழ இயலாத அவரது வாழ்முறை ஏற்படுத்திய பாதகம். அவ்வாறே 'சின்னமாமா' எந்த அளவுக்கு முற்போக்கு குணாம்சங்களைக் கொண்டிருந்தாரோ (அவரது தவறுகள் பலவீனங்களோடு இதுவும் கூடவே இருந்த அம்சம் என்பதை மறுக்க இயலாது) அந்த அளவுக்கு அவரது படைப்புகளில் காத்திரத்தன்மையும் முற்போக்கு அழகியலும் இருந்தது. ஈழத் தமிழ்ப் படைப்புலகில் அவர் நிராகரிக்க முடியாத ஆளுமை.

அந்தச் சின்னமாமா சாதியத்தகர்ப்புப் போராட்டத்தை பற்றுறுதியுடன் ஆதரித்து, அதன் முன்னெடுப்புக்கு ஏற்றதாகப் படைப்பாக்கங்களை நல்கியதன் வாயிலாகவே இலக்கிய உலகின் கவனத்தை ஈர்த்தவர். அவரது தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இந்தப் பங்களிப்பைக் கவனிக்கவேண்டும் என்பதில்லை; விமர்சன அணுகுமுறையில் தவறுகளை வெளிப்படுத்தும் அதேவேளை அவரது காத்திரமான இருப்பு எந்தவகைக்குரியது என்பதையும் அடையாளம் காண வேண்டும். சாதித் தகர்ப்பு என்கிற பண்ணையடிமைத் தகர்ப்பை மேற்கொண்ட தேசியப்பணி முழு இலங்கையின் தேசபக்த ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்தியது என்கிறவகையில் இலங்கைத் தேசியத்தை முன்னிறுத்தியது. தமிழ்த் தேசியம் பேசியவர்கள் இந்திய(தமிழக) நெருக்கத்தை வெளிப்படுத்தும்போது, இலங்கைத் தேசியத்தை இரண்டாம் பட்சமாக(பின்னாலே பிரிவினையை முன்னிறுத்தி முற்றாக நிராகரிப்பவர்களாக) இருந்தார்கள். மட்டுமல்லாமல், சாதியத்தகர்ப்பு எனும் பண்ணையடிமைத்தன ஒழிப்பு என்கிற தேசியக் கடமைக்கு விரோதமாக இருந்தார்கள். முற்போக்காளரின் சாதித் தகர்ப்பு சார்ந்த இலக்கியப்பணியை ஏற்க இயலாத தமிழ்த்தேசிய ஆதரவு படைப்பாளர்கள் தவிர்க்க இயலாவகையில் அழகியல் வாதத்தை முன்னிறுத்தினர். பின்னாலே பேரினவாத அரச பயங்கரவாதம் கொலைவெறித்தாண்டவம் ஆடியபோது, அதனை இலக்கியப்படுத்தியவர்கள் முற்போக்கு அணியின் அனுபவத்தை உள்வாங்கி படைப்பாக்கியிருக்க வேண்டும். மாறாக முந்திய அழகியல்வாத தமிழ்த் தேசியப் படைப்பாளிகளை முன்மாதிரியாகக் கொண்டமையால் கோட்பாட்டுப் புரிதல்கொள்ளாமலே படைப்பு முயற்சியில் இறங்கினர். தமிழ்த் தேசியம் பேரினவாத அரசோடு கொண்டிருக்கும் முரண்பாட்டைத் தீர்ப்பதை முதல்நிலையாகக் கொண்டிருப்பின் முற்போக்கான சிங்கள மக்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அரசியல் சக்திகளோடு ஐக்கியப்படுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவ்வாறில்லாதது மட்டுமன்றி, மற்றொரு தேசிய இனமான முஸ்லிம் மக்களையும் எதிர்நிலைக்கு தள்ளியதோடு இந்திய மேலாதிக்கத்துக்கு இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு உதவும் அரசியலே முன்னெடுக்கப்பட்டது (அடிப்படையில் முப்பது வருட யுத்தம் இந்தியா இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்துக்குரியது. அது நிறைவாகியபோதிலும், இன்னும் தேவைப்படலாம் என்பதால் இனப்பிரச்சனை தீர்க்கப்படாமலே யுத்தம் முடிவு பெற்றுள்ளது. யுத்த வெற்றிக்கு வேறு வழியின்றி, இந்தியக் கோரிக்கைகள் அனைத்துக்கும் பணிந்து அடிமைச்சாசனத்தில் ஒப்பமிட்ட பேரினவாத சக்தி அதனை மீறும்போது ஒப்பந்தத்தை முன்னிறுத்தி மட்டுமன்றி, தமிழருக்காகவும் தலையிட இந்தியாவுக்கான வெளி உள்ளது. கடந்துபோன கசப்பான அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளாமல் தமிழ்த் தேசியம் இன்னும் அதே தவறான பாதையிலேயே பயணிக்கிறது என்பது தொடரும் துன்பியல்).

