சிறுகதை என்றால்.....??
*************************
இப்படித்தான் அமைய வேண்டும் என்று திட்டவட்டமாக வரையறுக்க முடியாது.. வரையறைகள் இவைதாம் என்று நாம் இங்கே எழுதிக் கொண்டிருக்கும்போதே இவற்றையும் மீறி ஏதாவது ஒரு சிறுகதை எங்கேயோ ஒரு மூலையில் பிறந்து விடலாம்.
“அது ஒரு புதிய இலக்கிய வடிவத்தின் பெயர்”
-பிராண்டர் மாத்யூ
“சுருக்கமும் செறிவும் சிறுகதைப் பண்புகள்”
-ஜேம்ஸ் கூப்பர் லாரன்ஸ்
“கதை முடியும் வரை வாசகனின் கவனம் கலைந்துவிடக்கூடாது”
-எட்கர் ஆலன்போ
“குதிரைப் பந்தயம்போல, தொடக்கமும் முடிவும்
சுவை மிக்கதாக இருக்க வேண்டும்”
- எல்லரி செட்ஜ்விக்
“எளிய கருப்பொருளைக் கருவாகக் கொள்ளுதலே சிறப்புடைத்து”
-செகாவ்.
தமிழ் சிறுகதையின் சித்தர் புதுமைப் பித்தன்..
“சிறுகதையின் வடிவம் கதை எழுதுபவரின் மனோதர்மத்தைப் பொறுத்தது.
நமது பேராசிரியர் சிவத்தம்பி...
“சிறுகதை ஒரு குறிப்பிட்ட மனோ நிலையை அல்லது உணர்வு நிலையைக் காட்டுதல் அவசியம்”
சுஜாதா சொல்லுகிறார்,
(இன்னும் கொஞ்சம் சுவையாக இருக்கிறது...)
“கதையும் தேவையில்லை!கதை மாந்தரும் தேவையில்லை!நன்கு ஒழுங்கு படுத்தப்பட்ட ஒரு கட்டுரைதானும் நல்லதொரு சிறுகதையாகலாம்!”
எது எப்படியோ “சிறுகதை என்பது வாழ்க்கையின் சாளரம்”
தொடக்கம், மையச் சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்.
இவை எல்லாவற்றையும் விட..கதை சொல்ல எடுத்துக்கொண்ட கருப்பொருள்?எப்படி கதை சொல்லுகிறார் ?(உண்மையில் கதைதான் சொல்லுகின்றாரா?? இல்லை கதை விடுகின்றாரா??)இவரின் நோக்கம் நிறைவேறி இருக்கின்றதா ?கதாசிரியரின் கலையாற்றல்... கற்பனைத்திறன்... சொல்லாட்சி... அவர் சொல்ல விரும்பும் செய்தி என்ன??
இவ்வளவும் இலக்கண வரம்புகளை விடவும் மிகமிக முக்கியமானவை.
இவற்றை உரைகற்களாக வைத்துகொண்டு தேவமுகுந்தனைக் கொஞ்சம் உரசிப்பார்ப்போம்!!
“கண்ணீரீனூடே தெரியும் வீதி...”
*****************************************
கல்லினில் மட்டுமல்ல சொல்லினாலும் சிற்பங்கள் செதுக்கமுடியும்!ஆச்சரியம் வேண்டாம்....!!இதோ செதுக்கிக் காட்டுகின்றார்இந்தச் சிறுகதைச்சிற்பி!
“பேச்சுத்துணைக்கு ஆட்களில்லாமல்
தனிமையில் அறையின் சுவர்களைப் பார்த்தபடி
இருப்பது மகா கொடுமை...”
....................
பல்கலைக்கழகம் பூட்டப்பட ரஞ்சனும் சிவாவும் திருகோணமலை போய்க் கப்பலேறி யாழ்ப்பாணம் போயினர்.
ஜெபனும் புவியும் இரத்மலானை போய் விமானம் ஏறி யாழ்ப்பானம் போயினர்.
ஜீவாவும் நடேசும் பஸ் ஏறி மட்டகளப்பு போயினர்.
கோணேசும் வசந்தனும் ரயிலேறி திருகோணமலை போயினர்.
