Saturday, January 11, 2014

க. நவம்


தேவமுகுந்தனின் சிறுகதைகள் சிலவற்றை ஏற்கனவே படித்திருக்கிறேன். கலைமுகம்,காலம், ஜீவநதி, ஞானம், யுகமாயினி போன்ற சிற்றிதழ்களில் வெளிவந்த கதைகள், அவை. இப்போது அவர் தமது கதைகளைத் தொகுத்து, ‘கண்ணீரினூடே தெரியும் வீதி’ என்ற பெயரில், பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களது பின்னுரையுடன் வெளியிட்டிருக்கின்றார். இத்தொகுதியிலுள்ள கதைகளைப் படிக்கத் துவங்கியபோது ‘இனிப் போதும்’ எனுமாப்போல, நட்டநடுவே விட்டுவிடத் தோன்றவில்லை. இடைவெளி விட்டுப் படிக்கவும் மனம் இடந்தரவில்லை. ஒவ்வொரு கதையும் அடுத்த கதையைத் தொடர்ந்து படிக்கத் தூண்டியது. கதைகளை மீளப் படித்து விளங்கிக் கொள்ளவேண்டிய சிக்கல்கள், சிரமங்கள் இருக்கவில்லை. இன்னொன்றைப் படிக்கும்போது, முன்னர் படித்த கதைப் பொருளை நெட்டுருப்பண்ண வேண்டிய நிர்ப்பந்தமேதும் இருக்கவில்லை. பத்துக் கதைகளையும் ஒரே மூச்சில், ஒருசில மணிநேரங்களில் படித்து முடித்தேன்.

சிங்களர், தமிழர் என்ற பாகுபாடின்றி யுத்தம் எவ்வாறு சகலரையும் பாதித்தது என்பதை ‘கண்ணீரினூடே தெரியும்’ என்ற கதையும், உயர் பதவிகளிலிருக்கும் சுயநலத் தமிழர்களின் போலிமைகளுடன் கூடிய பொறுப்பற்ற தன்மைகளை ‘வழிகாட்டிகள்’ என்ற கதையும், அன்னியோன்னியமாகப் பழகிவந்த சக சிங்கள ஊழியர்களின் சந்தேகப் பார்வைக்கு ஆளாகிப்போன தமிழனின் அவஸ்தையை ‘இடைவெளி’ என்ற கதையும், இன ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்ந்த தமிழ் இளைஞன் ஒருவன், சந்தேகத்தின் பேரில் சிறையிலடைக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டு, மீண்டும் கைதாகிக் காணமற்போன துயரத்தை ‘சிவா’ என்ற கதையும், தேவைகளின் பொருட்டும், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் பொருட்டும் எவ்வளவுதான் ஒட்டி உறவாடினாலும், ஏதோவொரு தருணத்தில் சிங்கள-தமிழ் இனக் குரோதம் பீறிட்டுக் கிளம்பிவிடும் அவலத்தை ‘இரட்டைக் கோபுரம்’ என்ற கதையும், உயர்சாதிப் பெண்ணை மணம்முடித்தபின், தனது குடும்ப உறவைத் துண்டிக்கும் சின்னத்தனம் கொண்ட ஓர் எழுத்தாளனையும், எழுத்துலகச் சிறுமைகளையும் ‘சின்ன மாமா’ என்ற கதையும், சுதந்திரம் என்பது நடைமுறையில் சிங்களவருக்கு மட்டுமே சொந்தமென்பதை ‘ஒரு சுதந்திர நாள்’ என்ற கதையும், என்னதான் தகுதியோ திறமையோ இருந்தும், அணைவும் செல்வாக்கும் இன்றித் தகுந்த வேலை ஒன்றைப் பெறுதல் சாத்தியமில்லை என்ற யதார்த்தத்தை ‘இவன்’ என்ற கதையும், யுத்த அனர்த்தங்களின் பாதிப்புக்களை உணராதவராய், ஊதாரித்தனத்துடன் நடந்துகொள்ளும் மூத்த தமிழ்த் தலைமுறையினரின் மேட்டுக்குடி மனோபாவத்தை ‘கூட்டத்தில் ஒருவன்’ என்ற கதையும், இராணுவக் கெடுபிடிகளுக்குள் சிக்கித் தவிக்கும் சராசரி யாழ்ப்பாணத் தமிழ்க் குடும்பத்தினரின் மனவுணர்வுகளை ‘மரநாய்கள்’ என்ற கதையும் சொல்லிச் செல்கின்றன.

