தேவமுகுந்தனின் கதைகள் - ஓர் அனுபவப் பகிர்வு
கதை சொல்லப்படும் விதம், கதையின் கருப்பொருள் ஆகிய இரண்டையுமே ஒரு சிறுகதையை மதிப்பீடு செய்வதற்கான முக்கிய அம்சங்களாக நான் கருதுகிறேன். கரு எதுவுமின்றியே கதையைச் சொல்லிவிட முடியும் என்றும், தனியொரு கருவை மாத்திரம் ஒரு சிறுகதை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அண்மைக்காலங்களில் முயற்சிக்கப்பட்டு வரும் நவீன பரீட்சார்த்தங்களுக்கு மத்தியிலும், சிறுகதையில் மையப்புள்ளியான கருவொன்றின் அவசியத்தை வலியுறுத்தும் போக்கு தொடர்ந்தும் இருந்து வரவே செய்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன், 'உமா வரதராஜன்' கதைகளை முழுமையாகப் படித்து முடித்த பிறகு, அண்மையில், முழுமையாக ஒரே மூச்சில் வாசித்து முடித்த சிறுகதைத் தொகுதி 'கண்ணீரினூடே தெரியும் வீதி'. தேவமுகுந்தனின் எழுத்துகள் ஊளைச்சதைகள் எதுவுமற்ற கம்பீரமும் ஆரோக்கியமும் நிறைந்த கட்டுக்கோப்பான ஒரு தேகமாய் என்னை வசீகரித்தன.
எவ்விதமான பகட்டும் ஆர்ப்பாட்டமுமின்றி, வெகு இயல்பாக கதையை நகர்த்திச் செல்லும் நேர்த்தி இத்தொகுதிக்கு வலுச் சேர்க்கும் முக்கிய பண்பொன்றாகும். கருப்பொருள் எவ்வளவுக்கெவ்வளவு எழுத்தாளனின் வாழ்வோடு நெருக்கமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அக்கதையின் அழகியல் உச்சம் பெறும் என்பதை மிக அழுத்தமாக தேவமுகுந்தன் இக்கதைகளில் நிரூபித்திருக்கிறார். அவரது அனுபவங்களே இக்கதைகளை இலக்கியத்தரத்துடன் மிகக் கவனமாகச் செதுக்கும் ஆற்றலை அவருக்கு வழங்கியிருக்கக் கூடும். வடித்தெடுக்கப்பட்ட வார்த்தைப் பிரயோகங்களும் யதார்த்த இயல்பு சற்றும் மாறாத எளிய நடையும் ஆணி அறைந்தாற் போல் இழுத்து நிறுத்தி முற்றுப்புள்ளியிடும் ஆளுமையும் இணைந்து தேவமுகுந்தனின் கதைகளை இலக்கிய உச்சிக்கு அழைத்துச் செல்ல முயல்கின்றன.
தொகுதியில் இடம்பிடித்துள்ள பத்துக் கதைகளையும் ஒரே நேர்கோட்டில் இணைக்கும் பாலமாக அமைந்திருப்பது எல்லாக் கதைகளிலும் இழையோடும் மென்மையானதொரு சோகமாகும். இச்சோகத்தின் கர்த்தாக்கள் மொழியாலும், இனத்தாலும், பிரதேசத்தாலும் வேறுபட்டிருந்தாலும், அவற்றின் பாதிப்புகளோ எவ்வித வேறுபாடும் பாராது எல்லோரையும் வஞ்சமின்றி அரவணைத்துச் செல்கின்றன.
குறிப்பாக, சிங்கள மேலாதிக்கத்தின் பெறுபேறாக தமிழ் மக்கள் மீது விதிக்கப்பட்டு விட்ட அடக்குமுறைக்குட்பட்ட வாழ்வின் துன்பியலை மிக யதார்த்தமாக விபரிக்கும் பெரும்பாலான கதைகள், படிப்பவர் நெஞ்சங்களிலும் அத்துன்பியலின் வலியைச் செருகி அனுதாபத்தை வரவழைத்து விடுவதை அக்கதைகளின் பாரிய வெற்றியாக நான் கருதுகிறேன்.