ரமணனும் குகாவும் ரயிலேறி வவுனியா போயினர்.
ஈஸ்வரனும் ரங்கனும் நுவரெலியா போயினர்.
எல்லோரும் தங்கள் வீடுகளுக்குப் போயினர்...
நான் எங்கு போவது....
ஒபரேசன் ஜெயசிக்குறு தொடங்கிய பிறகு
போய்வரக்கூடிய நிலையிலா கிளிநொச்சி உள்ளது?”
இது ஒரு போர்க்காலப் பரணி!
தமிழனின் தன்மானத்தை உரசிப்பார்க்கும்
ஒரு வரலாற்றுப் பதிவு!
போர் எமக்கு மட்டுமல்ல...
அவனுக்கும் இழப்புக்களைத் தந்திருக்கின்றன..
என்பதனை மிகஅழகான சொற்கள் கொண்டு
மிகவும் நுட்பமாகச் செதுக்கியுள்ளார்!
“வழிகாட்டிகள்!”
“இவர்களுக்கு யாழ்ப்பாணத்தைத் தாண்டிவிட்டால்
தமிழ் மறந்துவிடுகிறதா??
.........
“ஒல்லிகளை முட்டுக்காய்களைப் பின்னால் மறைத்து வைத்துவிட்டு நல்ல ஒரிரண்டு தேங்காய்களைக் காட்சிக்கு வைத்துக் காட்டி எல்லாத் தேங்காய்களையும் விற்றுத்தள்ளும்
ஒரு தேங்காய் வியாபாரி போன்று வாமதேவன் இந்திரன் மனதில் தோன்றினார். வருமானம் குறைந்த பெற்றோரின் பிள்ளைகளுக்கு உதவிப் பணம் வழங்குவதற்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று
பெற்றோரின், பாடசாலைகளின், கல்வி அதிகாரிகளின் கெளரவத்தைப் பறைசாற்றப் பயன் படுகின்றதாய்...”
தமிழனின் கல்வி முறைகள் தவறுதலாகப் பயன்படுத்தப் படுதலையும், அது மிகவும் தவறான முறையில் வழிகாட்டப் படுதலையும் தனக்கேயுரித்தான பாணியில் பதிவு செய்கின்றார்.
தமிழனின் கல்விமுறைகள் வேண்டுமென்றே சீரழிக்கப்படுகின்றன என்பதையும் கூறாமல் கூறிச் செல்லுகின்றார்.
“இடைவெளி”
“தான் அலுவலகத்திற்குச் சமூகமளிக்காத நாட்களில் கொழும்பில் குண்டு வெடிப்புகள் இடம்பெறுவதற்கான நிகழ்தகவு மிகவும் உயர்வாக இருப்பதன் காரணம் என்ன என்ற வினா, அவன் மனதில் எழுந்துகொண்டிருக்கிறது. காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாய் இவ்வருடத்தில் இவன் லீவு எடுத்திருந்த ஐந்து நாட்களில் மூன்று நாட்களில் நகரத்தில் குண்டுகள் வெடித்திருந்தன. முதல் நாளில் பகிடியாகக் கதைத்தவர்கள் இப்போது இவன் மேல் கோபப்படத் தொடங்கியுள்ளார்கள்”
தலைநகரத்தில் தமிழனின் தலை அடிக்கடி உருட்டப் படுவதை மிகவும் இலாவகமாக கூறிச் செல்லுகின்றார்.
“சிவா”
“என்னிலை பிழையில்லையெண்டு கண்டு பிடிக்க இவங்களுக்கு ஆறு வருசம் எடுத்திருக்கு மச்சான்”
................
காக்கிச்சட்டைகள் ஒவ்வொரு மாணவரினதும் அடையாள அட்டையை வாங்கிப் பார்க்கிறார்கள். பெரேராக்கள், பெர்னாண்டோக்கள், சில்வாக்களை விட்டுவிட்டு, அமுதன், ராகவன், குகன், கிரி, உமா, தேவகி ஆட்களை வரிசையில் விடுகிறார்கள்.
...............