ஒரு நல்ல கதைஞன் என்பவன் தன்னையும் தான் வாழும் சமூகத்தையும் ஆழமாகக் கூர்ந்து அவதானிப்பவன். பிறர் காணாத் தவறும் காட்சிகளுள் புதைந்து கிடக்கும் உட்பொருட்களை உணர்ந்தறியும் ஆற்றல் கொண்டவன். சில காட்சிகளால் திடுக்கிட்டு அதிர்ச்சியடைபவன்; தருணங்களில் தடுக்கி வீழ்ந்து போய்விடுபவன். அவ்வாறான உணர்வனுபவங்களைக் கதைகளாகச் சொல்ல உந்தப்படுபவன். ‘கண்ணீரினூடே தெரியும் வீதி’ கதைத் திரட்டின் ஆசிரியர் தேவமுகுந்தனும் இவ்வகைப்பட்ட ஒரு கதைஞர்தான் என்பதை நிறுவுவதற்கு இவரது கதைகள் தகுந்த ஆதாரங்கள். தமது பருவத்தினருக்கே உரிய இளமை முறுக்கேறிய பார்வைக்கு முரணாக, இவர் தம்மையும் தமது சூழலையும் மிகுந்த கரிசனையுடன் கூர்ந்து கவனித்ததன் விளைச்சல்கள் இவரது கதைகள். ’சின்ன மாமா’ என்ற கதை தவிர்ந்த, ஏனைய எல்லாமே அதீத கற்பனைக் கலப்பற்ற, உண்மை வாழ்க்கைச் சம்பவங்களை அடியொற்றி எழுந்த படைப்புக்கள்.

இலங்கை எமது சொந்த நாடு; கொழும்பு அதன் தலைநகர். ஆனாலும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு நடுத்தர வர்க்க வாலிபனுக்கு, கொழும்பு வாழ்க்கை எத்தகைய அந்நியத் தன்மை மிக்கதாகவும், சமயங்களில் ஆபத்து மிகுந்ததாகவும் இருந்து வந்தது என்பதை அனுபவித்தவர்கள் நன்கறிவர். தேவமுகுந்தனின் இத்திரட்டிலுள்ள ’கண்ணீரினூடே தெரியும் வீதி,’ ‘இடைவெளி,’ ’சிவா’, ‘ஒரு சுதந்திர நாள், ’இவன்’ ஆகிய கதைகள் இந்த உவப்பில்லா உண்மையை உண்மையாகச் சொல்கின்றன. செத்துக்கொண்டிருந்த சிங்கள-தமிழ் இன சௌஜன்யம் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாக அவர் கற்பனை செய்யவில்லை. அல்லது இருக்கவேண்டும் என்று உபதேசம் செய்யவுமில்லை. அவ்வாறு இலட்சியங்களையும் நோக்கங்களையும் இலக்கு வைத்துக் கதை எழுதுதல் கலைத்துவத்திற்கு எதோ ஒரு வகையில் ஊறு விளைவித்துவிடவே செய்கின்றது. நவீனத்துவ சிந்தனையாளர் எஸ்ரா பவுண்ட் சொல்லியது போன்று, “செய்திகளை உள்ளது உள்ளவாறு துல்லியமாகச் சொல்வதே எழுத்தின் அறம்.” இதனை நன்குணர்ந்தவராய், பாசாங்கேதுமின்றித் தமது கதைகளினூடாக உண்மையை உண்மையாகக் காவிச் சென்றிருக்கின்றார், தேவமுகுந்தன். இத்திரட்டிற்கான இயங்கு திசையை தீர்மானிக்கும் மைய நரம்புத் தொகுதியும் அதுதான்!

கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலெழுந்த இலக்கியக் கோட்பாடுகள் ‘அறுபடாத தொடர் உரையாடலாக’ வாழ்க்கையை உற்று நோக்கின. வாழ்க்கையின் உண்மைகள் பல அடுக்குகளைக் கொண்டவை என நம்பின. இந்த உண்மைகளை எடுத்துரைப்பதற்குப் பல்குரல் தன்மை கொண்ட இலக்கிய வடிவங்கள் தேவை என வலியுறுத்தின. யதார்த்தவாதத்தை நிராகரித்த இந்த இலக்கியப்போக்குகள் சிறுகதையிலும் கவிதை போன்று, படிம உருவம் கொண்ட மிகைக் கற்பனையை வலியுறுத்தின. அண்மைக் காலம்வரை தமிழிலும் சிறுகதைப் படைப்பாளிகள் பலர் இந்த அணுகுமுறையைக் கையாண்டு வந்தனர். இந்த அணுகுமுறையில் இன்று ஏற்படத் துவங்கிய தேக்கநிலை காரணமாக, மீண்டும் இயல்புவாத / யதார்த்தவாத சிந்தனைகளை அடியொற்றிக் கதையெழுதும் முறைமையை தேவை கருதியும், மாற்றம் கருதியும் இந்நாளைய படைப்பாளிகள் பலர் பின்பற்றத் துவங்யிருக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வடிவமாகத் திகழ்ந்த இந்த யதார்த்தவாதப் படைப்புகள் உள்ளதை உள்ளவாறு கூறுபவை. இதில் கதைகூறும் ஆசிரியன், கதையின் மையக்கருத்தை உருவாக்கி, வாசகனுக்கு உற்சாகத்தை ஊட்டித் தொடர்ந்து வழங்கியவாறு இருப்பான்.

இத்தகைய சிறுகதைப் பண்புநிலையின் மீள்வருகைப் படைப்புகளாக விளங்குகின்ற வகையில் தேவமுகுந்தனின் சிறுகதைத் தொகுதி மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்வாறாக, சமகாலப் படைப்பிலக்கிய முன்னகர்வுக்கு உதாரணங்களாக விளங்கும் இவரது கதைகள், வலிந்து புகுத்தப்பட்ட வடிவ அலங்காரங்களோ அல்லது சிக்கலான படிமச் சித்திரிப்புக்களோ அற்ற, எளிமையான வடிவமைதி கொண்ட கதைகள். சிறுகதையின் வடிவம்சார் கட்டுடைப்பு முயற்சிகளில் பெரிதும் ஈடுபடாத இவரது சிறுகதைகளுள் ’சிவா’, ‘இவன்’ ஆகிய இரு கதைகள் தவிர்ந்த, ஏனைய எல்லாக் கதைகளின் தலைப்புக்கள்கூட, கதைகளின் உட்பொருளைப் பூடகமாக வெளிப்படுத்தும் இவரது மனப் படிமங்களினதும் ஆக்கவியற் பண்புகளினதும் அடையாளங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இலக்கியங்களுள் ஒப்பீட்டளவில் சிறுகதையே படைப்பாளிகளுக்கு மிகுந்த சவால் மிக்கதும், சமயங்களில் எரிச்சலூட்டுவதுமான ஒரு இலக்கிய வடிவமாகும். வெகு இலகுவாக எழுதப்பட்டிருப்பது ‘போலத் தோன்றுவது’ ஒரு நல்ல சிறுகதையின் தன்மை. ஆனால் அது எழுதப்பட்டிருப்பது போலவே எப்போதும் வாசகனால் படிக்கப்படுவதில்லை. எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லினூடாகவும் வரியினூடாகவும் வாக்கியத்தினூடாகவும் வாசகனின் தன்மைக்கேற்ப அச்சிறுகதை தொடர்ந்து விரிந்து, வளர்ந்து, செல்லும் பண்பினைக் கொண்டது. வாழ்வின் நிதர்சனங்களைப் பலதடவைகள் பல்வேறு வடிவங்களில் ஓங்கி எதிரொலிக்கும் உயிர்ப்புடன்கூடிய உயிர்ச் சாரத்தைக் கொண்டது. இத்தகைய ஒரு நல்ல சிறுகதையைத் தொடர்ந்து வாசித்துச் செல்லும் வாசகனும் தன்மட்டில் கற்பனை செய்கிறான்; தனக்குள் ஒரு படைப்பாளியாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டே போகின்றான். இவ்வாறாக ஒரு தேர்ந்த வாசகன் தன் கற்பனையை வளர்த்துக் கதையை மனதுக்குள் தொடர்ந்து எழுதிக்கொண்டு போகவதற்கான கதவுகளைத் திறந்து விடும் விதத்தில் தேவமுகுந்தனின் பல கதைகள் அமைந்துள்ளன.