இதன் பாதகத்தை உணரும் இடத்தில் தேவமுகுந்தன் உள்ளார் என்பது கவனிப்புக்குரியது. "கண்களினூடே தெரியும் வீதி..." எனும் தலைப்புக்கதை அதனை உணர்த்துவதாக உள்ளது. யுத்த அகோரத்தில் சைரண் ஒலியோடு இராணுவ உடல்களை ஏந்திச் செல்லும் அம்புலன்சுகளின் ஓட்டங்கள் கண்டு கலங்கிக்கொண்டிருந்தவனுக்கு, கொழும்பில் தன்னைப் பாதிக்குமோ என்பதற்கு அப்பால், களத்தில் தனது தம்பி மடிந்த செய்தி வருகிறது. அதேவேளை பக்கத்து வீட்டில் இறந்த சிங்கள இராணுவத்தின் உடல் வருவதை அறிகிறபோது கண்ணீரூடே தெரியும் வீதியை வெறித்தபடி அந்த சிங்கள வீரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் செல்லும் முடிவை எடுக்கிறான். இந்த உணர்வு வளர்த்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். "ஒரு சுதந்திர நாள்" கந்தசாமியைவிட சிங்கள நண்பர்கள் உதவும் சந்தர்ப்பம் இந்தத் தலைப்புக்குரிய கதையில் காட்டப்பட்ட போதிலும், கந்தசாமி தமிழ் இளைஞனிலிருந்து ஒதுங்கியிருப்பதற்கான காரணம் 'தமிழன்' என்ற பாதுகாப்பற்ற உணர்வு சார்ந்தது. "வழிகாட்டிகள்..." கதையில் கல்விப் பிரயோக உயர் நிறுவனத்தில் தமிழ் உயர் பதவிவகிப்போர் முன்வைக்கும் கோரிக்கைகள் மோசமான சுயநலம் சார்ந்திருப்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுக்கு அப்பால் ஏனைய கதைகளில் தமது சுயநலத்தை முன்னிறுத்தும் தமிழ்த் தேசியத் தலைவர்களுக்கு உதவும் கண்ணோட்டமே வெளிப்படுகிறது. மேலேசென்று தேசிய இனப்பிரச்சினைத்தீர்வுக்கு வழிதேட ஆற்றுப்படுத்தும் நாட்டத்தை ஏற்படுத்தக்கூடிய கதைகளாக அமையத் தவறுகின்றன. சிங்களத் தரப்பு செய்கிற ஒவ்வொன்றிலும் இனவாதத்தைக் காணும்போது எம்மத்தியில் இனவாதம் மக்கள்விடுதலைக்கு மாறான வகையில் அமைந்திருப்பது கண்டுகொள்ளாமலே விடப்படுகிறது. பின்னுரையில் நூஃமான் குறிப்பிடுவதுபோல, "எனினும், விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் விடுதலை இயக்கங்கள் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளையும், கொலைகளையும், பயங்கரவாதத்தையும் அதன் விளைவுகளையும் பற்றிப் பேசாத இலக்கியம் ஒருபக்கச் சார்பானது என்பதையும் நாம் அழுத்திக் கூற வேண்டும்".