“வரிசையில் எனக்கு முன்னால் குகன், சீலன், ரமேஸ், இளங்கோ, வான்மதி, ரதி ஆட்கள் பைல்கள் புத்தகப் பைகளுடன் தலை கவிழ்ந்து நிற்கிறார்கள். எழுபது எழுபத்தைந்து பேர் இருக்குமோ?”
இந்த மண்ணில் தமிழனாய்ப் பிறந்ததே ஒரு சாபக்கேடு!
அதிலும் இன்னும் தமிழனாய் வாழ்வதே பெரும்பாடு!!
இது தமிழன் வாழ்வதற்குரிய நாடேயல்ல...
என்ற எண்ணத்தை... இவர் தெரிந்தோ தெரியாமலோ வாசகனின் மனதில் விட்டுச் செல்லுகிறார்.
“இரட்டைக் கோபுரம்”
“…. மயில் இறகு அச்சடிக்கப்பட்டிருந்த சேலை அணிந்து லிப்ஸ்டிக் பூசியிருந்த இளம்பெண் அந்நேரத்திலும் சிரித்தபடி, ‘ப்ளைட் கன்சல்’ என்று சொல்லி கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட் ஒன்றை நீ
ட்டினாள். கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தர்க்கப்பட்டு மோதல்கள் நடைபெறுவதாய்.....”
..........
“பற தெமிளு”... சுனில் சொன்னான்.
என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை....”
உள்ளூரில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இனவாதம் எவ்வளவுக்கு தூபமிடப்பட்டிருக்கின்றது என்பதனைத் தனது அனுபவமாகக் கூறுகின்றார்.
“சின்ன” மாமா
“அந்தச் சோடிக் காப்புகள் அம்மா கிடுகு பின்னியும், தேங்காய் மட்டைகளைக் கடலில் ஊறவைத்து, பின்னர் அதை எடுத்துத் தும்பாக அடித்து, கயிறாகத்திரித்து விற்றுவந்த பணத்தில் மீட்கப்பட்டதாக இவன் அறிந்திருந்தான். மாமாவின் பல்கலைக்கழகச் செலவுகளுக்காக அச்சோடிக்காப்புகள் அடிக்கடி காசிப்பிள்ளையாரின் வீட்டில் அடகு போய்ப் பின்பு மீட்கப்பட்டு வரத்தொடங்கின”
............
“சிறுதும்பும் கயிறாகும்” வெளியாவதற்காக அம்மாவின் அச்சோடிக்காப்புகள் காசிப்பிள்ளயரிடம் அடகு வைக்கப்படவில்லை. குமாரசாமியரிடம் விற்கப்பட்டன....”
ஒரு எழுத்தாளனின் போலிகளை சுரம்பிரித்துக் காட்டுகின்றார்.
“ஒரு சுதந்திர நாள்”
“ஹொஹெத யன்னே?” இவன் நடக்கையில் இராணுவ வீரனொருவன் கேட்டான்....
‘மம கடையட்ட யன்னே...” குரல் தடுமாறுவது போலிருந்தது.. உச்சரிப்பை வைத்து இவன் தமிழன் என்பதை கண்டு பிடித்துவிட்டானோ!
“ஐசி தெண்ட..”
அரை மணித்தியாலமாய் இவனது தேசிய அடையாள அட்டை, பொலிஸ் பதிவுத் துண்டு, பல்கலைக்கழகப் பதிவுப்புத்தகம் என்பவற்றைப் புரட்டிப் புரட்டிப் பார்த்து விசாரித்த இராணுவ வீரன்
என்ன நினைத்தானோ இவனைப் போக அனுமதித்தான். தப்பியது போதும் போலிருந்தது. தமிழன் என்பதற்காய் நடுவீதியில் வெய்யிலில் வைத்து விசாரிக்கிறானே!
தேசியக் கொடியொன்றை முன்னால் பறக்க விட்டபடி கல்கிசைப் பக்கமாய்ச் சென்ற பஸ் ஒன்றினுள் இளைஞர் யுவதிகள் சிங்களப் பொப்பிசைப் பாடலொன்றை பாடியபடி நடனமாடிக் கொண்டிருந்தனர். சுதந்திர தின விடுமுறையை அனுபவிக்க எங்கோ சுற்றுலா செல்கிறார்கள் போல..
