எனக்குப் பிடித்த தேவமுகுந்தனின் கதைகள்

இந்த வருடத்தில் முழுமையாகப் படித்து முடித்த சில சிறுகதைத் தொகுப்புகளில் தேவமுகுந்தனின் 'கண்ணீரினூடே தெரியும் வீதி' என்னளவில் முக்கியமாகப் படுகிறது. எழுதத் தொடங்கிய 21 வருடங்களில் (1990-2011) 15 வருடங்கள் அவர் எதுவுமே எழுதவில்லை. மிஞ்சிய ஆறு வருட காலங்களில் அவர் எழுதிய பத்துக் கதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
நம் ஒவ்வொரு நிஜ மனிதனுக்குள்ளும் இன்னுமொரு கனவு மனிதனும் இருக்கிறான். கலைஞனுக்குள் இந்தக் கனவு மனிதனின் இருப்பு அலாதியானது. அத்தகைய கனவு மனிதனின் பார்வையில்தான் இந்தப் பிரபஞ்சத்தின் பல்வேறு அடுக்குகளின் குறுக்கு வெட்டு முகங்கள் பட்டு கதையாக கவிதையாக இசையாக ஓவியமாக ஏன் உரையாடல்களாக....
ஆனாலும் எழுத்து மூலமே நாம் ஒருவரையொருவர் தொட்டுக் கொள்கிறோம். இந்தப் பூவுலகின் எங்கோ ஒரு மூலையில் வாழும் அன்பன் அ.முத்துலிங்கத்தை நான் ஒவ்வொரு வாரமும் தொட்டுக் கொள்கிறேன் என்றால் அதுவே எழுத்தின் மகத்துவம் என்பேன். இங்கும் தேவமுகுந்தனை எனக்குத் தெரியாது. நான் கண்டுமிலேன். ஆனாலும் அவர் எழுத்தைத் தொட்டதன் மூலம் அவரைத் தொடும் பாக்கியமும் கிட்டியது. அவரின் எழுத்தினூடே அவருடனான உரையாடலும் எனக்குச் சாத்தியமானது. ஒரு மனிதனின் எழுத்தோடு ஆத்மார்த்தமான பிணைப்பு உருவாகும் போது அவனைக் காணாமலே அவனுடனான உரையாடலும் சாத்தியமாகும்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முகுந்தனின் இந்த பத்துக் கதைகளில் மரநாய்கள் என்ற ஒரேயொரு கதை மட்டுமே வடக்கின் யுத்தச் சூழலை பின்புலமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஒரு கிராமத்தில் நடைப்பிணங்களாக்கப்பட்ட மக்களின் கொதிநிலையை சித்திரிக்கும் ஒரேயொரு கதை. அந்தக் காலகட்டத்தில் நம் அடுத்தடுத்த வீடுகளிலிருந்து ஏராளமான பொடியன்கள் காணாமல் போனார்கள். அந்த அனுபவம் நம்மில் பலருக்கும் சித்தித்திருக்கிறது. மீதமுள்ள ஒன்பது கதைகளில் இரட்டைக் கோபுரம் கதை மலேசியாவில் புலமைப் பரிசில் பெற்று மேற்படிப்புக்காகச் சென்ற தமிழ் சிங்கள இளைஞர்களைப் பற்றியது. இந்தக் கதையிலும் இன உணர்வுகளின் முரண்பாடு மனிதர்களை எத்துணை இழிசர்களாக்குகிறது என்பதை அழகாகச் சொல்லிச் செல்கிறது.
கதையில் வரும் சுப்பிரமணியத்தையும் சுனிலையும் நம்மால் மறக்க முடியவில்லை. தொகுதியில் இன்னுமொரு கதையான சின்னமாமா கதை ஒட்டு மொத்தக் கதைகளினின்றும் இனமுரண்பாடுஇ போர்ச்சூழலோடு முற்றாக விலகி நிற்கும் ஒரு அழகான கதை. முகுந்தன் சொல்கிற சின்னமாமா திருநாவுக்கரசோடு எனக்கும் நீண்ட கால உறவு தொட்டந்தொட்டமாக இருந்து வந்தது. வாகரைஇ அட்டாளைச்சேனைஇ பின்னர் சென்னைஇ கோயம்புத்தூர்இ கடைசியாக அமைச்சர் அஷ்ரபின் மங்களா வாசல் என்று சின்ன மாமா தெரிந்தவரான படியால் கதை சுவாரசியமாகப்பட்டது. இந்தத் தொகுதிக்குள் அந்தக் கதை இடம்பிடித்திருக்க வேண்டாமோ என்று எனது அடிமனம் குறுக்கிட்டாலும்இ ஒரு பச்சையான உண்மை எவ்வாறு உன்னத இலக்கியமாகிறது என்பதற்கு சின்னமாமா சிறந்ததொரு எடுத்துக்காட்டு. இரங்கல் கூட்டத்தினூடே அந்தக் கதையை அவர் நகர்த்திச் செல்லும் நேர்த்தியும் நுட்பமும் இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் பலரிடமும் காணக்கிடைக்காத சங்கதி.