இவ்வாறு கூறுகின்ற நூஃமான் தலைப்புக்கதையான "கண்ணீரினூடே தெரியும் வீதி..." பற்றிக்கூறும் கருத்து அழுத்த அவசியமுடையது. "கடந்த முப்பது ஆண்டுகளில் இனமோதல், யுத்த அனுபவங்களைக் கருவாகக்கொண்டு எழுதப்பட்ட சில சிறந்த சிறுகதைகளுள் இதுவும் ஒன்று என்பது என் கணிப்பு. சிங்களவர், தமிழர் என்ற பேதம் இன்றி யுத்த அவலம் எல்லோர்மீதும் கவிந்திருப்பதை எவ்வித பாசாங்கும் இன்றி இக்கதை யதார்த்தமாகச் சொல்கிறது. இத்தொகுப்பிலுள்ள தேவ முகுந்தனின் மிகச் சிறந்த கதை என்றும் நான் இதைத்தான் சொல்லுவேன். இன முரண்பாட்டுக் காலகட்டத்தில் ஒரு எழுத்தாளனிடம் நாம் எதிர்பார்க்கக்கூடிய அறம் இக்கதையில் பிரகாசமாகத் தெரிகிறது. 'சிவா', 'இடைவெளி', இரட்டைக் கோபுரம்' போன்ற கதைகளில் வெளிப்படையாகத் தெரியும் சிங்களவர்களைப்பற்றிய ஒரு எதிர்மறைப் பார்வை இக்கதையில் இல்லை என்பது எனக்கு மிகுந்த ஆறுதல் தருகின்றது" என்பார் நுஃமான்.

-2-

ஒரு படைப்பாளி வெறும் அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கு அப்பால் சொல்வதற்கு ஒன்றுமில்லை என வாழாதிருந்துவிட முடியாது. வெறும் இனவாதத்துக்குத் தீனிபோடும் அனுபவங்கள் ஏராளமாக உள்ளன. அதைக் கடந்து விடுதலைக்கு எது உதவும், எப்படி உதவ ஏற்றதாக வெளிப்படுத்த வேண்டும் என அனுபவங்களை வகைப்படுத்த-வடிவப்படுத்த ஏற்ற கருத்தியல் தெளிவு படைப்பாளிக்கு அவசியம்.

சிங்களப் பேரினவாதம் ஏனைய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்க முனைந்து சிங்கள மக்களது சுயாதிபத்தியத்தையும் இந்திய மேலாதிக்கத்திடம் தாரை வார்த்துள்ளது. இது சிங்கள உழைக்கும் மக்களுக்கு கேடாயினும் பேரினவாதக் கொள்ளைக் கும்பல் இந்திய மேலாதிக்க சுரண்டலாளர்களுடன் இணைந்து சிங்கள மக்களையும் சூறையாடத் தடை ஏதுமில்லை. எம்மை ஆக்கிரமித்ததாலே இந்தியாவில் இந்திய உழைக்கும் மக்களுக்கு விமோசனம் ஏதும் கிட்டிவிடவும் இல்லை. ஆதிக்கசாதி - சுரண்டும் வர்க்கங்கள் எனும் கொடுமைக்குள் உழன்றவாறேதான் இந்திய உழைக்கும் மக்களின் வாழ்க்கையும். அந்தவகையில் சமூகவர்க்கமாக ஒடுக்கலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும் அனைத்து தேசிய இனங்களும் சாதிகளும் பாட்டாளி வர்க்கச் சிந்தனையில் அணிதிரண்டு மேலாதிக்க - சுரண்டும் தேசிய-சாதி-வர்க்க சக்திகளுக்கு எதிராக அணிதிரண்டாக வேண்டும். இது புரிதலுக்கு மட்டுமன்றிப் பிரயோகிப்பதற்கும் கடினமான பணி என்ற போதிலும், விடுதலையைச் சாத்தியமாக்க ஏற்ற ஓரே வழி இது மட்டுமே. இது சார்ந்த கருத்தியல் தெளிவோடு படைப்பாளி தனது வெளிப்பாடுகளை வழங்க முன்வரவேண்டும்.