”நாளைக்கு குமுது அங்கிளோடை வீட்டுக்குப் பக்கத்திலை நடக்கப் போகின்ற செத்த வீடுகளுக்குப் போக வேண்டும். கண்ணீரினூடே வீதி தெரிகிறது.

வெண்புறாக்களாய் சீருடை அணிந்த பாடசாலைப் பிள்ளைகளை ஏற்றிய வாகனங்கள் காலி வீதியில் ஊர்கின்றன. அந்த வாகனங்களை விலத்தியபடி அவலக் குரலெழுப்பி அம்புலன்ஸ் வண்டிகள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி விரைகின்றன.

வானம் வேறு அழுது தொலைக்கின்றது” என முதலாவது கதையின் முடிவிலும் –

“….. வாழைகளுக்குப் பாத்தி கட்டிக்கொண்டிருந்த தமயன் மண்வெட்டியைக் கீழே போட்டுவிட்டு நிதானமாகச் சொன்னான், ’மரநாய்களைத் துரத்த வேண்டும்’ ” எனக் கடைசிக் கதையின் முடிவிலும் –

கூறப்பட்டுள்ளது போன்று, இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் வாசகன் மனதில் ஏதோவொரு திகைப்புணர்வை ஏற்படுத்தி, தொடர்ந்து மென்மேலும் கற்பனையை வளர்த்துச் செல்லத் தூண்டியவாறு முற்றுப் பெருகின்றது.

’ஒரு நல்ல சிறுகதை என்பது மகத்தானதோர் புரிதல் உணர்வின் கணப்பொழுது’ என ஜோசஃப் ஓகோர்னர் எனும் பிரபல ஈரிஷ் எழுத்தாளர் கூறுகின்றார். இலங்கை வரலாற்றின் நெருக்கடிமிக்க போர்க்கால வாழ்வின் அச்சமும் அவநம்பிக்கையும் நிறைந்த அந்தக் கணப்பொழுதுகளை – குறிப்பாக கொழும்பு பிரதேசத்தில் வாழ்ந்த தமிழரின் வாழ்வியற் சிக்கல்களின் கணங்களை – இத்திரட்டிலுள்ள கதைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. கொழும்புவாழ் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வுசார் அசைவியக்கத்தின் கணப்பொழுதுகளைச் சித்திரிப்பதன்மூலம் அச்சமூகத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறை பற்றிய தெளிவுணர்வை அல்லது புரிதலுணர்வை இக்கதைகள் மனதுள் கிளர்த்துகின்றன. இதன்மூலம் குறிப்பிட்ட அக்காலகட்ட வரலாற்றுப் பின்னணியின் ஆவணப் பதிவாகும் தகுதியையும் இக்கதைகள் பெறுகின்றன.

மேலும் கோபம், சோகம், விரக்தி, நிராசை, எமாற்றம், இயலாமை, அதிர்ச்சி போன்ற மனவுணர்வுகளுக்கு மத்தியிலும் தேவமுகுந்தன் தனது எழுத்து நடையில் – உணவுக்கு அளவாக உப்பிடுவது போல – ஆங்காங்கே பயன்படுத்தியிருக்கும் எள்ளல் சுவை மிகுந்தது; சுவாரசியமானது. முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு ‘சீரியஸாக’ கதைசொல்லும் ஈழத்தவரது பொதுப் பாணியைத் தேவைக்கேற்ற வகையில் தேவமுகுந்தன் இத்திரட்டில் மீறியிருக்கின்றார்.