.........
“சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் இணைந்து போராடிப் பெற்ற சுதந்திரம் நாட்டு மக்கள் அனைவருக்குமுரியது.. என ஜனாதிபதி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டதாய்....”
மானமுள்ள ஒவ்வொரு தமிழனையும் இந்தச் சிறுகதை சீண்டிப் பார்க்கிறது!
“இவன்”
“தம்பி உமக்கு இன்னும் வேலை கிடைக்கேலையோ... கொழும்பிலை வேலை எடுக்கிறதெண்டால்... ‘நல்ல இங்க்லீஷ் நோலேஜ்’ வேண்டும். எதுக்கும் உம்மடை பயோ டேட்டாவைத் தாரும். தம்பியிடம் கொடுக்கிறேன்.. அவனுக்கு நல்ல செல்வாக்கிருக்கு...”
..........
இவன் பல்கலைக்கழகத்தில் இங்க்லீஷ் மீடியத்தில் படித்தான் என்பதையோ, இவனது சில ஆய்வுக் கட்டுரைகள் எக்கொணமிக்கா, எக்கொணமிக்ஸ் றிவியு போன்ற சஞ்சிகைகளில் வெளியானதையோ இவர்களுக்குச் சொன்னால் நம்பவா போகிறார்கள்?
போலிச் சமுதாயத்தை தோலுரித்துக் காட்டுகின்றார்.
“மரநாய்கள்”
இது ஒரு உருவகக் கதை.
இந்திய இராணுவம் இருந்த காலத்தில் நடந்திருக்கிறது.
கோழி பிடிப்பது மரநாய்கள் மட்டுமல்ல இந்திய இராணுவமும் தான் என்பதையும் அதனை மிக விரைவில் விரட்டவேண்டும் என்பதையும் கதை கூறிச் செல்கிறது.
முடிவாக...
மிகவும் அற்புதமான கதைகளைத் தன்னகத்தே கொண்டு மிளிர்கின்றது இத்தொகுப்பு.
இவர் கற்பனைகளில் இக்கதைகளைச் சொல்லவில்லை.
அவ்வளவும் மிக மிக அற்புதமான அனுபவங்களையே
அள்ளித் தெளித்திருக்கின்றார்.
நான் சுரண்டி எடுத்துவந்தவைகள் கொஞ்சம்!!
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான
அனுபவங்களைக் சுமந்து நிற்கும்
சொற்களின் சுரங்கம் என்றால் அது மிகையன்று!
இது ஒவ்வொரு தமிழனின் அனுபவங்கள் என்றாலும்
அது நகையன்று!
இவர் கண்ட அனுபவங்கள் பல எம்மையும் தாண்டிச் சென்றிருக்கின்றன. இல்லை... நாமும் தாண்டித்தான் வந்திருப்போம்!
ஒவ்வொரு கதையையும் படிக்கும்போது அந்தக் கதா நாகயகனின் உணர்வுகளை நாமும் பெறுகின்றோம்.
இதுவே இவரின் எழுத்தாற்றலுக்குக் கிடைக்கும் முதல் வெற்றியாகும்.
கதை சொல்லும் திறன் இவருக்கு நன்கு அமைந்திருக்கின்றது.
இதற்கு இவரது பட்டயக்கல்வியும் பட்ட அறிவும் நன்கு கை கொடுத்திருக்கின்றது.
இத்தகைய இளம் எழுத்தாளர்களை தமிழ்கூறும் நல்லுலகம்
வளர்த்தெடுக்கவேண்டும்!
மீண்டும் சொல்லுகிறேன்..
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான
அனுபவங்களைக் சுமந்து நிற்கும்
சொற்களின் சுரங்கம் என்றால் அது மிகையன்று!
இது ஒவ்வொரு தமிழனின் அனுபவங்கள் என்றாலும்
அது நகையன்று!
இந்த இளம் கலைச்சிற்பிக்கு வாழ்த்துக் கூறுவதில்
என்தமிழ் பெருமை பெறுகின்றது!!
No comments:
Post a Comment