இத்தகைய கருத்தியல் தெளிவை முழுமையாகக் கொண்ட ஆளுமைக்கு எம்மிடம் உதாரணமுண்டு. பாரதி வறுமையை ஒழிப்பது, பெண்விடுதலை, சாதித் தகர்ப்பு, தமிழினத் தேசிய விழிப்புணர்வு, இந்தியத் தேசிய விடுதலை, உலகளாவிய மனுக்குல விடுதலை என விசாலித்த கருத்தியல் வீச்சைக் கொண்டிருந்தவர். அதனாலேயே கத்தும் கடலையும், மலையையும், காக்கைக் குருவியையும் தன் கூட்டமாகவும் சாதியாகவும் பாரதியால் காண முடிந்தது. அவரது அந்தப் பார்வைவீச்சு எங்களுக்கு அமையவில்லையே என பார்திதாசன் அங்கலாய்த்ததாக அறிகிறோம் (அரங்கப் பேச்சொன்றில் நூஃமான் கூறியது. தனது நண்பரான ஈழக் கவி ஒருவர் பாரதிதாசனுக்கு நெருக்கமானவர்; தனிக் கலந்துரையாடலில் இப்படி பாரதிதாசன் கூறி வியந்தார் என அந்த நண்பர் சொன்னார் என்பதாக).

இன்று இன்னும் அதிகமாக விசாலித்த பார்வையை வரிக்க உதவுவதாக மார்க்சியம் உள்ளது. ஆயினும், மார்க்சியத்தை இயங்கியல்-பொருள்முதல்வாதமாக புரிதல் கொள்ளாமல், வறட்டுச்சூத்திரமாக்கி வர்க்கப்பிளவுற்ற ஐரோப்பிய அனுபவங்களை அப்படியே பின்பற்றப்போய்த் தவறுகள் நேர்ந்துள்ளது. வர்க்கப்பிளவுறாது ஆதிக்கம் பெற்ற இனமரபுக்குழு சமூகவர்க்கமாய் ஏனையவற்றை வென்றடக்கி சுரண்டலை முன்னெடுத்த எமது சாதியச் சமூகம் இரட்டைத்தேசிய வாழ்முறையில் பெற்றுவந்த சமூக மாற்றங்கள் குறித்த விவாதம் எமக்கான மார்க்சியப் பிரயோகத்தை இனங்காட்டிவருகிறது. காந்தியின் பண்பாட்டியத்தை முன்னெடுக்கும் விடுதலை மார்க்கம், பெரியார் - அம்பேத்கர் ஆகியோரது எதிர்ப்பண்பாட்டியத்தின் ஒடுக்கப்பட்டோருக்கான எதிர்த்தேசிய விடுதலை என்பன முழுமையான விடுதலையைச் சாத்தியமாக்காது என்பதால் இரண்டிலுமான விடுதலைக் கூறுகளை உள்வாங்கிய புதியபண்பாட்டியத்தைப் பாட்டாளி வர்க்க சிந்தனை அடிப்படையில் மேற்கொள்ளும் அவசியம் உள்ளது. பாட்டாளி வர்க்க சிந்தனை முறை தமிழில் முழுமை பெறாத சூழலில்கூட பாரதியின் கருத்தியல் புதிய பண்பாட்டிய வடிவம் கொண்டிருந்தது என்பது கவனிப்புக்குரியது. சரியான மார்க்சிய நோக்கில்லாமல் பாரதியையும், எமது சமூகத்தையும் புரிந்துகொள்ள இயலாது.

ஆரம்பத்தில் குறித்த முகநூல் விவாதக் கருத்தொன்றோடு இந்தத் தேடலை தற்காலிகமாக நிறுத்தலாம். இந்தியாவில் சாதி எதிர்ப்பு உயர் சாதியினர் பண்பாட்டை ஒட்டுமொத்தமாக நிராகரித்தபோது, இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்சாதியினர் பண்பாட்டை தமக்கானதாக ஆக்கி இலக்கியம் சமைத்தனர் என்ற ஒரு பதிவு இடம்பெற்றிருந்தது. இந்தியாவில் வெறும் வர்க்கம் பற்றி மார்க்சியர்கள் அக்கறை கொண்டபோது சாதிய இழிவுகளுக்கு எதிரான போராட்டம் எதிர்த்தேசிய அணிகளால் முன்னெடுக்கப்பட்டன; மரபுப் பண்பாட்டை முற்றாக நிராகரித்து எதிர்ப்பண்பாட்டியத்தை அவர்கள் வரித்திருந்தனர். மாறாக, இலங்கையில் கொம்யூனிஸ்ட்டுகள் சாதித் தகர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தபோது இரண்டின் அவசியக்கூறுகளை இணைத்த புதியபண்பாட்டியத்தைக் கையேற்றிருந்தனர்; வெறும் உயர் சாதிப் பண்பட்டை அல்ல. இந்த புதிய பண்பாடு சார்ந்த கருத்தியல் இணைப்பு என்பது படைப்பு ஒன்றுக்கு மட்டுமன்றி, சமூகமாற்ற நோக்குக்கும் அமைவான விசாலித்த பார்வையை வழங்கும். தேவ முகுந்தன், யோ.கர்ணன், கருணை ரவி ஆகியோரது சிறுகதைகள் மிகுந்த நம்பிக்கையைத் தரும் அதேவேளை, இவர்கள் புதியபண்பாட்டியத்தை வரிக்கும்போது இன்னும் வலுவான படைப்புகளை எமக்குத் தருவர் எனும் நம்பிக்கையும் வலுக்கிறது. ஆம், நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்!