ஏனைய ஏழு கதைகளும் பின்னுரையில் கவிஞர் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் சொல்வதைப் போல - இவரது பெரும்பாலான கதைகள் யாழ்ப்பாணத்திற்கு வெளியேஇ யுத்தம் காரணமாக இன உறவுப் பிளவுண்ட தலைநகர் கொழும்பில்இ சிங்கள நடுத்தர வர்க்கத்தினரின் சந்தேகப் பார்வைக்கு மத்தியில் தமிழர்கள் எதிர்நோக்கிய அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றியே பேசுகின்றன - என்கிறார்.
அந்த ஏழு கதைகளும் நமக்குச் சொல்ல வருவது வாழ்வுப் பிரச்சினை மட்டுந்தானா? இல்லை. உயிர்வாழ்தலுக்கான வேண்டுதல்கள்இ உறவினர்களோடு தொலைபேசியில் தமிழில் உரையாடுவது கூட குற்றமாகக் காணப்பட்ட தருணங்கள்இ யாழ்ப்பாணத்தில் குண்டு வெடிக்க கொட்டாஞ்சேனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட இராப்பொழுதுகள்இ சுதந்திர நாளில் கூட சுதந்திரமாக நடமாட முடியாத அவலம்இ ஒரு பொய்யான தகவலின் மூலமே எத்தனையோ இளைஞர்களின் உயிர்கள் காணாமல் போன நாட்கள் அவை.
கதைகளைப் படிக்கும் தோறும் அந்த அனுபவங்களெல்லாம் அப்படியே நம் மனத்தில் வந்து கவிழ்ந்து போகின்றன. அப்படியான கதைகளில் 'சிவா' கதையில் வரும் சிவாஇ கல்வியையும் பறி கொடுத்து காதலையும் இழந்து கடைசியில் காணாமல் போனவர்களின் நீண்ட பெயர்ப்பட்டியலில் தனது பெயரையும் விட்டுச் செல்கிறான்.
தொகுதியிலுள்ள பத்துக் கதைகளினதும் சுருக்கத்தை விரிவஞ்சித் தவிர்த்துக் கொள்கிறேன். ஒரு யாழ்ப்பாணத்து (20-40 வயது) இளைஞனின் ஒரு குறிப்பிட்ட கால கட்ட வாழ்வுப் பாதையின் அவலங்கள் அல்லது அனுபவங்கள் இங்கு சிறுகதைகள் என்ற பெயரில் கோட்டோவியங்களாக்கப்பட்டுள்ளன. சின்னச்சின்ன வார்த்தைகளில் அவை அடுக்கப்பட்டிருக்கும் அழகு அபூர்வமானது. தனது படைப்பின் பூரணத்துவத்தின் வெற்றிக்கோட்டை எட்டிப் பிடிக்கும் வல்லமையை தேவமுகுந்தனின் படைப்புமொழியே அவருக்கு இலகுவாக்கி இசைவாக்கியுமிருக்கிறது.
தனக்கு உண்மையாக வாழும் மனிதர்களால்தான் உண்மையினூடாக கண்ணீரினூடே தெரியும் அந்த வீதிகளில் நடமாடும் சக மனிதர்கள் மீதும் அன்பையும் அக்கறையையும் கொள்ள முடியும். இங்கே தேவமுகுந்தனால் மார்தட்டலோஇ பிரகடனங்களோஇ பாசாங்கின் துர்வாடையோ இல்லாமல் இந்தக் கதைகளை மிக இயல்பாக அவரால் சொல்ல முடிந்ததென்றால் அவருக்குள் வாழும் அந்தக் கனவு மனிதனையே நாம் போற்றுகிறோம். இந்தப் பத்துக் கதைகளிலும் ஒரு பொய்யான வார்த்தையைக் கூட என்னால் கண்டுகொள்ள முடியவில்லை.

பேச்சு வழக்கில் வெளிப்போகும் ஒலியில் இயல்பாகவே இசைந்து வரும் துயரத்தின் மாயத்தை எழுத்தில் கொண்டு வரும் முயற்சியில் தேவமுகுந்தன் எடுத்துக் கொள்ளும் பிரயாசை எனக்கு அவரில் மிகுந்த நம்பிக்கையளிக்கிறது. பத்துக் கதைகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ள இந்தத் தொகுப்பு கடந்த இருபதாண்டுகளில் நமது ஈழத்து நவீன சிறுகதை இலக்கியம் கதைக்கான தேடலிலும் கதை சொல்லும் நேர்த்தியிலும் மொழியைக் கையாளும் முறைமையிலும் ஏற்பட்டிருக்கும் நல்ல தருணங்களை நமக்கு இனங்காட்டிச் செல்கிறது.இத்தகைய ஆளுமைகளின் சொந்தக்காரர்களாக எமது இளைய தலைமுறையினரில் ஒரு ஐவரை என்னால் இனங்காட்ட முடியும். அவர்களில் தேவமுகுந்தனும் முக்கியமானவர் என்பது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது.
அன்பான வாசகனே! கண்ணீரினூடே தெரியும் வீதியில் நீயும் இறங்கி கரைசேரப் பிரார்த்திக்கிறேன்.
நன்றி: வீரகேசரி 23.12.2012
-
No comments:
Post a Comment