“இலக்கிய விமர்சனக் கூட்டங்களைப் பாராட்டுக் கூட்டங்களாக மாற்றியமைக்கும் விமர்சகர்கள் போல” என்றும் –

“பத்திரிகைகளில் வெளியாகும் விளம்பரங்களில் – ‘மணமகன் தேவை’ விளம்பரம் தவிர்ந்த பெரும்பாலான விளம்பரங்களில் முன் அனுபவங்களை எதிர்பார்க்கிறார்கள்” என்றும் –

”வீட்டு உரிமையாளர்கள் சிங்களவராயிருந்தாலென்ன தமிழராயிருந்தாலென்ன முஸ்லிங்களாயிருந்தாலென்ன – வேலையில்லாத தமிழ் இளைஞனுக்கு அறை கொடுப்பதில்லை என்பதில் ஒரே கருத்தைக் கொண்டிருந்தார்கள். இலங்கையில் மூவினத்தவர்களும் ஒரே கருத்தைக் கொண்டிருக்கும் விடயம் இதுவொன்றுதான்” என்றும் –

ஞானப்பிரகாசம் மிஸ்ஸிடம் படித்த ஒளித்தெறிப்பு விதிகளை வழுக்கைத் தலைகளில் பிரயோகித்துத் தன் எரிச்சலைத் தீர்த்துக் கொள்ளவென – “ஒப்பமான மேற்பரப்புக்கு மட்டுந்தான் இரண்டாவது விதி பொருந்துமென்றால் இவர்களின் வழுக்கைத் தலைகள் ஒப்பமானவையா?” என்றும் –

சிந்தனையைத் தூண்டும் விதமாக, விமர்சனச் சீற்றத்துடன் எள்ளலாடியுள்ளமைக்கான இவை போன்ற உதாரணங்கள் இத்திரட்டில் நிறையவுண்டு.

சிறந்த சிறுகதைகள் பலவற்றை உள்ளடக்கியிருக்கும் இத்திரட்டில், ‘கண்ணீரினூடே தெரியும் வீதி,’ ‘சிவா,’ ‘மரநாய்கள்,’ ‘இரட்டைக்கோபுரம்’ என்பன என்னை வெகுவாகக் கவர்ந்த கதைகள் என்பேன். இக்கதைகளைப் படித்து முடித்தபோது ஏற்பட்ட அதிர்வுகளுக்கும் உணர்வுகளுக்கும் இவற்றுள் விதைக்கப்பட்டுள்ள கருப் பொருட்கள், வந்துபோகும் இயல்பான பாத்திரங்கள், அவற்றை வழிநடத்திச் செல்லப் பயன்படுத்திய உத்திமுறை, மொழிநடை, பின்னணிச் சூழல், மென்மையான படிமங்கள் என்பன எல்லாமே காரணங்களெனலாம். இவையனைத்துக்கும் மேலாக, இந்நான்கு கதைகளில் காணப்படுவதைப் போன்று, இவரது எல்லாக் கதைகளிலும் எங்கோ ஓரிடத்தில் புதைந்து கிடக்கும் ஒரு மெல்லிய வலிதான் இக்கதைத் திரட்டுக்குக் கனதியைக் கொடுக்கின்றது.

மேற்குலகில் சிறுகதையின் நிகழ்காலம், எதிர்காலம் குறித்து எதிரும் புதிருமான கருத்துநிலை காணப்படுகின்றது. தமிழ் இலக்கியச் சூழலைப் பொறுத்தவரை, சிறுகதைக்கெனப் புதுமைப்பித்தனால் துவக்கி வைக்கப்பட்ட செழுமைச் செல்நெறி, இற்றைவரை காத்திரமாக முன்னோகி நகர்ந்தவண்ணம் உள்ளதென்றே நம்பப்படுகின்றது. அந்த நம்பிக்கையின் அடையாளமாக தேவமுகுந்தனின் ‘கண்ணிரினூடே தெரியும் வீதி’ விளங்குகின்றதென்பது ஆறுதல் தரும் செய்தியாகும்.

———————— ‘கலைமுகம்’ – இதழ் 56; ஒக்ரோபர்- டிசெம்பர் 2013

No comments:

Post a Comment