Tuesday, April 16, 2013

எஸ் . கே.விக்னேஸ்வரன்


கருத்துக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய காட்சிகள்

'கண்ணீரினூடே தெரியும் வீதி':அண்மையில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட தேவமுகுந்தனின் சிறுகதைத் தொகுப்பு இது. இந்தத் தொகுப்பிற்கு அறிமுகக் குறிப்பு அவசியமில்லாதளவிற்கு அது பலராலும் பல்வேறு இடங்களிலும் ஏற்கனவே போதியளவு அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டு இணைய இதழான 'திண்ணை'யில் வெங்கட் சாமிநாதன் முதல் வீரகேசரியில் எழுதிய தெளிவத்தை ஜோசப் வரை இந்த நூல் பற்றி எழதிய அனைவருமே இதனை சிலாகிக்கத் தவறவில்லை. பேராசிரியர் நுஃமான் அவர்கள் கூட இந்நூலுக்கெழுதிய தனது முன்னுரையில் விரிவாக அதன் சிறப்புக்களை விபரித்துள்ளார்.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவில் பேசிய டொக்ரர் முருகானந்தன், அ. யேசுராசா, உமா வரதராஜன், வசந்தி தயாபரன் என்று அனைவரதும் பாராட்டை இந்நூல் பெற்றிருந்தது.

இப்படி அண்மைக் காலத்தில் வெளிவந்த நூல்களில் அனைத்துத் தரப்பினரதும் பாராட்டைப் பெற்றுக் கொண்ட, ஒரே நூல் என்ற சிறப்பை இந்த நூல் தட்டிக் கொண்டுள்ளது. இலங்கையின் இலக்கியச் சூழலில் இத்தகைய ஒரு நிலைமை புதியது. விமர்சனங்கள் அல்லது திறனாய்வுகள் பெரும்பாலும் விமர்சகர்களது அடிப்படையான கருத்துக்கள், கோட்பாடுகள் என்பவற்றின் அடிப்படையிலேயே பார்க்கப்பட்டு விமர்சிக்கப்படும் போக்கே இங்கு பலமாக இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக படைப்புக்கள் பாராட்டப்படுவதும் அல்லது நிராகரித்து ஒதுக்கப்படுவதும் தாராளமாக இங்கே நடந்து வந்திருக்கின்றன. இந்தத் தொகுப்பும் முகுந்தனும் அத்தகைய ஒரு நிலைக்கு உள்ளடக்கப்படாதது நிச்சயமாக ஒரு முக்கிய விடயமாக எனக்குப்படுகின்றது. வெ.சா. இத்தகைய ஒரு எழுத்து முகுந்தனிடம் வருவதற்கான சூழல் பற்றிக் குறிப்பிடுவதை ஒரு காரணமாக கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. ஏனென்றால் இத்தகைய சூழலிலும் அத்தகைய விமர்சனங்களும் வரத்தான் செய்கின்றன. இதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்?