இக்கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் ஒவ்வொரு கதையின் ஆரம்பமும் முடிவுமாகும். குறிப்பாக கதைகளின் முடிவுகள் மிக அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. 'இடைவெளி', 'சிவா', 'சின்ன மாமா', 'ஒரு சுதந்திர நாள்', 'இவன்' ஆகிய கதைகளின் அற்புதமான, நகைச்சுவையான, கிண்டலான முடிவுகள் மிகவும் கவர்ச்சி மிக்கவை. வேறு எந்த முடிவும் இவற்றை விடச் சிறந்தாக அமைந்திருக்க முடியாது. அநாவசியமான வார்த்தையொன்றையேனும் செயற்கையாக இடாது மிக யதார்த்தபூர்வமாகவும் வலிமையாகவும் தேவமுகுந்தன் இச்சிறுகதைகளை வடிவமைத்துள்ளார்.
கதைகளின் இலக்கியத்தரத்தை விடுத்து, கருப்பொருளை நோக்குகையில் பின்னுரை வழங்கியுள்ள பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் கருத்துகளை நாம் வழிமொழிய வேண்டியுள்ளது. பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் போர்ச்சூழலை பக்கச்சார்புடனேயே பார்த்துப் பார்த்துப் பொரிந்து தள்ளியவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு தேவமுகுந்தனும் விதிவிலக்காகவில்லை.
பேராசிரியர் நுஃமான் அவர்களின் கருத்தை மறுத்துரைக்கும் உமா வரதராஜன் அவர்கள், தேவமுகுந்தன் எந்தவொரு விடுதலை இயக்கத்தின் பேச்சாளரோ எழுத்தாளரோ அல்ல, அவர் சூழலால் பாதிக்கப்பட்ட ஒரு சாமானியர் என்றும், உரத்த குரலில் இல்லா விட்டாலும் ஒரு சிறு முனகல் தொனியிலாவது தன் எதிர்ப்புணர்வைப் பதிவு செய்திருக்கிறார் என்றும் குறிப்பிடுகின்றார்.
ஆனால், கதைகளில் குறிப்பிடப்படும், தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகளும் நெருக்குதல்களும் உண்மையில் தமிழ் ஆயுதப் போராட்டத்தின் எதிர்வினைகளே என்பதையும், சிங்கள மேலாதிக்கத்தைப் போன்று விடுதலைப் போராட்டங்களின் மூலமும் தமிழ் மக்கள் அதிக இழப்புகளுக்கும் அவலங்களுக்கும் உள்ளாகினர் என்பதையும் தேவமுகுந்தன் தனது எந்தக் கதைகளிலும் குறிப்பிட விரும்பவில்லை என்பதையும் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.
அதேவேளை, தான் ஒரு குறித்த சமுதாயத்தின் உறுப்பினனாயினும் பொதுவான மானுட நேயனும் கூட என்பதை, தனது 'கண்ணீரினூடே தெரியும் வீதி...' கதையினூடாக தேவமுகுந்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இத்தொகுதியில் இடம்பெறும் இரு கதைகளைப் படித்த போது, அவை உமா வரதராஜன் அவர்களின் இரு கதைகளுடன் ஒத்த இயல்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஒரு தனியார் வர்த்தக நிறுவனத்தின் பயிற்சி முகாமொன்றில் கலந்து கொள்ளும் முகாமையாளரொருவர் அங்கு இடம்பெறும் அபத்தங்களை விமர்சனத்துடன் விபரிக்கும் 'உயர', மற்றும் நூல் வெளியீட்டு விழாவொன்றில் அகப்பட்டு அங்கு இடம்பெறும் முதுகு சொறிதல்களைப் பார்த்து எரிச்சலுற்று உள்ளுக்குள் குமுறுகின்ற மற்றோர் எழுத்தாளனின் அனுபவத்தைப் பதிவு செய்யும் 'சின்னஞ்சிறகுகள்' ஆகிய உமா வரதராஜனின் இரு சிறுகதைகளின் இயல்பும் நடையும், தேவமுகுந்தனின் 'வழிகாட்டிகள்' மற்றும் 'கூட்டத்தில் ஒருவன்' ஆகிய இரு கதைகளிலும் பெரிய மாற்றங்களெவையுமின்றி தெரிகின்றன. அரச திணைக்களத்தின் பயிற்சி முகாமொன்றில் கலந்து கொள்ளும் உத்தியோகத்தர் ஒருவர் அங்கு இடம்பெறும் அபத்தங்களைக் கண்டு சினமுற்று உள்ளுக்குள் குமுறுவதைக் கூறும் 'வழிகாட்டிகள்' கதையும், பாடசாலையொன்றுக்கான நிதி சேர்ப்புக்காக அதன் பழைய மாணவர்கள் ட்ரான்ஸ் ஏசியா ஹோட்

டலில் டின்னர் டான்ஸ் ஒழுங்கு செய்து கூத்தடிப்பதைச் சொல்லும் 'கூட்டத்தில் ஒருவன்' கதையும் தேவமுகுந்தனுடையவை. இக்கதைகளில் களங்கள் வேறுபட்டிருந்தாலும் கதை சொல்லப்படும் பாணியும் நடையும் உமா வரதராஜனின் அவ்விரு கதைகளுடனும் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன. சிறந்த சிறுகதையொன்றைப் படிக்கையில் ஏற்படும் இயல்பான தாக்கம், சிலவேளைகளில் அதுபோன்றதொரு கதையை எழுதிப் பார்க்க சாமான்ய எழுத்தாளர்களைத் தூண்டுவது இயற்கையானதே. உமா வரதராஜனின் 'அரசனின் வருகை' கதையின் பாதிப்பினால், ஓட்டமாவடி அறபாத்தின் 'அரசி' கதை உருவானதும் இதுபோன்றதுதான். இதனை, பிந்திய எழுத்தாளர்களின் தோல்வி என்பதை விட, முந்திய எழுத்தாளனின் வெற்றி என்று கூறுவதே பொருத்தம் என்பது எனதெண்ணம்.
நல்ல எழுத்தாளர்கள் பலரின் சில கதைகள் இன்னும் கூட இறவாதிருப்பதில் அவர்கள் துணிந்து முயற்சித்த புதிய உத்திகளுக்குப் பெரும் பங்கிருக்கின்றது. தேவமுகுந்தனின் கதைகளுக்கு அழகிய, அப்பழுக்கற்ற எளிய நடையொன்று இலாவகமாக வாய்த்துள்ள போதிலும், புதிய உத்திகளைப் பிரயோகிப்பதற்கான எந்த முயற்சியையும் அவர் மேற்கொள்ளாதது ஒரு குறையாகவே தோன்றுகின்றது. சின்ன மாமா கதை இக்குறையை ஓரளவு நிவர்த்தி செய்வதாக ஆறுதல்பட்டுக் கொள்ளவும் முடியும்.
தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று 'இவன்'. டி.ராஜேந்தரின் அக்கால சென்டிமென்ட் சினிமாவொன்றைப் பார்த்த சுகமான சோக அனுபவத்தை இக்கதை வழங்குகின்றது. சுய அனுபவச் சாயல் மிகத் தூக்கலாகத் தெரிவதாக பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் குறிப்பிட்டுள்ள இந்த நல்ல கதையைப் படித்து முடித்த போது, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் நிறுவனர் பில் கேட்ஸ் குறிப்பிட்ட வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.
'நான் எல்லாவற்றையும் கற்றேன். ஆனால் முதற்தர மாணவன் ஆகவில்லை. இன்று, சிறந்த பல்கலைக்கழகங்களின் முதற்தர மாணவர்கள் பலர் எனது வேலையாட்கள். எனவே, ஆக்கபூர்வமான மனிதனாக இருங்கள்'

ஸபீர் ஹாபிஸ்
No comments:
Post a Comment