'கண்ணீரினூடே தெரியும் வீதி'நம் காலத்து சராசரி தமிழ் இளைஞன் ஒருவனின் நாளார்ந்த அனுபவங்கள் தொடர்பானது. இந்த இளைஞன் தன் எண்ணங்கள், விருப்பங்கள், தெரிவுகள் எவற்றையுமே தனது அறிவுக்கும் தெளிவிக்கும் உணர்வுக்கும் உட்படுத்தக்கூடிய தன் எல்லாவித சுய ஆற்றலையும் பறிகொடுத்துவிட்டு சூழலின் நிர்ப்பந்தத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ள தவித்துத் திரிந்த ஒரு சமூகத்தின் உறுப்பினன். அவனது நடவடிக்கைகள் எல்லாமே தப்பிப் பிழைத்து வாழ்வதற்காக எடுக்கின்ற கணநேரத்து முடிவுகளால் தீர்மானிக்கப்படுபவையாக அமைந்திருந்தன. அவனது அரசியல் பிரவேசமும் சரி, அவன் போராளியாவதும் சரி அல்லது தப்பி ஓடுவதும் சரி எல்லாமே இந்த அடிப்படையில்தான் இயக்கம் கொள்கின்றன.சாதி, சமயம், அரசியற்கோட்பாடுகள் என்று அனைத்தையும் மீறிய அனைவருக்கும் பொதுவான ஒரு நிலைமையை இந்தச் சூழலின் நிர்ப்பந்தம் ஏற்படுத்தியிருந்தது.இந்த இளைஞன் எம் எல்லோருக்கும் தெரிந்தவன்.எமக்குத் தெரிந்த எல்லா வீடுகளிலும் வளர்ந்தவன் அதனால் அவனது கதை எங்கள் எல்லோருக்கும் தெரிந்த எல்லோரதும் கதை முகுந்தனின் தொகுப்பு இப்படி எல்லோராலும் பாராட்டப்பட்டதற்கான காரணம்இதுதான் என்று நான் கருதுகிறேன்.

இந்த எல்லோருக்கும் தெரிந்த இளைஞன் தனது சொந்த அனுபவங்களையும் உணர்வுகளையும் சொல்லுகிறபோது அதை எவர்தான் மறுத்துரைக்க முடியும்?

போராளிகளும் பின்னர் அவர்களுள் துரோகிகள் என்று ஒதுக்கப்பட்டோரும்,கொன்றொரும் கூட இந்தச் சமூகத்தின் பிள்ளைகளாகவே இருந்தனர். எல்லோரும் தப்பிப்பிழைத்தல் என்ற ஓட்டத்தில் திசை தெரியாது சிதறுப்பட்டனர். ஆளோடு அள் மோதிக் கொள்வது தெரியாத வெறிபிடித்த ஓட்டம். தம்மைச் சுற்றி நடப்பதோ நடக்கப்போவதோ பற்றி எதுவும் தெரியாத தெரிந்து கொள்வதற்கான அவகாசத்ததை தேடிக்கொள்வதற்கான பொறுமையையும் தொலைத்த பதற்றத்துடனான ஓட்டம். முகுந்தனின் கதைகள் இவற்றில் சில காட்சிகளைப் படம் பிடித்துத் தந்திருக்கின்றன. அவர் அதற்கு மேல் செல்ல முயலவில்லை. அதை அவர் தனது பணியாகத் கருதியதாகத் தெரியவுமில்லை. இவை அவர் வாழ்ந்த சூழலின் இரண்டு தசாப்தக் காட்சிகள். முகுந்தன் அவற்றை தனது பாணியில் கலைவடிவமாகத் தந்திருக்கிறார். அவர் பார்த்த காட்சிகள் கண்ணீரினூடே தெரிந்த காட்சிகள். கண்களைத் துடைத்து விட்டோ, கண்ணீர் வராத மனநிலையில் நின்றோ அவர் பார்க்கவில்லை. அதனால் அவரது காட்சிகள் கருத்துக்களின் செல்வாக்கிற்கு உட்படவில்லை. கருத்தக்கள் தான் இந்தக் காட்சிகளின் செல்வாக்குட்பட வேண்டும்.

நூலைப்பற்றி இதற்கு மேல் பேச அவசியமில்லாத அளவிற்கு நிறையவே பேசப்பட்டுவிட்டது. அவருக்கு எனது பாராட்டுக்கள்.

எஸ் . கே.விக்னேஸ்வரன்

நன்றி : கலைமுகம் (இதழ் 55)